Apr 26, 2012

சத்தியமா...? ஜாக்கிரதை!



"உங்களின் சத்தியங்களில் வீணானவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் உறுதியிட்டுச் செய்த சத்தியங்களைக் கொண்டே உங்களை அவன் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், சாந்தமானவன். (அல்குர்ஆன் 2:225)
சத்தியம் செய்யுங்கள் என்றோ, செய்யக்கூடாது என்றோ கட்டளை ஏதுமின்றி, எந்த சத்தியத்தால் நமக்கு குற்றம் உண்டாகும்? எதனால் உண்டாகாது? என்ற விளக்கத்தை இவ்வசனம் தருகின்றது.
 சத்தியம் ஏன்? 
பொதுவாக மனிதர்கள் தாங்கள் சொல்வதை மற்றவர் நம்ப வேண்டும் என்பதற்காக பயன்படுத்தும் அதிகபட்சமான வார்த்தைதான் சத்தியம் என்பது. குக்கிராமத்து குழந்தை முதல் கோர்ட் வரை இவ்வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படியானால் இதுபற்றிய விதிமுறைகளை நாம் அறியத்தானே வேண்டும்! அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போமே!
 சத்தியம் என்றால் என்ன? 
ஒருவன் தன் தரப்பு வாதத்தை உறுதி செய்வதற்கு எதிரிகள் உட்பட எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு வேறு எந்த வகையிலும் சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில் "சத்தியமாக" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லா மதத்தினரும், எல்லா மொழியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.
சத்தியம் என்றால் தமிழில் உண்மை என்று பொருள். (சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது என்பது போல).
அதே சொல் தான் அறுதியிட்டு உறுதியாகக் கூறும் விஷயத்துக்கும் பயன்படுகின்றது. ஆனால், அரபியில் உண்மை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொல் வேறு. சத்தியத்துக்கு பயன்படும் சொல் வேறு. உண்மைக்கு "ஹக்" என்றும், சத்தியத்துக்கு "யமீன்" என்றும் இரு தனிதனிச் சொற்கள் உள்ளன. ஏனெனில், சத்தியம் செய்பவன் உண்மைதான் உரைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. "பொய் சத்தியம்" என்று சர்வசாதாரணமாகச் சொல்வதுண்டு. எனவே அரபியில் பயன்படுத்தப்படும் "யமீன்" என்ற சொல்லின் பன்மை இவ்விறை வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அய்மான்" என!

Apr 14, 2012

அழைப்புப் பணி (தாவாஹ்) செய்ய வேண்டியதன் அவசியம்


அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,
அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!
இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!
மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்;(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3:110)
யாராவது ஒருவர் ஒன்றை நல்லது எனக் கண்டு அது தமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்குமாயின் நிச்சயமாக அவர் தம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அந்த நல்லவற்றை எடுத்துக் கூற முற்படுவார். அதே போல ஒருவர் ஒன்றை தீமையானது என்று உணர்ந்து அது தமக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்று அறிந்தால் உடனே அதிலிருந்து தாமும் விலகி தம்முடைய சுற்றத்தார்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் அதைப் பற்றி எச்சரிக்கைச் செய்வார். இது ஒவ்வொருவருக்கும் இயற்கையாக உள்ள குணமாகும்.
இது போலவே, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் செவிதாழ்த்திக் கேட்கும் தம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் தீனுல் இஸ்லாத்தில் இனைவதால் ஏற்படும் பலன்களை பற்றியும் அதனால் மறுமையில் கிடைக்க விருக்கின்ற அளப்பற்ற இன்பங்களை பற்றியும் எடுத்துக் கூறவேண்டும். அவ்வாறே இஸ்லாத்தைப் புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், நரக நெருப்பு பற்றியும் எச்சரிக்கைச் செய்யவேண்டும்!
அல்லாஹ்வையும், மறுமையையும், சுவர்க்கம் மற்றும் நரகத்தையும் அவற்றில் கிடைக்கவிருக்கிற இன்பம், துன்பங்களை உண்மையிலேயே நம்பும் ஒருவர், அந்த நம்பிக்கைகளை தமக்குள்ளாகவே வைத்துக் கொண்டு தம்முடைய அன்பிற்கு உரியவர்களான தன் குடும்பத்தார்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் இவற்றைப் பற்றிக் கூறாமல் இருக்கமாட்டார்.
அப்படி அவர் அந்த நம்பிக்கையை பிறருக்கு சொல்லாமல் தம்முடனே வைத்துக் கொண்டால், மறுமை, சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய அவருடைய நம்பிக்கையில் கோளாறு இருக்கிறது என்று பொருள்! அவர் தம்முடைய மறுமை நம்பிக்கையை ஆழமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஏனென்றால் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஒருவர் தாம் மட்டும் நரகத்தில் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டு தம்முடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களான குடும்பத்தார்களும், உறவினர்களும் மற்றும் நண்பர்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று விட மாட்டார். ஏதாவது ஒரு வகையில் எப்படியாவது முயற்சி செய்து அவர்களும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்றே விரும்புவார்கள். அப்போது தான் அவர் உண்மையிலேயே அவர்கள் மீது அன்பு பாசம் கொண்டவராகவும் உண்மையான முஃமினாகவும் இருக்கமுடியும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்-குர்ஆன் 103:2-3)
எனவே சகோதர, சகோதரிகளே! இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அழைப்பு பணியை முஃமினான ஆண், பெண் ஒவ்வொருவரும் தம்முடைய அன்பிற்கு பாத்திரமானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டவாறு அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் நம்மீது இட்டிருக்கின்ற கட்டளைகளை பின்பற்றி நடக்கவேண்டும்.
அவைகளாவன:
இறை நம்பிக்கை (ஈமான் கொள்ளுதல்)
ஸாலிஹான நல்ல அமல்கள்
ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தல் அதாவது மற்றவர்களை உண்மையின்பால் அழைத்தல்
பொறுமையுடனும் மன உறுதியுடனும் இருக்கவேண்டும்
மனிதன் நஷ்டத்தில் இருப்பதாகவும் அவன் வெற்றி பெற வேண்டுமெனில் இவற்றையே செய்ய வேண்டும் என மேற்கண்ட 103:2-3 என்ற வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.
  அழைப்பு பணி செய்வது எவ்வாறு? 
இன்றைய காலக் கட்டத்தில் அழைப்பு பணி செய்வது என்பது மிகவும் எளிமையானது பல வகைகளில் செய்யலாம்.
சிறந்த பேச்சாற்றல் மூலமாகவோ அல்லது
திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பை வாசிக்க கொடுத்தோ அல்லது
இஸ்லாமிய அறிஞர்களின் ஒலி, ஒளி கேசட், சி.டி, டி.வி.டி போன்றவற்றைக் கொடுத்து அவர்களைக் கேட்குமாறு செய்தோ அல்லது
சிறந்த இஸ்லாமிய வலை தளங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றின் மூலமாகவோ அல்லது
இமெயில் போன்ற தகவல் பரிமாற்றுச் சேவையின் மூலமாகவோ
இப்படி பல வழிகளில் ஒவ்வொருவரும் தமக்கு எது வசதிப்படுமோ அந்த வகையில் அழைப்பு பணி செய்யலாம்.
  அழப்ப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்: 
1) அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.
இதற்கு உதாரணமாக:
அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.
தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.
இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.
எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)
மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.
  நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்? 
அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)
எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.
  அழைப்பு பணி செய்யாவிட்டால் ஏற்படும் நஷ்டம் என்ன? 
நாம் மேலே கூறியது போல உண்மையிலேயே இறை நம்பிக்கை கொண்டு மறுமை, சுவர்க்கம், நரகம் அவற்றில் கிடைக்க கூடிய இன்ப துன்பங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டவர்கள் சத்திய இஸ்லாத்தை தம்முடனே வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். அவர் அப்படி செய்தால் அவருடைய ஈமானில் கோளாறு இருப்பதாகவே கருதப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், ‘அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): ‘எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:164)
நாளை மறுமையில் நம்மைப் படைத்தவனின் முன்னிலையில் நாம் நிறுத்தப்பட்டு இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் இட்ட கட்டளையை நிறைவேற்றினாயா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஏற்படும் சங்கடத்தை நாம் உணர வேண்டும்.
எனவே சகோதர சகோதரிகளே! முஃமினான நாம் அனைவரும் மார்க்கத்தின் மிகச் சிறந்த பணியாகிய தஃவா என்னும் அழைப்புப் பணியை சரிவர செய்தவர்களாக நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.
நன்றி: சுவன தென்றல்

இறை நம்பிக்கையாளரின் மண்ணறை Vs இறை நிராகரிப்பாளனின் மண்ணறை


ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் தலையை உயர்த்தி "நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள்" என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.
  இறை நம்பிக்கையாளரின் மண்ணறை 
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும்,சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார்.
அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர்.
அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து,
உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள்.
என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார்.
உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள்,
எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார்.
உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக் கூறுவார்.
அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள்.
நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்?எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர்,இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.
  இறை நிராகரிப்பாளனின் மண்ணறை 
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார்.
அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார்.
இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்;ஆயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ
இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)
இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள்.
"கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள்,
"கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்.
"கை சேதமே,கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும்.
ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும்.
இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய,மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)
இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.
கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ,அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.
யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.
(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
  கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள் 
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அளீம்.
جَزَاكَ اللَّهُ خَيْرًا  -
P.M. நூர்முஹைதீன் , அன்வருதீன்

சொர்க்கத்தில் ஓர் வசந்த மாளிகை


இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.
நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு இல்லத்தை எழுப்ப வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.
பலரும் எப்படியாவது இந்த உலகில் ஒரு (வீட்டை) மாளிகையை கட்டிவிட வேண்டும் என்ற வேட்கையோடு அலைகின்றனர். இந்த எண்ணத்தை நிறைவேற்றிட எண்ணிலடங்கா துன்பத்தை அடைகின்றனர். பலர் வெளிநாடுகளில் அவதிப்படுவதற்கான காரணங்களில் இந்த இலட்சியமும் ஒன்றே.
இவ்வுலகில் நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை இருப்பதின் மகிமையை நாம் உணர்வதாலே அதற்காக எதையும் சந்திக்க, சகிக்க தயாராக உள்ளோம். மார்க்க விதிகளை மீறாமல் ஒருவர் இவ்வாறு ஒரு இல்லத்தை எழுப்புகிறார் என்றால் அதை குற்றம் கூற முடியாது.
அழியும் இந்த உலகிலேயே நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை வேண்டும் எனில் நாம் என்றென்றும் தங்கக்கூடிய, நிலையான மறுமையில் நமக்கென்று ஒரு மாளிகை வேண்டாமா? என்று சிந்திக்க வேண்டும்.

இவ்வுலகில் ஒருவர் சொந்தவீடு இல்லாமலேயே வாழ்ந்து, மரணித்தும் விட்டார் எனில் அது ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் நாம் இங்கேயே நிரந்தமாக தங்கப்போவதில்லை. ஆனால் மறுமையில் நமக்கென ஒரு மாளிகை இல்லையெனில் அது இவ்வுலகில் ஏற்படும் இழப்பை விட பெரும் இழப்பே.
எனவே இவ்வுலகில் ஒரு இல்லத்தை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதை விட சற்று அதிகமாகவே, இல்லை மிகவும் அதிகமாகவே மறுமையில் ஒரு மாளிகையை எழுப்ப வேண்டும் என ஆசைப்பட வேண்டும்.
இவ்வுலகில் வீட்டை கட்டுவதற்காக எடுக்கும் முயற்சிகளை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மறுமையின் மாளிகைக்காக முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது என்ன சாதாரண மாளிகையா?
சிறப்பு மாளிகை
"சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகல் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒயுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?" என்று கேட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்" என பதிலத்தார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் \: புகாரி 3256)
மறுமை நாளில் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பதை பல்வேறு நபிமொழியிலிருந்து விளங்கி கொள்ள முடிகிறது. மேற்கண்ட செய்தியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு சொர்க்கத்தில் சிறப்பு மாளிகை, அறை அளிக்கப்பட்டிருக்கும் எனவும், அதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் எனவும் மேற்கண்ட செய்தி கூறுகிறது.
அல்லாஹ் மறுமையில் தரவிருக்கும் மாளிகை சாதாரண மாளிகையல்ல. அது சிறப்பு மாளிகை என்பதை இச்செய்தியிருந்து அறியலாம்.
உயர்ந்த சொர்க்கவாசிகளுக்கு இந்த மாளிகையை வழங்கி, அவர்களை தனி மரியாதயுடன் கௌரவிக்கின்றான்.
இவ்வுலகில் சில நிகழ்ச்சிகளின் போது வி.ஐ.பி க்கள் உட்கார உயர்ரக சீட், உற்சாக வரவேற்பு என தனி மரியாதை அளிக்கப்படுவதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்த்து, அவ்வாறு நாமும் தனிமரியாதை செய்யப்படமாட்டோமா என ஏங்குகின்றனர். இவ்வுலகில் சாதாரண மனிதர்களால் தனிமரியாதை செய்யப்படுவதைவிட அகிலத்தையும் படைத்தாளும் இறைவனால் கௌரவிக்கப்படுவதே மிகவும் சிறந்த காரியம்.
முத்து மாளிகை
நாம் ஒரு வீட்டை செங்கல், மணல் ,சிமெண்ட், ஜல்லிபோன்ற வைகளை வைத்தே கட்டுகிறோம். யாரேனும் மிக அரிதாக முழுவதும் டைல்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன், ஆசையுடன் பாக்கின்றோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர் களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது. (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5458)
இப்படி ஒரு மாளிகையை எவ்வளவு பெரிய பணக்காரனாலும்கட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக கூறலாம். மறுமையில் உள்ள அம்மாளிகையின் உயரம் அறுபது மைல் என நபிகளார் கூறியுள்ளார்கள்.
இவ்வுலகில் ஒரு மைல் நீளத்தில் உள்ள கட்டடமே மக்களால் அதிசயத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அறுபது மைல் நீளமுள்ள மாளிகையை கற்பனை செய்து பாருங்கள். சந்தேகமற இது ஒரு வசந்த மாளிகையே.
கீழே ஆறுகள்
மனிதனையும், தண்ணீரையும் பிரித்து பார்க்கவே முடியாது என்கிற அளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கின்றது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்று.
அது போல ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில் குளிப்பது ஒரு வித சந்தோஷத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.
இறைவன் தரும் மாளிகையில் இவற்றிருக்கும் பஞ்சமில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் என இறைவன் தெரிவிக்கிறான்.
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். (அல்குர்ஆன் 39 : 20)
தூய்மையான வசிப்பிடம்
என்னதான் பெரிய மாளிகையாக இருந்தாலும் அது தூய்மையாக இல்லையெனில் பார்ப்பதற்கு களையற்று காணப்படும். அதில் நாம் தங்குவது மன மகிழ்ச்சியை தராது. எனவே இறைவன் நமக்களிக்கும் மாளிகையை தூய்மையானதாகவே தருகிறான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9: 72)
ஹூருல் ஈன்’ எனும் கண்ணழகியர்
சொர்க்கத்தில் உள்ள அந்த மாளிகையில் இது போன்ற இன்பங்களை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல் ஹூருல் ஈன்’ எனும் பெண்களையும் இறைவன் அளிக்கின்றான். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு)
அவர்கள் கூறியதாவது: (சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், "என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழல் இருக்க வேண்டும்" என்பார்.
-பிறகு இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.-
ஆனால், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?" என்பதிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. "இன்னின்னதை நீ கேட்கலாம்!" என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று இறைவன் கூறுவான்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய ஹூருல் ஈன்’ எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்" என்று கூறுவார்கள்.
அப்போது அந்த மனிதர் "எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை" என்று (மகிழ்ந்து) கூறுவார். (அறிவிப்பவர்: நுஅமான் பின் அபீஅய்யாஷ், நூல்: முஸ்லிம் 311)
மிகக் குறைந்த தரமுடைய சொர்க்கவாசிகளின் நிலை இந்த ஹதீஸில் விவரிக்கப்படுகின்றது. அவர்களுக்கு அந்த மாளிகையில் ஹூருல் ஈன்’ எனும் கண்ணழகியர்கள் வழங்கப்படுவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
ஒருவனுக்கு பெரும் மாளிகையிருந்து அதில் அவன் தனியே இருக்க நேர்ந்தால் அதை விட கொடுமை வேறொன்றும் இல்லை எனலாம். எனவே தான் வெறும் மாளிகையை மட்டும் தருவதோடு நிற்காமல் அதில் நாம் இன்பமுற தக்க துணைகளையும் இறைவன் ஏற்படுத்தி தருகிறான்.
கண்ணழகியர்களுடன் மேலும் வழங்கப்படுகின்ற இன்பங்களை அறிகிற போது அது இன்பங்கள் நிறைந்த இன்ப மாளிகை என்பதை அறியலாம்.
மறுமையில் இறைவன் தரவிருக்கும் மாளிகை இவ்வளவு இன்பங்களும், வசதிகளும் நிறைந்த மாளிகை என்பதை அறிந்துவிட்ட போது அதை பெறுவதற்காக நாம் சில முயற்சிளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மையான துணைவியர்
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழல் அவர்களை நுழையச் செய்வோம். (அல்குர்ஆன் 4:57)
அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன் 55:58)
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். (அல்குர்ஆன் 55:70)
(அப்பெண்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும் ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 56:36,37)
சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒரும். மேலும், அப் பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விட மேலானதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 6568)
பள்ளிவாசல் கட்டுதல்
மறுமையில் தனக்கென்று ஒரு மாளிகையை எழுப்ப விரும்புபவர்களுக்கு பல வழிமுறைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அவற்றில் பள்ளிவாசல் கட்டுதலும் ஒன்றாகும்.
இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு இல்லத்தை எழுப்ப உதவினால் மறுமையில் நமக்காக ஒரு மாளிகையை இறைவன் எழுப்புகிறான். (உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் அல்கவ்லானீ, நூல்கள்: புகாரி 450, முஸ்லிம் 926)
பள்ளிவாசல் பணி என்று வரும்போது கணக்குபார்க்காமல் நம்மால் முடிந்த பொருளாதாரத்தை அள்ளிவழங்கிட முன்வர வேண்டும். மறுமையில் நமக்குரிய மாளிகை எழுப்பப்பட நாம் வழங்கும் முன்பணம்என்று எண்ணி இச்செயல் அதிகம் ஈடுபாடு கொள்ளவேண்டும்.
உபரியான தொழுகைகள்
ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் தவிர உபரியாக 12 ரக்அத்துகள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தருகிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா, முஸ்லிம் 1319)
கடமையான தொழுகைகளிலேயே அலட்சியமாக இருக்கும் நாம் இந்த செய்தியை எப்போதும் நினைவில் நிறுத்தி, கடமையான வணக்கங்களில் கவனம் செலுத்தவதோடு உபரியான தொழுகைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
பள்ளிவாசலுடன் தொடர்பு
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் மறுமையில் இறைவன் நமக்கான மாளிகையை தயார் செய்கிறான் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெரிவித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்வாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாகையை ஆயத்தப்படுத்துகிறான். (அறிவிப்பவர் அபூஹரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 662)
பள்ளிவாசலுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வது ஏராளமான நன்மைகளை பெற்றுத்தருவதோடு மறுமை மாளிகை நம்வசமாகுவதற்கும் காரணமாக திகழ்கிறது.
இறைவனை அஞ்சுதல்
உலகில் வாழும் போது இறையச்சத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மறுமையில் உயர்ந்த மாளிகைகளை தருவதாக இறைவன் வாக்களிக் கின்றான்.
தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
(அல்குர்ஆன் 39: 20)
தீமைகள் நம்மை அண்டுவதற்கு இறையச்சம், இறை பயம் நம்மிடம் இல்லாததே காரணம் என்பதை சொல்புரியவேண்டியதில்லை. நம்மை உண்மை முஸ்மாக மாற்றக்கூடிய இறைபயத்தை இறைவனிடம் வேண்டிட வேண்டும்.
கவனிக்க!
இவ்வுலகில் ஒரு வீட்டை கட்டிமுடிக்க பெரும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்போதும் அது பலருக்கு பகல் கனவாகவே தோன்றுகிறது. ஆனால் மறுமையில் ஒரு இல்லத்தை, மாளிகையை எழுப்ப இது போன்ற சிரமங்களை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதை மேற்கண்ட தகவல்களிருந்து அறிகிறோம்.
என் இறைவா சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக என்று ஃபிர்அவ்னின் மனைவி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததை அனைத்து முஃமின்களுக்கும் இறைவன் உதாரணமாக கூறுகிறான். (அல்குர்ஆன் 66 : 11)
நாமும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவதோடு இறைவனும் இறைத் தூதரும் கற்றுத்தந்துள்ள மேற்கண்ட எளிய செயல்களை செய்தாலே அந்த மாளிகை நம்வசமாகும் என்பதை இந்நேரத்தில் கவனிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலையான மறுமையின் வசந்த மாளிகைக்கு சொந்தக்காரராக மாறுவோமாக.
source: ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011

பதவி ஓர் அமானிதம்


பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.
அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
''அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் - அல்அஹ்ஜாப் :21)
நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.
நம்மிடம் அல்லாஹ் அளித்ததை தவிர வேறு எந்த சொந்த ஞானமும் நமக்கில்லை என்பதையும் மறந்துவிட கூடாது.நமக்கு கிடைக்கும் பதவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மறுமையில் அதன் கூலி நிர்ணயிக்கப் படுகிறது. பதவியில் உள்ள ஒரு முஸ்லிம் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பதவியை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.
பதவி ஏன் அமானிதம்?
பெரும்பாலான மக்களால், பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம், புகழ், செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான மக்கள் பதவிக்காக ஆசைப் படுகிறார்கள். இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்க்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.
இஸ்லாம் பதவியை, மறுமையில் அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. அதிகாரம் ,புகழ் ,செல்வம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்த வழி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை உரிய முறையில் பயன்படுத்துவதால் உலகிலும் நற்பெயர் கிடைப்பதோடு மறுமையிலும் அதிக அந்தஸ்தை பெறலாம்.ஆயினும் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை.கூட்டம் சேரும் வரை தவ்ஹீதில் இருந்துவிட்டு ,கூட்டம் சேர்ந்த பின் புகழுக்காகவும் பணத்தாசைக்காகவும் தவ்ஹீத் வளர்ச்சி எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறி பதவியை தேடி ஓடியவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் தான் அமானிதம் புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)
"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்." (நூல்: அஹ்மத் 22030)
அதிகாரமும் தலைகனமும்
நம்முடைய பதவியின் அந்தஸ்தை பொருத்து அதிகாரம் மாறுபடும்.பெரிய பதவியாக இருந்தால் அதிக அதிகாரமும் சிறிய பதவியாக இருந்தால் குறைந்த அதிகாரமும் இருக்கும். அதிகாரம் எப்போது அதிகரிக்கிறதோ, அதோடு ஷைத்தான், தலைகனத்தையும் பெருமையும் சேர்ந்தே அதிகரிக்கச் செய்கிறான்.இதனால்தான் பதவியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை கீழ்த்தரமாக நடத்துவது திட்டுவது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால்தான் இந்த தலைகனத்திலிருந்து விடுபட முடியும். அனைத்து அதிகாரத்திற்கும் நான் தான் உரியவன் என்று பல இடங்களில் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
பின்னும் நீர் கூறும்: "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)
பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)
"அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:40)
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)
மறுமை நிலை
மறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
அல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:
1. நீதிமிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).
4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்
6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.
7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)
அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.
அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே" எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)
பதவியில் உள்ளவர்களின் பண்புகள்
.திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள். ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை, மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை.
அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும். மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்.
பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார். ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட இயலுமா? இவர்களுக்கு நிலையான மறுமையில் எந்த பதவியும் கிடைக்காது.
மேலும் பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கும் புகழுக்கும் செல்வத்திற்கும் அடிமையாகி விட்டதால் நிரந்தர தலைவர் என்று அறிவித்து கொள்கிறார்கள், அப்படியென்றால் இவர்களுக்குப் பின் இருக்கும் லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தருக்கும் தகுதியோ திறமையோ இல்லை என்றாகிறது இவ்வாறு நினைக்கும் தலைவர்களின் பின் அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன்?
மேலும் தமிழ்நாட்டில் ஊர் தலைவர்கள் எனும் முத்தவல்லிகள் அந்த ஊரில் உள்ள இமாம்களை அளவுக்கு மீறி தன்னிஷ்டப்படி ஆட்டி வைப்பதும் ஓரிறை கொள்கை கொண்டவர்களை ஊர் விளக்கி வைப்பதும் நடந்து வருவதை அறிவீர்கள் .ஊர் விளக்கும் அதிகாரம் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டவுடன்
அவர்களுக்கு திருமணம் ,அல்லது ஜனாஸா அடக்கம் என்றால் அபராதம் விதித்து கொள்ளையடிப்பதும் ஊர்வோலை (திருமணத்திற்கு தடை இல்லா சான்றிதழ்) தர மறுப்பதும், ஜனாஸா அடக்கம் செய்ய மறுப்பதும் நாம் அறியாததல்ல.ஊர்மக்கள் மது அருந்துவது, வரதட்சனை திருமணத்தை ஆதரிப்பது போன்ற செயல்களை என்றாவது தடுதிருப்பார்களா? பள்ளிவாசலில் தொழுபவர்கள் தொப்பி அணியாதது, ஆமின் சொல்வது, விரலசைப்பது என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கும் தொழுபவர்க்கும் இடைப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றித்தான் தொழுபவர்கலாக இருந்தும் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுக்கப் படுகிறார்கள். இவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதர்க்குதான் இவர்களுக்கு பதவியா? மறுமை நாளில் இவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டாமா ?
இறையச்சம்
'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!' எனக் கூறுவீராக" (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)
ஒருவன் பதவி வகிப்பதற்கான முதல் தகுதி இறையச்சமாகும். ஒருவனிடம் எவ்வளவுதான் திறமை ,வீரம் இருந்தும் இறையச்சம் இல்லையென்றால் அவன் நஷ்டவாளியாவதோடு அவனை சார்ந்தோரையும் அது பாதிக்கும்.இறையச்சம் இல்லாத காரணத்தினாலே திருட்டு, லஞ்சம், பொய் வாக்குறுதி, அடக்குமுறை போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். மேலும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களையும் தவறு செய்ய தூண்டும். ஆகவே இஸ்லாம் இறையச்சத்தை முதன்மையான தகுதியாக முன்வைக்கிறது. ஆனால் இன்றைய நம்முடைய நிலையோ தலைகீழாக மாறி இருக்கிறது. தமக்கு மாற்று மதத்தினர் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக வணக்கம் சொல்வதும், அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று அவர்களுடைய தெய்வங்களை வழிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தா ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.
''அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.'' (அல்குர்ஆன் 79:25)
கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்
ஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)
தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)
அதே போல் ஒரு முடிவு எடுக்கும்போது தொலைநோக்கு பார்வையுடனும் அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும் விபரமாக செயல்பட வேண்டும்.
திடவுறுதி, பொறுமை, வீரம்
பதவி வகிப்பவர்கள் தாம் எடுத்த முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் நாம் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும். நபிகள் நாயகத்தை அல்லாஹ் பாராட்டி கூறும்போது "நீங்கள் மக்களிடம் நளினமாக நடந்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஓட்டம பிடித்திருப்பார்கள்" என்பதாக குறிப்பிடுகிறான்.
''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.'' .(அல்குர்ஆன் 3:159)
மன உறுதியும் வீரமும் உள்ளவர்களாக இருப்பதும் பதவி வகிப்பதற்க்குள்ள முக்கிய பண்புகளாகும்.எடுத்த முடிவில் பின்வாங்காமலும் வளைந்து கொடுக்காமலும் இருப்பது மிக முக்கியம்.நேர்மையாக பதவி வகித்தால் எதிர்ப்பு வருவது இயற்கைதான் அதை எதிர்கொள்ள மனவலிமையும் வீரமும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் போர்கலங்களில் பங்கெடுத்தும் மக்களுக்கு பாதுகாவலராக இருந்து தமது வீரத்தை நிறுபித்திருக்கிறார்கள். பதவி வகிப்பவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மிகப் பெரிய முன் உதாரணமாக இருக்கிறார்கள்.
தகுதியும் திறமையும்
ஒரு பதவியை வகிப்பதாக இருந்தால் அவருக்கு நிச்சயம் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும்.தகுதியற்ற ஆட்சியாலர்கலாலேயே கலிஃபத் எனக் கூறப்படுகிற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அழிந்த வரலாற்றை பார்க்கிறோம். தகுதி என்பது இறையச்சம், திறமை, வீரம் மற்றும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் குறிக்கும்.
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்;இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்"என்று கூறினார். (அல்குர்ஆன் 2:247)
'ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.
முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)
பாரபட்சம் இருக்கக் கூடாது
பதவியில் இருப்பவர்கள் அதிகமாக தவறு செய்வது பாராட்சம் காட்டுவதில் தான்.தன்னுடைய சொந்ததுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு நியாயமும் நீடிப்பதால்தான் மக்களுக்கு பதவியில் உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. தன் சமூகத்தாருக்காகவும் தன் சொந்த பந்தங்களுக்காகவும், தன்னுடய நண்பர்களுக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.இதை படிக்கவும் சிந்திக்கவும் இனிதாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த நமக்கு கடினமாக இருக்கிறது.என் சொந்தக்காரன் பதவியில் இருந்தும் எனக்கு உதவாமல் போய்விட்டான் என்று கோபம் வருகிறதே தவிர அதில் உள்ள பாரபட்சத்தையும் அதனால் மற்ற மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை சிந்திக்க மணம் மறுக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)
மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)
உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)
பதவி என்பது பொறுப்பு
பதவியினால் ஏற்படும் விளைவுகளை ஒரு மனிதன் நன்கு அறிந்தால் அதை அவன் விரும்பவே மாட்டான்.ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.அநீதி இழைக்கப்பட்ட மனிதன் அந்த தவறை மன்னிக்காத வரை அந்த தவறை அல்லாஹ் மன்னிப்பதில்லை.நாம் வகிக்கும் பதவியால் நம்மை சார்ந்தவர்களும் பாதிப்படைவதால் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.நம்மால் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மன்னிக்காதவரை நாம் அந்த தவிரிளிருந்து மீள முடியாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.நாம் செய்தவற்றுக்காக மறுமை நாளில் நாம் விசாரிக்கப் படுவோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
''செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.'' (அல்குர்ஆன் 17:36)
பதவி என்றால் ஆட்சியாளர் என்பது கிடையாது.நமக்கு ஒரு பொறுப்பு வழங்கப் பட்டு நம்மை நம்பி மக்கள் இருந்தாலே நாமும் பதவி வகிப்பவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் முதல் வீட்டில் உள்ள குடும்பத் தலைவர் வரை அனைவரும் பதவி வகிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்பதையும் இஸ்லாம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
நம்பிக்கை
பதவி வகிக்கக் கூடியவர் நம்பகத் தன்மையுடயவராக இருப்பது மிக முக்கியம்.தம்மை நம்பி இருப்பவர்களிடம் போய் உரைக்காமலும் பணம் விஷயத்தில்நேர்மையாளராக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)
தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.
'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)
வழிகாட்டி
பதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயதிலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.
"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
ஆட்சிக்கு ஆசைப் படுவது
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)
அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: "நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)" என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!" என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)
'இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்" என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:55)
இவ்வசனத்தில் என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரி யாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)
மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.
யூசுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட் போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும் அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 12:7)
கருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூசுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.
ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்;அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதி யற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப் பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும்,உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சி யாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்ப தற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
பதவியில் இருப்பவர்களே ! உங்களுக்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உங்களிடம் வந்தால் தற்பெருமை கொள்ளாதீர்கள் இறைவனை அதிகதிகம் புகழுங்கள்.
''அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 110:1-3)
- MOHAMED INSAAF (FRANCE)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )