பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களைப் பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش
கால்நடைகள் புற்பூண்டுகளைத் திண்பதைப் போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்.
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب
.
நெருப்பு விறகை எரித்துவிடுவதைப் போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும்.
கஸ்ஸாலி, இந்தச் செய்தியை நபிகள் நாயகம் கூறியதுபோல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார்.
(பாகம் 1 பக்கம் 152)
இதன் மூலமாக மக்களுக்கு மத்தியில் இது ஒரு நபிமொழியாகப் பரவியுள்ளது என்பதை உணர முடிகிறது.
ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். பல அறிஞர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
تخريج أحاديث الإحياء - (1 / 107(
حديث " الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهيمة الحشيش "
لم أقف له على أصل
ஹாபிழ் இராக்கி எனும் அறிஞர் இஹ்யாவை ஆய்வு செய்து இந்தச் செய்தியைக் குறிப்பிடும் போது இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையையும் நான் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார். (தக்ரீஜூ அஹாதீஸூல் இஹ்யா பாகம்1 பக்கம் 107)
தாஜூத்தீன் அஸ்ஸூப்கி எனும் அறிஞர் இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத ஆதாரமற்ற செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்காதுஷ் ஷாபிஇய்யா பாகம் 6 பக்கம் 294
அல்பானீ அவர்களும் ஸில்ஸிலதுல் அஹாதீஸூல் லயீஃபா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 136) இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படைச் சான்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முல்லா அலீ காரி அவர்கள் நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் தமது அல் மஸ்னூஆ எனும் நூலில் பக்கம் 92ல் இந்தச் செய்திக்கும் நபிகள்
நாயகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு பல அறிஞர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை மக்களுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
எனவே இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்பதை அறியலாம்.
மேலும் இதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் அவர்கள் பள்ளிவாசல்களில் இதர பேச்சுக்களைப் பேச அனுமதித்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.