Sep 8, 2011

உளூச் செய்யும் முறை



நிய்யத் எனும் எண்ணம்

ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது

அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரீ1,முஸ்லிம் 3530

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

பல் துலக்குதல்

பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.

நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1233

பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் உளூச் செய்தார்கள் என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் பல் துலக்கினார்கள் என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.

குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக் குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். மிஸ்வாக் என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம் என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது. பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும் பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அது போல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான்.

பல் துலக்கிய பின்னர் உளூச் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.

முன் கைகளைக் கழுவுதல்

நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி) நூல்: நஸயீ 147

வாயையும் மூக்கையும் சுத்தம் செய்தல்

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது,தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து,மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரீ160, 164

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்... (பின்னர்) இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன் எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ140

முகத்தைக் கழுவுதல் 

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ140

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ186

 தாடியைக் கோதிக் கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அஹ்மத் 24779

இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
 
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது முகத்தையும் மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ160

தலைக்கு மஸஹ் செய்தல்
 
இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்கள்: புகாரீ185,முஸ்லிம் 346

இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது கையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ186

நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ 98

காதுகளுக்கு மஸஹ் செய்தல்

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும் தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: நஸயீ 101 

பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா 

தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.

இரண்டு கால்களையும் கழுவுதல் 

இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும் பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ 140.

கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ160

உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான் என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத் நூல்: புகாரீ165

எத்தனை தடவை கழுவ வேண்டும் 

தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ , அல்லது இரண்டிரண்டு தடவையோ அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ157

நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: புகாரீ158

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும் , மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160

எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும் , இரண்டு தடவை கழுவுவதும் , மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும் , விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.

ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு , கைகளை மூன்று தடவையும் , கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது , தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346.

மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு , இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார் வரம்பு மீறி விட்டார் அநியாயம் செய்து விட்டார் எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்).அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்

நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும்,இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.அறிவிப்பவர்: முகீரா (ரலி) நூல்கள்: புகாரீ182,முஸ்லிம் 404.

காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள்

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: புகாரீ206,முஸ்லிம் 408.

 சலுகையின் கால அளவு

உளூவுடனும்,கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர்,காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.

காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம்.பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும்,உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஷுரைஹ் நூல்: முஸ்லிம் 414

குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை

நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் ,உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும்,மலம்,தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) நூல்கள்: திர்மிதீ 89,நஸயீ 127,இப்னுமாஜா 471,அஹ்மத் 17396

உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது 
நபிவழியாகும்

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன்அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்

அல்லது

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 345


source: www.onlinepj.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )