முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.
மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.
“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்
இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.
கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை உண்ணுங்கள்!” என்று நமக்குத் கட்டளையிடவில்லை. ஆனால் தாடியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது பற்றிய ஹதீஸ்களை முதலில் நாம் பார்ப்போம்.
“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)