Jan 24, 2014

இறை நம்பிக்கையில் இருக்கின்றது தீர்வு

செயல்கள் பிறப்பெடுக்க எண்ணங்களும்,
எண்ணங்கள் தோன்ற சிந்தனையும்,
சிந்தனைக்கு அடித்தளமாய் மனதில் வேறூன்றியுள்ள நம்பிக்கையும் காரணமாய் அமைகின்றன.

இஸ்லாமியக் கோட்பாட்டின் எல்லாப் புள்ளிகளையும் 'நம்பிக்கையே' தீர்மானிக்கின்றது.
இறைவனைப் பற்றிய ஓரிறைக் கோட்பாடு, மரணத்திற்குப் பின்னால் வரவுள்ள மறுவுலக வாழ்க்கை குறித்த நம்பிக்கை — இவ்விரண்டு கருத்துருக்கள்தாம் ஓர் இறைநம்பிக்கையாளனின் (முஸ்லிமின்) அனைத்து செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாய் அமைகின்றன. இவ்விரண்டின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையின் 'அளவு' தான் அவரிடமுள்ள இஸ்லாமின் அளவைத் தீர்மா னிக்கின்றது. இஸ்லாமியக் கோட்பாடு ஒருவருக்குப் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், 'இஸ்லாமியக் கோட்பாடு' என்பது இதுதான் என்பதை அவர் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனை மாற்றியமைக்க யாராலும் — முஸ்லிம் மார்க்க அறிஞர்களாலும் கூட — முடியாது.
கருத்துக்களை, நம்பிக்கையை முன்னிலைப்படுத்த நல்லதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகின்றது. கருக்கொலை, சிசுக்கொலை என்று 'நாகரீக உலகம்' என்று மனிதர் எண்ணிக் கொண்டுள்ள இந்நிகழ்கால உலகில் சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி செய் யப்பட்டு வரும் செயல்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் தொடரத்தான் செய்தன.
இதோ, அக்காட்சிகளை வான்மறை குர்ஆன் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது பாருங்கள்:

'இவர்களில் ஒருவருக்கு பெண்குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி' சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது. துக்கத்தால் அவரது தொண்டை அடைத்துக் கொள்கின்றது. இந்தக் 'கேவலமான செய்தி' கிடைத்து விட்டதே என்பதற்காக இனி யார் முகத் திலும் விழிக்கக் கூடாது என்று மக்களை விட்டு ஒதுங்கிச் செல்கிறார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்துவிடுவதா என்று சிந்திக்கிறார்!'  (அல்குர்ஆன் 16-58,59)

நமது நாட்டில் இன்று நம் கண்களுக்கு முன்னால் நடைபெற்று வருகின்ற காட்சிகளை இவ்வ சனங்கள் படம்பிடித்துக் காட்டுவதைப் போன்று இருக்கின்றதா? காலங்கள் பல கடந்தாலும் மனித இயல்பு என்னமோ மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது.

மேற்கண்ட இந்நிலையை புரட்டி சமூகத்தை மறுகட்டமைப்பு செய்தது இஸ்லாம்.

இஸ்லாமிய சமூக அமைப்பில் ஒரு காட்சியைக் கீழே காணலாம்:

'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களைத் தேடி ஒரு மனிதர் வந்தார். 'இறைவனின் தூதரே! ஒரு காலத்தில் (இறைவனைப் பற்றி முறையாக) அறியாதவர்களாக நாங்கள் இருந்தோம். கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். விளைவாக, எங்கள் குழந்தைகளை கொன்று வந்தோம். எனக்கு ஒரு மகள் இருந்தாள். நான் அவளை கூப்பிட்டால் மகிழ்ச்சி பெருக் கெடுக்க துள்ளிக் குதித்து ஓடோடி வருவாள். ஒரு நாள் என்னோடு வருமாறு அவளை அழைத்தேன். அவளும் என்னைப் பின் தொடர்ந்து வரத்தொடங்கினாள். எங்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள கிண ற்றுக்கு அவளை அழைத்துச் சென்றேன். அவளுடைய கையைப் பிடித்துத் தூக்கி அவளை கிணற் றில் போட்டு விட்டேன். கடைசி நிமிடம் வரை அவள் 'அப்பா!' 'அப்பா!' என்று கதறிக் கொண்டே இருந்தாள்.'

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் இதைக் கேட்டு அழத்தொடங்கினார்கள். அண்ணலாரின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்வடியத் தொடங்கியது. 'இறைத்தூதரை வருத்தமடையச் செய்து விட்டீர்களே!' என்று அருகிலிருந்த இறைத்தூதரின் தோழர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள்.

'அமைதியாக இருங்கள்!  அவர் அதை விடவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கேட்க வந்துள்ளார்' என்று கூறிய இறைத்தூதர் அவர்கள் 'இப்போது கூறிய சம்பவத்தை மறுபடியும் கூறுங்கள்' என்றார்கள்.

வந்தவர் மீண்டும் நடந்ததைக் கூறினார். விழிகளில் உள்ள கண்ணீர் வற்றி விடும் அளவுக்கு அண்ணலார் அழுதார்கள். பிறகு கூறினார்கள்:

'அறியாமைக் காலத்தில் நீங்கள் செய்த செயல்களை அல்லாஹ் கணக்கில் கொள்ள மாட் டான். (இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பின் நீங்கள் புரியும்) இப்போதைய செயல்களைக் கொண்டே பதிவேட்டைத் துவக்குவான்!'  (பதிவு: தாரமி)

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இந்த மனமாற்றம் எவ்வாறு சாத்தியப்பட்டது? இறைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் பெண் விடுதலையைக் குறிக்கோளா கக் கொண்டு செயற்பட்டார்களா? பெண்ணுரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்தார்களா? கருக்கொ லையை, சிசுக்கொலையைக் கண்டித்து பிரச்சார இயக்கம் நடத்தினார்களா?

இல்லை, இல்லவே இல்லை! இக்கேள்விக்கான விடை இந்நபிமொழியிலேயே அடங்கி யுள்ளது. இறைவனைப் பற்றி புரிந்து கொள்ளதாத காலகட்டத்தில், யார் இறைவன் என்றே அறியாத அஞ்ஞான காலத்தில், எதைஎதையோ இறையென்று நினைத்து வணங்கி வந்த நாட்களில், இறையென்று நினைத்து வணங்கி வந்த நாட்களில், நன்றையும் தீதையும் விளங்காது பெண் குழந்தைகளைக் கொன்று வந்தோம். இன்று ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நாளை வரப்போகும் மறுமை வாழ்வுக்காக தயாராகிக் கொண்டு உள்ளோம். நாளை என் நிலை என்னவாகும்? மன்னிக் கப்படுவேனா? தண்டிக்கப்படுவேனா? இறைக்கோட்பாடு முறையாக இல்லாது போனதால் மனிதப் பண்புக்கே தகாத ஒரு பெருங்காரியத்தைச் செய்து விட்டேனே  நான் செய்து விட்ட இப்பெருங் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா இல்லையா? என்பதுதான் மனம் திருந்திய அந்த ஓரிறைக்கொள் கையாளரின் கேள்வி!

அவர் கேட்ட கேள்விக்கு என்ன விடை என்பது ஒரு புறம் இருக்கட்டும்  நமது கேள்விக்கான விடை அவரது கேள்வியிலேயே கிடைத்து விட்டதா, இல்லையா?

நம்பிக்கையினால் தோன்றும் இன்னொரு விளைவையும் காண்போம்.
உலகில் தற்கொலை விகிதம் முஸ்லிம் சமூகத்தில் மிகமிகக் குறைவு. ஏன், என்ன காரணம்?

முஸ்லிம்களுக்கு வாழ்வில் விரக்தி ஏற்படுவதில்லையா? வியாபாரம் நஷ்டம் அடைவதில் லையா? 'தீராத வயிற்று வலித் தொல்லை முஸ்லிம் பெண்களுக்கு இல்லையா? காதலில் முஸ்லிம்கள் 'தோல்வி' அடைவதில்லையா? 'மனமுடைவு' முஸ்லிம்களுக்கு இல்லையா? அல்லது தற்கொலை செய்து கொள்வது மாபெரும் முட்டாள்தனம் என்று முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளார்களா? வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்ளும் வைராக்கியம் நிரம்பப் பெற்றுள்ளார்களா?

இவற்றில் எதுவுமே கிடையாது. மாறாக, ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளன் கீழ்கண்ட நபிமொழியை நினைத்து பயப்படுகிறார் -

'யார் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறானோ அவர் என்றென்றும் நிரந்தரமாக நரகில் கிடப்பார்.'

கத்திக்கு பயந்து யாராவது வாளுக்குத் தலையைக் கொடுப்பார்களா? தற்கொலை எண்ணம் தலைதூக்குவதே இல்லை.

சகோதர, சகோதரிகளே! இன்னும் சில உதாரணங்கள் உள்ளன. எனினும் இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.

இவ்வுலகையும் தன்னையும் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்று ஒரு முஸ்லிம் ஆணித் தரமாய் நம்புகிறான். அவ்விறைவனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளான். முழு அறிவு படைத்தவன், முக்காலமும் அறிந்தவன், நுண்ணறிவாளன் என்றெல்லாம் இறைவனின் பண்புகளை ஒப்பி ஏற்றுள்ளான். எல்லாம் தெரிந்த அவ்விறைவனின் வழிகாட்டுதலில் தான் தன்னுடைய வாழ்க்கையில் நலன் உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளான்.

மரணத்திற்குப் பின்பு ஒரு நாள் மரித்தோரை எல்லாம் மீண்டும் எழுப்பி உலகில் செய்தன குறித்து விசாரிப்பான். செயல்களுக்கேற்ற பிரதிபலன்களை வழங்குவான். அப்பிரதிபலன் வெளிப்பா டாகிய சுவன வாழ்வும் நரக வாழ்வும் முற்றுப் பெறாது. நிரந்தரத்தன்மையுடையன. ஆகையினால் அம்மறுமை வாழ்வில் வெற்றி பெறத்தக்க நற்செயல்களையே நாம் இவ்வுலகில் செய்ய வேண்டும் என்றும் ஒரு முஸ்லிம் நன்கு உணர்ந்து ஏற்றுக் கொண்டு செயல்படுகிறான்.

இதன் காரணமாகத்தான், ஒரு செயலைச் செய் என்று இறைமார்க்கம் சொன்னாலோ, செய்யாதே என்று தடுத்தாலோ மறுபேச்சின்றி அடுத்த வினாடியே கட்டுப்படுகிறான்; தலைசாய்கி றான். இந்தக் கீழ்ப்படிதலுக்குத்தான் 'முஸ்லிம்' என்று பெயர். முஸ்லிம் என்றால் அரபி மொழியில் கட்டுப்படுபவன்; கீழ்ப்படிபவன் என்று பொருள்!

ஆக, ஒரு மனிதனின் நம்பிக்கையை — அதிலும் குறிப்பாக இறைவனைப் பற்றிய நம்பிக்கையை மாற்றியமைப்பதில்தான் சமூக நல்வாழ்வும், புனரமைப்பும் அடங்கியுள்ளது என்பதை வரலாற்றில் இஸ்லாம் ஒன்றுக்குப் பலமுறை மெய்ப்படுத்திக் காட்டியுள்ளது. பெண் விடுதலை அதற்கு விதிவிலக்கு அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டு சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி. 'கறுப்பு ஆடை' (இஸ்லாமிய ஹிஜாபை இப்படித்தானே விமர்சிக்கிறார்கள்)  அணிந்துகொண்டு வேர்க்க விறுவிறுக்க ஓர் இளம் பெண் கல்லூரி வாசலில் நுழைகிறார். கடுமையான கோடைகாலம். கேமராவோடு துரத்திச் சென்று வாசலிலேயே மடக்கிப் பிடித்து அவரிடம் கேள்விகளைத் தொடுக் கிறார் விழியூடக நிருபர். 'தீயாய்க் கொளுத்துகின்ற இந்த வெய்யில் நேரத்தில் இப்படியொரு தகிக்கும் ஆடை தேவைதானா?'

...இந்தக் கேள்விக்கு அப்பெண் என்ன பதிலை அளித்திருப்பாள் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? அல்லது நம் மூன்றாண்டுக் கல்வி பட்டம் பெற்ற நம்டைய ஆலிமாக்கள் எத்தகைய பதிலை அளித்திருப்பார்கள்?

ஆயிரம் ரூபாய் கொடுத்து பருத்திச் சொக்காய் அணிந்தாலும் அனலாய் உள்ளே கொதிக் கின்ற இந்த வேகாத வெய்யில் காலத்தில் ஹிஜாபை அணிந்து கொண்டு வெளியே போவது எவ்வ ளவு கொடுமையான விஷயம் என்பது பெண்களுக்குத்தான் தெரியும். 'பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கும் பூரண ஆடை' என்றோ, 'காமெராக் கண்களால் கற்பழிக்கும் காமுகர்களின் பார்வைத் தாக்குதலிருந்து தற்காப்பு' என்றோ அக்கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. அதெல்லாம் அரங்கத்திற்கு உள்ளே யதார்த்த வாழ்வின் உண்மை நிலவரத்தைப் பற்றி அக்கறை காட்டாத மேடைப் பேச்சாளார்களின் பதில்.
அப்பெண் என்ன சொன்னாள் தெரியுமா? நிதானமாக, அதே சமயம் தெளிவாக அவள் கூறினாள். 'நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமும் புழுக்கமும் உடையது.' (காண்க அல்குர்ஆன் 9:81) அல்லாஹ் அவ்விளம் பெண்ணை சுவனத்து இளவரசிகளில் ஒருவராக ஆக்கட்டும்!

சகோதர, சகோதரிகளே! ஆழ்ந்த இறை நம்பிக்கையின் பின் விளைவு என்று இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். இஸ்லாம் என்பதை நீங்கள் ஒரு கொள்கையாகக் கண்டாலும் சரி, ஒரு சமயமாக நினைத்தாலும் சரி, இறை நம்பிக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டு அதனுடைய எந்தவொரு செயலையும் நீங்கள் எடை போட்டுப் பார்க்கவே இயலாது. இறைவனால் அருளப்பட்ட சமயம், இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வியல் கோட்பாடு என்றுதான் இஸ்லாம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறது. ஆகையால், இறை நம்பிக்கையை புறந்தள்ளிவிட்டு வெறுமனே இஸ்லாமியக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முன்னிலைப்படுத்த அவற்றின் பெருமைகளையும் பின் விளைவுகளையும் பெரிதாகப் பேசுவது முறையானதாக அமையாது.

ஒரே இறைவன்தான் இவ்வுலகைப் படைத்துள்ளான், அவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள ஓர் இறைநம்பிக்கையாளன் – முஸ்லிமின் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் கூட 'மோப்பக் குழையும் அனிச்சம், முகம் வாடிவிடக் கூடாதே' என்று அவர் விருந்து உபசரிக்க மாட்டார். வீடு தேடிவந்த விருந்தாளியை விதை  நெல்லை பொறுக்கியெடுத்து வந்தாவது உபசரிக்க வேண்டும் என்கிற பெருமை மிக பாரம்பரியமும் காரணமாக அமையாது. மாறாக இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுடைய ஓர் ஆணைதான் தன் முறையில் வந்தவரை உபசரிக்குமாறு அவரைத் தூண்டும். அண்ணலார் கூறுகி றார்கள்:  'இறைவனின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை  கொண்டுள்ளவன்  தனது விருந்தினரை சிறப்பான முறையில் உபசரிக்கட்டும்!'

பெண்களுக்கு முழுமையான சமூக உரிமையைப் பெற்றுத் தந்ததாக இருக்கட்டும், வட்டி, வரதட்சணை போன்ற சமூகப் புற்றுநோய்களை அறவே ஒழித்துக்கட்டியதாக இருக்கட்டும், சிசுக் கொலையையும் கருக்கொலையையும் இல்லாமற் போகச் செய்ததாக இருக்கட்டும், அநாதைகள், ஆதரவற்றோர், பெற்றோர் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்ததாக இருக்கட்டும்ஸ. இஸ்லாம் இம்மண்ணுலகில் நிகழ்த்திக் காட்டியுள்ள எந்தவொரு புரட்சிகரமான செயல் சீர்திருத்தத் திற்கும் அடித்தளமாகவும் அஸ்திவாரமாகவும் அமைந்திருந்தது இந்த இறைநம்பிக்கைதான். வேறொரு கோணத்தில் இதை அணுகிக் கூறுவதாக இருந்தால் எல்லா வகையான சமூகக் கேடுகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு உண்மையான இறைவனைத் தெரிந்து தெளிவதில் தான் இருக்கின்றது. இறை நம்பிக்கை சரியாக அமைந்தது விடுகின்ற போது சமூக வாழ்வு, அரசியல், பொருளாதாரம், தொழில், வருமானம், கல்வி, தனிநபர் வாழ்வு, என அனைத்துமே கடகடவென அவற்றிற்குரிய தக்க இடங்களில் தகுந்த விகிதங்களில் முறைப்படி பொருந்திக் கொள்கின்றன.
இஸ்லாமிய ஆட்சித்தலைவர் உமர் அவர்கள் மக்களின் நிலையை அறிய இரவுநேரத்தில் உலாவந்து கொண்டிருக்கிறார். வீடொன்றின் வாசலைக் கடக்கும்போது உள்ளிலிருந்து பேச்சுச் சப்தம் கேட்கின்றது. தன்னுடைய மகளிடம் தாய் கூறுகிறாள்:
'மகளே! விரைவாக எழுந்து சென்று பாலில் தண்ணீரைக் கலந்துவிடு.' இதைக் கேட்ட கலீஃபா உமர், மகள் என்ன கூறப்போகிறாள், மேலும் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிவ தற்காக அங்கேயே நின்று விடுகிறார். 'முடியாது; பாலில் தண்ணீர் கலக்கக்கூடாது என்று கலீஃபா ஆணை பிறப்பித்துள்ளது உங்களுக்குத் தெரியாதா?' என்று மகள் மறுக்கிறாள். 'ஃகலீபா என்ன பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டா இருக்கிறார்? போடி, போய் சொன்னதைச் செய்.' என்று கோபத்தோடு கூறுகிறாள் பெற்றவள். ஃகலீபா பார்க்கா விட்டால் என்ன? உன்னையும் என்னையும் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பாலில் தண்ணீரைக் கலப்பது ஒருபோதும் முடியாது.' என்று தெளிவாகவும் திடமாகவும் கூறுகிறாள் மகள்.

அவ்விளம் பெண்ணின் இறையச்சத்தைக் கண்டு வியந்த ஃகலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவளைத் தனது மருமகளாக ஆக்கிக் கொண்டார் என்பது வரலாறு.

இறைவனின் மீதான நம்பிக்கையும் அச்சமும், இறுதித் தீர்ப்பு நாளொன்றின் மீதான நம்பிக் கையும் அச்சமும்தான் ஒரு முஸ்லிமை நல்லவனாகவும், பிறர் நலம் நாடுபவனாகவும் இருக்கச் செய்கின்றன, தீமைகளை விட்டு தொலைதூரத்திற்கு அவனை விலக்கி வைக்கின்றன. சட்டங்கள், சம உரிமை கோரும் பிரச்சாரப் போராட்டங்கள் போன்றை சாதித்ததைக் காட்டிலும் பெருமளவு மாற்றங்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்டதற்குப் பின்னணியில் இக்காரணிகளே அச்சாரமாய் விளங்கின.

கருவிலும், பிறந்த பின்பும் கொல்லப்பட்ட பெண்குழந்தைகளுக்கு இறைவன் உயிர் கொடு த்து எழுப்புவான். உங்களை எதற்காகக் கொன்றார்கள்? நீங்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்ன? என்று அவர்களை விசாரிப்பான். (பார்வையிடுக: அல்குர்ஆன் 81:8,9) என்கிற பயம் ஒவ் வோர் இறைநம்பிக்கையாளனின் உள்ளத்திலும் பசுமையாக இருக்கும். இறைவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பானோ, மரணத்திற்குப் பின்பு வரும் மறுமை வாழ்வில் தன் நிலை என்னவாகுமோ என்கின்ற அச்சமும் எச்சரிக்கை உணர்வும் அவன் உள்ளத்தில் என்றென்றும் உயிர்ப்போடுஇருக்கும்.

dhisaikaati.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )