''இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2911)
உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)
''நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்''. என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3241, 5198)
மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ''ஆஹா அப்படியா?'' என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!
ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் - பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.
முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.
''எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்'' (நூல்: புகாரி 29, 1052, 5197)
நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:
''அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.''
''உதவிகளை நிராகரிக்கிறார்கள்.''
''நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்''
மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து - மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ''உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?
மாலையில் கடை வீதிக்கு, அல்லது சினிமாவுக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும்.
இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ''உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை'' என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)
இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ''கணவனை நிராகரிக்கும்'' ''கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்'' பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ''நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்'' பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ''நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்'' கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் - (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) - துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்.
0 comments:
Post a Comment