பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்
உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,
“ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!” அல் குர்ஆன்.22:73.
இவ்வசனத்தில் நம்மோடு ஒன்றாய் வாழும் ஈயைப் பற்றி அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். எளிய உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் அல் குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே ஈக்கள் உலகில் நடமாடுகின்றன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.