Nov 30, 2011

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்( Part-II)

v  ஜனாசாவை சுமப்பதும், அதை பின்தொடர்ந்து செல்வதும்.
ü  இது ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் ஒன்றாகும்.
Ø  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். .   (புஹாரி : 1240)  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ü  துயர்ந்து செல்வது என்பது இரண்டு விதத்தில் அமையும், வீட்டிலிருந்து தொழுவிக்கும் வரை மட்டும் பின்தொடர்வது, அல்லது தொழுகையிலும் கலந்துகொண்டு, அடக்கும் வரை இருப்பது, இரண்டாவது கட்டமே சிறப்புக்குறியது.
Ø  நாபிஃ அறிவித்தார்: ஜனாசாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் 'அபூ ஹுரைரா(ரலி) மிகைப்படுத்துகிறார்' என்றார்.
ஆயிஷா(ரலி) அபூ ஹுரைரா(ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், 'நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்' என்றும் கூறினார். இதைக்கேட்ட இப்னு உமர்(ரலி) 'அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே' என்றார். .   (புஹாரி : 1323,1324)
Ø  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். .   (புஹாரி : 1325)
ü  ஜனாசாவை பின்தொடரும்போது நபி வழிக்கு முரனான, நபிகளார் காட்டித்தராத  காரியங்களை செய்யக்கூடாது, சத்தம்போட்டு திக்ர்செய்வது, நறுமனங்கள் தெளித் தவாரோ, பகல் நேரத்தில் விளக்குகளை ஏந்தியவாரோ செல்லக்கூடாது.
ü  சுமந்து செல்லும் போது விரைவக நடப்பதும் முக்கியமனது.
Ø  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்." .   (புஹாரி : 1315, முஸ்லிம்: 470) .
Ø  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்." ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்." அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.  .   (புஹாரி : 1314)
ü  ஜனாசாவை பிதொடரும் போது முன்னாலோ பின்னாலோ செல்லலாம்.
Ø  அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களும், அபூ பக்ர் உமர் (றழி) ஆகியோரும் ஜனாசாவுக்கு முன்னாலும், பின்னாலும் நடப்பவர்களாக இருந்தார்கள்.' (தஹாவி)
ü  ஜனாசாவை பின்தொடரும்போது தேவை ஏற்படின் வாகனங்களில் ஏறிச் செல்லலாம், திரும்பிவரும்போது தாராலமாகவே வாகனங்களில் ஏறிச் செல்லலாம்.
Ø  இப்னு தஹ்தாஹ் (ரளி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜனாஸா) தொழுகை நடத்தினர். (அது முடிந்தபின்) எதுவும் விரிக்கப்படாத நிலையில் ஒரு குதிரை அவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஒரு மனிதர் அக்குதிரையை பிடித்திருக்க அதன்மீது நபி (ஸல்) அவர்கள் ஏறினார்கள். அவர்களை (ஏற்றிக்கொண்டு) அக்குதிரை தன் பாதங்களை நெருக்கமாக வைத்து நடந்தது. நாங்கள் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து விரைந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்னு தஹ்தாஹ்விற்காக சுவனத்தில் எத்தனையோ ஈச்சங்குலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், அல்லது அதை அவர் உண்ணுவதற்கு தகுந்தார்போல் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாககூறினார். (முஸ்லிம்: 485)       
ü  ஜனாசாக்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை பொறுத்தவரை அதில் நபி வழியில் சான்றுகள் இல்லை, ஆனாலும் நபியவர்கள் தோழில் சுமந்து செல்வது என்ற வார்த்தையோடு சேர்த்து கூறியிருக்கின்றார்கள். மேலும் அதுவே மரண சிந்தனையை அதிகப்படுத்தவும் காரணமாக இருக்கும்.
Ø  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்." ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது,…….. .   (புஹாரி : 1314)
ü  ஜனாசாக்கள் சுமந்து செல்வதைக் காணுபவர் எழுந்து நிற்பதை பொறுத்தவரை, அது ஆரம்பத்தில் சட்டமாக இருந்து, பிறகு அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Ø  ஒரு ஜனாஸா சென்றது (ஒரு ஜனாஸாவை மக்கள் எடுத்துச் சென்றனர்.) அதன் பொருட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) நின்றனர், (அதைப்பார்த்து) நாங்களும் எழுந்து நின்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அது யூதப்பெண்ணின் ஜனாஸாவாகும் எனக்கூறினோம். (அதற்கவர்கள்) மரணம் என்பது நிச்சயமாக திடுக்க(ம் தரும் செய்தியாகும்)மாகும். ஆகவே ஜனாஸாவை (எடுத்துச் செல்லக்) கண்டால் அதன் நிமித்தம் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்: 472)     அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி)
Ø  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஜனாஸாவிற்காக) எழுந்திருக்கக்கண்டு நாங்களும் எழுந்தோம். (ஆனால் பின்பு) ஜனாஸாவிற்காக அவர்களும் அமர்ந்தார்கள், நாங்களும் அமர்ந்தோம் என அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்: 473)
ü  பெண்கள் ஜனாசாகளை பின்தொடர்வது அனுமதிக்கப்பட்டதல்ல.
Ø  உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவை பின்தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை (புஹாரி: 1278, முஸ்லிம்: 471)   
v  ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல்
ü  ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் இருந்திருக்கின்றார்கள்.
1.       வயதுக்கு வராத குழந்தைகள்
Ø  ஆயிஷா (றழி) கூறினார்கள்: நபியவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாத குழந் தையாக இருக்கும்போது மரணித்தார், அவருக்காக நபிகளார் தொழுவிக்கவில்லை.  (அஹ்மத், அபூதாவுத்)
2.       யுத்த களங்களில் ஷஹீதானவர்கள்.
Ø  நபியவர்கள் உஹதில் சஹீதானவர்களுக்காக தொழுவிக்கவில்லை, ஆனாலும் ஹம்ஸா (றழி) அவர்களுக்காக தொழுவித்தார்கள்.
ü  குழந்தைகளுக்கு தொழுவித்தல்
Ø  ஆயிஷா (றழி) கூற்னார்கள்: நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஜனாசாவுக்கு அழைக்கப்பட்டார்கள், அப்போது நான் : அல்லாஹ்வின் தூதரே! சுவனத்து சிட்டுக் குருவிகளுள் ஒரு குருவியான இதற்கு நற்செய்தி உண்டாகட்டும், அது எந்தத் தீமையும் செய்யவுமில்லை, அதை அது அடையவுமில்லை.' என்று கூறியபோது, 'வேறு எதுவும் இல்லையா ஆயிஷாவே?.' என்று கூறிவிட்டு, 'நிச்சியமாக அல்லாஹ் சுவனத்துக்குறியவர்களை அவர்கள் தன் தந்தையின் முதுகந்தண்டில் இருக்கும் போதே படைத்துவிட்டான், மேலும் நரகத்துக்குறியவர்களையும் அவர்கள் தன் தந்தையின் முதுகந்தண்டில் இருக்கும் போதே படைத்துவிட்டான்.' என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)
Ø  நஸாஇயின் அறிவிப்பில் 'நபியவர்கள் அதற்காக தொழுவித்தார்கள்.' என்று வந்துள்ளது.
ü  ஷஹீதுக்கு தொழுவித்தல்
Ø  உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்... கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள். (புஹாரி: 1344)
ü  கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்கு தொழுவித்தல்.
Ø  ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (புஹாரி: 2295)
ü  தொழுகை நடத்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்டவருக்காக அல்லது சிலர் தொழுவித்த பின் தொழுகையில் கழந்து கொள்ளாதவர்கள் அந்த ஜனாசாவுக்காக அதன் கபுரடியில் தொழுதல்.
Ø  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், 'இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?' எனக் கேட்டார்கள். தோழர்கள் 'நேற்றிரவு தான்' என்றதும். 'எனக்கும் சொல்லியனுப் பியிருக்கக் கூடாதா' எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், 'அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள். .   (புஹாரி : 1321)
Ø  பள்ளியை கூட்டிப்பெருக்கிக் கொண்டிருந்த ஒரு கருப்புப்பெண்ணை அல்லது ஒரு வாலிபரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காணாததால் அவளை அல்லது அவரைப்பற்றி கேட்டனர். அதற்கு (அங்கிருந்தவர்கள்) அவள் அல்லது அவ்வாலிபர் இறப்பெய்திவிட்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் (இதைப் பற்றி) எனக்கு நீங்கள் தெரிவித்திருக்க வேண்டாமா? எனக்கூறிவிட்டு அவளின் அல்லது அவ்வாலிபரது கப்ரை எனக்கு காட்டுங்கள் என்றனர். (அங்கிருந்தவர்கள் அப்பெண்ணுடைய அல்லது அவ்வாலிபருடைய மய்யித்து விஷயத்தை பெரிதாகக் கருதாமையால் நபி (ஸல்) அவர்களிடம் கூறாமல் இருந்துவிட்டனர் என்பதாக அறிவிப்பவர் கூறுகிறார்) (நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க) அவளது அல்லது அவ்வாலிபரது கப்ரை காண்பித்தனர். அதன்மீது (அக் கப்ருக்கு அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தொழுது விட்டு. நிச்சயமாக இந்தக்கப்ருகள் அதை உடையவர்களுக்கு இருளால் நிரப்பட்டுள்ளது எனது தொழுகையினால் அவர்களது கப்ரில் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை நல்குகிறான் எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி) (முஸ்லிம்: 479)
·         குறிப்பு :  மய்யித்து தொழுகை உரியவருக்கு அத்தொழுகை தவறிவிடுமானால் அம்மய்யித்தின் கப்ருக்கு சென்று மய்யித்துத் தொழுகை நடத்துவது ஆகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். ஆனால் மற்ற தொழுகைகளை கப்ருகளின்பால் தொழுவது தடுக்கப்பட்டதாகும் என்பதை மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்க.
ü  முஸ்லிம்கள் இல்லாத ஊரில் ஒருவர் மரணித்து, அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லையெனில் அவருக்காகாக வேறு ஊரில் உள்ள முஸ்லிம்கள் மறைவான ஜனாசா தொழுவித்தல்.
Ø  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் நஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமி டத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். .   (புஹாரி : 1245)
Ø  ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். .   (புஹாரி : 1320)
ü  குப்ர் இறை நிராகரிப்பில் அல்லது இணை வைத்த நிலையில் மரணித்தவருக்காக தொழுவதோ, பாவ மன்னிப்பு தேடுவதோ கூடாது.
Ø  அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருபோதும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்கவேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து  பாவிகளாகவே இறந்தார்கள்.  (அல் குர்ஆன் 9:84)

Ø   முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார் நிச்சயமாக இப்ரா ஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.      (அல் குர்ஆன்: 9:113,114)
ü  ஜனாசா தொழுகை ஜமாஅத்தாகவே நிறைவேற்றப்படவேண்டும். ஏனெனில் நபிகளார் ஜமாஅத்தாகவே தொழுதுள்ளார்கள்.
Ø  ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். (புஹாரி : 1320)
Ø  ஷைபானி அறிவித்தார். தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்" என ஷஅபீ கூறினார். நாங்கள் 'அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?' எனக் கேட்டதும் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்" என்றார் அவர். (புஹாரி : 1322)
ü  ஜமாஅத்தில் மூமின்கள் அதிகமாக கந்துகொள்வது மிகவும் சிறப்புக்குறியதே.
Ø  எந்த மய்யித்தாக இருப்பினும் முஸ்லீம்களில் நூறை எத்திவிடுகிற ஒரு கூட்டம் அவருக்காக தொழுது பரிந்துரை செய்வார்கள் என்றால், அவர் விஷயத்தில் அவர்களது பரிந்துரை, (அல்லாஹ்வினால்) அங்கீகரிக்கப்பட்டதே என நபி(ஸல்)  அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 482)
Ø  இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிமான ஒரு மனிதர்   இறப்பெய்தி அவர் ஜனாஸாவை அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காத நாற்பது பேர் தொழுதால், அவர்களின் (துஆவை) பரிந்துரையை அவர் விஷயத்தில் அல்லாஹ் அங்கீகரிக்கின்றான். என  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்: 483)
ü  ஜனாசா தொழுகையை பள்ளியிலோ, திடலிலோ தொழுவிக்கலாம்.
Ø  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.  (புஹாரி : 1328)
Ø  இப்னு உமர்(ரலி) அறிவித்தார். தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். . (புஹாரி : 1329)
ü  ஆண்களுக்கு தலைக்கு நேராகவும், பெண்களின் இடுப்புக்கு நேராகவும் நிற்கவேண்டும்.
Ø  அனஸ் (றழி) அவர்கள் ஒரு ஆண் ஜனாசாவுக்கு தொழுவிக்கும் போது தலைக்கு நேராகவும், பெண் ஜனாசாவுக்கு தொழுவிக்கும் போது இடுப்புக்கு நேராகவும் நின்றார்கள், காரணம் கேட்கப்பட்டபோது, நபிகளார் செய்ததாக கூறினார்கள்.  (அபூ தாவுத், திர்மிதி)
Ø  ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். (புஹாரி : 1331)
ü  பெண்களும் ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளலாம்.
Ø  து பின் அபீவக்காஸ் (ரளி) அவர்கள் இறப்பெய்திய பொழுது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அவருக்கு அவர்கள் தொழுகை நடத்த வேண்டுமென்பதற்காக அவரது ஜனாஸாவை பள்ளிக்குக் கொண்டு வருமாறு (ஒருவரிடம் சொல்லி) அனுப்பினார். (அவர்கள் கூறியதற்கிணங்க அவ்வாறே) அவர்களும் செய்தனர். நபி (ஸல்) அவர்களின் (மனைவிமார்கள் (ரளி) இருந்த) அறைகளுக்கு அருகாமையில் அவரது (ஜனாஸா கொண்டு வந்து) வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் அவரது ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினர். பள்ளியில் உட்காரும் இடங்கள் (உள்ள) பகுதியிலிருக்கும் ஜனாஸாக்களைக் கொண்டு செல்லும் வாயில் வழியாக வெளியே அவரைக் கொண்டு வரப்பட்டது. (அதற்குப்பிறகு) அவர்களது இச்செயலை (சில) மனிதர்கள் குறைகூறியதாக அவர்களுக்கு செய்தி எட்டியது. (அதாவது) ஜனாஸாக்களை பள்ளியினுள் நுழைவிக்கப்பட (கொண்டுவர) வேண்டியதில்லை என அவர்கள் கூறிய கூற்று ஆயிஷா (ரளி) அவர்களுக்கும் எட்டியது. மனிதர்களுக்கு எது பற்றி தெரியவில்லையோ அது விஷயத்தில் குறை கூற அவர்களை அவசரப்படுத்தியது எது? ஜனாஸாவை பள்ளியினுள் கொண்டு வந்ததைப் பற்றி அவர்கள் நம்மீது குறை கூறிவிட்டனர். (ஆனால் ஸுஹைல் பின் பைளாஉ (ரளி) என்பவருக்கு பள்ளியினுள் வைத்தே தவிர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வேறெங்கும்) தொழவை க்கவில்லை (என்ற விஷயம் ஏன் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது) எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி) (முஸ்லிம்: 478)
ü  ஜனாசா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லுதல் , இதுவே நபிகளாரின் செயல்களில் அதிகம் நடந்துள்ளது..
Ø  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.  (புஹாரி : 1328)
ü  ஜனாசா தொழுகையில் ஐந்து தக்பீர்கள் சொல்லுதல்.
Ø  ஜைது (என்பவர்) எங்களது ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறக்கூடியவராக இருந்தார். ஒரு ஜனாஸாவின் போது ஐந்து தக்பீர் கூறிவிட்டார். (அது பற்றி) அவரிடம் நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். அதற்கவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு தக்பீர் கூறியிருக்கிறார்கள் எனக் கூறினார். அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரளி) (முஸ்லிம்: 476)
ü  முதல் தக்பீருக்காக மாத்திரமே காதுவரை கையை தூக்கி கட்டவேண்டும், ஏனைய தக்பீர்களுக்கு கை தூக்கியதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் காண முடியவில்லை.
ü  முதல் தக்பீருக்குப் பின் சூரா பாதிஹாவை மெளனமாக ஓதுதல்.
Ø  தல்ஹா அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார்.  (புஹாரி : 1335)
ü  இரண்டாவது தக்பீருக்குப் பின் நபிகளார் மீது ஸலவாத் கூறுதல், ஸலவாத் எனும்போது நபிகளார் காட்டியதையே ஓதவும் வேண்டும், ஏனெனில் நபிகளார் வஹியின் அடிப்படையிலேயே ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் சில வார்த்தை வித்தியாசங்களுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Ø  அபூ உமாமா (றழி) அவர்கள் கூறினார்கள்: முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், முதல் தக்பீருக்குப் பின் fபாதிஹா சூராவை மெளனமாக ஓதிவிட்டு, பினார்  குர்ஆனிலிருந்து எதையும் ஓதாமல் நபியவர்கள் மீது ஸலவாத் கூறி, ஏனைய தக்பீர்களில் இறந்தவருக்காக தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாசாத் தொழுகையில் நபி வழியாகும்.  .(பைஹகீ)
Ø  து பின் உபாதாவின் ஜ்லிஸில் நாங்கள் அமர்திருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களி(அவ்வி)டம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! “‘கண்ணியமும்,மகத்துவமும் உடைய அல்லாஹ் உங்களின் மீது நாங்கள் ஸலவாத்து கூற வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளான். உங்கள் மீது எவ்வாறு நாங்கள் ஸலவாத்துச் சொல்ல வேண்டும்என பஷீர் பின் ஸஃது (ரளி) கேட்டனர். அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசாதிருந்தனர். (இதைப்பார்த்து நிச்சயமாக அவர் கேட்காதிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நாங்கள் ஆசைப்பட்டோம். (அந்த அளவிற்கு அமைதியாகஇருந்து விட்டு) பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இபுறாஷீம வபாரிக் அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இபுறாஷீம ஃபில் ஆலமின் இன்னக்க ஹமீதுன் மஜீதுஎனக்கூறுங்கள் (என்று கூறிய பின்) ஸலாம் கூறுவது நீங்கள் (ஏற்கனவே) தெரிந்திருப்பதைப் போன்றே கூறினார்கள். அறிவிப்பவர் : அபு மஸ்ஊது அல்அன்சாரி (ரளி) முஸ்லிம்: 309) 
ü  மூன்றாவது தக்பீருக்குப் பின் நபிகளார் ஓதிய துஆக்களை ஓத வேண்டும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஜனாசாவுக்காக தொழுதால் அதற்காக தூய்மையாக துஆ கேளுங்கள்.  (அபூதாவுத், இப்னு மாஜாஹ்)
Ø  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினார்கள். அத்தொழுகையில் ஜனாஸாவிற்காக அவர்கள் ஓதிய துஆவை நான் மனனம் செய்து விட்டேன்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ 

அல்லாஹும்மGக்பிர்லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வஃபு அன்ஹு, வஅக்ரிம் நுzஜுலஹு வவஸ்ஸிஃ முத்Hகலஹு, Gக்ஸில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா-னக்கைத்தஸ்ஸவ்பல் அப்யழ மினத்தனஸி, வஅப்தில்ஹுதாரன் கைரன் மின்தாரிஹி, வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வZஜவ்ஜன் மின் Zஜவ்ஜிஹி, வஅத்கில் ஹுல் ஜன்னத்த வஅஇத்ஹு மின் அதாபில்கப்ரி அவ்மின் அதாபின்னார்என அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தனர். முடிவாக நான் அந்த மய்யித்தாக இருக்கவேண்டுமென ஆசைப்பட்டேன்.
( யா அல்லாஹ்! அவருக்கு பாவமன்னிப்புச் செய்து, அருளும் செய்து இன்னும் அவருக்கு ஆபியத்தையும் கொடுத்து, அவர் தங்குகின்ற இடத்தை கண்ணியமானதாக்கி வைப்பாயாக! தண்ணீர் கொண்டும், ஐஸ்கட்டி கொண்டும், ஆலங்கட்டி கொண்டும் அவரை கழுவுவாயாக! மிக வெண்மையான புடவையை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்துவதைப் போன்று அவரைத் தவறுகளிலிருந்து சுத்தமாக்குவாயாக! அவர் (உலகில் குடியிருந்த) வீட்டை விடச்சிறந்த வீடாக, அவரது குடும்பத்தாரை விடச்சிறந்த குடும்பமாக, அவரது மனைவியை விடச்சிறந்த மனைவியாக, அவருக்கு மாற்றிக் கொடுப்பாயாக! அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக! அவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! அல்லது நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக! (முஸ்லிம்: 477)
Ø  அபூ ஹுரைரா (றழி) கூறினார்கள்: நபியவர்கள் ஜனாசாவுக்காக தொழுதால்,
اللهم اغفر لحينا وميتنا، وشاهدنا وغائبنا، وصغيرنا وكبيرنا، وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان، اللهم لا تحرمنا أجره، ولا تضلنا بعده ".
(அல்லாஹும்மGக்fபிர் லிஹய்யினா, வமையிதினா, வஷாஹிதினா, Gகாஇபினா, வஸGகீரினா, வகபீரினா, Zதகரினா, வ உன்சானா, அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா துளில்லனா பஹ்தஹு) யா அல்லாஹ் எங்களில் உயிரோடிருப்பவர் மரணித்தவர், இங்கு சமூகமழித்தவர் சமூகமழிக்காதவர், சிறியவர் பெறியவர், ஆண் பெண் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக, அல்லாஹ்வே, அவரது கூழியை எங்களுக்கு தடுத்துவிடாதே, அவருக்குப் பின் எங்களை வழிதவரச் செய்துவிடாதே.' என்று கூறுவார்கள். (இப்னுமாஜா,  பைஹகீ)
Ø  நபி (ஸல்) அவர்கள் ஜனாசாதொழுகைக்காக நின்றால்,
اللهم عبدك وابن أمتك احتاج إلى رحمتك، وأنت غني عن عذابه، إن كان محسنا فزد في حسناته، إن كان مسيي ا فتجاوز عنه
அல்லாஹ்வே, உனது அடியானும் உனது அடிமையின் மகனுமாகிய இவர், உனது ரஹ்மத்தின்பால் தேவை கண்டுள்ளார், நீயோ அவரை தண்டிப்பதைவிட்டும் தேவையற்றவன். எனவே அவர் நல்லது செய்தவராக இருப்பின் அவரது நன்மையை அதிகப்படுத்திவிடு, அவர் பாவியாக இருந்தால் அதை அவருக்கு மண்ணித்துவிடு.என்று கூறுவார்களாம்.  (ஹாகிம்)
ü  நான்காவது தக்பீருக்குப் பின் சலாம் கொடுத்தல்.
Ø  அப்துல்லஹ் பின் மஸ்ஊத் (றழி) கூறினார்கள்: மூன்று விடயங்கள் இருக்கின்றன, அவற்றை நபியவர்கள் செய்தார்கள், மக்கள் விட்டுவிட்டனர். அவற்றில் ஒன்று தொழுகையில் ஸலாம் கொடுப்பது போன்று ஜனாசா தொழுகையிலும் ஸலாம் கொடுப்பது. என்று கூறினார்கள்.  (பைஹகீ)
·         ஒரு ஸலாம் கொடுத்தால் போதும் என்ற கருத்தில் தாரகுத்னியில் வரும் ஹதீஸ் சர்ச்சைக்குற்பட்டதாகும், அதே நேரம் சில நபித்தோழர்கள் செய்ததாக செய்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ü  மூன்று நேரங்களில் ஜனாசாவுக்காக தொழுவது கூடாது.
Ø  உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: மூன்று நேரங்கள் இருக்கின்றன அவற்றில் நாங்கள் தொழுவதையும், எங்கள்  ஜனாசாகளை அடக்கம் செய்வதையும் தடுத்தார்கள்.  சூரியன் உதிக்கும் நேரம் அது உயரும்வரை, சூரியன் நடுஉச்சியில் நிற்கும் நேரம் அது சாயும் வரை, சூரியன் மறைவதற்கு நெருங்கும் போது, அது மறையும்வரை.  (முஸ்லிம்)
v  ஜனாசாக்களை அடக்கம்செய்வது.
ü  ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள்.  (புஹாரி , முஸ்லிம்)
ü  ஜனாசாக்களை அடக்கம்செய்யும்பொது மய்யவாடிகளில் அடக்குவதே நபிவழியாக இருந்துள்ளது, அந்த அடிப்படையில் பொது இடங்களில் அடக்கம்செய்யாமல் மய்யவாடிகளில் செய்யவேண்டும். ஆனால் யுத்தகளங்களில் மரணித்தவர்களை அங்கேயே அடக்குவதும் நபிவழியாக இருந்துள்ளது. எனவே வீட்டுக்குள் அடக்குவதோ பள்ளிக்குள் அடக்குவதோ தவிர்க்கப்பட வேண்டும். இதனால் பல ஷிர்க்கான விடயங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கும் அது காரணமாக இருக்கும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தொழுகைகளில் ஒரு பகுதியை வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள், மாறாக அவற்றை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். (புஹாரி,  முஸ்லிம்)
·         இதிலிருந்து வீட்டுக்குள் ஜனாசாக்களை அடக்கமுடியாது என்பது தெளிவா கின்றது.
Ø  நபி (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது,: ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தளங்களை வணக்கஸ் தளங்களாக (மஸ்ஜித்களாக) ஆக்கினார்கள்.என்று சொல்வார்களாம்.  (புஹாரி,  முஸ்லிம்)
·         குறிப்பு: இன்றும் பள்ளிகளுக்கு பக்கத்தில், அல்லது பள்ளிக்குள் குறிப்பிட்டவர்களை அடக்கும் ஒரு நிலை காணப்படுகின்றது அது நபிவழிக்கு முரனானதும், கண்டிக்கப்பட்டதுமாகும்.
ü  நிர்ப்பந்தமின்றி மூன்று நேரங்களில் ஜனாசாக்களை அடக்குவது கூடாது.
Ø  உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: மூன்று நேரங்கள் இருக்கின்றன அவற்றில் நாங்கள் தொழுவதையும், எங்கள்  ஜனாசாகளை அடக்கம் செய்வதையும் தடுத்தார்கள்.  சூரியன் உதிக்கும் நேரம் அது உயரும்வரை, சூரியன் நடுஉச்சியில் நிற்கும் நேரம் அது சாயும் வரை, சூரியன் மறைவதற்கு நெருங்கும் போது, அது மறையும்வரை.  (முஸ்லிம்)
ü  இரவையில் அடக்குவதும் நபிகளாரால் கண்டிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நபிகளார் காலத்திலே இரவில் அடக்கம் செய்யப்பட்டு நபிகளார் கண்டிக்காத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, எனவே கண்டிப்பை முற்படுத்தி முக்கிய தேவைக்கின்றி இரவில் அடக்காமல் ஒருப்பதே சிறந்தது.
Ø  நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் பிரசங்கம் செய்தார்கள். (அப்போது) தனது தோழர்களில் ஒரு மனிதர் இறப்பெய்தி, பற்றாத கபன் அவருக்கு இடப்பட்டு இரவில் அடக்கமும் செய்விக்கப்பட்டு விட்டார் என்ற (விஷயத்தை) கூறிவிட்டு (இரவில் ஒரு மனிதர் இறப்பெய்திவிட்டால்) அவருக்கு தொழுகை நடத்தப்படும் வரை (இரவிலேயே) அடக்கப்படுவதைக் கண்டித்தார்கள். அவ்வாறு செய்ய (எந்த) மனிதராவது நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர.  உங்களில் ஒருவர் தன் சகோதரருக்கு கபனிட்டால் அவரது கபனை (பற்றாக் குறையாக இடாது, நிறைவாக) அழகாக இடவும்எனவும் கூறினார்கள். (முஸ்லிம்: 469)  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி) அவர்கள்.
Ø  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், 'இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?' எனக் கேட்டார்கள். தோழர்கள் 'நேற்றிரவு தான்' என்றதும். 'எனக்கும் சொல்லியனுப் பியிருக்கக் கூடாதா?' எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், 'அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத்தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள். .   (புஹாரி : 1321)
ü  அடக்கம் செய்வதற்காக தோண்டப்படும் குழி மிருகங்கள் தோண்ட முடியாத அளவு ஆழமானதாகவும், விசாலமானதாகவும் இருக்கவேண்டும்..
Ø  ஹஷாம் பின் ஆமிர் (றழி) கூறினாகள்: உஹது யுத்த முடிவின்போது முஸ்லி ம்களில் பலர் பாதிக்கப்பட்டார்கள், மக்களுக்கு காயங்களும் ஏற்பட்டன, அல்லாஹ்வின் தூதரிடம் நாம் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொருவருக்கும் குழி தோண்டுவது கடினமாக உள்ளது, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?.’ என்று கேட்டோம், அதற்கு நபியவர்கள்: குழியை தோண்டுங்கள், அதை ஆழமாக்கி, விசாலிப்படுத்துங்கள், இரண்டு, மூன்று பேராக அடக்கம் செய்யுங்கள், குர்ஆனை அதிகம் சுமந்தவர்களை முற்படுத்துங்கள்.என்று கூறினார்கள்.  (அபூதாவுத், திர்மிதி, நசாஇ, அஹ்மத்)
ü  குழி தோண்டும்போது குழியின் வலப்பக்கமாக சிரிய குழியைத் தோண்டுவதும் நபிவழியே, தோண்ட முடியுமாக இருந்தால் அப்படித்தான் செய்யவும்வேண்டும்.
Ø  /த் பின் அபீ வக்காஸ் என்ற நபித் தோழர் மரணிக்கும்போது, ‘எனக்காக நீங்கள்  நபிகளாருக்கு செய்யப்பட்டது போன்று, குழிக்குள் சிறிய குழியை தோண்டி, (அடக்கிய பின் என்கப்ரின் மீது) கல்லை நட்டுங்கள்.என்று கூறினார்கள்.  (முஸ்லிம், அஹ்மத்)
ü  அடக்கம் செய்யும்போது இரண்டு, மூன்று பேரை சேர்த்தியும் அடக்கலாம்.
Ø  ஹஷாம் பின் ஆமிர் (றழி) கூறினாகள்: உஹது யுத்த முடிவின்போது முஸ்லி ம்களில் பலர் பாதிக்கப்பட்டார்கள், மக்களுக்கு காயங்களும் ஏற்பட்டன, அல்லாஹ்வின் தூதரிடம் நாம் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொருவருக்கும் குழி தோண்டுவது கடினமாக உள்ளது, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?.’ என்று கேட்டோம், அதற்கு நபியவர்கள்: குழியை தோண்டுங்கள், அதை ஆழமாக்கி, விசாலப்படுத்துங்கள், இரண்டு, மூன்று பேராக அடக்கம் செய்யுங்கள், குர்ஆனை அதிகம் சுமந்தவர்களை முற்படுத்துங்கள்.என்று கூறினார்கள்.  (அபூதாவுத், திர்மிதி, நசாஇ, அஹ்மத்)
ü  ஜனாசாவை குளிக்குள் இரக்கிவைப்பதற்காக யாரும் இறங்களாம், ஆனால் நபிகளார் அதற்கு நிபந்தனையாக அன்றைய இரவு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதவரை தேர்வுசெய்தார்கள் என்பதை பார்க்கமுடிகின்றது, எனவே இதையும் நாம் ஒழுக்கமாக எடுக்கவேண்டும்.
Ø  அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரின் மகள் உம்மு குல்சூம் (றழி) அவர்களின் ஜனாசாவில் கலந்துகொண்டோம், நபியவர்கள் கப்ரின் மீது அமர்ந்திருந்தார்கள், , அவர்களது கண்களிள் கண்ணீர் வடிவதை நான் பார்த்தேன், அப்பொது நபியவர்கள்: நேற்றிரவு குடும்ப வாழ்வில் ஈடுபடாத யாரும் உங்களில் இருக்கின்றார?’ என்று கேட்க, அபூ தல்ஹா (றழி) அவர்கள் நான் இருக்கின்றேன், என்று கூற, நபியவர்கள் அவர்களை கப்ருக்குள் இறங்குமாறு ஏவ, அவர்கள் கப்ருக்குள் இறங்கினார்கள்.  (புஹாரி, அஹ்மத்)
ü  கப்ருக்குள் ஜனாசாவை இறக்கும்போது கப்ரின் கால் பகுதியால் இறக்குவதும் கவனிக்கவேண்டியதே.
Ø  ஹாரிஸ் என்ற நபித் தோழர் மரணிக்கும்போது, அப்துல்லாஹ் பின் யஸீதை தொழுவிக்குமாறு வஸீய்யத் செய்தார், அவர் தொழுகை நடாத்திவிட்டு, அவரை கப்ரின் கால்மாட்டினால் கப்ருக்குள் வைத்துவிட்டு, இது நபிவழியில் உள்ளது எனக் கூறினார்.  (அபூதாவுத்)
ü  ஜனாசாவை கப்ருக்குள் வைப்பவர் நபிவழியில் வந்த துஆவை சொன்னவராக வைக்கவேண்டும், மாறாக நபிவழியில் இல்லாதவைகளை கூறியவன்னமோ, பாங்கு இகாமத் சொன்னவாரோ பித்அத்களை செய்து வைக்கக்கூடது.
Ø  நபியவர்கள் ஜனாசாவை கப்ருக்குள் வைத்தால்,                بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ
என்று கூறுவார்கள். ன இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்.  (அபூதாவுத்)
Ø  இன்னும் சில அறிவிப்புக்களில்  باسم الله وعلى ملة رسول الله என்று வந்துள்ளது.  (திர்மிதி, இப்னுமாஜா)
ü  ஜனாசாவை கப்ருக்குள் வைத்த பின்பு மூன்றுபிடி மண்போடுவதும் நபி வழியாகும்.
Ø  அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஒரு ஜனாசாவுக்காக தொழுதுவிட்டு, அந்த மையித்திடம் வந்து, தலைப் பக்கத்தால் மூன்றுபிடி மன்னை அள்ளிப்போட்டார்கள். (இப்னுமாஜா)
ü  அடக்கம்செய்த பின் மன்னை ஒருசான் அளவுக்கு மட்டப்படுத்துவதும், கப்ருக்கு மேல் ஒரு கல்லை அடையாலமாக வைப்பதும் நபிவழியாகும், மறாக மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி வெள்ளைக் கொடிகளை நட்டுவதோ, மரங்களை நட்டுவதோ பிழையான, பித்அத்தான விடயங்களாகும்..
Ø  ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களுக்காக குழிக்குள் சிறு குழி தோண்டப்பட்டது, அவர்களது கப்ர் பூமியைவிட ஒரு சான் அளவு உயர்த்தப்பட்டது.  (இப்னு ஹிப்பான், பைஹகீ)
Ø  முத்தலிப் என்ற ஒரு நபித்தோழர் கூறினார்கள்: உஸ்மான் பின் மழ்ஊன் (றழி) அவர்கள் மரணித்தபோது, அவர்களது ஜனாசாவை அடக்கிய நபியவர்கள், ஒரு நபித்தோழருக்கு ஒரு கல்லை எடுத்துவருமாரு ஏவினார்கள். அவரால் கல்லை தூக்கமுடியாதபோது நபியவர்கள் சென்று அக்கல்லை தூக்கி வந்து, கப்ரின் தலைமாட்டில் வைத்துவிட்டு, ‘இதன்மூலம் என் சகோதரரின் கப்ரை நான் தெறிந்துகொண்டு, எனது குடும்பத்தில் மரணிப்பவர்களை அதன் பக்கத்தில் அடக்கம் செய்வேன்.என்று கூறினார்கள்.  (அபூதாவுத். பைஹகீ)
ü  கப்ருக்கு மேல் மன்னை போடும்போது منها خلقنا كم، وفيها نعيدكم، ومنها تخريجكم تارة أخرى இந்த வசனத்தை ஓதுவதோ, மரத்துக்கு தண்ணீர் ஊற்றும் போது ஓதுவதோ நபிவழிக்கு அப்பால்பட்ட ஒரு பித்அத்தாகும். ஆப்படி ஒரு ஹதீஸ் அஹ்மதில் வந்திருந்தாலும் அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
ü  மரம் நட்டுவதைப் பொருத்தவரை நபியவர்கள் வஹியின் மூலம், தண்டிக்க ப்படுவதை அறிந்தே அதை செய்தார்கள். எனவே அடக்கம் செய்யப்பட்டவர் என்ன நிலையில் உள்ளார் என்பது தெரியாத நாங்கள் அப்படி செய்வது நாங்களும் நபித்துவத்தை வாதிடுவதற்கு சமனாகும். ஏனெனில் அதுவல்லாமல் நபிகளார் பகீஇல் எத்தனையோ ஜனாசாக்களை அடக்கினார்கள், ஆனால் நபிகளார் அப்படி செய்யாதபோது நாங்கள் செய்தால் அது நபிகளாரை மிஞ்சுகின்ற செயலாகும். அல்லாஹ் அப்படிப்பட்ட செயலிலிருந்து எம்மைக் காக்கவேண்டும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அல்லது மக்காவில் ஒரு தோட்டத்துக்கு அருகாமையால் நடந்து சென்றார்கள், அப்போது கப்ரில் தண்டிக்கப்படும் இருவரின் சத்தத்தைக் கேட்டார்கள், அப்போது நபியவர்கள், அந்த இரண்டுபேரும் தண்டிக்கப்படுகின்றனர், பெரும் பாவங்களுக்காக அல்ல, மாறாக அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்கமல் இருந்தார், மற்றவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார்என்று கூறிவிட்டு, ஒரு ஈத்தம் பாலையை கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாக கிழித்து, ஒவ்வொரு கப்ருக்கு மேலாலுல் வைத்தார்கள், காரணம் கேட்கப்பட்டபோது, (அந்த இரு துண்டுகளும்) காயாமலிருக்கும்வரை அவ்விருவருக்கும் (தண்டனை) இழகுபடுத்தப்படலாம்.என்று கூறினார்கள்.  என இப்னு அப்பாஸ் (றழி) கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
ü  அடக்கம் செய்த பின் தல்கீன் (கப்ராலிக்கு சில கேள்விகளும், பதில்களும்) சொல்லிக்கொடுக்கப்படுகின்றன், அதற்கு நபிவழியில் ஸஹீஹான சான்றுகள் எதுவும் இல்லை எனவே அதுவும் பித்அத்தாகும். அனால் நபிகளார் கப்ருக்குப் பக்கத்தில் நின்று, ‘உங்கள் சகோதரருக்காக மன்னிப்பு தேடுங்கள்,மேலும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உறுதிப்பாட்டையும் கேளுங்கள், ஏனெனில் அவர் தற்போது விசாரிக்கப்படுகின்றார்.என்று கூறுவார்களாம்.  (அபூதாவுத், பைஹகீ) இதிலிருந்து இன்று நடப்பது போன்று நபிகளார் துஆ கேட்க ஸஹாபாக்கள் ஆமீன் சொல்லவுமில்லை என்பதும் தெழிவாகின்றது. எனவே இன்று கப்ரடியில் நடக்கும் கூட்டு துஆவும் பிதத்தாகும்.
ü  மேலும் நபிகளார் அடக்கம் செய்த பின்பு கப்ரடியில் ஒரு உரையும் நிகழ்த்தியுள்ளார்கள் எனவே அந்த சுன்னாவையும் நடைமுறைப் படுத்தவேண்டும்.
Ø  அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் பகீஇல் ஒரு ஜனாசாவில் கலந்து கொண்டோம், அப்போது எங்களிடம் நபியவர்கள் வந்து, அமர்ந்தார்கள், நாங்களும் அவருக்கு சூழாக அமர்ந்தோம்,நபிகளாரது கையில் ஒரு குச்சி இருந்தது, அதனால் பூமியில் குத்தியவர்களாக: 'உங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் சுவர் கத்தில் அல்லது நரகத்தில் அவர்களது இடம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, அல்லது சீதேவியா, மூதேவியா என்று எழுதப்பட்டுள்ளது.' என்று கூறினார்கள், அப்போது ஒரு தோழர், 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அந்த முடிவை நம்பி வணக்கங்களை விட்டுவிடவா?,' என்று கேற்க, நபியவர்கள்: யார் சீதேவி என எழுதப்பட்டுள்ளாரோ, அவருக்கு அதற்குறிய வணக்கம் இழகுபடுத்தப்படும், மேலும் யார் மூதேவி என எழுதப்பட்டுள்ளாரோ அவருக்கு அதற்குறிய வணக்கம் இழகுபடுத்தப்படும்.' என்று கூறிவிட்டு,فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (5) وَصَدَّقَ بِالْحُسْنَى (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى (7 (யார் அல்லாஹ்வுக்காக கொடுத்து, அவனை பயந்து, தானதர்மமும் செய்கின்றாரோ அவருக்கு நாம் சுவன வழியை இழகுபடுத்துவோம். 92:5,6,7)என்ற வசனங்களை ஓதிகாட்டினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
Ø  கப்ரடியில் உரை நிகழ்த்திய செய்தி அஹ்மதில் விரிவாக வந்துள்ளது.
ü  அடக்கம் செய்த, கப்ருக்குள் வைத்த  ஒரு ஜனாசாவை தேவைக்காக வெளியில் எடுக்கவும் முடியும். 
Ø  ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லஹ் பின் உபை (முனாfபிக்) யை கப்ருக்குள் வைத்தபின் நபிகளார் அவ்விடம் வந்து, அவனை வெளியில் எடுக்குமாறு ஏவினார்கள், வெளியேற்றப்பட்டபின் அவரின் மீது நபிகளார் தன் உமில்நீரை தடவிவிட்டு, தன் ஆடையை அவருக்கு அணிவித்து, தொழுகையும் நடத்தினார்கள்.  (புஹாரி,  முஸ்லிம்)
ü  ஜனாசாவை அடக்கம்செய்தபின் குடும்ப உறவுகள் வரிசையாக நிற்க, வந்தவர்கள் முஸாபஹாச் செய்கின்ற ஒரு வழிமுறையும் இன்று இருந்து வருகின்றது, அதுவும் நபிகளாரது வழிமுறைகளில் காணமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது, எனவே இதுபோன்ற விடயங்களும் தவிர்க்கப்படவேண்டும். ஆனலும் கவலையில் இருக்கும் அந்த மையித்தின் உறவினருக்கு ஆருதல் கூருவது நபிவழியாகும்.
Ø  நபிகளார் தம் மகளின் பிள்ளை மரணித்தபோது,
 '" إن لله ما أخذ، و (لله) ما أعطي، وكل شئ عنده إلى أجل مسمى فالتصبر، ولتحتسب ".
எடுத்ததும், கொடுத்ததும் அல்லாஹ்வுக்குறியதே, ஒவ்வொன்றும் அவனிடம் தவனை குறிப்பிடப்பட்டதாகவே இருக்கின்றது, எனவே பொறுமையாக இருந்து, நன்மையை எதிர்பார்க்கட்டும்.' என்று சொல்லி அனுப்பினார்கள்  (புஹாரி, முஸ்லிம்)
ü  மரண வீட்டில் சாப்பாட்டுக்காக குறிப்பிட்ட சில நாட்களில் ஒன்று கூடுவதும், கத்தம் என்ற பெயரில் குர்ஆன் தமாம் செய்வதும் நபிவழியில் இல்லாத வைகளாகும். சிலர் நல்லதைத்தானே செய்கின்றோம் என்பார்கள், முதல் விடயம் நபிகளார் காட்டாதது எப்படி நல்லதாகும் என்பதே, இரண்டாவது நபிகளார் காலத்தில் முலுக் குர்ஆனையும் காணாமலே பலர் மரணித்துள்ளனர். குர்ஆன் தமாம் செய்வதாக இருந்தால் அவர்களுக்கே நபிகளார் செய்திருக்கவேண்டும் ஆனால் நபிகளார் செய்யவில்லை, எனவே நபிகளார் செய்யாத பித்அத்தை நாமும் செய்யக்கூடாது.

M.S.M MURSHID ABBASI                MASJID ABEEBAKR, HAPUGASTHALAWA
14-09-2011   _   23-11-2011










0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )