அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை. அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது. தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.
ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன்தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.