Jun 25, 2012

'உலூ' பற்றி அபூதாவூதில் இடம்பெற்றுள்ள சில நபிமொழிகள்




உலூச் செய்த பின் கூற வேண்டியவை :


நாங்களும், அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒட்டகங்களை மேய்ப்பதற்கு நாங்கள் முறை வைத்துக் கொள்வோம். எனது மேய்ப்பு முறை வந்ததும், மாலையில் நான் அவற்றை (தொழுவத்திற்கு) ஓட்டி வந்தேன். அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களை அடைந்தேன். அப்போது அவர்கள் கூற நான் செவியுற்றேன். 
'உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அவர் அழகுறச் செய்து பின்பு (தொழுவதற்கு) நின்று தனது அகத்தாலும் முகத்தாலும் அவர் ஒருமுகப்பட்டு இரண்டு ரக்அத்துகளை தொழுதால் அவருக்கு (சுவனம்) நிச்சயமாகி விடும். அப்போது ஆஹா என்ன அருமை என்றேன். (ஆச்சர்ய மேலீட்டால்) சப்புக் கொட்டினேன்.
எனக்கு முன்பிருந்த ஒருவர் 'உக்பாவே! இதற்கு முன்பு ஆற்றிய உரை இதைவிட அருமை' என்று கூறினார். (யார் என்று) பார்த்தேன். அவர் உமர்பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான்! அபூஹப்ஸ் அவர்களே! அது என்ன உரை என்று கேட்டேன். நீ வருவதற்கு சற்று முன்பு தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அவர்கள் கூறலானார்கள்.

தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்

 சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.


தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்
  எஸ்.எம்.எம் மஸாஹிர், நளீமி 
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குத் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக அதன் தாய் கொண்டிருக்கும் கருத்து மிகவும் செல்வாக்கு மிக்கதானதாகும். அக்கருத்தின் அடிப்படையில்தான் அப் பிள்ளையின் உடல், உள, அறிவு வளர்ச்சியும் சிலபோது அதன் முழு வாழ்வும் தங்கியுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய சரியான கருத்தை இஸ்லாமிய ஷரீஅத்தினதும் நவீன அறிவியல் ஆய்வுகளினதும் நிழலில் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் மிகவும் நெருக்கமானவள். அவள்தான் அப்பிள்ளையின் மீது மிகவும் பாசமும் இரக்கமும் கொண்டவள். அவளது தாய்ப்பால்தான் எல்லா வித உணவு, பானங்களை விடவும் மிக உயர்ந்த உணவு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டல் தொடர்பாக அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
'(தங்களுடைய குழந்தைக்கு தம் மனைவிகளைக் கொண்டே) பால் ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக, தாய்மார் கள், தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டு வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள். இன்னும் (பாலூட்டும் இக்காலங்களில்) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி (வழங்குவது) தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கேற்றவாறல்லாது (செய்யும்படியாக) சிரமப்படுத்தப்படமாட்டாது. ஒரு தாய் தன் குழந்தையின் காரணமாக, இன்னும் ஒரு தந்தை தன் குழந்தையின் காரணமாக துன்புறுத்தப்படமாட்டார். (குழந்தையின் தகப்பன் இறந்து விட்டால், அதனைப் பரிபாலிப்பது) இவ்வாறே வாரிசின் மீது (கடமை) இருக்கிறது. (குழந்தையின் தாய், தகப்பன்) இருவரும் சம்மதித்து, ஆலோசனை செய்து, (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க நாடினால், (அவ்வாறு செய்வது) அவ்விருவர் மீதும் குற்றமல்ல. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு, (செவிலித்தாயைக் கொண்டு) பாலூட்டவும் நாடினால், நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்து விட்டால், உங்கள் மீது குற்றமாகாது. நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக் கூடியவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (சூறதுல் பகரா : 233)
மேலே குறிப்பிடப்பட்ட இறை வசனம் பின்வரும் அம்சங்களைத் தெளிவுபடுத்துகின்றது.
01. தனது குழந்தைக்கு போதுமான காலப்பகுதி வரை பாலூட்டுவது அதன் தாய் மீது கடமையாகும்.
02. ஒரு குழந்தைக்குப் பூரணமாகப் பாலூட்டுவதற்கான காலப்பகுதி இரண்டு வருடங்களாகும்.

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?


 பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.] 
ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?
அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

"அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது"


 ''அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.''(அல் குர்ஆன் 12:111)
ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களும் நம்மைக் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறது. நாமும் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு இரு பெருநாட்களையும் வழியனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் மாற்றங்களையும் நாம் பெற்றிருக்கின்றோமா? என்பது தான் இப்போது நாம் மிகவும் அவசியமாக அலச வேண்டிய விஷயமாகும்.
நோன்புப் பெருநாளாக இருந்தாலும், தியாகத் திருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் அந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய பாடங்கள் மக்களுக்கு போதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
உதாரணத்திற்கு இப்போது நம்மை கடந்து சென்ற ஹஜ்ஜுப் பெருநாளை எடுத்துக் கொள்வோம். ஹஜ்ஜுப் பெருநாள் என்ற பெயரைக் கேட்டாலே நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடைய மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துணைவியார் அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இவர்களின் வரலாறுகளும், தியாகங்களும் தான் நம்முடைய மனதிற்கு வருகின்றது.
இறைவன் ஏன் இந்தச் சரித்திரங்களைக் கூற வேண்டும்? நாம் கதை போல் கேட்டு விட்டுச் செல்வதற்காகவா? இல்லை, அவற்றிஇருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவா?
நபிமார்கள் மற்றும் முன்னோர்களின் சரித்திரங்களை இறைவன் நமக்கு கூறியிருப்பதன் நோக்கத்தைப் பற்றி திருமறைக் குர்ஆன் எடுத்தியம்புவதைப் பாருங்கள்:
தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்கு போதனையும் இதில் உமக்கு கிடைத்துள்ளது. (அல்குர்ஆன் 11:120)
(முஹம்மதே!) இவ்வாறே முன் சென்ற செய்திகளை உமக்குக் கூறுகிறோம். நம் அறிவுரையையும் உமக்கு வழங்கியுள்ளோம். (அல்குர்ஆன் 20:99)
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! (அல்குர்ஆன் 7:176)
''அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.'' (அல்குர்ஆன் 12:111)
வரலாறுகளின் நோக்கம் நாம் படிப்பினை பெற வேண்டும் என்பது தான். அந்த வரலாறுகளைக் கேட்கின்ற நாமும் புதியதோர் வரலாற்றைப் படைக்க வேண்டும் என்பது தான். நம்மைப் படைத்தவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்று நாயகர்களாக உருவாவதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொண்டோமா? என்பதை இங்கே நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆண் சகோதரர்களை விட பெண் சகோதரிகள் தான் இந்தக் கேள்விக்கு மிகவும் தகுதியானவர்கள். ஆண்களுக்குத் தகுதியில்லை என நாம் கூறவில்லை. ஈமானிய வலிமைக்கு உதாரணமாகவும், இந்த ஹஜ்ஜுப் பெருநாள் சரித்திரத்திலும் மிக முக்கிய நாயகர்களாகத் திகழக் கூடியவர்கள் பெண்கள் தான்.

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்





எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ, எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமோ, எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன. அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.  


கல்லூரியில் காதல் வயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது. முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.
சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் "கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது" என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர். அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.
பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது. புகை, மது, ஊர் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது. தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும், நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.
ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற பெயரில் மிக சகஜமாக கை குலுக்கிக் கொள்வதும், உரசிக்கொள்வதும், சினிமா, பீச் என்று ஊர் சுத்துவதர்க்கு பெயர் நட்பு என்றும் அது அவர்களுடைய சுதந்திரம் என்றும் கூறிக் கொள்கின்றனர். இந்த நட்புதான் பிற்காலத்தில் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை.
சில மாணவிகள் தங்களுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருக்கும் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் குழைந்து பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். இது நிச்சயமாக மானக்கேடான செயலாகும்.

Jun 6, 2012

நாமும் நமது மரணமும்



மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4 : 78)
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல்குர்ஆன் 3 :145)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு ''லா இலாஹ இல்லல்லாஹு'' 'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லீம் 1672)
மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.
நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.
மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, ''அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.'' (அல்குர்ஆன் 31 : 34)
அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.
மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள்.
வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான், ''ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள், பிந்தவும் மாட்டார்கள்''. (அல்குர்ஆன் 10 : 49)
மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.
உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில்' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
''உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள்.'' (அல்குர்ஆன் 32 : 11)
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.
இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.
  உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவது   
உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)
  நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல் 
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.
''நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள்''. (அல்குர்ஆன்: 16 : 32)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, திர்மிதி 987)
  மறுப்போரின் உயிர்கள் 
படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள்.
திருமறையில் வல்ல அல்லாஹ்,
''(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.'' (அல் குர்ஆன்: 8 : 50,51)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி 992)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 1932)
கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
''தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவீர்கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது''. (அல் குர்ஆன்: 16:28,29)
''நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டடார்கள்.'' (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லீம் 1715)
ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

''முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்?''


 இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? "இது வேறோரு கடவுள்", "பொய்யான கடவுள்" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.
பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். - ஸூ வாட்ஸன் Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி ]


உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும்.
நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.
நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக்கேட்டேன்.
அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.
தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது.நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித
பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை!
"நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!"
என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம்.
மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது.
இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? "இது வேறோரு கடவுள்", "பொய்யான கடவுள்" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.
கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார். விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை! மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை.
என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது என்பவர் யார்? கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன்.
முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.
இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)
பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம்.
முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.
மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்ப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு ஒண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன்.
நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது.
நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.
இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு ‘இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்’ என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.
இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
"நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)" (அல்குர்ஆன் 6:162-163)
சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்.
நன்றி: www.suvanathendral.com

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழலில் நிற்போம்


 இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன.
நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன. இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 7:200, 201)
தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் திக்ர் மழையில் நமது நாவுகள் நனைய வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.
''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழஇன் மூலம் நிழலளிப்பான்.
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர்.
5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர்.
7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6806)
பாதுகாப்புக் கேடயம்
''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்இ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வஇமையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிஇருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும். மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6403)
 அல்லாஹ்வை நினைத்தால் அவன் நம்மை நினைப்பான்
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன் 2:152)
 நாம் நடந்து சென்றால் அல்லாஹ் ஓடி வருவான்
''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 7405)
 சுவனத்தின் புதையல்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்திஇருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ''அப்துல்லாஹ் பின் கைஸ்!'' என்று அழைத்தார்கள். ''கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன். ''உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள். ''சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன். ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4202)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜும்தான் என்ற மலையைக் கடந்து சென்ற போது. ''செல்லுங்கள்! இது தான் ஜும்தான் மலையாகும். முஃப்ரிதூன் முந்தி விட்டனர்'' என்று சொன்னார்கள். ''முஃப்ரிதூன் என்றால் யார்?'' என்று நபித்தோழர்கள் வினவிய போது. ''அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்கள், பெண்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்இலிம் 4834
 சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும் திக்ர்
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1142)
 ஆயிரம் நன்மைகள்
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது. ''உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?'' என்று கேட்டார்கள். எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ''ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4866
 பாவத்திற்குப் பரிகாரம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சபையிஇருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)'' என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?'' என்று கேட்ட போது, ''அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 4217)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )