Dec 28, 2012

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்



إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا '
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம்மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன்18:07,08)
இவ்விரு வசனங்களில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளனஇறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்திமனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச்செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான்இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றதுஇதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.
''அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான்அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம்அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம்பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றனதிராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்குஒன்று போலவும்(சுவைக்குவௌ;வேறாகவும் உள்ள மாதுளைஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்அவை (பூத்துக்காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன''. (திருக்குர்ஆன் 6:99)
''பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய்கறி தானியங்களையும் ஒன்று போலவும் வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான்ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள்அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையானபாகத்தைக் கொடுத்து விடுங்கள்வீண்விரயம் செய்யாதீர்கள்நிச்சயமாக அவன் (அல்லாஹ்வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை''. (அல்குர்ஆன் 6:141)
''இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும் கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை(வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்இவையனைத்திற்கும்ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கிறோம்நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன''. (அல்குர்ஆன் 13:04)
''அதனைக் கொண்டே (விவசாயப்பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான்நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்கஅத்தாட்சி இருக்கிறது''. (அல்குர்ஆன் 16:11) '
''இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்அது எண்ணையை உற்பத்தி செய்கிறதுமேலும் (ரொட்டி போன்றவற்றை)சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)''. (அல்குர்ஆன்23:20)
''அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையாஅதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம்செடி,கொடியாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்''. (அல்குர்ஆன் 26:07) '
''அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம்அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க)அல்லாஹ்வுடன் (வேறுநாயன் இருக்கின்றானாஇல்லைஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குசமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்''. (அல்குர்ஆன் 27:60)
''அவர்கள் (இதையும்கவனிக்கவில்லையா? - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்அவர்கள் (இதை ஆய்ந்துநோட்டமிட வேண்டாமா?''. (அல்குர்ஆன் 32:27) '
''பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்எல்லாவற்றையும் (மனிதர்களாகியஇவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்''. (அல்குர்ஆன் 36:36)
''நீர் பார்க்கவில்லையாஅல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கிஅதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான்அதன் பின் அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான்நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது''. (அல்குர்ஆன் 39:21)
''(பூமியில்விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களாஅதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களாஅல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?''. (அல்குர்ஆன் 56:63,64) கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
இனிப்பான மாம்பழத்தை மாமரம் உற்பத்தி செய்கிறது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லைஅது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்க வில்லைஊற்றுகின்ற தண்ணீரிலோ வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லைஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றனஇப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் 'சூப்பர் பவர்உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்இலைகள்பூக்கள்காய்கள்கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்அந்த வண்ணங்கள் எப்படி வந்தனஎன்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லைமண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லைஎப்போதும் தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும்நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயங்களாகத் தோன்றாது.
மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்இதை மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.
உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனேஉரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையாஉரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையாமேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையாகாற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் அனலாய் கொதிக்கும் பூமியில் மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?
இதற்கு இயற்கை என்று எவரும் காரணம் சொல்ல முடியாது அல்லவாஇதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு 'இயற்கைஎன்று விடை கூற முடியாதுயாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.
இறைவனை மனிதன் நம்ப வேண்டும்அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

மண்ணறை விசாரணை!



மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது.
மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம்.
ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!
மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.
இறைவசனங்கள்:
நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).
இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).
திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).
திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).
நபிமொழிகள்:
அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.
பின்னர், தமது தலையை உயர்த்தி, "அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:
"இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக' என்பார்.
அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.
பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.
அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், 'என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்' என்று கூறுவான்.
பின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.
பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார்.
உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார்.
அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு (நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.
(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.
உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின் மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னாருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது"
இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (அல்குர்ஆன் 7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,
"பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '... அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்" (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,
"பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார். அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார். அடுத்து 'உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார்.
அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் 'நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே' என்று கதறுவார்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிஃப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).
ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.
உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன் மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!
இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.
திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கியுள்ளார்கள்:
"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.
"உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).
"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)
நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் "மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது" என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, "மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை" என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!
சரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!

இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் "மலக்குகள்"


ஓரிறையின் நற்பெயரால்...

மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.
இறையின் படைப்பில்
இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல) தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான். அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
1. மலக்குகள்  2. ஜின்கள்  3. மனிதர்கள்  4. மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும்  5. உயிரற்ற பொருட்கள்.
இங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு! அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.
மலக்குகள் யார்?
இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும், அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,
''...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்''. (66:06 சுருக்கம்)
இவ்வாறு இறை படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மலக்குகள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து குர்-ஆனில் சிலவற்றை பார்ப்போம்.
பொறுப்புகள் பல அவர்கள் மீது சாட்டப்பட்டாலும் மனித சமுகத்தோடு அவர்களுக்கு உள்ள மிக முக்கியமான தொடர்புகள் குறித்து,
*இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய தூதுவர்களுக்கு இறை புறத்திலிருந்து வெளிபடும் வேத வெளிப்பாட்டை (வஹீயை) அறிவிப்பது அவர்களின் தலையாய பணியாகும்.
''அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.'' (16:02)
*மனிதர்கள் மேற்கொள்ளும் நன்மை/தீமைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து செயல்களையும் பதிவு செய்கின்றனர்.
''(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (50:17)
''நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.'' (82:10-12)
*மனிதர்களுக்கு தாயின் கர்ப்ப அறைக்குள் உயிர் ஊதுவதும்,மனித வாழ்நாள் தவணை முடிந்ததும் அவர்களின் உயிரை கைப்பற்றுவதும் அவர்கள் செய்யும் பிறிதொரு பணியாகும்.
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.'' (32:11)
''ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,'' (47:27)
மலக்குகள் செயல் பாட்டை மேற்கூறிய வசனங்களில் அறியலாம். மேலும் அவர்களை குறித்து அறிய...
'அவர்களுக்கு மனிதனோடு கொண்ட தொடர்பு பற்றி (2:30, 2:34, 7:11, 17:61, 18:50, 20:116, 38:73, 13:11, 82:10,86:4, 8:12, 40:7, 42:5, 3:123-126, 8:9,10)
இறைவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி (2:30, 39:75, 40:, 42:5, 79:1-3)
பிற (3:42, 2:98, 6:111,158, 15:78, 16:2,33, 25:21, 41:30, 97:4, 6:9, 17:95, 35:1, 37:149,150, 43:19, 53:26-28)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி,மலக்குகளுக்கு தனியானதொரு சக்தியோ,இறைவனுக்கு தன் தேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அச்செயல்பாடுகள் வழங்கப்படவில்லை.மாறாக இறைவனின் வல்லமையின் ஒரு வெளிப்பாடாகவே இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் தன் திருமறையில்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது. (40:68)
மேலே குறிப்பிடப்பட்டவை மலக்குகள் குறித்த ஆன்மிக பார்வை
இனி,.
மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?
மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,
அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.
ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல்,
காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.
இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை.
இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...? வானவில் குறித்து அவர்கள் முன்னர் அறியாததே...!
என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.
மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள்.
ஆக, நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,
அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை.,
அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லைஇதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.
அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.
ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது.
குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது.,
எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உளவியல் மற்றும் உணர்வுரீதியாக அவர்களின் இருப்பை அறிந்துக்கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது
ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.
அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,முரண்படாத அறிவியலுக்கு பொருந்தக்கூடிய எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!
ஒளியின் வேகத்தை விட,மிக வேகமாக செயல்படும் மலக்குகள் குறித்த ஆய்வை மனித உருவாக்க கருவிகளால் கண்டறிய முயல்வது எப்படி சாத்தியம்...அதுவும் அவர்கள் தனித்தன்மை தெளிவாக,விரிவாக கூறப்பட்ட பிறகும்...?
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Dec 4, 2012

காதலில் சிக்கி ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு!


ஒரு விழிப்புணர்வு ஆய்வு!
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிபோக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை மற்றும் சகோதரிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகி விடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்.
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.
நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.
கடந்த மாதம் முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்தஇன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாககொன்று, நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்
போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள் என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே, அழகான முறையில் எடுத்து சொல்லுங்கள், இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும், பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்..
இது பற்றிய இஸ்லாம் கூறுவது.....
இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார். அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொருப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (ஆதாரம்: புஹாரி பாகம் 7, அத்தியாயம் 93 எண் 7138)
அல் குர்ஆன் கூறுவது; நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்கு சொர்க்கம் ஹராம் என்றும், அழகும், பணமும், ஆரோக்யமும் நிறைந்த ஒரு காஃபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒருசாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா, அந்நிஸா போன்ற அத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.

அநியாயம் செய்யாதீர்கள், பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!


உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.
சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அநியாயம் செய்து விடுகிறார்கள்.அப்படி அநியாயம் செய்வோரில் பெரும்பாலானோர் அநியாயத்தின் விபரீதத்தை புரிந்து கொள்வதில்லை.
அதன் விபரீதம் நமக்குத் தெரிந்தால் அடுத்த மனிதனுக்கு அநியாயம் செய்வதை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள்; அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று கூறினார்கள். (புகாரி : 1401)
அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.
பாதிக்கப் பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.பாதிக்கப் பட்டவன் காபிராக இருந்தாலும் சரியே!
பாதிக்கப் பட்டவன் எப்படி அல்லாஹ்விடம் கேட்கிறானோ அப்படியே அல்லாஹ்வும் அதனை ஏற்றுக் கொள்வான்.
அதாவது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ கதாதா என்பவருக்கெதிராக செய்த துஆ அவர் எப்படி அல்லாஹ்விடம் கேட்டாரோ அப்படியே பலித்தது.
ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநர்) ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கலிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்கற்ன் முறையீடுகலில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கற்டம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; ''அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)'' என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கலில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கற்ல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்'' என்று பதிலலித்தார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே' என்று கூறினார்கள். இதையொட்டி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒருவரை' அல்லது 'சிலரை' ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்து கூஃபாவாசிகலிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகலிடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்லி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்கலிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:
சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அற்க்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்'' என்று (குறை) கூறினார்.
இதைக் கேட்ட ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு,
''இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால்.......
اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ وَأَطِلْ فَقْرَهُ وَعَرِّضْهُ بِالْفِتَن
அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னர் (சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனை களுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்கலின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது'' என்று கூறுவார்.
அப்துல் மலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னா(லி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகற்ல் செல்லும் அடிமைப் பெண்களை கிள்லி அவர்களைத் துன்புறுத்துவார். (புகாரி : 755)
ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை உஸாமா பின் கதாதா என்பவர் சொல்கிறார்.
ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருக்கெதிராக மூன்று விஷயங்களில் அல்லாஹ்விடம் பிரார்திக்கிறார்கள்.
1. அவருடைய வாழ்நாளை நீட்டிக் கொடுக்க வேண்டும்.
2. அவரை பரம ஏழையாக்கிவிட வேண்டும்.
3. அவரை குழப்பத்தில் விட்டு விட வேண்டும்.
இந்த மூன்று துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அதனால் தான் பிற்காலத்தில் உஸாமா பின் கதாதா ஸஅத் அவர்கள் செய்த துஆ என்னைப் பிடித்து விட்டது என்று சொல்வாராம்.
நாம் யாருக்காவது அநியாயம் செய்தால் அவர்கள் நமக்கு எதிராக துஆ கேட்பதற்கு முன்பு நாம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.இல்லாவிடில் அவர்களின் துஆ நம்மைப் பிடித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதற்கு இன்னுமொரு சம்பவத்தையும் புகாரியில் நாம் பார்க்க முடியும்.
அதாவது அம்ரு பின் நுபைல் என்பவரின் பேரனாரான ஸஈத் பின் ஸைத் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தினை ஒரு பெண்மணி அபகரித்துக் கொண்டால்.அந்த நிலம் தனக்குறியது என்று பொய்யாக வாதம் புரிந்தால் அதற்கு ஸஈத் பின் ஸைத் அவர்கள் அந்தப் பெண்ணுக்கெதிராக துஆ செய்தார்கள்.அந்த துஆவையும் அல்லாஹ் அப்படியே ஏற்றுக் கொண்டான்.
ஸஅத் அவர்கள் அல்லாஹ்விடம்
اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا وَاجْعَلْ قَبْرَهَا فِي دَارِهَا
இறைவா இந்தப் பெண்மணி பொய் சொல்பவளாக இருந்தால் அவளுடைய பார்வையை பரித்து(குருடியாக்கி)விடு, அவளுடைய வீட்டையே அவளுக்கு கப்றாக ஆக்கிவிடு என்று துஆ செய்தார்கள்.
பிற்காலத்தில் அந்தப் பெண்மணி பார்வையிலந்தவளாக சுவரைத் தடவிக் கொண்டு நடந்து செல்வாளாம்.
அப்போது அவள் ஸஈத் பின் ஸைத் அவர்கள் எனக்கெதிராக கேட்ட துஆ பழித்து விட்டது என்று அவள் கூறக்கூடியவளாக இருந்தாள்.
ஒரு முறை அவள் அவளுடைய வீட்டில் சுவரைத் தடவிக் கொண்டு நடந்து செல்லும் போது கினற்றுக்குள் விழுந்து மரணித்து விட்டாள்.அதுவே அவளுக்கு கப்றாகவும் மாறிவிட்டது. (முஸ்லிம் : 3021)
அன்பின் சகோதரர்களே!
இந்த உலகில் நாம் வாழும் நாட்களில் யாருக்கும் அநியாயம் செய்யாமல், முடிந்த வரை மற்ற மக்களுக்கு நன்மை செய்து வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.மீறி யாருக்காவது அநியாயம் செய்து விட்டால் அவர்கள் நமக்கெதிராக பிரார்திப்பதற்கு முன் நாம் அவர்களிடம் நடந்த தவருக்காக மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி மன்னிப்பை பெற்றுக் கொண்டால்தான் அல்லாஹ்வும் நம்மை மன்னித்து அருள் புரிவான் என்பதை நாம் அனைவரும் நம் மனதில் ஆழமாக பதிந்து கொள்வோமாக!
-ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
-உண்மைகள்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )