Jul 28, 2014

பெருநாள் தொழுகை

இளையான்குடி தக்வா டிரஸ்ட் இன் இதயங் கனிந்த ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்

பெருநாள் தொழுகையின் அவசியம் பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) ஜமாஅத்
தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகள் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. (இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது). மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

தொழுகை நேரம் .

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560) 

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெளிப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது. 

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 581)

இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெளிப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது. தமிழகத்தில் அனேக இடங்களில் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும். பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும்.

தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயிளின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

Jul 17, 2014

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

 

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
 
இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.
 
அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.
 
கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர் ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.
 
வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வசாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
 
வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.
 
வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?
 
மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.
 
இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.
வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.
 
வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.
 
ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.
 
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 24
 
ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
 
ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.
 
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 24:19
 
அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: முஸ்லிம் 3971
 
இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:
 
கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.
அல்குர்ஆன் 40:19
 
முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்
அல்குர்ஆன் 41:20

மார்க்கத்தை மறந்த மங்கையர்

 
 
அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான்.
 
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும் கண்ணியமாக வாழும் வகையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
 
ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் பெரும்பாலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். முஸ்லிம்கள் பெண்கள் ஆடைகள் விஷயத்தில் மார்க்கம் சொன்ன கட்டுப்பாட்டை மறந்து அலட்சியம் காட்டுகின்றனர். ஹிஜாப் விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
ஒன்று, பர்தா எனும் அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியாமல் அடுத்தவர்களின் கண்களுக்கு மேனியை விருந்தாக்குகின்றனர்.
 
இரண்டாவது, பர்தா அணிந்து கொண்டு தலையில் முக்காடு இல்லாமல் அரசியல்வாதிகள் துண்டு போடுவது போல் கழுத்தில் மாலை போட்டுக் கொள்கின்றனர்.
 
மூன்றாவது, வெளியே தெரியலாம் என்று மார்க்கம் அனுமதித்த பகுதிக்கெல்லாம் கையுறை, காலுறை, முகத்திரை போன்றவற்றைப் போட்டு மறைத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் எது அவசியம் இல்லையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
 
சில முஸ்லிமல்லாத சகோதரிகள் கூட அழகான முறையில் ஆடை அணிந்து, வயிறு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளை மூடி கண்ணியமான முறையில் உடலை மறைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
இயற்கையாகவே தாய்க்கு மகன் மீதும், தந்தைக்கு மகள் மீதும் மாறுபட்ட பாலினம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பினால் அன்பு, பாசம், புரிந்து கொள்ளுதல், ஒத்துப் போதல் போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுவார்கள்.
 
பெண் பிள்ளைகள் தந்தையின் அதீதமான அன்பைக் கையில் எடுத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் பேணுதல் இல்லாமல் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆண்களும் தங்கள் மகள்களின், மனைவியின், சகோதரிகளின் ஆடைகள் விஷயத்தில் கவனக்குறைவாக உள்ளனர்.
 
திருமண நிகழ்ச்சிகள் என்றாலும், நான்கு பேர் ஒன்று கூடும் இடமாக இருந்தாலும் வரம்புகளை மீறி, வரைமுறைகளுக்கு உட்படாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். மஹ்ரமானவர்களுடனும் அந்நியர்களுடனும் புர்கா போன்ற முழு ஆடைகள் இல்லாமல் அரைகுறையான மெல்லிய ஆடைகளுடன் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
 
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31, 32
 
முக்காடுகளைத் தங்கள் மார்பின் மீது போட்டுக் கொள்ளுமாறு வல்ல இறைவன் கூறுகின்றான். கால்களைத் தரையில் அடித்து நடக்க வேண்டாம் என்று கூறுகின்றான்.
 
ஆனால் நமது பெண்களோ எந்த டிசைனில் உள்ளாடை அணிந்தால் ஆண்களின் பார்வை தம்மீது படும் என்றும் எவ்வளவு அகலமான சலங்கை அணிந்தால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் கால்களைத் தரையில் அடித்து நடப்பதைப் பார்க்கிறோம்.
 
அல்லாஹ் விடுத்துள்ள எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் நமது வீட்டின் மணவிழாக்களையும் விருந்துகளையும் படம் பிடித்து பந்தி வைக்கிறோம். நமது குடும்பத்தினரின் மானத்தையும் கற்பொழுக்கத்தையும் மாற்றான் கண்டு ரசிக்கும் வகையில் சிடிக்களாக, டிவிடிக்களாக மாற்றி மானமிழக்கிறோம்.
 
தாய்மார்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் ஆடை நிலையும் அப்படித்தான் உள்ளது. பெண்களைப் பொத்தி, பாதுகாத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களே வெட்க உணர்வு இல்லாமல், ரோஷம் இல்லாமல் தன் வீட்டுப் பெண்களிடம் அதை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள். வெட்கம் என்பது ஈமானின் கிளைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 
வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் யாரை வேண்டுமானாலும், யாராக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றி கயவர்கள் விலைபேசி விடக்கூடிய காலகட்டம் இது. விடலைப் பருவத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் தாய்மார்களுக்கும் பெரும் பங்குண்டு.
முதலில் ஆடை விஷயத்தில் நாம் கண்ணியத்துடன் செயல்பட்டால் நம் பிள்ளைகளையும் செப்பனிட்டு விடலாம். பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் பருவம் அடைந்து விடுவதால் பர்தா அணிந்து வெளியில் செல்ல இந்தப் பெண்கள் சங்கடப்படுகின்றார்கள்.
 
சிறு வயதிலேயே வெட்க உணர்வையும் கூச்சத் தன்மையையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆடையை முழுமைப்படுத்தி விட்டால் பிற்காலத்தில் ஏற்படும் பல்வேறு சங்கடங்களையும் சச்சரவுகளையும் நிச்சயமாகத் தவிர்த்துக் கொள்ளலாம். வல்ல அல்லாஹ் சொன்னபடி நாம் நடந்தால் நம்மைக் காக்க அவனே போதுமானவன். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
 
மார்க்க அடிப்படையில் தனது தந்தை அல்லது சகோதரன் சொல்வதை நல்லொழுக்கம் உள்ள, இறைவனுக்கு அஞ்சிய எந்தவொரு பெண்ணும் மறுக்க மாட்டாள்.
 
உலக இன்பங்களுக்காகவும், கல்வி, பொருளாதாரம் திரட்டுவதற்காகவும் உங்கள் பெண்களை வற்புறுத்தும் நீங்கள், படைத்த இறைவன் பற்றியும் அவனது சட்டதிட்டங்கள் பற்றியும், ஆடை விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் நீங்களும் அறிந்து கொண்டு, உங்கள் குடும்பத்தாருக்கும் சொல்லுங்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாüயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 5200
 
ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் உங்கள் குடும்பத்தாருடன் அழகான முறையில் பொறுமையாகப் பேசுங்கள். இறைவனின் சட்டதிட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் ஆடை விஷயத்தில் அவர்கள் உண்மையை உணர்வார்கள்; ஏற்றுக் கொள்வார்கள்.
 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் அச்சமும் இருக்குமானால் மறுமையில் அவனை சந்திக்கவுள்ளோம் என்பதையும் நமது கேள்வி கணக்கு அவனிடம் உள்ளது என்பதையும் சிந்தியுங்கள்.
 
தன் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுப்படுத்தாமல் விட்டு விட்டால் படைத்த இறைவன் உங்களை விட்டுவிடுவான் என்று எண்ணாதீர்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக என்றும் அழியாது நீடித்து நிற்கும் மறு உலக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவனை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான்.
 
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
அல்குர்ஆன் 65:2
 
ஃபாத்திமா அஜீஸ், கல்பாக்கம்

மூஃமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன்

[''அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்' (அல்குர்ஆன் 75:22,23)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பவுர்ணமி இரவில் நிலவைப் பார்த்தார்கள். அந்த முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனையும் நிச்சயமாகக் காண்பீர்கள் என்று அப்போது கூறினார்கள். (அறிவப்பவர்: ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
''நிச்சயமாக அல்லாஹ் மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிப்பான். (இது மஹ்ஷர் வெளியில் நடக்கும்)' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.]
 
மூஃமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன் 
''நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்''. (அல்குர்ஆன் 78:17,18)
நியாயத் தீர்ப்பு நாளில் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதுவரை அறிந்தோம். இறைவன் அந்நாளில் விசாரிக்கும் முறை எவ்வாறு இருக்கும்? இதை இனி அறிந்து கொள்வோம்.

விசாரணை மன்றம்
மக்களெல்லாம் வெட்ட வெளியில் ஒன்று கூட்டப்பட்டதும் அவர்களை விசாரிக்க இறைவன் அங்கே வருவான். வானவர்கள் அணியணியாக வருவார்கள். இறைவனது அர்ஷை எட்டு வானர்கள் சுமந்து வருவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
 
''இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்' (அல்குர்ஆன் 89:21,22)
 
சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

  01. துஆக்கள் ஏற்கப்பட  
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)
 
  02. ஈருலக நன்மை பெற  
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )
"ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
 (அல்குர்ஆன் 2: 201)
 
  03. கல்வி ஞானம் பெற  
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )
"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)
 
  04. பாவமன்னிப்புப் பெற  
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ )
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" (அல்குர்ஆன் 7: 23)
 
  05. படைத்தவனிடம் சரணடைந்திட  
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ )
"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (அல்குர்ஆன் 6: 79)

Jul 7, 2014

முன் பின் சுன்னத்கள்

 
 
பஜ்ருடைய சுன்னத்
பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.\
 
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (1163), முஸ்லிம் (1191)
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி),
நூல் : இப்னுஹிப்பான் (247)
 
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சுன்னத் இல்லை. சுப்ஹுத் தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது
.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்: புகாரி (581), முஸ்லிம் (1367?)
 
லுஹருடைய சுன்னத்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )