Jun 13, 2014

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. 

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. 

அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான்.    




அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. அல்குர்ஆன் 42:2

 எனவே எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் அதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். இதுவே நபிவழியைக் கடைப்பிடிக்கும் அழகான வழிமுறையாகும். 

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும், மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை) கேட்டும், மூன்று யாஸீன் சூரா ஓதியும் விசேஷமான தொழுகைகளை நடத்தியும் இன்னும் இது போன்ற பல்வேறு செயல்களைச் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேஷமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். 

"பராஅத் இரவு' "ஷபே பராஅத்' என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது.

 ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. பராஅத் எனும் அரபிச் சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. 

நன்றி: சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, சென்னை மாவட்டம்.

 "லைலத்துல் கத்ரு' "லைலத்துல் ஜும்ஆ' போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் "லைலத்துல் பராஅத்' என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ, இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை. 

பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா? 

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

 (இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) 

மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட  100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

 (இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)

  பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

 (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

 மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக! 

ஏன் இந்தச் சிறப்பு? 

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? ஷஅபான் பிறை 15 அன்று தான் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிவமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். 

அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி. மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனைத் தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

 பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

 அதில் குறிப்பாக நீடுரைச் சார்ந்த மவ்லவி. எ. முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி என்பவர் ''அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா'' என்ற (மே-ஜூன் 2013) மாத இதழில் ''ஷஅபான் மாதத்தின் சாந்த நாள்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஷஅபான் மாதம் 15-ம் நாள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்கு இப்னுமாஜாவில் வரக்கூடிய ஒரு ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்.

 ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, "பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378 

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள். 

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 மேலும், அவர் அடுத்ததாக ஒரு வாதத்தை வைக்கிறார். அது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில மாதங்களாக பைத்துல் முகத்திஸை நோக்கித் தொழுது வந்தார்கள். பிறகு அவர்கள் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார். ஆனால் இதற்கான ஆதாரத்தை அவர் காட்டவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதோ அவர் வைக்கும் ஆதாரம்:

 புனித ஷஃபான்  15ஆம் நாள் ஜெருசலத்திலுள்ள பைத்துல் மக்தஸிலிருந்து புனிதக் கஅபாவை நோக்கி கிப்லா மாற்றித் தொழும்படி உத்தரவு இறங்கியதாக அறிஞர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. அதா பின் பஸார் (ரஹ்) அவர்கள் இதை நினைவில் வைத்துத் தான் இவ்வாறு கூறுகிறார்கள். லைலத்துல் கத்ரு இரவுக்குப் பின் சிறந்த இரவு பராஅத் இரவு ஆகும்.

 "கிப்லா மாற்று சம்பவம் ஷஃபான் 15 பராஅத் பெருநாளில் நிகழ்ந்ததாக பல வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு'' என்று இவரே கணித்துக் கூறியிருக்கிறார். 

இவர் இதனை தன்னுடைய சொந்தக் கூற்றாகச் சொல்லியிருந்தால் கூட இதனை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் அப்படியில்லாமல் கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஷஅபான் 15-ல் தான் நடந்தது. எனவே அந்த நாளுக்கு சிறப்பு இருக்கிறது. என்று இமாம்கள் கூறியதாக வேறு இவர் இதனை இட்டுக்கட்டிச் சொல்கிறார். இமாம்கள் எந்த நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும் தெளிவுபடுத்தவில்லை. 

அப்படியே அந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அந்த நாள் சிறப்புக்குரிய நாள் என்றும். அந்த நாளை மையமாக வைத்து நோன்பு நோற்க வேண்டும், 100 தடவை யாஸீன் ஓத வேண்டும், இரவு முழுவதும் நின்று தொழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டித் தந்துள்ளார்களா? அதற்கான ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸாவது இருக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

 மேலும், இவர் இதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாக வைக்கிறார். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகளார் என்னோடு தங்கும் நாளில் நடுநிசியில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். இடையில் விழிப்பு ஏற்பட்டது. என் அருமைக் கணவரை படுக்கையில் தேடினேன். அவர்கள் இல்லை. எழுந்துப் பார்த்தால் அவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக நின்று ருகூஉ செய்த அவர்கள் நெடுநேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இரண்டாம் ரக்அத்தையும் அவ்வாறே நிறைவேற்றினார்கள். பின்பு ஸஜ்தாவிலேயே பஜ்ரு வரை அசையாமல் கிடந்தார்கள். எங்கே அவர்கள் புனித ஆத்மா கைப்பற்றப்பட்டு விட்டதோ? என்ற கவலையுடன் அவர்களது பாதங்களை நான் தொட்டேன். அவர்களின் பொற்பாதங்கள் அசைந்தன. அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். அப்பொழுது அவர்கள் ஸஜ்தாவில் இந்த துஆவை ஓதினார்கள். 

ஸஜத லக அஸ்வதீ வஆமன பிக ஃபுவாதீ வ ஹாதிஹி யதீ யல்லதீ ஜனய்த்து பிஹா அலா நஃப்ஸீ ஃபக்ஃபிர்லீ அத்தன்பல் அலீம். ஃப இன்னஹூ லா யக்பிருத் தனூப இல்லர் ரப்புல் அளீம். அவூது பிரிளாக மின் சுக்திக, வபி முஆபாதிக மின் உகூபதிக. வபிக மின்க லா உஹ்ஸீ தனாஅன் அலைக. அன்த கமா அத்னய்த அலா நஃப்ஸிக 

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பொழுது, "ஆயிஷாவே! இது என்ன இரவு என உனக்கு தெரியுமா?'' எனக் கேட்டுவிட்டுக் கூறினார்கள். இது ஷஃபான் பதினைந்தாம் இரவு. இவ்விரவில் அல்லாஹ் ஒரு சில பாவிகளை தவிர மற்ற முஃமின்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான். அந்த பாவிகள் மதுக்குடியை நிரந்தரமாக்கிக் கொண்டிருப்பவர்கள். விபச்சாரம், வட்டியில் மூழ்கியிருப்பவர்கள். தம் பெற்றோரை வேதனைப்படுத்துபவர்கள். உருவப்படம் வரைபவர்கள். பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள். 

ஷஅபானின் பதினைந்தாம் இரவு மிகவும் புண்ணியம் வாய்ந்த இரவு என்பதற்கு இந்நிகழ்ச்சி போதுமான சான்றாகும் என்று அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தச் செய்தி ஷுஅபுல் ஈமான் மற்றும் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு நிகரானதாகும்.

 இந்தச் செய்தியில் இடம்பெறும் சுலைமான் இப்னு அபீ கரீமா என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். 

சுலைமான் பின் அபீ கரீமா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள் (நூல்: இப்னு அபீ ஹாதிம்)

 சுலைமான் பின் அபீ கரீமா என்பாரின் பெரும்பாலான ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை ஆகும். இத்தகைய நிராகரிக்கத்தக்க செய்திகளை இவரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பார் அறிவிக்கின்றார் என இமாம் இப்னு அதீ அவர்கள் தம்முடைய காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

மேற்கண்ட செய்தியை சுலைமான் பின் அபீ கரீமா என்பாரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பாரே அறிவிக்கின்றார். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட வகைக்கு மிக நெருக்கமான மிகப் பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

மேலும் இதே செய்தியை அன்நள்ர் பின் கசீர் என்பார் வழியாக ஃபளாயிலுல் அவ்காத் என்ற நூலில் பைஹகீ அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் சில நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அந்நள்ர் பின் கஸீர் என்ற அறிவிப்பாளரும் மிகப் பலவீனமானவராவார். இமாம் புகாரி அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கத் தகுந்தவை என்றும் தம்முடைய தாரீகுல் கபீர் மற்றும் தாரீகுஸ் ஸகீர் என்ற நூற்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 இமாம் முன்திரி அவர்கள் தம்முடைய தஹ்தீபு சுனன் என்ற நூலில்  அந்நள்ர் பின் கஸீர் என்பார் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். இமாம் அபூஹாதிம் அவர்களும் அந்நள்ர் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

 மேலும் இவர் உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக செய்திகளை இட்டுக்கட்டி அறிவிக்கக் கூடியவர். இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்வது கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

 எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாமல் உறுதியாகிறது. மேலும் இதே செய்தி உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக முஸ்லிம் போன்ற பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஷஅபான் மாதத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. பொதுவான ஒரு இரவில் நடந்த சம்பவமாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நரகமே கூலி 

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697 

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243

 எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

 அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

 "செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும்
. ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன், "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கு) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். புகாரி  6575, 6585 

இதன்படி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கையை மீறி அமல் செய்தால் நாளை மறுமையில் அது சாந்த நாளாகாது; சாப நாளாக ஆகிவிடும். மார்க்கத்தில் இல்லாத பராஅத் இரவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு அடங்கிய ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் செய்ய வேண்டிய அமல்களைச் செய்வதில்லை. 27ஆம் இரவில் மட்டும் சில பித்அத்தான காரியங்களைச் செய்து விட்டு முடித்துக் கொள்கின்றனர். மறுமையை நம்பியவர்களே! உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட  தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/egathuvam/2013-/
Copyright © www.onlinepj.com

1 comments:

  1. Mohamed Tajudeen.S.M.June 21, 2013 at 6:38 PM

    Educating ourselves on correct Islam is of prime importance.

    ReplyDelete

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )