May 22, 2012

ஜம்உ & கஸ்ரு


ஜம்உ (இணைத்துத் தொழுதல்)
இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்உ  என்று கூறுகிறோம். பயணத்தில் இருப்போருக்கு லுஹ்ரு, அஸ்ரு, மக்ரிப், இஷா ஆகிய நான்கு நேரத் தொழுகைகளை முறையே, லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் மக்ரிபையும் இஷாவையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் தொழுவதற்குப் பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கஸ்ரு (சுருக்கித் தொழுதல்)
அதுபோல் நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதைக் கஸ்ரு என்று கூறுகிறோம். நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதற்குப் பயணிகள் சலுகை வழங்கப்பட்டுள்ளனர்.
ஜம்உ+கஸ்ரு (இணைத்து + சுருக்கித் தொழுதல்)
பயணத்தில் இருப்போருக்கான ஜம்உ+கஸ்ருச் சலுகையின் கீழ் ஃபஜ்ருத் தொழுகை வராது. பயணிகளுக்கான லுஹ்ருடைய தொழுகை நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் மறைவதற்கு முன்வரை லுஹ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் அஸ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் இணைத்து வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம். மக்ரிபுடைய 3 ரக்அத்களுக்குக் கஸ்ரு இல்லை. எனவே, மக்ரிபுடைய 3 ரக்அத்களை இஷாவின் கஸ்ரான இரண்டு ரக்அத்களோடு இணைத்து இரவின் வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம்.
பயணத்தில் ஜம்உச் செய்து தொழுகின்ற முறை
இரு தொழுகைகளை இணைத்து, சுருக்கித் தொழுகின்ற பயணி/கள் உரிய வகையில் நிய்யத் செய்து கொண்டு, பாங்கும் இகாமத்தும் கூறி, முதல் தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கொடுத்தவுடன் இன்னோர் இகாமத் கூறி அடுத்த தொழுகையைத் தொழுது நிறைவு செய்யவேண்டும். இரு தொழுகைக்கும் இடையில், வழக்கமாக மொழியக்கூடிய தஸ்பீஹுகளோ வேண்டுகின்ற பிரார்த்தனைகளோ இல்லை; கடமையான தொழுகைகளுக்கு வழக்கமாகத் தொழும் முன்-பின் சுன்னத் தொழுகைகள் இல்லை. சான்று:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபாவுக்குப் புறப்பட்டார்கள். (அங்கு)நமிரா அருகில் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அங்கு இறங்கி, சூரியன் நடுவானிலிருந்து மேற்கு நோக்கிச் சாயும்வரை தங்கினார்கள். (பின்னர்) கஸ்வா எனும் (தம்) ஒட்டகத்தை ஆயத்த நிலையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, அவர்களுக்கு வாகனம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, 'பத்னுல்வாதி' எனும் பள்ளத்தாக்கு வந்தபோது (அங்கு இறங்கி) மக்களுக்கு உரையாற்றினார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் (லுஹ்ருத் தொழுகை நேரத்தில்) தொழுகை அழைப்பு விடுத்து, இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரைத் தொழவைத்தார்கள். அதன் பின்னர் பிலால் (ரலி) இகாமத் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழவைத்தார்கள் அவ்விரண்டு தொழுகைக்கிடையே வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (முஸ்லிம் அறிவிப்பில் இடம்பெற்ற நீண்ட ஹதீஸின் சுருக்கம். நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 649).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவை அடைவதற்காகப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி மக்ரிப், இஷாவையும் (சேர்த்துத்) தொழவைத்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக)வேறெதுவும் தொழவில்லை. அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஹதீஸின் ஒருபகுதி. நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 650).
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருவேளைத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுததற்கான நபிவழிச் செய்திகள் அநேகம் உள்ளன. விரிவஞ்சி அவை இங்குக் குறிப்பிடப்படவில்லை.
உள்ளூரில் ஜம்உச் செய்தல்
ஜம்உ - சேர்த்துத் தொழுதல் பயணிகளுக்கு மட்டுமல்லாது ஊரில் இருக்கும் உள்ளூர்வாசிகளும் இரு நேரத் தொழுகைகளைச் சுருக்காமல் ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுது கொள்ளலாம் எனவும் நபிமொழிகளில் வழிகாட்டல் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹ்ரு, அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 543562).
(இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம், "இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ?" என்று அய்யூப் கேட்டபோது, "இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்ச நிலையோ பயணத்திலோ (அவர்கள்) இருக்கவில்லை. அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 11461147, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக். இவற்றில் சில அறிவிப்புகளில், அப்போது ''அச்சமோ, மழையோ இருக்கவில்லை'' என்று அறிவிக்கப்பட்டுள்ளன).
மழை போன்ற காரணத்தினால் உள்ளூர்வாசிகள் ஊரிலிருக்கும்போது ஜம்உச் செய்துகொள்ளலாம் என்று விளங்க முடிகிறது. மற்றபடி இது பொதுவான சலுகையாகக் கருதி தொடர்ந்து ஜம்உச் செய்தல் கூடாது.
பயணத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள்
அல்லாஹ், உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் உள்ளூரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும் பயணத்திலிருக்கும்போது இரண்டு ரக்அத்களாகவும் அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 11091110, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா).
"அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு, பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி 35010903935, முஸ்லிம் 11051106, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ரு (ரலி) உமர் (ரலி) உதுமான் (ரலி) ஆகியோருடனும் பிரயாணம் செய்திருக்கிறேன். அவர்கள் லுஹ்ரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதனையும் தொழமாட்டார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்: திர்மிதீ 499).
பிரயாணத்தில் நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுதுகொள்ள மேற்கண்ட அறிவிப்புகளில் சான்றுகள் உள்ளன!
கஸ்ருத் தொழுகை தொடர்பாக அடுத்தக் கேள்வியையும் பார்ப்போம்.
oOo
ஐயம்: 
பிரயாணம் செய்யும் போது, எவ்வளவு தூரத்தினைக் கணக்கில் கொண்டு கஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டும்?
- சகோதரர் Mustafa மின்னஞ்சல் வழியாக.
தெளிவு: 
பயணத்திலிருப்போர் தொழுகைகளை ஜம்உ, கஸ்ருச் செய்து கொள்ள இரு கருத்துகளுக்கு இடமின்றி தெளிவான வழிகாட்டல் உள்ளது. ஆனால், பயணிகள் எவ்வளவு காலம் வெளியூரில் தங்கினால் கஸ்ருச் செய்யலாம் என்பதிலும், எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்யலாம் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் நபி (ஸல்) அவர்கள் வெளியூரில் கஸ்ருச் செய்தார்கள் என்பது குறித்து, எண்ணிக்கையில் பல நாள்களைக் குறிப்பிட்டு பல அறிவிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் கூடுதலாகப் பத்தொன்பது நாள்கள் தங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பை மட்டும் எடுத்துக்கொள்வோம்.  
கஸ்ருத் தொழுகைக்கான கால அளவு
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம்; (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 10804298 4299,  திர்மிதீ 504, இப்னுமாஜா).
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்கள் மக்காவில் தங்கினார்கள். மக்காவில் தங்கிய பத்தொன்பது நாள்களும் நான்கு ரக்அத்கள் தொழுகைகளைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத் தொழுதுள்ளார்கள் என்று மேற்கண்ட அறிவிப்பு சந்தேகத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகிறது. இந்த நபிவழிச் செய்தியிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய நாள்கள் முழுவதும் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்று விளங்க முடிகிறதே தவிர, வெளியூரில் தங்குவோர் பத்தொன்பது நாள்களுக்கு மேல் கஸ்ருச் செய்யக்கூடாது என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை!
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்களுக்கும் அதிகமாக மக்காவில் தங்கியிருந்து, அவற்றில் பத்தொன்பது நாள்கள் மட்டும் கஸ்ருச் செய்து மற்ற நாள்களில் தொழுகைகளின் ரக்அத்களை முழுமையாகத் தொழுதார்கள் என்றிருந்தால் வெளியூரில் தங்குவோருக்கு கஸ்ருத் தொழுகையின் கால அளவு பத்தொன்பது நாள்கள் என முடிவுக்கு வந்துவிடலாம். அவ்வாறின்றி, மக்காவில் தங்கிய நாள்களில் நபி (ஸல்) அவர்கள் கஸ்ருச் செய்திருப்பதாலும் கால அளவைக் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்ல வேறு நபிமொழி அறிவிப்புகள் இல்லாததாலும் வெளியூரில் தங்கும் நாள்களில் கஸ்ருச் செய்வதில் கால அளவை நிர்ணயிக்காமல் வெளியூரில் தங்கும் நாள்கள் அனைத்திலும் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்கிற முடிவே பொருத்தமாக உள்ளது.
கஸ்ருத் தொழுகைக்கான தூரம்
கஸ்ருச் செய்வதற்கான தூரத்தைக் கணக்கிட்டுக்கொள்ள, இன்றைய கிலோ மீட்டர் என்கிற அளவு அன்று இல்லையென்றாலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மைல், ஃபர்ஸக் என்கிற அளவுகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவிப்புகளிலிருந்து விளங்க முடிகிறது.
"(மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த 'ருவைஸா' எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி (ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரின் எல்லையிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளது. அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில் தான் நபி (ஸல்) அவர்கள் பயணத்தின் போது இளைப்பாறுவார்கள்" என்று இப்னு உமர் (ரலி) என்னிடம் கூறினார்கள். அறிவிப்பளார்: நாஃபிவு (ரஹ்) (நூல்: புகாரி 487).
மூன்று மைல்கள் ஒரு ஃபர்ஸக்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து(பேரீச்சங்) கொட்டைகளை நான் என் தலையில் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்தேன். அந்த நிலம் இங்கிருந்து ஒரு ஃபர்ஸகில் மூன்றில் இரு பங்கு (அதாவது இரண்டு மைல்கள்) தொலைவு இருந்தது. அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) (நூல்கள்: புகாரி 31515224, முஸ்லிம் 4397, அஹ்மத்).
பிரயாணிகள் தொழுகையைக் கஸ்ருச் செய்வதற்கான தொலைவு குறித்தும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் நபிமொழிகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு: 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ருத் தொழுதார்கள்; (மக்காவுக்குச் சென்ற பயணத்தில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ருத் தொழுதார்கள்.அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 10891551, முஸ்லிம் 1114;1115, திர்மிதீ 501, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).
மதீனாவில் லுஹ்ருத் தொழுகையை முடித்துவிட்டுப் பயணம் புறப்பட்ட நபி (ஸல்) அவர்கள், அஸ்ரு நேரத்தில் துல்ஹுலைஃபாவை அடைந்து அங்கு நான்கு ரக்அத்கள் கொண்ட அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுள்ளார்கள். மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில் சுமார் ஆறு மைல் தொலைவில் துல்ஹுலைஃபா எனும் இடம் அமைந்துள்ளது. மதீனாவிலிருந்து ஆறு மைல் தொலைவுக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகக் கஸ்ருச் செய்திருப்பதால், உள்ளூரிலிருந்து ஆறு மைல்களைக் கடந்ததும் பயணிகள் கஸ்ருத் தொழுகையை மேற்கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம் என்றாலும், நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவை அடைந்தபோது அஸ்ரு நேரம் வந்ததால் அங்குக் கஸ்ருச் செய்தார்கள்; ஆறு மைல்களுக்கு முன்போ ஆறு மைல்களைக் கடந்த பின்னரும் அஸ்ரு நேரம் வந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் அங்கும் கஸ்ருச் செய்திருப்பார்கள் என்று விளங்கவும் இடமளிப்பதால், ஆறு மைல் என்பது அஸ்ரு நேரத்தில் அடைந்த தூரம் என்று கொள்ளலாமே தவிர, கஸ்ருத் தொழுகையை நிறைவேற்றுவதற்கான தொலைவு ஆறு மைல் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
ஒரு ஃபர்ஸக் அல்லது மூன்று மைல்கள்
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக் தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) (நூல்கள்: முஸ்லிம் 1116, அபூதாவூத் 1201, அஹ்மத் 11904).
குறிப்பு:- "மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்" என்று ஃபர்ஸக்கைப் பற்றிய ஐயத்துடன் அறிவிப்பவர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஃபா (ரஹ்) ஆவார்.

ஒரு ஃபர்ஸக் தொலைவு என்பது மூன்று மைல்களாகும். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் இதையொத்த வேறொரு ஹதீஸில், "ஒரு ஃபர்ஸக்" எனத் திட்டவட்டமான சொற்றொடர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸில் இடம்பெறும் சொற்றொடரை, "மூன்று மைல் அல்லது ஒரு ஃபர்ஸக்" என்று திருத்திப் பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்புகளில் மூன்று மைல்களா; அல்லது மூன்று ஃபர்ஸக்களா? என்பதில் சந்தேகம் ஏற்படும். ஆனால், ஒரு ஃபர்ஸக் என்பது மூன்று மைல் தொலைவு என்பதை, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''ஒரு ஃபர்ஸக்'' பயணம் மேற்கொண்டால் கஸ்ரு தொழுவார்கள்'' என்று அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்து, இப்னு அபீஷைஃபாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் தெளிவாக்கி விடுகின்றது.
ஆகவே, "ஒரு ஃபர்ஸக் - மூன்று மைல்கள் பயணம் சென்றுவிட்டால் நான்கு ரக்அத்கள் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுகொள்ளலாம்" என்பதற்கு நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் அறிவிப்பு ஏற்கத்தக்கச் சான்றாக உள்ளது.
ஒரு ஃபர்ஸக் மூன்று மைல்களாகும். ஒரு மைல் 1748 மீட்டராகும். மூன்று மைல்கள் 5244 மீட்டராகும். அதாவது உள்ளூரிலிருந்து ஐந்தே கால் கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் வந்து விட்டால் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்றே நபிவழி அறிவிப்புகளிலிருந்து விளங்கமுடிகிறது.  
பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும்
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் பயணம் என்பது கால்நடையாகவும் பயண வாகனங்களாக குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகள் மீதேறியும் செய்யப்பட்டு வந்தது. அவை இன்றைய இயந்திர வாகனங்களைப் போன்ற விரைவு வாகனங்கள் அல்ல. முந்தைய காலப் பயணங்கள் பெரும்பாலும் வெளிச்சமுள்ள பகல் நேரத்தில் மட்டுமே நடைபெற்றன. இரவுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் நிலவொளிக் காலங்களில் அவை அமைந்திருந்தன. பயணத்தின் இடையில் ஓய்வுக்காகத் தங்க வேண்டி இருந்தாலும் கூடாரம் அமைப்பதற்கான பொருள்களைக் கையோடு எடுத்துச் சென்றிருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்ளலாம். இல்லையேல் வெட்டவெளியில் தங்கிடவேண்டும். தங்குமிடத்தில் பயணிகளுக்கும் அவர்களின் கால்நடை வாகனங்களுக்கும் தேவையான நீர் வசதி உள்ளதா என்பதையும் தேர்வுசெய்து தங்குவது முக்கிய அம்சமாகும். இது போன்று  அன்றைய பிரயாணத்தில் பல சிரமங்களைப் பயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது.
இன்றைய பயணத்தில் கையோடு கொண்டு செல்லவேண்டியவை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. உணவு, குடிநீர் இயந்திர வாகனத்தில் கிடைத்துவிடும். கழிப்பிடம், குளியலறை, படுக்கையறை வரை எல்லாமே இயந்திர வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். வழியில் தங்குவது என்றாலும் தகுதிக்கேற்ப விடுதிகளைத் தேர்வுசெய்து வசதியாகத் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இரவும் பகல் போல் மின்னொளியில் ஜொலிக்கும் இன்றைய பயணத்தை அன்றைய பயணத்துடன் ஒப்பிட்டு சிரமங்கள் உள்ளன என்று கூறுவதற்கில்லை!
''பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்து விடுகிறது. ஆகவே உங்களில் ஒருவர் தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி180430015429, முஸ்லிம் 3892, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
காலத்தைப் பொருத்துப் பயணத்தின் வேதனை மாறுபடுமே தவிர, குடும்பம் உறவினர் மற்றும் நண்பர்களைப் பிரியும் பயண வேதனை எல்லாக் காலத்தவருக்கும் பொதுவாக எல்லாப் பிராயாணிகளுக்கும் ஏற்படும் என்பதை, "பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும்" எனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று தெளிவாக்குகிறது.
பயணத்தின் களைப்பை உணர்ந்தவர்கள் - உணர்பவர்கள் காலவரையின்றி வெளியூரில் தங்கும்வரை ஜம்உ, கஸ்ரு செய்துகொள்ளலாம். 
இஸ்லாம் பயணிகளுக்குத் தொழுகையில் ஜம்உ, கஸ்ரு வழங்கியிருப்பது சலுகைதானே தவிர கட்டாயமல்ல. ஜம்உ, கஸ்ரைத் தவிர்த்துக்கொண்டு பிரயாணத்தில் அந்தந்த வேளைத் தொழுகையை அதற்கான நேரத்தில் கஸ்ருச் செய்யாமல் முழுமையாக நிறைவேற்றினாலும் அதற்கான கூடுதல் நன்மைகளையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம். இவை, அவரவரின் உற்சாகம் / களைப்பு / வசதி / விருப்பம் ஆகியனவற்றைப் பொருத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்! 
(இறைவன் மிக்க அறிந்தவன்)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )