இக்கட்டுரை உஸ்தாத் உமர் அபீத் ஹஸனா, ஷெய்க் அல்கஸ்ஸாலியோடு குர்ஆனோடு நடந்து கொள்ளளும் முறைபற்றி நடாத்திய உறையாடலின் கருத்தை தமிழில் தருவதாக அமைகிறது.
அல்குர்ஆன் மனனம், விளக்கம், அல்குர்ஆனை கற்பித்தல் போன்ற பகுதிகளில் உங்களுடைய நீண்ட கால பயண அனுபவத்தினூடாக, இன்றைய முஸ்லிம்கள் குர்ஆனை புறக்கணிக்கும் நிலையிலிருந்து எவ்வாறு மீண்டு அதனை நோக்கி நகர முடியும் அல்லது மீண்டும் குர்ஆன் முஸ்லீம்களிடத்தில் வரவேண்டும் அதனூடாக வழிகாட்டும் பொறுப்பையும் எழுச்சியையும் எவ்வாறு மீளக் கொண்டு வரமுடியும் என்பதை கூறமுடியுமா?
விடை : முஸ்லிம்கள் குர்ஆனோடு கொண்டுள்ள தொடர்பு ஆழமான ஓர் ஆய்வை வேண்டி நிற்கிறது. ஆரம்ப நூற்றாண்டுகளைத் தொடர்ந்து வந்த காலங்களில் முஸ்லிம்களது கவனம் வெறுமனே ஓதுவதிலும், நீட்டி, சுருக்கி ஓதும் சட்டதிட்டங்களிலுமேயே சுருங்கி விட்டது. அதாவது குர்ஆன் ஓதுவதோடு தொடர்புபட்ட சட்டங்களை படிப்பதிலேயே மூழ்கிவிட்டனர். 'கரஅ' என்ற சொல்லின் அர்த்தம் அவர்களிடத்தில் மாற்றமுற்றது. ஆனால் (வாசித்தான்), (விளங்கினான்) போன்ற சொற்கள் ஒரே கருத்தையே சுட்டிநிற்கின்றன. ஒரு கடிதம் அல்லது புத்தகம் ஒருவனிடத்தில் கிடைக்கப்பெற்று அவன் அதனை வாசித்தான் என்றால் அதன் அர்த்தம், அதன் உள்ளடக்கத்தை விளங்கிக் கொண்டான் என்பதேயாகும். எந்தவொன்றையும் விளங்காமல் வாசிப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என்பதை நாம் இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
இன்று முஸ்லிம்கள் குர்ஆனை வெறும் பரக்கத்தை பெற்றுத்தரும் ஒரு சாதனமாகக் கருதி அதன் உள்ளடக்கத்தை முழுமையாகவே புறக்கணித்து நடக்கின்றனர். இவ்வாறான போக்கு இஸ்லாமியப் பார்வையில் மறுக்கப்படவேண்டியதே. குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ்
பின்வருமாறு குறிப்பிகின்றான். 'இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். மக்கள் இதனுடைய வசனங்களை சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!' (சூறா ஸாத் 29)
மேலோட்டமான ஓதலில் எங்கே சிந்தனைக்கு, ஆய்வுக்கு, உணர்வுக்கு, ஆழமான பார்வைக்கு இடமிருக்கின்றது? குர்ஆனின் கருத்துக்கள், அதன் இலக்குகள், சாதாரண எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சமூகத்திற்கு தேவையான சமூக, உளவியல் அடிப்படைகள் என்பவற்றை நாம் ஒரு போதும் மேலோட்டமான வாசிப்பினூடாக அடைந்து கொள்ள முடியாது. ரஹ்மானுடைய அடியார்கள் இவர்களுக்கென்று சில பண்புகள் இருப்பதாக குர்ஆன் வர்ணிக்கின்றது. பார்ப்பார்கள், செவிமடுப்பார்கள், உணர்வு பெறுவார்கள், உலகை வளப்படுத்த இயங்குவார்கள் என்பன அவர்களின் அடிப்படைப் பண்புகளாகும்.
தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும் போது அவை குறித்து குருடர்களாயும் செவிடர்களாயும் இருப்பதில்லை. (சூறா புர்கான் :73)
இன்றைய முஸ்லிம்களையும் அவர்கள் குர்ஆனோடு கொண்டுள்ள தொடர்பையும் ஏனைய சமூகங்களும் மிகச் சரியாகவே கணித்துள்ளனர். அவர்களுடைய வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூட குர்ஆன் ஓதம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏன் யஹூதிகள் கூட நாள் தொடக்கத்தில் குர்ஆனின் ஒரு பகுதியை ஓத வைக்கின்றனர். முஸ்லிம்கள் இவற்றை காதினால் செவிமடுப்பார்களே தவிர ஒருபோதும் அவற்றிலிருந்து உணர்வு பெறமாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையே இவ்வாறான ஒளிபரப்புக்களைச் செய்ய அவர்கள் முன்வருவதற்கான காரணமாகும்.
எனவே எமது நிலை மாற்றமுறவேண்டும், குர்ஆனை ஆழமாக வாசிக்க வேண்டும், ஒவ்வொரு முஸ்லிமும் தனது அறிவு மட்டத்திற்கேற்ப அதன் இலக்குகளையும், ஆழமான கருத்துக்களையும் விளங்க முற்பட வேண்டும், கஷ்டமானவர்கள் துறைவாரிகளிடம்
சென்று படிக்க வேண்டும் என்பன எம்மில் ஏற்படாத வரை மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. குர்ஆனைப் படிப்பது இடைவிடாது தெடராக நடைபெற வேண்டிய ஒன்றே. குர்ஆனைப் படித்தல் என்பது மனித, பிரபஞ்சத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய வசதிகளைப் படித்தல், நாகரீக வளர்ச்சியின் அடிப்படைகளை அறிதல், சட்டதிட்டங்கள், நன்மாராயங்கள், தண்டனைகள் போன்ற அவசியமான விடயங்களை அறிதல் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.
சாதாரணமாக மனிதனால் எழுதப்படும் சில புத்தகங்கள் வாசிப்பாளனை தன்னோடே கூட்டிச் செல்லும் அதன் கருத்துக்களையும், சிந்தனைகளையும் அவனுள்ளே பதித்துவிடும். சிலபோது அவன் தன்னையறியாமலேயே எழுத்தாளரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டுவிடவும் முடியும். ஒரு சாதாரண மனிதனுடைய புத்தகத்திற்கு இச்சக்தி இருக்குமாயின் அல்லாஹ்வின் புத்தகத்திற்கு எவ்வளவு பெரிய சக்தியிருக்க வேண்டும்? ஸஹாபாக்கள் அல்குர்ஆனின் கருத்துக்களால் வார்க்கப்பட்டவர்கள் என்பது மிகச் சிறந்ததோர் உதாரணமாகும்.
முன்னோர்கள் குர்ஆனை வாசித்து அதன் தரத்திற்கு அவர்கள் உயர்ந்து சென்றனர். ஆனால் நாம் குர்ஆனை ஓதி எமது தரத்திற்கு அதனை கீழிறக்குகிறோம். இது நாம் குர்ஆனுக்கு செய்யும் மிகப் பெரும் அநீதியாகும். குர்ஆன் இன்று இழைக்கப்ட்ட ஒன்றாக மாறிவிட்டது.
குர்ஆன் அவர்களை தன்னுள் கரைத்து விட்டது. அந்த சமூகம் குர்ஆனிய நாகரீகத்தை உலகிற்கு முன்வைத்தது குர்ஆனைப் படிப்பித்தார்கள். இயல்பாகவே ஷூறா அமைப்பை விரும்பி அடக்கு முறையை வெறுக்கும் ஒரு சமூகமாக பளிச்சிட்டது. சமூக நீதி எங்கும் பரவத் தொடங்கியது. குழுவெறியோ, பேதமோ அவர்களை ஆட்கொள்ளவில்லை. பெருமையடிப்பவர்களுக்கு இடமில்லாமல் சென்றது. ரபீஃ இப்னு அமீர் என்கின்ற நாட்டுப்புற அரபி பாரசீகத் தலைவருக்கு கூறிய வார்த்தைகள் குர்ஆனின் புரிதலை தெளிவுபடுத்துகின்றது : அடியார்களை வணங்குதை விட்டும் ஒருவனான அல்லாஹ்வை மாத்திரம் மனிதர்கள் வணங்கவேண்டும் இவ்வுலகின் ஒடுக்கத்திலிருந்தும், உலகம் மறுமை என்ற விசாலத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்காகவும் மதங்களின் அநியாயத்திலிருந்து இஸ்லாத்தின் நீதியை நோக்கி அவர்களை வெளியேற்றவுமே நாம் வந்துள்ளோம்.
இவ்வார்த்தைகள் உலகிற்கோர் வெற்றி. நீதிமிக்கதோர் சந்தோஷமான நாகரீகம் உலக மக்களுக்கு கிடைக்கப் பெற்றது. பாரசீக, ரோம தத்துவங்களும், சிந்தனைத் தாக்கஙக்ளும் ஒளிமங்கி மறையத் தொடங்கின. குர்ஆன் புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றது. ரோம, பாரசீக, யூனானிய வெற்று வாதங்களையும், சிந்தனைத் தேக்கங்களையும் குர்ஆன் பிரபஞ்ச வசதிகளை உணர்த்தியதனூடாக அதனோடு மனித நடவடிக்கைகளை ஒன்றித்துச் செல்லக் கூடியதாக மாற்றியமைத்து பூமியை வளப்படுத்தும் பணியிலும், நாகரீகத்தை கட்டுவிக்கும் பணியிலும் அவனை ஈடுபடுத்தியது.
குர்ஆனிய சிந்தனை ஏனைய சிந்தனைகளை விட்டும் வித்தியாசமானது. குர்ஆன் பௌதக உலகைப் பற்றியும் அதிகம் வலியுறுத்துகின்றது. அதன் அதிசயத்தக்க சில படைப்பினங்கள் மீது அல்லாஹ் சத்தியமும் செய்கின்றான். இவ்வதிசயங்கள் அவற்றைப் படைத்தவனை எமக்குக் காட்டுகின்றன. குர்ஆனை வெறும் ஓதலுக்காக நாம் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து எமக்கும் பிரபஞ்சத்திற்கு மிடையிலான தொடர்பு முடிவுற அரம்பித்தது. விளைவு, பிரபஞ்சத்தைப் படித்தவர்கள் அதன் மூலம் அவர்களது வழிகெட்ட நாஸ்தீக கொள்கைகளை வலுப்படுத்தினர். எமக்கெதிராக அவற்றைப் பயன் படுத்தினர். எமது வேதம் சிந்தனையைத் தூண்டும் வேதம், பிரபஞ்சத்தோடு எம்மை ஒன்று சேர்க்கும் வேதம் போன்ற கருத்துக்களை விட்டும் எது எம்மை தூரமாக்கியது?
எவ்வெழுத்தை நீட்டி ஓத வேண்டும், எதனை மறைத்து ஓத வேண்டும் போன்ற விடயங்களில் அளவுக்கதிகம் நாம் மூழ்கி விட்டோம். இப்பகுதியில் கூடிய கவனம் செலுத்தப்பட்டதால் குர்ஆனின் அடிப்படைப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன. குர்ஆன் உள்ளங்களை உயிர்ப்பிக்கக்கூடிய ஒரு புத்தகம், சமூகங்களையும், நாகரீகத்தையும் உருவாக்கும் சக்தி அதனுள் இருக்கின்றது. அது ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது.
என்றாலும் பார்வைகள் மூடப்பட்டிருப்பதால் அதன் ஒளி பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. கோளாறு அற்புதச் சக்தகிளல்ல. ஒளியைப் பயன்படுத்தத் தெரியாத பார்வையாளிகளே கோளாறு. வேறூன்றிருக்கின்றது. 'அல்லாஹ் கூறுகிறான்' அல்லாஹ்விடமிருந்து பேரொளிமிக்க, சத்தியத்தை தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளன அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சந்தித்தான் வழிகளைக் காண்பிக்கிறான் (சூறா மாஇதா16)
உலகிற்கு எம்மால் அமைதியைக் கொடுக்க முடியாமல் இருக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் இவ்வொளியை விட்டும் மறைக்கப்பட்டுள்ளார்கள். ஏன் இப் புத்தகத்திற்கு மிகவும் உரித்துடைய முஸ்லிம்களே அதன் ஒளியைப் பயன்படுத்த மறந்துவிட்டனர். இல்லாதவன் ஒருபோதும் அடுத்தவனுக்கு கொடுக்க முடியாது.
குர்ஆன் ஓதுவதை நாம் புறக்கணிக்கவில்லை. ஏனைய வேதங்கள் போலன்றி எமது வேதம் நிலைத்து நிற்கவும் இடைச்செருகளின்றி பாதுகாக்கப்படுவதற்கும் குர்ஆன் ஓதுவது அவசியமாகின்றது. ஆனால் அவ்வெழுத்துக்களை விட்டும் ஒருபோதும் அதன் கருத்துக்களைப் பிரிக்க முடியாது.
சில போது சமூகம் மரணித்தவர்களோடு பேசுதல், மலைகளை நகர்த்துதல் போன்ற பௌதீக அற்புதங்களைக் காட்டும் படி நபிமார்களிடம் வேண்டி நிற்கின்றனர். 'வேரொரு குர்ஆன் மூலம் மலைகளை நகரும் படி செய்தாலும் அல்லது பூமியைப் பிளக்கச் செய்தாலும் அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப் போகிறது ' (சூறா ரஃத் 31)
இல்லை, இந்தக் குர்ஆன் உயிரோடிருக்கும் மனிதனோடு பேசி அவனை புதியதோர் அமைப்பில் வளர்த்தமைக்கக்கூடியது. அறிவுள்ளோர்களோடு பேசி அவர்களை வழிகாட்டுகின்றது. ஸஹாபி சமூகம் இக்கருத்தை நன்கு விளங்கிக் கொண்டது. கடைசியாக அந்த அற்புதத்தின் ஆழ்ந்த தன்மையை, நோக்கத்தை புரிந்து கொண்டது. மனித ஆற்றல்களை சரிவர வழிகாட்டுகின்ற இந்தப் புத்தகத்தை முழுமையாக விளங்கிக் கொண்டதால் ஒரு பெரும் நாகரீகத்தை இட்டுவிக்க அதனால் முடியுமாக இருந்தது.
குர்ஆனுடனான எனது அனுபவத்தை சுருக்கமாக கூற விரும்புகிறேன். எனக்கு பத்து வயது பூரணமாக முன் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து விட்டேன். அக்கால கட்டத்தில் குர்ஆனில் எந்தவொன்றையும் விளங்காதவனாக இருந்தபோதிலும் சில விடயங்கள் எனது கற்பனையில் விவேமான சில காட்சிகளை தோற்றுவித்தன உதாரணமாக சூறா இஸ்ராவின் பின்வரும் வசனத்தைக் கூறலாம் 'ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டி விட்டிருக்கிறோம்' (சூறா இஸ்றா: 13)
புறா அல்லது காகம் போன்ற ஏதாவதொரு பறவை எனது கழுத்தில் தொங்கவிடப்பட்ட காட்சி இந்த வசனத்தை ஓதும் போது என்னுள் தோன்றியது குர்ஆனின் எழுத்துக்களை மனனம் செய்து பழகிய நான் பிற்பட்ட காலத்திலும் அதன் எழுத்துக்களில் கூடிய கவனம் செலுத்த முற்பட்டதால் கருத்துக்கள் எனது அறிவுக்கு எட்டுவதாக இருக்கவில்லை.
பெரும் பிழையொன்றை என்னையறியாமலேயே
நான் செய்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
சிந்திப்பதை விட்டுவிட்டு எழுத்துக்களை
உச்சரிப்பதில் உள்ள தவறை மெதுமெதுவாக
மாற்ற முயன்றேன். என்னையே நான்
வற்புறுத்திக் கொண்டேன். ஏதாவதொரு
வசனத்தை கருத்து விளங்காமல் ஓதிவிட்டால்
அவ்விடத்தில் நிறுத்தி மீண்டும் அவ்வசனத்தை
ஓதி கருத்தை விளங்கிக் கொள்ளும்
பழக்கத்தை மெதுமெதுவாக என்னுள்
புகுத்திக் கொண்டேன்.
குர்ஆன் மத்ரஸாக்கள் விடும் பிழைகளையும்
அவை குர்ஆனுக்கு செய்யும் அநியாயத்தையும்
தற்போது தான் நான்உணர்ந்து
கொள்கிறேன். அவை TAPE RECORDER களை
பட்டம் கொடுத்து வெளியாக்குகின்றன.
குர்ஆனிய கருத்துக்களால் பயிற்றுவிக்கப்பட்ட
பட்டதாரிகளை வெளியேற்ற எந்த குர்ஆன்
மத்ரஸாக்களும் முயற்சிப்பதில்லை என்பது
கவலைக்குரிய ஒரு விடயமாக இருப்பதோடு,
எதிர்காலத்தில் சிந்தித்து நடைமுறைப்படுத்த
வேண்டிய ஒன்றாகவும் இது உள்ளது.
0 comments:
Post a Comment