Feb 17, 2015

இஸ்லாமும் கிறிஸ்தவமும்

''(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்'' (அல்-குர்ஆன் 3:64)

தந்தையின்றி பிறந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு ஓர் அற்புதம்!
மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.

அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்;
இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார்: ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான்: ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான்.

அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ''ஆகுக'' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)


தீர்க்கதரிசி ஆபிரஹாம் யூதரா அல்லது கிறிஸ்தவரா?

வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?'' (அல்-குர்ஆன் 65-71)

இயேசு நாதர் (ஈஸாஅலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை; அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்: -

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்-குர்ஆன் 3:54-55)

மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா - மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). - உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது.

மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை - மஸீஹை - கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:157-158)

இறைவன் மூவரில் ஒருவராக (Trinity) இருக்கிறார் என்று கூறாதீர்கள்! நிச்சயமாக இறைவனின் ''குன்'' என்ற வார்த்தையின் மூலம் பிறந்த இயேசு நாதர் ஒரு தீர்க்கதரிசியே அன்றி வேறில்லை!
''வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;இன்னும் (''குன்'' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;

இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும். ஏனெனில்,வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்'' (அல்-குர்ஆன் 4:171)

ஆதாமை இறைவன் தந்தையின்றி படைத்ததைப் போலவே இயேசு நாதரையும் தந்தையின்றி படைத்தான்!

''அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்'' (அல்-குர்ஆன் 3:59)

மற்ற மனிதர்களைப் போல உணவு உண்பவராகவும், மனிதர்களுக்கு உரிய மற்ற இயல்புகளை உடையவராகவும் இருந்த இயேசு நாதரை எவ்வாறு இறைவன் என்று கூறுகிறீர்கள்? இயேசு நாதர் இறைவனின் தூதரே அன்றி வேறில்லை!

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!

''அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?'' என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

''வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!''(அல்-குர்ஆன் 5:73-77)

கிறிஸ்தவர்களே! இறைவனின் இறுதி தூதரைப் பின்பற்றுங்கள்! அவருக்கு அவர் வழங்கிய இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்! இயேசுதான் இறைவன் என்று கூறாதீர்கள்!

அன்றியும் எவர்கள் தங்களை, ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். ''மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்'' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்¢ இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்'' (அல்-குர்ஆன் 5:14-17)


இயேசு நாதர் போதித்ததும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்றுதான்!

''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும்,உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை'' (அல்-குர்ஆன் 5:72)

''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.'' (அல்-குர்ஆன் 3:50-51)

நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -
''இன்னும் ''மர்யமுடைய மகன் ஈஸாவே ''அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது,அவர் ''நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்''

(மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம்கூறுவார்),

''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ''என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)'' (அல் குர்ஆன் 5:116-117)

கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை; அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்;

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!

நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் ; (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்)''- (அல் குர்ஆன் 9:30-35)

இயேசு நாதரும், வானவர்களும் (Angels) ஏக இறைவனையே வழிபடுவதை குறைவாகக் கருதமாட்டார்கள்! கிறிஸ்தவர்களே! நீங்களும் ஏக இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனையே வழிபடுவீர்களாக!

(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்"

ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்" (அல் குர்ஆன் 4:172-173)

இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!
''இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்'' (அல் குர்ஆன் 3:85)

 source : suvanathendral

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )