Aug 7, 2013

இஃதிகாஃபின் சட்டங்கள்



இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
  ரமலானில் இஃதிகாப் எதற்காக?  
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
  இஃதிகாபின் ஆரம்பம்  
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)
ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.
  இஃதிகாபின் முடிவு நேரம்  
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.
பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
  பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?  
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?" என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ (2034)

"நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற கேள்வியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.
மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
ஸ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டதுஸ (புகாரீ 2041)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரியது.
இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.
  இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்  
பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.
பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)
தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.
  பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?  
பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ 309)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.
நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது
source: TNTJ

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )