Sep 8, 2011

உளூவை நீக்குபவை

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ , பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும் , கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் , மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் , மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் , கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ , பயணிகளாகவோ இருந்தால் , அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால்  , அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும் , கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும் , தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்

ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) , சப்தத்துடனோ , அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான் என்று விளக்கமளித்தார்கள்.நூல்: புகாரீ 135, 176

 காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்
 சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ,  (காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல் , அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540

சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா

பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல் , உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபி (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 185, அபூதாவூத் 164

ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ,  ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ,  நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள் என்று கூறினார்கள். ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ,  ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய் என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம் 539

மதீ வெளியானால் உளூ நீங்கும்

உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.

அதிக அளவில் ம வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்காக உளூச் செய்ய வேண்டு என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி)நூல்கள்: புகா 132, முஸ்லிம் 458

ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா

வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது. இரத்தம் வெளியேறுதல் உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும் , கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் , மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆ 4:43 

  நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையு , மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் , கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ , பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால் , அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும் , கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும் , தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6

இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். இந்த வசனங்களில் ,  பெண்களைத் தீண்டினால் என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர். 

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால் என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

நான் நபி (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ519, முஸ்லிம் 796

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலா அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் - இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் - ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள். அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது என்பது தான் அந்த விடை! பார்க்க புகாரீ: 382, 513

தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

தூக்கம் உளூவை நீக்குமா

சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ , தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்கள்: நஸயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471

மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள்.இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1277

இரண்டு ஹதீஸ்களையும் ஆராயும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது  அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும் அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது என்று முடிவு செய்யலாம்.

மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா

ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம் உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது. உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது. இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும். 

அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே என்று நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம். ஆணுறுப்பைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது இச்சையுடன் தொடுவதைத் தான் குறிக்கின்றது

தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார் அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ,  கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 228.

source: www.onlinepj.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )