May 22, 2012

தஃலீம் கிதாப் படிக்கலாமா?


ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அத்தொகுப்புப் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டு, நாடு முழுவதுமுள்ள அல்லாஹ்வின் பள்ளிகளில் படிப்பில் இருக்கிறது. தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயர் 'அமல்களின் சிறப்புகள்' என்பதாகும்.
இந்த நூலைப் படிப்பது பற்றித்தான் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றீர்கள் என்று நம்புகிறோம்.
நூல்களைப் படிப்பதையும் உரைகளைக் கேட்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால், செயல்பாட்டைப் பொருத்தவரை படிப்பதையும் கேட்பதையும் சிந்தித்துச் செயல்படுமாறு கட்டளையிடுகின்றது. நன்மை-தீமையைப் பிரித்தறிந்து செயல்படுதற்காகவே மனிதனுக்குப் பகுத்தறிவு வழங்கப் பட்டுள்ளது:
"... தங்கள் இறைவனுடைய வசனங்கள் மூலம் நினைவூட்டப் பட்டாலும் செவிடர்களைப்போல்,(அகக்கண்) குருடர்களைப்போல் அவற்றின் மீது விழுந்துவிட மாட்டார்கள் (ஆழ்ந்து சிந்தித்துச் செயல் படுவார்கள்)" அல்-குர்ஆன் 25:73.
'அமல்களின் சிறப்புகள்' என்ற தொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்:
  • கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம் 943).
  • கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது (பக்கம் 925).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது (பக்கம் 944).
  • பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது (பக்கம் 945).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது (பக்கம் 797).
  • ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது (பக்கம் 799).
  • அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657).
  • தொழும்போது ஆப்பரேஷன் - 1 (பக்கம் 143).
  • தொழும்போது ஆப்பரேஷன் - 2 (பக்கம் 144).
  • பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம் (பக்கம் 43,44).
  • இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி (பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14).
  • நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார் (பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1).
  • அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-2).
  • பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார் (தொழுகையின் சிறப்பு-11).
  • எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-15).
  • அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-17).
  • நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-13).
  • அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர் (தொழுகையின் சிறப்பு-12).
  • பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார் (தொழுகையின் சிறப்பு-7).
  • நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர் (பக்கம் 132)
  • தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 132)
  • 130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 86)
  • ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடித்த இமாம் (பக்கம் 132)
  • ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)
  • முப்பது/நாற்பது/ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம் (பக்கம் 132)
  • ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 130).
  • ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 160).
  • ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார் (பக்கம் 161).
  • நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 62).
  • ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 64).
  • கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாத தேநீர் மட்டும் போதும் (பக்கம் 65).
  • சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம் 124).
  • தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)
இதுபோன்ற கதைகள் 'அமல்களின் சிறப்பு'களில் நிறைந்திருக்கின்றன. விரிவஞ்சி, சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மேற்காணும் கதைகளை எழுதிய ஸக்கரிய்யா ஸாஹிப் கூறுகிறார்:
"பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்"
மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கதைகளைப் பின்பற்றி வாழ்வது சாத்தியமா? கூடுமா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன. மேற்காண்பவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவை என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கி விடும். ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு. ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும் நிலைமை தலைகீழ்தான்.
காட்டாக,
அஷ்ரஃப்  அலீ தானவி என்பார் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் (ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயல்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, "லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ்" என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் "அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி..." என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார். அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் "இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னார்கள்.
இந்தப் பிரச்சினை அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்படி ஃபத்வா மார்க்கத்துக்கு முரணானது; குஃப்ரை ஏற்படுத்தக் கூடியது; எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரஃப்  அலி தானவியின் பத்வா சரியானதே என ஸக்கரிய்யா ஸாஹிப் நியாயப் படுத்தி எழுதியுள்ளார் (தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் பக்கம் 144-145).
தப்லீக் பெரியார்களுக்குப் புனித பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் பல கதைகள் வேறு சில நூல்கள் மூலம் புனையப் பட்டுள்ளன:
"இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று தப்லீக்கின் அடிப்படைகளை வஹீ மாதிரி ஷேக் இல்யாஸ் கூறுகின்றார்.
இதற்கு விளக்கமாக மற்றோர் இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி, "அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்" என்கிறார். இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம். (தப்லீக்கே தஹ்ரீக், பக்கம் 57).
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள். அவர்களிடம் கஷ்புடைய ஞானம் இருந்தது. அதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்)அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம். அவர்களிடத்தில் ஷேக் ஸக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை வருகை தந்து, தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன. எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள். (மஹ்பூபுல் ஆரிபீன் பக்கம் 52).
"ஃபனா எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம். பின்பு ஃபனா நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்தவித முடிவையும் எடுத்து வருகின்றேன் ..." என்று தப்லீக் பெரியார் அப்துர் ரஷீத் கன்கோயீ கூறுகிறார். (தீஸ் மஜாலிஸ், பக்கம் 311; மஹ்பூபுல் ஆரிபீன், பக்கம் 57).
"ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்
அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன. அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்றுபுன்னகைத்த வண்ணமே சென்றார்கள்" என்று அப்துல் ஹமீம் கூறுகிறார் (ஆப் பைத்தீ, பக்கம் 134).
oOo
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கப்ரைச் சுட்டிக் காட்டி, "ஏற்றுக் கொள்ளத் தக்கவையும் ஒதுக்கிக் தள்ளத் தக்கவையும் எல்லா மனிதர்களது கூற்றுகளிலும் உள்ளன - இந்த மண்ணறையில் உள்ளவரின் கூற்றைத் தவிர" என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ளவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையா ஒதுக்கித் தள்ளத் தக்கவையா என்பதை இப்போது எளிதாக உங்களால் முடிவு செய்ய இயலும். அவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ள விரிவான கட்டுரைகள் விளக்குகின்றன:
மேற்காண்பவை கேள்விக்கான பதில் மட்டுமே.
அது தவிர,
  • தன் முஹல்லாவின் பள்ளிவாசலின் உட்புறம் எப்படியிருக்கும் என்றே தெரியாத பல முஸ்லிம்களை உள்ளுக்கு இழுத்து வந்து, தொழக் கற்றுக் கொடுத்து, பல பள்ளிகளுக்குப் பயணம் செய்ய வைப்பது.
  • வணக்க-வழிபாடுகள் புரிவதில் ஆர்வத்தைக் கூட்டுவது.
  • நேரம் தவறாமல் தொழுகையில் ஈடுபடவைப்பது.
  • அழைப்புப் பணிக்காக நேரம் ஒதுக்குவது.
  • அமீருக்கு முழுமையாகக் கட்டுப் படுவது.
  • பிட் நோட்டீஸ், வால்போஸ்டர், நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரம் எதுவுமே இல்லாமல் மிகப் பெரும் மாநாடுகளை நடத்துவது.
ஆகிய நல்ல செயற்பாடுகளால், 'அமல்களின் சிறப்பு' தொகுப்பிலுள்ள அபத்தக் கதைகளையும் மிஞ்சி, அல்லாஹ்வின் அருளால் இன்றும் தப்லீக் ஜமாஅத் சிறந்த அமைப்பாக விளங்குகிறது.
நன்மை-தீமை கலந்த அனைத்துக்கும் அல்லாஹ் தீர்வு கூறுகிறான்:

"சொல்லப் படுகின்ற(எல்லா)வற்றையும் செவியேற்று, அவற்றிலுள்ள அழகியவற்றை (மட்டும்)பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்துச் சொல்வீராக! அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம்; இவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" அல்-குர்ஆன் (39:18).
சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

ஜம்உ & கஸ்ரு


ஜம்உ (இணைத்துத் தொழுதல்)
இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்உ  என்று கூறுகிறோம். பயணத்தில் இருப்போருக்கு லுஹ்ரு, அஸ்ரு, மக்ரிப், இஷா ஆகிய நான்கு நேரத் தொழுகைகளை முறையே, லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் மக்ரிபையும் இஷாவையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் தொழுவதற்குப் பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கஸ்ரு (சுருக்கித் தொழுதல்)
அதுபோல் நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதைக் கஸ்ரு என்று கூறுகிறோம். நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதற்குப் பயணிகள் சலுகை வழங்கப்பட்டுள்ளனர்.
ஜம்உ+கஸ்ரு (இணைத்து + சுருக்கித் தொழுதல்)
பயணத்தில் இருப்போருக்கான ஜம்உ+கஸ்ருச் சலுகையின் கீழ் ஃபஜ்ருத் தொழுகை வராது. பயணிகளுக்கான லுஹ்ருடைய தொழுகை நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் மறைவதற்கு முன்வரை லுஹ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் அஸ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் இணைத்து வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம். மக்ரிபுடைய 3 ரக்அத்களுக்குக் கஸ்ரு இல்லை. எனவே, மக்ரிபுடைய 3 ரக்அத்களை இஷாவின் கஸ்ரான இரண்டு ரக்அத்களோடு இணைத்து இரவின் வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம்.
பயணத்தில் ஜம்உச் செய்து தொழுகின்ற முறை
இரு தொழுகைகளை இணைத்து, சுருக்கித் தொழுகின்ற பயணி/கள் உரிய வகையில் நிய்யத் செய்து கொண்டு, பாங்கும் இகாமத்தும் கூறி, முதல் தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கொடுத்தவுடன் இன்னோர் இகாமத் கூறி அடுத்த தொழுகையைத் தொழுது நிறைவு செய்யவேண்டும். இரு தொழுகைக்கும் இடையில், வழக்கமாக மொழியக்கூடிய தஸ்பீஹுகளோ வேண்டுகின்ற பிரார்த்தனைகளோ இல்லை; கடமையான தொழுகைகளுக்கு வழக்கமாகத் தொழும் முன்-பின் சுன்னத் தொழுகைகள் இல்லை. சான்று:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபாவுக்குப் புறப்பட்டார்கள். (அங்கு)நமிரா அருகில் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அங்கு இறங்கி, சூரியன் நடுவானிலிருந்து மேற்கு நோக்கிச் சாயும்வரை தங்கினார்கள். (பின்னர்) கஸ்வா எனும் (தம்) ஒட்டகத்தை ஆயத்த நிலையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, அவர்களுக்கு வாகனம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, 'பத்னுல்வாதி' எனும் பள்ளத்தாக்கு வந்தபோது (அங்கு இறங்கி) மக்களுக்கு உரையாற்றினார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் (லுஹ்ருத் தொழுகை நேரத்தில்) தொழுகை அழைப்பு விடுத்து, இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரைத் தொழவைத்தார்கள். அதன் பின்னர் பிலால் (ரலி) இகாமத் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழவைத்தார்கள் அவ்விரண்டு தொழுகைக்கிடையே வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (முஸ்லிம் அறிவிப்பில் இடம்பெற்ற நீண்ட ஹதீஸின் சுருக்கம். நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 649).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவை அடைவதற்காகப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி மக்ரிப், இஷாவையும் (சேர்த்துத்) தொழவைத்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக)வேறெதுவும் தொழவில்லை. அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஹதீஸின் ஒருபகுதி. நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 650).
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருவேளைத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுததற்கான நபிவழிச் செய்திகள் அநேகம் உள்ளன. விரிவஞ்சி அவை இங்குக் குறிப்பிடப்படவில்லை.
உள்ளூரில் ஜம்உச் செய்தல்
ஜம்உ - சேர்த்துத் தொழுதல் பயணிகளுக்கு மட்டுமல்லாது ஊரில் இருக்கும் உள்ளூர்வாசிகளும் இரு நேரத் தொழுகைகளைச் சுருக்காமல் ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுது கொள்ளலாம் எனவும் நபிமொழிகளில் வழிகாட்டல் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹ்ரு, அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 543562).
(இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம், "இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ?" என்று அய்யூப் கேட்டபோது, "இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்ச நிலையோ பயணத்திலோ (அவர்கள்) இருக்கவில்லை. அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 11461147, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக். இவற்றில் சில அறிவிப்புகளில், அப்போது ''அச்சமோ, மழையோ இருக்கவில்லை'' என்று அறிவிக்கப்பட்டுள்ளன).
மழை போன்ற காரணத்தினால் உள்ளூர்வாசிகள் ஊரிலிருக்கும்போது ஜம்உச் செய்துகொள்ளலாம் என்று விளங்க முடிகிறது. மற்றபடி இது பொதுவான சலுகையாகக் கருதி தொடர்ந்து ஜம்உச் செய்தல் கூடாது.
பயணத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள்
அல்லாஹ், உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் உள்ளூரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும் பயணத்திலிருக்கும்போது இரண்டு ரக்அத்களாகவும் அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 11091110, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா).
"அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு, பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி 35010903935, முஸ்லிம் 11051106, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ரு (ரலி) உமர் (ரலி) உதுமான் (ரலி) ஆகியோருடனும் பிரயாணம் செய்திருக்கிறேன். அவர்கள் லுஹ்ரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதனையும் தொழமாட்டார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்: திர்மிதீ 499).
பிரயாணத்தில் நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுதுகொள்ள மேற்கண்ட அறிவிப்புகளில் சான்றுகள் உள்ளன!
கஸ்ருத் தொழுகை தொடர்பாக அடுத்தக் கேள்வியையும் பார்ப்போம்.
oOo
ஐயம்: 
பிரயாணம் செய்யும் போது, எவ்வளவு தூரத்தினைக் கணக்கில் கொண்டு கஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டும்?
- சகோதரர் Mustafa மின்னஞ்சல் வழியாக.
தெளிவு: 
பயணத்திலிருப்போர் தொழுகைகளை ஜம்உ, கஸ்ருச் செய்து கொள்ள இரு கருத்துகளுக்கு இடமின்றி தெளிவான வழிகாட்டல் உள்ளது. ஆனால், பயணிகள் எவ்வளவு காலம் வெளியூரில் தங்கினால் கஸ்ருச் செய்யலாம் என்பதிலும், எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்யலாம் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் நபி (ஸல்) அவர்கள் வெளியூரில் கஸ்ருச் செய்தார்கள் என்பது குறித்து, எண்ணிக்கையில் பல நாள்களைக் குறிப்பிட்டு பல அறிவிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் கூடுதலாகப் பத்தொன்பது நாள்கள் தங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பை மட்டும் எடுத்துக்கொள்வோம்.  
கஸ்ருத் தொழுகைக்கான கால அளவு
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம்; (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 10804298 4299,  திர்மிதீ 504, இப்னுமாஜா).
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்கள் மக்காவில் தங்கினார்கள். மக்காவில் தங்கிய பத்தொன்பது நாள்களும் நான்கு ரக்அத்கள் தொழுகைகளைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத் தொழுதுள்ளார்கள் என்று மேற்கண்ட அறிவிப்பு சந்தேகத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகிறது. இந்த நபிவழிச் செய்தியிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய நாள்கள் முழுவதும் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்று விளங்க முடிகிறதே தவிர, வெளியூரில் தங்குவோர் பத்தொன்பது நாள்களுக்கு மேல் கஸ்ருச் செய்யக்கூடாது என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை!
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்களுக்கும் அதிகமாக மக்காவில் தங்கியிருந்து, அவற்றில் பத்தொன்பது நாள்கள் மட்டும் கஸ்ருச் செய்து மற்ற நாள்களில் தொழுகைகளின் ரக்அத்களை முழுமையாகத் தொழுதார்கள் என்றிருந்தால் வெளியூரில் தங்குவோருக்கு கஸ்ருத் தொழுகையின் கால அளவு பத்தொன்பது நாள்கள் என முடிவுக்கு வந்துவிடலாம். அவ்வாறின்றி, மக்காவில் தங்கிய நாள்களில் நபி (ஸல்) அவர்கள் கஸ்ருச் செய்திருப்பதாலும் கால அளவைக் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்ல வேறு நபிமொழி அறிவிப்புகள் இல்லாததாலும் வெளியூரில் தங்கும் நாள்களில் கஸ்ருச் செய்வதில் கால அளவை நிர்ணயிக்காமல் வெளியூரில் தங்கும் நாள்கள் அனைத்திலும் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்கிற முடிவே பொருத்தமாக உள்ளது.
கஸ்ருத் தொழுகைக்கான தூரம்
கஸ்ருச் செய்வதற்கான தூரத்தைக் கணக்கிட்டுக்கொள்ள, இன்றைய கிலோ மீட்டர் என்கிற அளவு அன்று இல்லையென்றாலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மைல், ஃபர்ஸக் என்கிற அளவுகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவிப்புகளிலிருந்து விளங்க முடிகிறது.
"(மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த 'ருவைஸா' எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி (ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரின் எல்லையிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளது. அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில் தான் நபி (ஸல்) அவர்கள் பயணத்தின் போது இளைப்பாறுவார்கள்" என்று இப்னு உமர் (ரலி) என்னிடம் கூறினார்கள். அறிவிப்பளார்: நாஃபிவு (ரஹ்) (நூல்: புகாரி 487).
மூன்று மைல்கள் ஒரு ஃபர்ஸக்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து(பேரீச்சங்) கொட்டைகளை நான் என் தலையில் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்தேன். அந்த நிலம் இங்கிருந்து ஒரு ஃபர்ஸகில் மூன்றில் இரு பங்கு (அதாவது இரண்டு மைல்கள்) தொலைவு இருந்தது. அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) (நூல்கள்: புகாரி 31515224, முஸ்லிம் 4397, அஹ்மத்).
பிரயாணிகள் தொழுகையைக் கஸ்ருச் செய்வதற்கான தொலைவு குறித்தும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் நபிமொழிகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு: 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ருத் தொழுதார்கள்; (மக்காவுக்குச் சென்ற பயணத்தில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ருத் தொழுதார்கள்.அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 10891551, முஸ்லிம் 1114;1115, திர்மிதீ 501, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).
மதீனாவில் லுஹ்ருத் தொழுகையை முடித்துவிட்டுப் பயணம் புறப்பட்ட நபி (ஸல்) அவர்கள், அஸ்ரு நேரத்தில் துல்ஹுலைஃபாவை அடைந்து அங்கு நான்கு ரக்அத்கள் கொண்ட அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுள்ளார்கள். மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில் சுமார் ஆறு மைல் தொலைவில் துல்ஹுலைஃபா எனும் இடம் அமைந்துள்ளது. மதீனாவிலிருந்து ஆறு மைல் தொலைவுக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகக் கஸ்ருச் செய்திருப்பதால், உள்ளூரிலிருந்து ஆறு மைல்களைக் கடந்ததும் பயணிகள் கஸ்ருத் தொழுகையை மேற்கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம் என்றாலும், நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவை அடைந்தபோது அஸ்ரு நேரம் வந்ததால் அங்குக் கஸ்ருச் செய்தார்கள்; ஆறு மைல்களுக்கு முன்போ ஆறு மைல்களைக் கடந்த பின்னரும் அஸ்ரு நேரம் வந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் அங்கும் கஸ்ருச் செய்திருப்பார்கள் என்று விளங்கவும் இடமளிப்பதால், ஆறு மைல் என்பது அஸ்ரு நேரத்தில் அடைந்த தூரம் என்று கொள்ளலாமே தவிர, கஸ்ருத் தொழுகையை நிறைவேற்றுவதற்கான தொலைவு ஆறு மைல் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
ஒரு ஃபர்ஸக் அல்லது மூன்று மைல்கள்
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக் தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) (நூல்கள்: முஸ்லிம் 1116, அபூதாவூத் 1201, அஹ்மத் 11904).
குறிப்பு:- "மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்" என்று ஃபர்ஸக்கைப் பற்றிய ஐயத்துடன் அறிவிப்பவர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஃபா (ரஹ்) ஆவார்.

ஒரு ஃபர்ஸக் தொலைவு என்பது மூன்று மைல்களாகும். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் இதையொத்த வேறொரு ஹதீஸில், "ஒரு ஃபர்ஸக்" எனத் திட்டவட்டமான சொற்றொடர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸில் இடம்பெறும் சொற்றொடரை, "மூன்று மைல் அல்லது ஒரு ஃபர்ஸக்" என்று திருத்திப் பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்புகளில் மூன்று மைல்களா; அல்லது மூன்று ஃபர்ஸக்களா? என்பதில் சந்தேகம் ஏற்படும். ஆனால், ஒரு ஃபர்ஸக் என்பது மூன்று மைல் தொலைவு என்பதை, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''ஒரு ஃபர்ஸக்'' பயணம் மேற்கொண்டால் கஸ்ரு தொழுவார்கள்'' என்று அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்து, இப்னு அபீஷைஃபாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் தெளிவாக்கி விடுகின்றது.
ஆகவே, "ஒரு ஃபர்ஸக் - மூன்று மைல்கள் பயணம் சென்றுவிட்டால் நான்கு ரக்அத்கள் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுகொள்ளலாம்" என்பதற்கு நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் அறிவிப்பு ஏற்கத்தக்கச் சான்றாக உள்ளது.
ஒரு ஃபர்ஸக் மூன்று மைல்களாகும். ஒரு மைல் 1748 மீட்டராகும். மூன்று மைல்கள் 5244 மீட்டராகும். அதாவது உள்ளூரிலிருந்து ஐந்தே கால் கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் வந்து விட்டால் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்றே நபிவழி அறிவிப்புகளிலிருந்து விளங்கமுடிகிறது.  
பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும்
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் பயணம் என்பது கால்நடையாகவும் பயண வாகனங்களாக குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகள் மீதேறியும் செய்யப்பட்டு வந்தது. அவை இன்றைய இயந்திர வாகனங்களைப் போன்ற விரைவு வாகனங்கள் அல்ல. முந்தைய காலப் பயணங்கள் பெரும்பாலும் வெளிச்சமுள்ள பகல் நேரத்தில் மட்டுமே நடைபெற்றன. இரவுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் நிலவொளிக் காலங்களில் அவை அமைந்திருந்தன. பயணத்தின் இடையில் ஓய்வுக்காகத் தங்க வேண்டி இருந்தாலும் கூடாரம் அமைப்பதற்கான பொருள்களைக் கையோடு எடுத்துச் சென்றிருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்ளலாம். இல்லையேல் வெட்டவெளியில் தங்கிடவேண்டும். தங்குமிடத்தில் பயணிகளுக்கும் அவர்களின் கால்நடை வாகனங்களுக்கும் தேவையான நீர் வசதி உள்ளதா என்பதையும் தேர்வுசெய்து தங்குவது முக்கிய அம்சமாகும். இது போன்று  அன்றைய பிரயாணத்தில் பல சிரமங்களைப் பயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது.
இன்றைய பயணத்தில் கையோடு கொண்டு செல்லவேண்டியவை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. உணவு, குடிநீர் இயந்திர வாகனத்தில் கிடைத்துவிடும். கழிப்பிடம், குளியலறை, படுக்கையறை வரை எல்லாமே இயந்திர வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். வழியில் தங்குவது என்றாலும் தகுதிக்கேற்ப விடுதிகளைத் தேர்வுசெய்து வசதியாகத் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இரவும் பகல் போல் மின்னொளியில் ஜொலிக்கும் இன்றைய பயணத்தை அன்றைய பயணத்துடன் ஒப்பிட்டு சிரமங்கள் உள்ளன என்று கூறுவதற்கில்லை!
''பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்து விடுகிறது. ஆகவே உங்களில் ஒருவர் தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி180430015429, முஸ்லிம் 3892, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
காலத்தைப் பொருத்துப் பயணத்தின் வேதனை மாறுபடுமே தவிர, குடும்பம் உறவினர் மற்றும் நண்பர்களைப் பிரியும் பயண வேதனை எல்லாக் காலத்தவருக்கும் பொதுவாக எல்லாப் பிராயாணிகளுக்கும் ஏற்படும் என்பதை, "பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும்" எனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று தெளிவாக்குகிறது.
பயணத்தின் களைப்பை உணர்ந்தவர்கள் - உணர்பவர்கள் காலவரையின்றி வெளியூரில் தங்கும்வரை ஜம்உ, கஸ்ரு செய்துகொள்ளலாம். 
இஸ்லாம் பயணிகளுக்குத் தொழுகையில் ஜம்உ, கஸ்ரு வழங்கியிருப்பது சலுகைதானே தவிர கட்டாயமல்ல. ஜம்உ, கஸ்ரைத் தவிர்த்துக்கொண்டு பிரயாணத்தில் அந்தந்த வேளைத் தொழுகையை அதற்கான நேரத்தில் கஸ்ருச் செய்யாமல் முழுமையாக நிறைவேற்றினாலும் அதற்கான கூடுதல் நன்மைகளையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம். இவை, அவரவரின் உற்சாகம் / களைப்பு / வசதி / விருப்பம் ஆகியனவற்றைப் பொருத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்! 
(இறைவன் மிக்க அறிந்தவன்)

மண்ணறை விசாரணை!

னிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!


மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!

மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.
இறைவசனங்கள்:
நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).

இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).
திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது(அல்குர்ஆன் 83:7).

திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).
நபிமொழிகள்:
அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், தமது தலையை உயர்த்தி,
 "அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:

"இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் 
(பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக' என்பார்.

அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று 
(அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.

பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின்
 (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.

அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், 'என் அடியானின் 
(வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்' என்று கூறுவான்.

பின்னர் அவரது உயிர் 
(மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.

பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று 
(என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார்.

உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து
 (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்)கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார்.

அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு 
(நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.
(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்)ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.

உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று
(தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின் 
மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னாருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது"

இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், '... 
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்" (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார். அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார். அடுத்து 'உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார்.

அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து 
(ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் 'நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே' என்று கதறுவார்" என்று நபி (ஸல்) விளக்கினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).

ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.

உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன்  மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.

திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கியுள்ளார்கள்:

"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.
"உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (நூல்கள் - புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்)அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)
நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் "மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது" என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, "மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை"  என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!
சரியான பதில்களைக் கூறி  மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!

ஒழியட்டும் வரதட்சணை!


"மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை" - (அல்குர்ஆன் 010:044).

இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கைவிட்டு, பிறமதக் கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய பழக்க வழக்கங்களை நுழைத்து, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அமைய வேண்டிய தங்களின் திருமண வாழ்வின் துவக்கத்தைப் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜாஹிலிய்யத்திற்குத் தாரை வார்த்துவிட்டு ஆரம்பிக்கின்றனர். அவ்வாறெனில் அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வகையில் இறைவனுக்கு உவப்பான, மறுமை வெற்றிக்கான வழியில் அமையும்? எனச் சிந்திக்க வேண்டியது இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய முஸ்லிம்களுக்குக் கடமையாகும்.

அஞ்ஞானத்தின் அடித்தட்டில் முகம் சுழிக்க வைக்கும் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்த அரபிகளைக்கூட பெண்களின் உரிமையான மஹரைக் கொடுக்க வேண்டிய முறைப்படி கொடுக்க வைத்து மனைவியரின், மணவாழ்வின் மகத்துவத்தினை இஸ்லாம் அவர்களுக்கு உணர்த்தியது. எத்தகைய மோசமான பழக்கவழக்கங்களையும் பாரிம்பரிய மூடநம்பிக்கைகளையும்கூட படைத்த இறைவனை ஏற்றுக் கொண்ட நிமிடத்திலேயே அடியோடு துடைத்தெறியும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தமிழக முஸ்லிம்களின் தனித்தன்மை, இடையில் வந்து சேர்ந்த வரதட்சணை எனும் வன்கொடுமை பித்அத்தால் சீரழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.அதைச் சமூகத்திலிருந்து முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டியது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும்.

அல்லாஹ்வின் தனிப்பெரும் உதவியோடு, உலகத்தில் உள்ள அனைத்துச் சீர்கேடுகளையும் வேரறுத்து உன்னதச் சமுதாயம் படைத்துத் தந்த உத்தமநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைத் தம் வாழ்வில் அமைத்துக் கொள்வதுதான் அவர்களை உயிரினும் மேலாக நேசிப்பதன் அடையாளம் ஆகும். "பிறரது மதக்கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர் நம்மைச் சார்ந்தவரல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள். ஆனால், காலப்போக்கில் மாற்றாரின் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றாய் முஸ்லிம்களின் அன்றாட வாழ்விலும் வழிபாடுகளிலும் அவர்களை அறியாமல் புகுந்து கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறது. இவற்றை ஒழித்துக் கட்டுவதற்கான வழிதான் என்ன?

மது அருந்துதல், வட்டி உண்ணுதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்றவற்றை இறை கட்டளைகளுக்கு மாறு செய்யும் மிகப்பெரிய பாவமாக முஸ்லிம் சமுதாயம் உணர்ந்திருக்கிறது. ஆனால், வாழ்க்கைத் துணையாக அடையப் போகும் பெண்ணிடமிருந்துக் கணக்கிட்டு தட்சணை பெறுவது என்பதை, "மணமுடிக்கும் பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹரை மனமுவந்துக் கொடுத்து விடுங்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் மற்றொரு மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்துகொள்ள முடியாமல் அவர்களது சிந்தனைக்குப் பொருளாசை, புகழாசை, போலி அங்கீகாரங்கள் திரையிட்டு மறைத்து விட்டன. சமுதாயத்தின் மன அடித்தட்டுகளில் இறைவனின் மீது எவ்வித அச்சமும் இல்லாத அளவிற்கு ஊடுருவிப் போய் விட்ட இக்கொடும் பாவத்தைச் சமுதாயத்திலிருந்து அடியோடு அகற்றுவது அத்துணை எளிதான காரியம் அல்ல.

மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதிலிருந்து உருவாக வேண்டும். பன்றி மாமிசம் உண்பது முஸ்லிம்களுக்கு ஒவ்வாத - இறை கட்டளையை மீறுகின்ற செயல் என்பதை எவ்விதம் ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்துள்ளனரோ அத்தகைய உணர்வு வரதட்சணை எனும் இக்கொடியப் பாவச்செயலைச் செய்ய முற்படும் போதும் ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் தாய்மார்களே!
மணமுடிக்க வேண்டிய மகன்கள் உங்களுக்கிருந்தால் அவர்களுக்காக வரதட்சணை வாங்காமல் மணமுடித்துக் கொடுப்பதுதான் உங்களுக்கு நன்மையானது. பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு வரதட்சணை வாங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்காதீர்கள்.

"... நீங்கள் விரும்புகின்ற ஒன்று உங்களுக்கே தீமை பயப்பதாக அமையக் கூடும்; நீங்கள் வெறுக்கின்ற ஒன்று உங்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்து விடும். (உங்களுக்கு எது நன்மை? எது தீமை? என்று) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்" (அல்குர்ஆன் 002:216).

அல்லாஹ்வின் மேற்கண்ட அறிவுரையை மட்டுமின்றி, நடைமுறையையும் முஸ்லிம் தாய்மார்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் தங்களின் மகனுக்காக வரதட்சணை வாங்கும் பழக்கம் தொடர்ந்தால், பின்னர் அவர்கள் தங்களின் மகள்களுக்கு அதைவிட அதிக அளவில் கொடுக்க வேண்டியது வரும். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு எதிரான வரதட்சணை எனும் கொடும் பாவத்தின் பின்விளைவு, ஒருதலைமுறையோடு முடிந்து விடாது. அவர்கள் தங்கள் மகன்களுக்கு வாங்கியதுபோல், தங்கள் மகள்களுக்குக் கொடுத்ததுபோல், பதின்மடங்கு அவர்களின் பேத்திகளுக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு முஸ்லிம் தாய்மார்கள் வாங்கும் வரதட்சணையினால் பெருமளவு பாதிக்கப்படப் போவது அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்தாம். தங்களின் பிள்ளைகளைப் பிற்காலத்தில் துன்பத்திற்கு உள்ளாக்குவதுதான் முஸ்லிம் தாய்மார்களின் விருப்பமா? அது எவ்வகையில் அவர்களுக்கு நன்மை தரும்? மாற்றாரின் கலாச்சாரமான வரதட்சணை எனும் இக்கொடும்பாவம் இறைமார்க்கத்தினரிடமும் ஒட்டிக் கொண்டு தொடர வேண்டுமா? அல்லது ஒழிக்கப்பட வேண்டுமா? முஸ்லிம் தாய்மார்கள் ஒவ்வொரும் சிந்தித்துப் பார்த்து நல்ல முடிவுக்கு வரவேண்டும்!.

பிள்ளைகளைப் பெற்றெடுத்தத் தந்தையரே! 
இல்லறத்தில் அமைதி நிலவ வேண்டுமெனில், மனைவியிடம் ஆலோசனை பெறுவது நல்லதுதான். ஆனால், அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிரான ஆலோசனைகளுக்கும் சேர்த்துத் தலையாட்டிவிட வேண்டாம். "எனக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை; வரதட்சணை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று வீட்டில்(மனைவி) கட்டாயப் படுத்துகிறார்கள்" என்று சப்பைக்கட்டுக் காரணம் கூறவும் வேண்டாம். அந்தக் காரணத்தைக் கூறி உலகத்தாரைச் சமாளித்து விடலாம்; உலகங்களைப் படைத்தாளும் அல்லாஹ்விடம் மனைவியை மாட்ட வைத்துத் தப்பித்துக் கொள்ள முடியுமா?

"செவிப்பறையைக் கிழித்தெறியும் அப்பேரோசை முழங்கும்(மறுமையின்)போது, தன் உடன்பிறந்தானையும் தன்னை ஈன்றெடுத்தத் தாயையும் தந்தையையும் தன் மனைவியையும் மக்களையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான்" (அல்குர்ஆன் 080:033-036) என்ற இறைமறை விடுக்கும் எச்சரிக்கை 'நமக்கல்ல' என்று நினைத்து, மறுமையில் ஏமாறிவிட வேண்டாம்.

"வாங்கு வரதட்சணை" என்று உறவுகள் ஒன்றுகூடி ஆசைகாட்டலாம். "மாட்டேன்" என்று மறுதலிப்பதுதான் நல்ல தந்தைக்கு அழகு. உறவுகளில் எதுவும் மறுமையில் உங்கள் உதவிக்கு வராது. மகனுடைய கத்னாவிலிருந்து பட்டதாரியாக்கிய படிப்புச் செலவு வரை கணக்கிட்டு, வரதட்சணையாகக் கேட்கும் வியாபாரி ஆகிவிடாமல் பிள்ளைகளுக்கானப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்து வளர்த்த உண்மையான தந்தையாக ஒவ்வொரு முஸ்லிம் தந்தையும் திகழ வேண்டும். நன்மைமிகு முடிவுகளில் உறுதியுடன் விளங்குபவர்களின் நற்கூலியைக் கொஞ்சமும் குறைவின்றிக் கொடுப்பது, படைத்த இறைவனின் தனித்தன்மையாகும். மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கான நற்கூலியைத் தர அல்லாஹ்வே போதுமானவன்; மனிதர்களிடமிருந்து 'கைக்கூலியை' எதிர்பார்த்து இறைவனின் கட்டளையைக் காற்றில் பறக்க விடும் தந்தையர் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வாழ்வை ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

எதிர்கால மணமகன்களே! 
மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின், இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து, மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும். இறைமறை (004:034) புகழுந்துரைக்கும் 'ஆளுமையுடைய ஆண்மகனாக'த் திகழ வேண்டுமெனில் இஸ்லாம் வலியுறுத்தும் மணக்கொடையான மஹரை ஏட்டளவில் 101 ரூபாய், 1001 ரூபாய் எனச் சுருக்கி விடாமல், தாராளமாக வழங்கித் திருமணம் செய்வதைக் கொள்கையாகக் கொள்வதுதான் சாலச் சிறந்ததாகும்.

"மேலும், (மணப்)பெண்களுக்கு (அவர்களின் உரிமையான) மணக்கொடையை மனமுவந்து அளித்து விடுங்கள் ..." (அல்குர்ஆன் 004:004) என்று இறைமறை அறிவுறுத்தும் வார்த்தைகளின்படி தங்கள் வாழ்வின் அடித்தளத்தை ஆண்மகன்கள் அமைத்துக் கொள்ளட்டும். தங்கள் இல்லற வாழ்வின் தொடக்கம் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய மனநிறைவோடு அமைந்து விட்டால், அவனுடைய அருள், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கிடைத்து வரும். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக யாரோடு போராட வேண்டியிருந்தாலும் தயங்காமல் போராடுவதுதான் உண்மையான முஸ்லிம் ஆண்மகனுக்கான அடையாளம் என்பதை உணர்ந்து மணமகன்கள் இறைகட்டளைக்கு எதிரான வரதட்சணை எனும் கொடுமைக்கு எதிராகப் போராட வேண்டும்! அல்லாஹ் வெற்றியைப் போராட்ட வாழ்வின் முனையில் வைத்துள்ளான். தங்களின் வருங்கால வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அறிவுரையை ஒவ்வொரு மணமகனும் கருத்தில் கொள்ள மறந்து விட வேண்டாம்:
"பிறந்த குலம், திரண்ட செல்வம், புறஅழகு, மார்க்கப்பற்று(எனும் அகஅழகு) என நான்கு தகுதிகளை அளவுகோலாகக் கொண்டு, ஒரு பெண் (உலக வழக்கில்) மணமுடிக்கப் படுகிறாள். நீ மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்து ஈடேற்றம் அடைந்து கொள்" புகாரீ.

திருமணத்திற்காகக் காத்திருக்கும் அருமைச் சகோதரிகளே!
இஸ்லாம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பெண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! 'மஹர்' என்பது, ஏட்டளவில் எழுதிவைத்து மணவிலக்குப் பெறும்போது பெண்களுக்குக் கொடுக்கப்படும் சிறு தொகையல்ல என்பதையும் திருமணத்தின்போது மணப்பெண் நிர்ணயித்துக் கேட்கும் மணஉரிமை என்பதையும் பெண்கள் உணர வேண்டும். மேலும், இஸ்லாத்தில் பெண்களின் ஒப்புதலின்றி அவர்களை யாரும் மணமுடித்துத் தரமுடியாது. பெருமானாரின் பொன்மொழி்: "கன்னியின் (மௌன) ஒப்புதலும் கன்னி(வயது)கழிந்த பெண்ணின் வாய்மொழி ஒப்புதலும் இன்றி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது". பெருமானாரின் இந்தப் பொன்மொழியினை மனதில் ஏந்தி, வரதட்சணை கேட்கும் மணமகனைப் புறந்தள்ளி, இறை கட்டளையை நடைமுறைபடுத்த மணமகள்கள் தயாரானால் இக்கொடிய பாவம் சமுதாயத்திலிருந்து அடியோடு அழிக்கப்படுவது உறுதி.

தனது வருங்காலக் கணவன், சில இலட்சங்களுக்கும் பல பவுன்களுக்கும் விற்கப்பட்ட கடைச்சரக்காக இருப்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? தனது வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்கும்போது மணமகள்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொள்ளட்டும். மணமகன் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை; நல்ல பண்புகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தால் போதும். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒப்ப மணமக்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர்வார்களாயின், கணவன் ஏழையாக இருந்தாலும்"வளங்களை வாரி வழங்கி, அவர்களைச் செழிப்புடன் வாழச் செய்வேன்" என்று அல்லாஹ் (024:032) வாக்களிக்கிறான்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களே!, திருமணங்களை முன்னின்று நடத்தும் மண உரையாளர்களே! 
வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் பங்கெடுப்பதில்லை என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உறுதி எடுக்க வேண்டும். வரதட்சணை என்பது இறைகட்டளைக்கு எதிரான கடும் பாவச்செயல் என்பது, மார்க்க அறிஞர்கள் அறியாத ஒன்றல்ல; எனினும் நினைவூட்டல் என்பது இன்றையச் சமுதாயக் கட்டாயத் தேவைகளில் ஒன்றாகி விட்டது:

"... நல்லறங்களிலும் இறையச்சம் நிறைந்த செயற்பாடுகளிலும் நீங்கள் ஒத்துழையுங்கள். மாறாக, பாவங்களிலும் வரம்பு மீறுவதிலும் ஒத்துழைக்காதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். திண்ணமாக, (குற்றவாளிகளைத்) தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்" (அல்குர்ஆன் 005:002).

ஜமாஅத் தலைவர்களே, பொறுப்பாளர்களே! 
"முடிந்தவரை வாங்கிக் கொண்டு, பள்ளிவாசலுக்குப் பத்து சதவிகிதம் கொடுத்து விடு" என்று பாவமான வரதட்சணையில் பங்கு கேட்பவர்களாக ஜமாஅத் பொறுப்பாளர் இருந்தால் அந்த ஜமாஅத்தின்கீழ் வாழும் மக்கள் எவ்வகையில் செயல்படுவர் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. களங்கமான பணத்தைக் கொண்டு, தன் இல்லத்தைப் பராமரிப்பதைக் களங்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயவனான அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான். ஜமாஅத் பொறுப்பாளர்கள், அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.

பெருமானார் (ஸல்) முஸ்லிம்கள் அனைவரையும் எச்சரித்தார்கள்: "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். (மக்கள்)தலைவர் ஒருவர், அவருடைய பொறுப்பின் கீழிருந்த அனைவரையும் குறித்து விசாரிக்கப் படுவார். ஒரு குடும்பத் தலைவன், அவனுடைய குடும்பத்தார் குறித்து விசாரிக்கப் படுவான். ஒரு மனைவி, அவளுடைய கணவனின் உடைமைகளையும் பிள்ளைகளையும் குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு (வேலைக்கார)அடிமை, அவனுடைய முதலாளியால் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரிக்கப் படுவான். இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள்"புகாரீ.

"தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை" (அல்குர்ஆன் 013:011)

எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை, அவனுடைய கட்டளைகளுக்கும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டு நிறைவேற்றுவதற்கும் அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்வதற்கும் முன்வந்தால் மட்டுமே சமுதாயத்தில் புரையோடியுள்ள வரதட்சணை என்ற இக்கொடிய அரக்கனை வீழ்த்த இயலும்.

அத்தோடு, தொடர்ந்து வரதட்சணை வாங்கி/கொடுத்து இறை கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு, வெட்கமோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சமுமின்றி நடமாடுபவர்களை, அவர்கள் இறைமார்க்கத்திற்கு எதிராக அறைகூவல் விடுபவர்கள் என்ற வகையில் சமுதாயத்திலிருந்து அவர்களைப் புறக்கணிப்பதற்கும் ஜமாஅத், சங்க, இயக்க, அமைப்புகளில் அவர்களை இணைக்காமல், "வரதட்சணை வாங்கி/கொடுப்பவர்களுக்கு இங்கு இடமில்லை" என்ற அறிவிப்பைச் சமூகத்தில் பரவ விட்டு, "பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்" என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, "வரதட்சணை வாங்குதலும் பாவச்செயல்" என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக மாற்றம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அல்லாஹ் அருள்வானாக!

ஆக்கம்: அதிரை ஜமீல்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )