Nov 30, 2011

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும் ( Part - I )


بسم الله الرحمن الرحيم

ஜனாசாவும்  அதனோடு சார்ந்த சட்டங்களும்
v  மரணத்தருவாயில் இருக்கும் நோயாளி செய்யவேண்டியது
ü  அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக்கொண்டு, பொறுமையுடன் இருப்பதோடு, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணத்துடன் இருப்பது அவசியம்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூ/மினின் விடயம் ஆச்சர்யத்தக்கது, அவனது எல்லா விடயமும் அவனுக்கு நல்லதே, அது ஒரு மூ/மினுக்கே தவிர இருக்கவும் மாட்டாது, அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான் அது அவனுக்கு நல்லதாகிவிடும், அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமைக் காப்பான் அது அவனுக்கு நல்லதாகிவிடும்.  (முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்காமல் மரணிக்கவேண்டாம்.’ (முஸ்லிம்)
Ø  அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும் விரும்பி விடுகிறான், யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுத்து விட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான் (என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்) அல்லாஹ்வின் நபியவர்களே! மரணத்தை வெறுப்பது தானா? நாம் அனைவரும் மரணத்தை வெறுக்கிறோமே என நான் கேட்டேன். அதற்கவர்கள் அவ்வாறல்ல எனினும் மூ/மினானவர், அல்லாஹ்வின் அருளையும் அவனின் பொருத்தத்தையும், அவனது சுவனத்தையும் கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவர் விரும்பி விடுகிறார். (அது போன்றே) அல்லாஹ்வும் அவரது சந்திப்பை விரும்பி விடுகிறான். நிச்சயமாக நிராகரிப்பவன் அல்லாஹ்வின் தண்டனை பற்றியும், அவனது கோபத்தை பற்றியும் நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவனும் வெறுத்து விடுகிறான். (அது போன்றே) அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுப்படைந்து விடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.   (முஸ்லிம் : 454)
ü  எவ்வளவு நோய் கடுமையானாலும் மரணிப்பதை ஆசை வைக்கக்கூடாது.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும்  ஏற்பட்ட ஒரு சோதனைக்காக மரணிப்பதை ஆசைவைக்கவேண்டாம், அப்படி செய்யவேண்டிய கட்டாயம் இருந்தால்  அவர்,    اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي                              யா அல்லாஹ் வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழவை, மரணிப்பதுதான் நல்லம் என்றிருந்தால் மரணிக்கச் செய்துவிடு.என்று கூறட்டும்.  (புஹாரி, முஸ்லிம்)
ü  மனிதர்களுக்கு ஏதும் அநியாயம் செய்திருந்தால், அல்லது உரிமைகள் செலுத்த வேண்டியிருந்தால் அவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது தன் சகோதரனின் மானத்துக்கோ, பொருளாதாரத்துக்கோ அநியாயம் இழைத்திருந்தால்,திர்ஹம் தீனர் (காசு பணம்) இல்லாத மறுமை நாள் வருமுன் அதை அவர் நிறைவேற்றிவிடட்டும், (மறுமையில்)  அவருக்கு நல்லமல்கள் இருந்தால் அதை எடுதுத் அந்தப் பாதிக்கப்பட்ட மனிதருக்கு கொடுக்கப்படும், அவருக்கு நல்லமல்கள் இல்லையென்றால் அவரது (பாதிக்கப்பட்டவன்) பாவங்களை எடுத்து அநியாயம் இழைத்தவன் மீது சுமத்தப்படும்.  (புஹாரி)
Ø  நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் முப்லிஸ்என்றால் யார் தெறியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; ‘எனது உம்மத்தில்  வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக்கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அனியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,,  அப்போது பாதிக்கப்பட்டவனுக்கு அநியாயம் இலைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இலைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இலைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான்.  (முஸ்லிம்)
ü  அதில் விஷேடமாக கடன் சம்பந்தப்பட்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஷஹீதின் கடனைத்தவிர உள்ள எல்லா பாவங்களும் மண்ணிக்கப்படுகின்றன.' (முஸ்லிம்)
ü  இதுபோன்ற விடயங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தால் அவற்றை விரைவாகவே உயில் (வசீய்யத்தாக) எழுதி வைத்துவிட வேண்டும், அது கட்டாய மும்கூட.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'வசீய்யத் செய்ய விரும்பும் ஒரு முஸ்லிம், அதை எழுதி தன் தலைமாட்டில் வைத்துக்கொல்லாமல், இரண்டு இரவுகளைக் கழிப்பது அவனுக்கு தகுந்ததல்ல.' இப்னு உமர் (றழி) கூறினார்கள் : நபியவர்களிடத்திலிருந்து இந்த செய்தியைக் கேட்டதிலிருந்து எனது வசீய்யத் என்னிடம் இல்லாமல் ஒரு இரவும் என்னைத் தாண்டியதில்லை.  (புஹாரி, முஸ்லிம்) 
ü  சொத்துக்களைப் பற்றி வசீயத் செய்வதாக இருந்தால் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் வசீய்யத் செய்ய வேண்டும், மாறாக சொத்துக்கள் அனைத்தையும் வசீய்யத் செய்யக்கூடாது.
Ø  /த் பின் அபீ வக்காஸ் (றழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபொழுது நபியவர்கள் நோய் விசாரிக்கச் சென்றார்கள், அப்பொது ச/த் அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன, ஒரு பெண் பிள்ளையைத் தவிர அனந்தரக்காரர்களும் எனக்கில்லை, எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை வசீயத் செய்துவிடவா?' என்று கேட்க, வேண்டாம் என்று நபியவர்கள் கூற, 'அறைவாசியை வசீய்யத் செய்யவா? என்று கேட்ட போதும் வேண்டாம், என்று கூற, மூன்றில் ஒரு பகுதியில் முடியுமா? என்று கேட்டபோது, ' மூன்றில் ஒரு பகுதியை வசீய்யத் செய், அதுவும் அதிகம்தான்.' என்று கூறிவிட்டு, '/தே உனது அனந்தரக் காரர்களை மக்களிடம் கை ஏந்தும் நிலையில் விடுவதை விட வசதி வாய்ப்போடு பணக்காரர்களாக விட்டுச் செல்வது சிறந்தது,என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
ü  வசீய்யத் செய்யும் போது இரண்டு சாட்சிகளை வைப்பது அவசியமாகும்.
Ø  ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங்கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
5:107. நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
5:108. இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (அல் குர் ஆன் 05: 106 - 108)
ü  தவராக பிழையாக வசீய்யத் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டிய தில்லை, இஸ்லாமிய முறைப்படி நிறைவேற்றினால் போதுமானது.
Ø  இம்ரான் பின் ஹுஸைன் (றழி) கூறினார்கள்: ஒரு மனிதர் மரணத் தருவாயில் (அவரிடமிருந்த) ஆறு அடிமைகளையும் உரிமையிட்டார், அவரது அனந்தரக்காரர்கள் நபிகளாரிடம் வந்து, அவர் செய்ததை முறைப்பாடு செய்தார்கள், நபியவர்கள்: 'அவர் அப்படி செய்தாரா?, அல்லாஹ்வின் நாட்டத்தினால் அதை நாம் அறிந்தால் அவருக்காக தொழுதிருக்கமாட்டோம்,'என்று கூறி விட்டு, ஆறு பேருக்கிடையிலும் துண்டு குழுக்கிப் பார்த்து, இரண்டு பேரை விடுதலை செய்துவிட்டு, நான்கு பேரை திருப்பி அடிமையாக்கினார்கள்.  (அஹ்மத், முஸ்லிம்)

ü  இன்று ஜனாசாக் கடமைகளுல் நிறையவே பித்அத்கள் நடை பெருவதனால், அவற்றை செய்யக்கூடாது என வஸீய்யத் செய்வது மிக அவசியமான ஒன்றாகும். அப்போதுதான் அவற்றை தடுக்கவும், ஒழிக்கவும் முடியும்.
Ø  /த் பின் அபீவக்காஸ் (றழி) அவர்கள் மரணப்படுக்கையில் கூறினார்கள், நபிகளாருக்கு செய்யப்பட்டது போன்று  எனக்காக புள்ளைக் குழி தோண்டுங்கள், என் கப்ரின் மீது கல்லை நட்டுங்கள். (முஸ்லிம்)
v  நோயாளிக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியது.
ü  மரணத் தருவாயில் இருக்கும் மனிதருக்கு கலிமாவை சொல்லிக்கொடுத்தல்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு لا إله إلا الله (வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) கலிமாவை சொல்லிக் கொடுங்கள்.'  (முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அறிந்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுளைவார்.'  (முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லஹ்வுக்கு எதையும் இணை வைக்காத நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுளைவார்.; (முஸ்லிம்)
·         குறிப்பு: 1- கலிமாவை அவருக்குப் பக்கத்தில் நின்று சொல்லிக் கொண்டிருக்காமல் மரணத்தறுவாயில் இருப்பவருக்கு சொல்லுமாறு ஏவுவதே நபிகளாரின் கட்டலை,
Ø  நபியவர்கள் தன் பெரியதந்தை அபூதாலிப் மரணத்தருவாயில் இருக்கும் போது அப்படித்தான் செய்தார்கள். (புஹாரி)
Ø  மேலும் ஒரு யூதச் சிருவன் மரணத்தறுவாயில் இருக்கும் போதும் அவர் மூ/மினாவதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டார்கள்.  (புஹாரி)
2- மரணத்தறுவாயில் இருக்கும் ஒருவருக்குப் பக்கத்தில் யாசீன் சூராவை ஒதுவதற்கும் ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை, மாராக,'உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு சூரா யாசீனை ஓதுங்கள்.' என்று வரும் ஹதீஸ் பலவீனமானது.
 3- மரணத்தறுவாயில் இருப்பவரை கிப்லா திசையை நோக்கி வைப்பது   இன்று வழமையாக இருக்கின்றது, ஆனால் அதைக் கட்டாயப்படுத்தி எந்த ஸஹிஹான ஹதீஸ்களும் வரவில்லை என்பதும் முக்கிய அம்சமாகும்.

v  நோயாளி மரணித்த பின் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை,
ü  மரணித்த பின் கண்ணைகளை மூடி விடுவதும், அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவதும் முக்கியமாகும்.
Ø  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த போது)விடம் நுழைந்(அருகில் வந்)தார்கள். அவரது பார்வை மேல் நோக்கி விட்டது. ஆகவே அதை ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மூடினார்கள். அதன்பிறகு நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதை தொடர்கிறதுஎனக்கூறினார்கள். (உடனே) அவர் குடும்பத்தவர்களிலுள்ள மக்கள் பெரும் சப்தமிட்டனர். அப்போது (உங்களுக்காக) நலவானவற்றைக் கொண்டே தவிர துஆ செய்யாதீர்கள், ஏனெனில் அமரர்கள் உங்களது கூற்றுக்கு (அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளுமாறு)  ஆமீன் கூறுகிறார்கள் எனக்கூறினார்கள்.
اللهم اغفر لابي سلمة، وارفع درجته في المهديين، واخلفه في عقبه في الغابرين، واغفر لنا وله يا رب العالمين، وافسح له في قبره، ونور له
(அல்லாஹும்மGfபிர் லிஅபீ ஸலமா, வர்fபஹ் தரஜதஹூ fபில் மஹ்தியீன், வ அக்லிfப்ஹு fபீ அகிபிஹீ fபில் Gகாபிரீன், Gக்fபிர் லன வலஹூ யா ரப்பல் ஆலமீன், fப்ஸஹ் லஹூ fபீ கப்ரிஹீ, வனவ்விர் லஹூ fபீஹி)
அதன்பிறகு யா அல்லாஹ்! அபூஸலாமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக. மீதமிருப்பவர்களில் அவருக்குப்பிறகு அவரை (இழந்தற்குரிய) பகரத்தை நல்குவாயாக அகிலங்களின் இரட்சகனே! எங்களுக்கும் அவருக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரனத்தை நல்கி அதில் ஒளியை ஆக்குவாயாகஎனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா        (முஸ்லிம் : 456)
ü  முகத்தையும் தலையையும் மூடிவிட முடியும், ஆனால் மரணித்தவர் இஹ்ராம் கட்டிய நிலையில் இருந்தால் முகம் தலையை மூடக்கூடாது.
Ø  ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: 'அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை, முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
ü  மரணித்தவரை தயார் செய்து, அவரை முடியுமான அளவு அவசரமாக அடக்கம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேற்றல்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஜனாசாவை அவசரப் படுத்துங்கள்.' (புஹாரி)
·         குறிப்பு: தேவை ஏற்பட்டால் ஜனாசாவை வீட்டில் தாமதப் படுத்தவும் முடியும். அப்படி செய்யக் கூடாது என இரண்டு ஹதீஸ்கள் வந்துள்ளன இரண்டும் மிகவும் பலவீனமானவை. அதே நேரம் உம்மு ஸுலைம் அவர்களின் மகன் மரணித்தபோது முழு இரவும் அது வீட்டில் வைக்கப்படுகின்றது, அதை நபிகளார் கண்டிக்கவுமில்லை, தடுக்கவுமில்லை.
Ø  அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  அபுதல்ஹா(ரலி)வின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபுதல்ஹா(ரலி) வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா(ரலி)வின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா(ரலி) வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரின் மனைவி 'அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு" என பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்துவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்யக்கூடும்" என்றார்கள். இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார். (புஹாரி : 1301.)
Ø  'உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை (வீட்டில்) தடுத்து வைக்காதீர்கள், அவரை கப்ருக்கு விரைவாக எடுத்துச் செல்லுங்கள், அவரது தலை மாட்டில் பகரா சூராவின் ஆரம்பத்தையும், கால் மாட்டில் அதன் கடைசிப் பகுதியையும் ஒதுங்கள்.'  (தபரானி, மிகவும் பலவீனமானது)
Ø  தல்ஹதுப்னுல் பரா என்ற தோழர் மரணித்த போது, நபிகளார் 'அவரை அடக்குவதை அவசரப்படுத்துங்கள், ஏனெனில் ஒரு முஸ்லிமின் சடலத்தை குடும்பத்தவர்கள் மத்தியில் வைத்திருப்பது ஆகுமானதல்ல.' என்று கூறினார்கள். ((அபூ தாவுத், பைஹகி,  இதுவும் பலவீனமானது)
ü  மரணிக்கும் அதே ஊரிலே அடக்கம் செய்யவேண்டு, அவசியத் தேவைக்கே அன்றி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் கூடாது.
Ø  ஜாபிர் (றழி) கூறினார்கள்: உஹது யுத்த முடிவின் போது, அதில் உயிர் நீத்தவர்களை பகீஇல் அடக்குவதற்காக தூக்கிச் செல்லப்பட்டார்கள், அப்போது நபிகளாரின் ஒரு அளைப்பாளர், 'மரணித்தவர்களை அந்த இடங்களிலே அடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஏவுகின்றார்கள், என்று கூறினார், நானோ எனது தாயையும், மாமாவையும் பகீஇல் அடக்குவதற்காக ஒட்டகத்தின் இரு பக்கங்களிலும் கட்டிவிட்டேன்,எல்லோரும் உஹதிலேயே அடக்க, நானும் அவர்களை அவர்களோடே அடக்கினேன்.  (அபூ தாவுத், திர்மிதி, நஸாஇ..) 
ü  ஜனசாவை பார்ப்பதும், முத்தமிடுவதும் ஆகுமானதே. அதற்காக மூன்று நாளைக்கு கண்ணீர் வடிக்கவும் முடியும்.
Ø  ஆயிஷா(ரலி) கூறினார்கள்" நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர் (ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டு விட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார். . (புஹாரி : 1241.)
Ø  .ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.  தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, 'நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.      (புஹாரி : 1244  முஸ்லிம். அஹ்மத்)
Ø  அனஸ் (ரலி) அறிவித்தார்.   நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்" என்றார்கள். . (புஹாரி : 1303.)
Ø  உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.   மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும்  அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்று க்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!" என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஃபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.  சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என  ஸஃத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்" என்றார்கள். . (புஹாரி : 1284)
Ø  அப்துல்லாஹ் பின் ஜபர் (றழி)கூறினார்கள்: நபியவர்கள் ஜபர் அவர்களின் குடும்பத்தினரிடம் மூன்று நாட்கள் வரவில்லை, பிறகு அவர்களிடம் வந்த நபியவர்கள் 'இன்றைய தினத்துக்குப் பிறகு என் சகோதரருக்காக நீங்கள் அழவேண்டாம்.' என்று கூறினார்கள்.  (அபூ தாவுத், நஸாஇ)
v  குடும்ப உறவுகள் செய்யவேண்டியது:
ü  மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும்.
Ø  நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர் ஆன்: 2:155 ,157)
Ø  கப்ரிடத்திலிருந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கருகாமையால் நபியவர்கள் நடந்து சென்றபோது அல்லாஹ்வைப் பயந்து, பொருமையாக இருஎன்று கூறினார்கள். அவர் நபியென்று அறியாத  அந்தப் பெண் எனக்கு ஏற்பட்ட சோதனை உமக்கு ஏற்படவில்லை, தூரப் போய்விடும், என்று கூறினார், பின்னர் அவர் நபிகளார் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டபோது, அவள் நபிகளாரின் வீட்டுக்கு வந்து  முறைப்பாடு செய்த போது, நபியவர்கள் : பொருமை என்பது முதல் கட்டத்தில் வரவேண்டியது.என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்) 
ü  பிள்ளைகளைந்து பொருமைக் காப்பது மிகவும் சிறப்புக்குறியதே.
Ø  நபியவர்கள்: எந்தப் பெண்ணாவது மூன்று (வயதுக்கு வராத) பிள்ளைகை இழந்து, (அதற்கு பொருமையாகவும் இருந்தால்) அந்தப் பிள்ளைகள் நரகத்துக்குத் தடடையாக இருப்பார்கள்.என்று கூறியபோது, ஒரு பெண்மனி, ‘இரண்டிருந்தாலுமா?’ என்று கேற்க, ‘இரண்டிருந்தாலும் தான்.என்று கூரினார்கள்.  (புஹாரி, முஸ்லிம், நசாஇ)
ü  மரணச்செய்தி கேள்விப்படுபவர்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃஜுர்னீ fஈ முஸீபதீ வஅஹ்லிfலீ கைரன் மின்ஹா.என்று கூற வேண்டும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: ஒரு முஸ்லிமுக்கு ஒரு சோதனை ஏற்படும் போது, அல்லாஹ் ஏவிய (إنا لله وإنا إليه راجعون) என்பதையும், (اللهم اجرني في مصيبتي وأخلف لي خيرا منها) (இரைவா எனது சோதனையில் கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை எனக்கு  தருவாயாக) என்பதையும் கூறினால், அதைவிட சிறந்ததை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான்.  (முஸ்லிம், அஹ்மத்)
ü  மூன்று நாற்களுக்கு மேல் மையித்துக்காக கவலைப்படுவது கூடாது. ஆனால் ஒரு பெண்மனிக்கு தன் கனவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் கவலைப் படுவது கடமையாகும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: அல்லாஹ்வையும் மருமை நாளையும் நம்பிய எந்தப் பெண்ணும் ஒரு மையித்துக்காக மூன்று நாற்களுக்கு மேல் கவலை தெறிவிப்பது ஆகுமாகமாட்டாது, ஆனால் கனவனுக்காக ஒரு பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் கவலைப் படுவதைத்தவிர.’ (புஹாரி)
Ø  முஹம்மத் இப்னு ஸிரீன் அறிவித்தார். மகன் இறந்த மூன்றாம் நாள் உம்மு அதிய்யா(ரலி) மஞ்சள் நிறவாசனைப் பொருளைப் பூசினார். மேலும், 'கணவனைத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்று நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்' என்றும் கூறினார்கள். (புஹாரி: 1279)
·         குறிப்பு: ஒரு மனிதன் மையித்துக்காக கவலை தெறிவிக்காமல் இருந்தாலும் குற்றமில்லை. உம்மு ஸுலைம் (றழி) அவர்கள் தம் பிள்ளையின் மரனத் திற்காக பொறுமையாக இருந்து, தன் கனவரோடு நடந்து கொண்டவிதமும், அதற்காக நபியவர்கள் பிறார்த்தனை செய்ததும் அதற்கு ஒரு ஆதாரமாகும்,  (முஸ்லிம்)
v  மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்:
1.       ஒப்பாரி வைத்தல்
2.       கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல்.
3.       முடிகளை வழித்தல்.
4.       கவலைக்காக முடியை வளர்த்தல்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக்கால காரியங்களில் உள்ளவையாகும். அவைகளை அவர்கள் விடமாட் டார்கள். (அவையாவன) வம்சா வழியைக் கூறி பெருமைப்படுதல், மனிதர்கள் (உயர்வான குடும்பப்) பாரம்பரியங்களை குறை கூறுதல், நட்சத்திரங்களைக் கொண்டு மழைப் பெய்யத் தேடுதல், (ஒப்பாரியிட்டு) ஓலமிட்டு அழுதல் (முதலியவைகளாகும்).ஒலமிட்டு அழும் பெண் அவள் மரணத்திற்கு முன்பு தவ்பாச் செய்யவில்லையாயின் மறுமை நாளில் அவளை(க் கொண்டுவந்து) நிறுத்தப்படும். அவள்மேல் தாரினால் வார்க்கப்பட்ட சட்டையும் சொரிக் கவசமும் (அணிவிக்கப்பட்டு) இருக்கும்.என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுமாலிக் அல் அஷ்அரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்..   (முஸ்லிம்: 463)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: மக்களிடத்தில் குப்ரை உண்டாக்கும் இரண்டு விடயங்கள் இருக்கின்றன, வம்சத்தில் குறைகூறுவது, மய்யித்துக்காக ஒப்பாரி யிடுவது.   (முஸ்லிம்)
Ø  உம்மு அதீய்யா (றழி) கூறினார்கள் நபியவர்கள் எங்களிடம் பைஅத் உறுதி மொழி எடுக்கும்போது ஒப்பாரியிடாமல் இருப்பதையும் பைஅத் செய்தார்கள். மேலும் ஐந்து பேரைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அதை நிறைவேற்றவில்லை, உம்மு ஸுலைம், உம்முல் அழா, முஆத் அவர்களின் மனைவி, அபூ ஸுப்ராவின் மகள் ஆகியோராவார்கள். (புஹாரி, முஸ்லிம்)
·         ஒப்பாரியிடுவது சம்பந்தமாக நிறைய ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: யார் கன்னத்தில் அறைந்து, ஆடைகளை கிழித்து, ஜாஹிலீயாக்கால வார்த்தைகளைக் கூறுகின்றார்களோ அவர்கள் எங்களை சார்ந்தவர்கள் அல்ல.  (புஹாரி, முஸ்லிம்)
Ø  அபூ புர்தா இப்னு அபீ மூஸா அறிவித்தார். (என்தந்தை) அபூ மூஸா தம் கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்துவிட்டார். அவரின் தலை அவரின் மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது, 'நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) அதிகச் சப்தமிட்டு அழும் பெண்ணைவிட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் தம்மை விலக்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைவிலக்கிக் கொண்டவரிடமிருந்து நானும் விலகிக்கொள்கிறேன்" என்று கூறினார். (புஹாரி: 1296, முஸ்லிம்)
Ø  உறுதி மொழி எடுத்த ஒரு பெண் கூறினார்கள்: நபியவர்கள் எடுத்த உறுதி மொழியில் அவர்களுக்கு மாறு செய்யாமலிருப்பதும், முகத்தில் முடி புடுங்காமலிருப்பதையும், சாபத்தை வேண்டாமலிருப்பதையும், ஆடையை கிழிக்காமலிருப்பதையும், தலைவிரிகோலமாக இருக்காமலிருப்பதையும் உறுதி மொழியாக எடுத்தார்கள்.  (அபோதாவூத், பைஹகி)
ü  மரணச் செய்தியை அறிவிப்புச் செய்தல்.
Ø  ஆபூ ஹுரைரா (றழி) கூறினார்கள்: நபியவர்கள் நஜாஷி மன்னர் மரனித்த தினத்தன்று மரனச் செய்தி அரிவித்தார்கள், முஸல்லாவுக்குச் சென்று, அவர்களை ஸப்பில் நிறுத்தி,  நான்கு தக்பீர்கள் சொல்லி (ஜனாசா தொழுகை நடாத்தினார்கள்.)  (புஹாரி, முஸ்லிம்)
v  கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்:
ü  கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யாருடைய கடைசி வார்த்தை 'لا إله إلا الله வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்பதாக இருக்குமோ அவர் சுவனம் நுளைவார்.'  (ஹாகிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்கள் மரணிக்கும் தருனத்தில் 'என் பெரியத் தந்தையே لا إله إلا الله என்று கூறுங்கள் உங்களுக்காக அல்லாஹ்விடம் பேசுகின்றேன்.' என்று கூறினார்கள். (புஹாரி)
ü  யுத்தக் களத்தில் ஷஹீதாக மரணித்தல்.
Ø  யுத்தக் களத்தில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்களாக எண்ணாதீர்கள், மாறாக அவர்கள் அல்லாஹ்விடத்தில் உணவளிக்கப்படும் நிலையிலும், அல்லாஹ் அவர்களுக்கு செய்த சிறப்புகளைவைத்து சந்தோசப்படும் நிலையிலும் உயிரோடு இருக்கின்றனர்.  (அல் குர் ஆன் 3:169)
Ø  நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடம் 'உங்களில் ஷஹீதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்க, அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவரே ஷஹீத்' என்று கூறினார்கள், அப்போது நபியவர்கள், 'அப்படியென்றால் என் உம்மத்தில் ஷஹீத்கள் குறைந்துவிடுவார்கள்.' என்று கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?  என்று நபித்தோழர்கள்  கேட்க, 'அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீதாவார்,'அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவர் ஷஹீதாவார்,யார் பிலேக் நோயினால் மரணித்தாரோ அவர் ஷஹீதாவார், வயிற்றுப் போக்கில் மரணித்தவரும், நீரில் மூழ்கி மரணித்தவரும் ஷஹீதாவார்.' என்று கூறினார்கள்.  (முஸ்லிம், அஹ்மத்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிலேக் நோய் என்பது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தண்டனையாக அனுப்புகின்றான், அதை மூமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிடுகின்றான். எனவே ஒரு அடியானுக்கு பிலேக் நோய் ஏற்பட்டு, அவன் அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று நினைத்தவனாக, தனது ஊரில் பொறுமையாக இருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி கிடைக்கும்.'  (புஹாரி, அஹ்மத்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஷஹீதுகள் ஐந்து பேராவார்கள்; பிலேக் நோயினால் பாதிகப்பட்டவன், வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவன், இடிபாடுகளுக்குள் சிக்குண்டவன், அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தவன்.'  (புஹாரி , முஸ்லிம்)
ü  சொத்துக்களைப் பாதுகாக்க போராடுவது,
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன் சொத்துக்களைப் பாதுகாக்கச் சென்று கொல்லப்படுகின்றாரோ அவர் ஷஹீதாவார்.' (புஹாரி, முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் எனது சொத்தை சூரையாட வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, நபியவர்கள்: அவனுக்கு நீ கொடுக்காதே' என்றார்கள், அதற்கு அந்த மனிதர், அவன் என்னோடு சண்டைக்கு வந்தால் என்ன செய்வது எனக் கேட்க, நீயும் அவனோடு எதிர் யுத்தம் செய், என்று நபியவர்கள் கூற, அவன் என்னை கொன்றுவிட்டால் என்ன நிலை என்று திருப்பிக் கேட்க, 'அப்படி நடந்தால் நீ ஷஹீதாவாய்' என்று கூரினார்கள் நபியவர்கள்....(முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் தன் சொத்தின் காரணமாகவும், குடும்பத்திற்காகவும், மார்கத்துக்காகவும், உயிருக்காகவும் கொல்லப்படுகின்றாரோ அவர் ஷஹீதாவார்.'  (அபூ தாவுத், திர்மிதி)
ü  நெற்றியில் வியர்வை உள்ள நிலையில் மரணித்தல்
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூமினின் மரணம் நெற்றியில் வியர்வை இருப்பது கொண்டு ஏற்படும்.'  (அஹ்மத், திர்மிதி, நசாஇ)
·         குறிப்பு: இந்த ஹதீஸ் பல வழிகளில் வருவதன் மூலம் ஸஹீஹ் என்ற தரத்தை அடைவதாக ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
·         வெள்ளிக்கிழமை மரணித்தால் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாக் கப்படுவார் என அஹ்மதில் வரும் ஹதீஸ் எல்லா வழிகளிலும் பலவீனமானது.
v  ஒரு ஜனாசாவை மக்கள் புகழுதல்
ü  மக்களின் நாவுகளிலிருந்து தூய்மையுடன் வெளிப்படும் நல்ல வார்த்தைகளை வைத்து ஒரு ஜனாசா அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைகின்றது, இதில் கவனிக்கவேண்டிய விடயம் அல்லாஹ் உள்ளத்தையே பார்க்கின்றான். உள்ளத்தில் ஒன்றை வைத்து, வெளிப்பகட்டுக்காக புகழ்வது வெறும் முஹஸ்துதியாகவே கணிக்கப்படும். அடுத்து ஒரு மனிதன் உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்பார்த்து மக்கள் அபிமானியாக வாழவும் வேண்டும், அப்போதே கடைசி முடிவு நல்லதாகவும் அமையப் போகின்றது.
Ø  அனஸ் (றழி) கூறினார்கள்: நபிகளாருக்குப் பக்கத்தால் ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது, அதை மக்கள் புகழ்ந்து, அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்று கூறினர், நபிகளார் 'கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது' என்று கூறினார்கள், மேலும் நபிகளாருக்குப் பக்கத்தால் ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது, அதை மக்கள் இகழ்ந்து, அவர் அல்லாஹ்வின் மார்க்க விடயத்தில் கெட்டவராக இருந்தார் என்று கூறினர், நபிகளார் 'கடமையாகிவிட்டது கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது' என்று கூரினார்கள், அப்போது உமர் (றழி) அவர்கள் விளக்கம் கேட்டபோது, நபியவர்கள்: 'நீங்கள் புகழ்ந்த அந்த மனிதருக்கு சுவனம் கடமையாகிவிட்டது, நீங்கள் இகழ்ந்த மனிதருக்கு நரகம் கடமையாகி விட்டது, நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள், நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள், நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள்.' என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்த முஸ்லிமுக்காவது நான்கு பேர் நல்லதைக் கூறினால், அல்லாஹ் அவனை சுவனத்தில் நுளைவிப்பான்.' அப்போது நபித்தோழர்கள் 'மூன்று பேரின் சாட்சியைப் பற்றியும், இரண்டு பேரின் சாட்சியைப் பற்றியும் கேட்டனர்,' நபிகளார் அவர்களது சாட்சியும் தான் என்றார்கள். பிறகு ஒருவரின் விடயத்தில் தோழர்கள் கேட்கவில்லை.  (புஹாரி)
·         குறிப்பு: இந்த ஹதீஸ்களில் மக்கள் தானகவே புகழ்ந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது, நபிகளார் கருத்துக் கேட்கவில்லை என்பதையும் விழங்கி நடக்கவேண்டும். 
ü  சூரிய சந்திர கிரகணங்களின் போது மரணிப்பது அல்லாஹ்வின் ஏற்பாடே தவிர அதில் எந்த சிறப்பும் இல்லை.
Ø  முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். (புஹாரி:  1043)
ü  மரணித்தவரகளை புகழும் போது சுவனவாதி என்றோ, குறைகூறும் போது நரகவாதி என்று இகழவோ கூடாது. பொதுவாகவே ஒரு மனிதரை குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கக்கூடாது.
Ø  நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை." (புஹாரி: 1243)
v  ஜனாசாவைக் குளிப்பாட்டுதல்.
ü  குளிப்பாட்டுவது கடமை என்பதற்கு ஏராலமான சான்றுகள் இருக்கின்றன.
ü  அதை குளிப்பாட்டும் போது மூன்று விடுத்தமோ, தேவைக்கேட்ப அதைவிட அதிகமாகவோ ஒற்றைப்படையாக குளிப்பாட்டுதல்,
ü  சுத்தப்படுத்துவதற்காக இலந்தை இலையையோ, சவர்க்காரம் போன்ற, அழுக்கைப் போக்கும் ஏதாவது ஒன்றையோ பயன்படுத்தல்.
ü  கடைசி விடுத்தம் ஊற்றும் நீருடன் கட்பூரத்தை கலந்துகொள்ளல்.
ü  பெண்களின் கொண்டைகளை கலைந்து, நன்றாக கழுவிவிட்டு, மூன்று கொண்டைகளிட்டு, பின் பக்கமாக விட்டுவிடுதல்.
.
ü  குளிப்பாட்டும் போது வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து, அதிலும் வுழுவுடைய உறுப்புக்களைக் கொண்டு ஆரம்பித்தல்.
Ø  உம்மு அதீய்யா (றழி) கூறினார்கள்: நபி (ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபிகளார் 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது தேவைக்கேற்ப அதைவிட அதிகமான தடவைகள்,ஒற்றைப் படையாக குளிப்பாட்டுங்கள், கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள், குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள்.' என்று கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்ததும் நாங்கள் நபியவர்களுக்கு அறிவித்தோம், அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து இதை அவரது உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
ஹப்ஸா (றழி) அவர்களது அறிவிப்பில், ஒற்றை படையாக குளிப்பட்டுங்கள், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் நீரை ஊற்றுங்கள், அவரது வலப்புரத் திலிருந்தும், வுழூச் செய்யவேண்டிய உருப்புக்களிலிருந்தும் ஆரம்பியுங்கள், என்று நபிகளார் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்கு தலை வாரி மூன்று கொண்டைகளை பின்னினோம்' என்றும் வந்துள்ளது.  (புஹாரி 1254, முஸ்லிம்)
Ø  மற்றொரு அறிவிப்பில், நபியவர்களின் மகளின் சடலத்திற்க்கு தலையில் பெண்கள் மூன்று கொண்டைகளைப் பின்னியிருந்தார்கள், பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று கொண்டைகளைப் பின்னி, அதை முதுகுப் பின்னால் போட்டு வைத்தோம்'. என உம்மு அதீய்ய (றழி) கூறினார்கள். (புஹாரி: 1260, 1263)
ü  ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் குளிப்பாட்டுதல், கனவன் மனைவி ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம்.
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: 'நபியவர்கள் பகீஇல் ஒரு ஜனாசாவை அடக்கிவிட்டு வரும் போது, எனக்கு தலையில் வலி ஏற்பட்டிருந்தது, நான் தலை வலியே எனக்கூறி கொண்டிருந்தேன், அப்போது நபியவர்கள், தலை வலியே எனக்கூறிவிட்டு, 'உனக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனக்கு முன் நீ மரணித்தால் உன்னை நான் குளிப்பாட்டி, கபனிட்டு, பிறகு உனக்காக தொழுவித்து, உன்னை அடக்கமும் செய்வேன்.' என்று கூறினார்கள்.  (அஹ்மத்)
ü  குளிப்பாட்டும் போது தூய்மையான எண்ணத்துடன் குளிப்பாட்டி, அதில் ஏதும் குறைகளைக் கண்டு அதை மறைத்தால் பெரும் கூலியும் இருக்கின்றது.
Ø  நபி (ஸல்) கூறினார்கள் யார் ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டி, அதிலிருக்கும் குறையை மறைக்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் நாற்பது விடுத்தம் மன்னிப்பளிக்கின்றான், யார் அவருக்காக கப்ரு வெட்டி அதில் அடக்கமும் செய்கின்றாரோ அவருக்கு, மறுமை நாள்வரை ஒரு வீட்டில் வாழவைத்த கூலியை அல்லாஹ் கொடுக்கின்றான், மேலும் யார் கபனிடுகின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் பட்டு, மரத்திலிருந்து அல்லாஹ் சுவனத்தில் ஆடை அணிவிப்பான்.'  (அல் ஹாகிம், பைஹகீ)
ü  குளிப்பாட்டியவர் தேவை என்றால் குளித்துக் கொள்ளலாம், அது கடமை இல்லை.
Ø  நபி (ஸல்) கூறினார்கள்: 'யார் ஒரு மையித்தைக் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளித்துக்கொள்ளட்டும், அதை சுமந்து சென்றவர் வுழூ செய்துகொள்ளட்டும்.  (அபூ தாவுத், திர்மிதி)
Ø  நபி (ஸல்) கூறினார்கள்: நீங்கள் மையித்தை குளிப்பாட்டினால் அதற்காக உங்களூக்கு குளிப்பு கடமையில்லை, ஏனெனில் உங்கள் மையித் நஜிசல்ல, நீங்கள் கையை கழுவிகொண்டாலே போதுமானது.' (அல் ஹாகிம், பைஹகீ)
ü  யுத்தங்களில் ஷஹீதாக்கப்பட்டவர்களை குளிப்பாட்டத் தேவையில்லை.
Ø  ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதானவர்களை இரண்டிரண்டு பேராக சேர்த்து, யார் அதிகம் குர்ஆனை சுமந்தவர் என்று' கேட்பார்களாம், இன்னார் என ஒருவர் காட்டப்பட்டால், அவரை குழியில் முற்படுத்துவார்கலாம், பிறகு 'மறுமை நாளில் இவர்களுக்கு நான் ஷாட்சியாக இருப்பேன்' என்று கூறினார்கள், அவர்களை குளிப்பாட்டாமல், இரத்ததுடனே அடக்குமாறு ஏவினார்கள். (புஹாரி: 1288)
v  அதனை கபனிடுதல்
ü  கபனை பொருத்தவரை அதன் செலவை மரணித்தவர் செலவில் செய்வதே நன்று. மற்றவர்கள் உதவியோடும் செய்து கொள்ளலாம்                                                                                
Ø  இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், 'என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது அவரின் உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரின் தலைமறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன. கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது, மேலும், ஹம்ஸா(ரலி) அவர்களும் கொல்லப்பட்டபோது அவரும் என்னைவிடச் சிறந்தவர் தாம் (அவரின் நிலையும் அவ்வாறே இருந்தது) பிறகுதான் உலக வசதி வாய்ப்புக்கள் எங்களுக்கு விசாலமாக்கப்பட்டன. அல்லது உலகத்திலுள்ள அனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. எனவே, எங்களின் நன்மைகளெல்லாம் (முற்கூட்டியே) உலகிலேயே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்' எனக் கூறிவிட்டு உணவைத் தவிர்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.     (புஹாரி : 1275)
Ø  கப்பாப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துனியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணியைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.   (புஹாரி : 1276)
ü  கபனிடும் போது முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு பரிபூரணமாக செய்தல்.
Ø  நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் பிரசங்கம் செய்தார்கள். (அப்போது) தனது தோழர்களில் ஒரு மனிதர் இறப்பெய்தி, பற்றாத கபன் அவருக்கு இடப்பட்டு இரவில் அடக்கமும் செய்விக்கப்பட்டு விட்டார் என்ற (விஷயத்தை) கூறிவிட்டு (இரவில் ஒரு மனிதர் இறப்பெய்திவிட்டால்) அவருக்கு தொழுகை நடத்தப்படும் வரை (இரவிலேயே) அடக்கப்படுவதைக் கண்டித்தார்கள். அவ்வாறு செய்ய (எந்த) மனிதராவது நிர்பந்திக்கப்பட்டாலே தவிர.  உங்களில் ஒருவர் தன் சகோதரருக்கு கபனிட்டால் அவரது கபனை (பற்றாக் குறையாக இடாது, நிறைவாக) அழகாக இடவும்எனவும் கூறினார்கள். (முஸ்லிம்: 469)  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி)
ü  ஒரு துனியினால் கபனிடுதல்.
Ø  முஸ்அப் இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில்  தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (புஹாரி : 1276)
ü  இரு துனிகளால் கபனிடுதல்.
Ø  ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: 'அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
ü  மூன்று துனிகளால் கபனிடுதல்.
Ø  மிகத்தூய்மையான வெள்ளை நிறமுள்ள மூன்று  துனிகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கபனிப்பட்டார்கள். அதில் தலைப்பாகையோ சட்டையோ இல்லை. (ஆயினும்) கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துனியில் அமைந்த ஒன்றை அதில் அவர்களை கபனிப்படுவதற்காக வாங்கப்பட்டது, ஜனங்களுக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. அவர்களை கபனிடுவதற்காக வாங்கப்பட்ட கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துனியில் உள்ள (அதில்) நபி (ஸல்) அவர்களைக் கஃபனிடுவது கைவிடப்பட்டு மிகத்தூய்மையான வெள்ளை நிறமுள்ள மூன்று துனிகளில் அவர்களுக்கு கபனிடப்பட்டது. ஆகவே ஒரே துனியில் கீழாடை, மேலாடை உள்ள அதை அப்துல்லாஹ் பின் அபூபக்கர் (ரளி) அவர்கள் எடுத்துக் கொண்டு, என்னை அதில் கபனிடப்படும் வரை மிக உறுதியாக அதை நான் தேக்கிவைப்பேன் என்றார். அதன்பிறகு, அல்லாஹ் தனது நபிக்கு பொருத்தப் பட்டிருந்தால் அவர்களை அதில் கபனிடச்செய்திருப்பான் அவ்வாறில்லை என்கின் றபோது அதை எனக்கு கபனிடப்பட்டு கொள்ள நான் விரும்பவில்லை எனக்கூறி அதை விற்று அதன் கிரயத்தை தர்மம் செய்துவிட்டார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி) (புஹாரி, முஸ்லிம்: 468)
Ø  ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் மூன்று வெண்ணிறப் பகுதி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்: அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை. (புஹாரி: 1271, முஸ்லிம்)

ü  உடுத்த ஆடைகளாலும் கபனிடலாம்.
Ø  இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை" என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
(புஹாரி: 1269)
Ø  ஜாபிர்(ரலி) அறிவித்தார். இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி(ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள். (புஹாரி:  1270)
ü  தனக்கான கபனை உயிர் வாழும் போதே தயார் செய்து வைக்கவும் முடியும்.
Ø  கப்பாப்(ரலி)அறிவித்தார்.........அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணி யைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.   (புஹாரி : 1276)
Ø  அபூ பக்ர் (றழி) அவர்கள் நபியவர்களுக்காக கபனிட வந்த ஆடையை எடுத்து வைக்க ஆசைபட்டதைப் போன்று.  (முஸ்லிம்: 468)
Ø  அபூ ஹாஸிம் அறிவித்தார். ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --"புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்" என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்" என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர்  'நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே' எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்" என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது" என்று ஸஹ்ல் கூறினார். .   (புஹாரி : 1277)
·         கபனிடும் போது கவணிக்கவேண்டிய இன்னும் சில விடயங்கள்.
ü  வெண்மை நிறத்தை முதன்மை படுத்தல்,
Ø  நபியவர்கள் வென்நிற ஆடையினால் கபனிடப்பட்டார்கள்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களது ஆடைகளில் வெள்ளை நிறமானதை அணிந்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே ஆடைகளில் சிறந்ததாகும், மேலும் அதன் மூலமே கபனிடுங்கள்.' (அபூ தாவுத், திர்மிதி)
ü  நறுமங்களைப் பூசிவிடுதல்.
Ø  ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: 'அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
ü  மூன்று துனிகளைவிட அதிகப்படுத்தாதிருத்தல், ஏனெனில் நபியவர்கள் அதிகப்படுத்தவில்லை.
·         ஐந்து துனியால் கபனிடுவதும், அதில் தலைப்பாகை வெட்டுவது, மேலாடை கீழாடை என வேறுவேறாக வெட்டி எடுப்பதும், அதை தைத்துத்தான் அணிவிக்கவேண்டும் என்பதற்கெல்லாம் ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை, எனவே நபிவழியைப் பின்பற்றியே எமது கபனையும் ஆக்கிக்கொள்ளவேண்டும்.
·         கபன் விடயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கு உள்ள சட்டமேதான், ஏனெனில் வித்தியாசப்படுத்த ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை. பெண்கள் விடயத்தில் அபூதாவுதில் வரும் ஒரு ஹதீஸ் பலவீனமானதே.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )