எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.
இவ்வுலகில் வாழும்போது குறிப்பாக முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் மரணித்த பிறகு செய்யவேண்டிய அமல்கள் பற்றியும் இனி கான்போம். இறைவன் தன் திருமறையில் மனிதனின் படைப்பு பற்றி
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43
மேற்கண்ட வசனங்களில் மரணத்தை பற்றியும், அல்லாஹ் நம்மை இவ்வுலகில் வாழவைத்து நன்மை தீமை செய்ய வைத்து நம்மை சோதிக்கிறான் என்பதை என்பதையும் விளங்கலாம்.
பெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அல்குர்ஆன் 3:144
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. அல்குர்ஆன் 39:42
மேற்கண்ட வசனங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் வந்தேதீரும் என்பதை பார்த்தோம். அடுத்து நாம் மரணித்துவிட்டால் நமக்கு செய்யவேண்டிய கடமை பற்றியும், மறுமையில் உள்ள வாழ்க்கை பற்றியும் பார்ப்போம்.
நாம் இறந்துவிட்டால் குளிப்பாட்டி கபனிட்டு விரைவாக சென்று நல்லடக்கம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நாள் துக்கம் அனுசரிக்க கூறியுள்ளார்கள். மூன்று நாள் சமைப்பதை விட்டும் அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் சமைத்து கொடுக்கவும் கட்டளையிட்டுள்ளார்கள். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டித்துள்ளார்கள்.
எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்
அபூமூஸா(ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மயக்கத்திலிருக்கும்போது அவர் மனைவிகளில் ஒருவர் கூக்குரலிட்டு அழுதார். அவர் மயக்கம் தெளிந்த பிறகு தன் மனைவியை கண்டித்தார். துன்பங்களில் ஓலமிட்டு அழுவதையும், துயரங்களில் தனது தலையை சிரைத்துக் கொள்வதையும் தனது ஆடைகளை கிழ்த்துக்கொள்வதையும் விட்டு நபி(ஸல்) அவர்கள் விலக்கி இருந்தார்கள் என்று அபூமூஸா(ரழி) கூறினார்கள். நூல்: புகாரி
ஆனால் இன்று மார்ர்க்கத்தை போதிப்பதை விட்டு இறந்தவர் வீட்டில் கண்டதை கூறி கூலி வாங்கி இறந்து விட்டாலும் அந்த வீட்டில் பிரியாணி, பலவ்சோறு சமைக்கவும், 3,7,40 என்ற பெயரில் ஹத்தம் பாத்திஹா ஓதி பணம் சம்பாதித்து மக்களை மடையர்களாக்கி வருகின்றனர்.
இறந்தவர்களுக்கு எந்தப்பாத்திஹாவும் யாசீனும் போய்ச்சேராது. மாறாக இறந்தவர்களை சென்றடையும் விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.
ஆதமின் மகனே! மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.
1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி
ஜனஸாவிற்கு வந்து ஜனஸா தொழும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் இரு மலைகளின் அளவு என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி முஸ்லிம்
கிராத் என்றால் உஹத் மலை அளவு நன்மை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் இப்னுமாஜ்ஜாவில் பதிவாகியுள்ளது.
ஒருவர் மரணித்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜஃபர்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஜஃபர்(ரழி)யின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரழி) நூல்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதி
நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து மறுமை நாள் எப்பொழுது வரும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அமானிதம் வீணடிக்கப்பட்டால் ‘மறுமையை எதிர்பார்’ என்று சொன்னார்கள். அது எப்படி வீணடிக்கப்படும் என்று கேட்டார். தகுதியில்லாதவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி
வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்ருகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். .இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 82:1-19
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குாிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 6:31
மறுமையைப்பற்றி மேலும் பல வசனங்கள் உள்ளன. இன்னும் மறுமையை நம்பாமல் உள்ள முஸ்லிம்கள் பலர் உள்ளனர். இவர்கள் நாம்தான் மரணித்து விடுவோமே பிறகு எப்படி மறுமையப்பற்றி தெரியும் என்கின்றனர். குர்ஆனை புரட்டிப்படிக்கும் யாரும் நாம் மரணித்து விட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கி உடல் மடிந்து போனாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணோடு மக்கிப்போன இவ்வுடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை உணர்வார்கள். மறுமை வாழ்க்கை உண்டு என்றும் நம்புவார்கள். எனவே மறுமையை பயந்து இம்மையில் நற்காரியங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள்.
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சாிக்கை செய்யும் (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பாிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. அல்குர்ஆன் 6:51
K.M. அப்துல் ஹமீது, துவாக்குடி
0 comments:
Post a Comment