Oct 30, 2016

வணங்கத் தகுதியுள்ளவன்!

Post image for வணங்கத் தகுதியுள்ளவன்!
“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக(ப் படைத்து)த் தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) விண்மீன்கள் யாவும் அவனுடைய சட்டளைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. உறுதியாக இதிலும் உய்த்துணரும் மக்களுக்குப் பல நற்சான்றுகள் இருக்கின்றன” (16:12)

“அவன் தான் நீங்கள் மீன்களை(ப் பிடித்துச் சமைத்து)ப் புசிக்கவும், நீங்கள் அணிகலனாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக் கொள்ளவும், கடலை(உங்களுக்கு) வசதியாக்கித்தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வணிகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு, (கடலில் பயணம் மேற்க்கொள்ளும் போது) கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்ருப்பீர்களாக!”
“உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான்! (உங்கள் போக்குவரத்துக்கு) நேரான வழிகளை நீங்கள் அழிவதற்க(ப் பல) வழிகளையும், ஆறுகளையும் அமைத்தான்.” (15:14,15)

இறை விசுவாசிகளே நீங்கள் இவைகளை நன்கு ஆய்ந்து பாருங்கள்! தனிப்பெரும் வல்லவன் ஒருவனுடைய அளப்பரிய ஆற்றலன்றி உலக இயற்கைகள் என்று சொல்லப்படும் படைப்பினங்கள் தோன்றி இருக்க இயலுமா? என்பதைச் சற்றே சிந்தியுங்கள்!

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.   அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

Mar 29, 2016

மனிதனின் இம்மை மறுமை வாழ்வு சீராக...

மனிதனின் வாழ்வுக்கு வழிகாட்டியாக சத்தியத்தையும்,  அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் தெள்ளத் தெளிவான ஒரு  வேதமாக அல்குர்ஆனை முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். ஏன்? அல்குர்ஆன் மட்டுமே தன்னுடைய இமாம் என்று நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். அதாவது குர்ஆனை வழிகாட்டியாகவும் கொண்டு, அதன் போதனைப்படி நடப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். “உங்கள் இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளதையே பின்பற்றி நடங்கள். அவனல்லாது மற்ற எவரையும் பாதுகாவலராக ஏற்றுப் பின்பற்றாதீர்கள்.” (7:3)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூட தம் மனோ இச்சைப்படி மார்க்கத்தில் எதையும் செய்யவோ அல்லது கூறவோ இல்லை. அல்லாஹ்விடமிருந்து தங்களுக்கு வஹி மூலமாக அறிவிக்கப்படும் விஷயங்களை மட்டுமே மக்களுக்கு மார்க்கமாக போதித்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது என அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “அவர்கள் வாழ்க்கை அல்குர்ஆனாகவே இருந்ததென்று அவர்கள் கூறிய பதில் மிக முக்கியமான, யாவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். (கதாதா(ரழி), முஸ்லிம்)
மனிதன் இயல்புகளை நன்கு அறிந்த இறைவன், மனிதனின் இம்மை வாழ்வு சீராக, செழிப்பாக, இலகுவாக அமையவே அல்குர்ஆனை வழங்கியுள்ளான். நியாயமான ஆசைகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் தடையாக குர்ஆன் அமையவில்லை வரட்டு வேதாந்தமும், தத்துவமும் அதில் இல்லை.
“அல்குர்ஆனை நாம் விளங்குவதற்கு மிகவும் இலகுவாக்கியிருக்கின்றோம்” இதை சிந்திப்பவர்க் உண்டா? 54:17)
அல்குர்ஆனோடு தொடர்பு கொண்டால் எந்த ஒரு சாதாரண பாமரனும் அதனை மிகவும் இலகுவான முறையில் விளங்கிக் கொள்ள முடியும். அதனால்தான் அது இறக்கப்படும் பொழுது வாழ்ந்த மக்கள் எத்தகைய கல்வி அற்றவர்களாக இருந்தும் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள். ஆகவே கற்றவர்களுக்குத் தான் குர்ஆன் விளங்கும் என்ற கூற்று தவறானதாகும். அது புரோகித தொழில் நடத்துபவர்களால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை. அது சாதாரண மக்களுக்கு விளங்காது என்ற தவறான நம்பிக்கையை மக்களிடம் நிலவச் செய்து விட்டால்தான் அதை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க முடியும் என்பது அந்த புரோகிதர்களின் திட்டமாகும். அல்குர்ஆனை வைத்து இந்தக் கூட்டம் அல்லாஹ்வும் அவனது தூதரும் அருவருக்கும்படியான எத்தனையோ செயல்களில் ஈடுபடுகின்றது.
மரித்தவர்களின் நன்மைக்காக ஓதுவது,

மரணத்திற்குப்பின்

எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.
    இவ்வுலகில் வாழும்போது குறிப்பாக முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் மரணித்த பிறகு செய்யவேண்டிய அமல்கள் பற்றியும் இனி கான்போம். இறைவன் தன் திருமறையில் மனிதனின் படைப்பு பற்றி
    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1
     ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35
    நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43
    மேற்கண்ட வசனங்களில் மரணத்தை பற்றியும், அல்லாஹ் நம்மை இவ்வுலகில் வாழவைத்து நன்மை தீமை செய்ய வைத்து நம்மை சோதிக்கிறான் என்பதை என்பதையும் விளங்கலாம்.
    பெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆன்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்



உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர். நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும். அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.  அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.
அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )