Jun 25, 2012

'உலூ' பற்றி அபூதாவூதில் இடம்பெற்றுள்ள சில நபிமொழிகள்




உலூச் செய்த பின் கூற வேண்டியவை :


நாங்களும், அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒட்டகங்களை மேய்ப்பதற்கு நாங்கள் முறை வைத்துக் கொள்வோம். எனது மேய்ப்பு முறை வந்ததும், மாலையில் நான் அவற்றை (தொழுவத்திற்கு) ஓட்டி வந்தேன். அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களை அடைந்தேன். அப்போது அவர்கள் கூற நான் செவியுற்றேன். 
'உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அவர் அழகுறச் செய்து பின்பு (தொழுவதற்கு) நின்று தனது அகத்தாலும் முகத்தாலும் அவர் ஒருமுகப்பட்டு இரண்டு ரக்அத்துகளை தொழுதால் அவருக்கு (சுவனம்) நிச்சயமாகி விடும். அப்போது ஆஹா என்ன அருமை என்றேன். (ஆச்சர்ய மேலீட்டால்) சப்புக் கொட்டினேன்.
எனக்கு முன்பிருந்த ஒருவர் 'உக்பாவே! இதற்கு முன்பு ஆற்றிய உரை இதைவிட அருமை' என்று கூறினார். (யார் என்று) பார்த்தேன். அவர் உமர்பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான்! அபூஹப்ஸ் அவர்களே! அது என்ன உரை என்று கேட்டேன். நீ வருவதற்கு சற்று முன்பு தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அவர்கள் கூறலானார்கள்.
'உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அழகுறச் செய்து, அவர் அதை நிறைவு செய்யும் போது அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு லாஷரீக லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தவிர யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அடியாரும், திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்) என்று கூறினால் அவருக்காக எட்டு சுவனங்களின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அவற்றில் அவர் விரும்பிய எதிலும் நுழையலாம். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 169)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் உக்பா பின் ஆமிர் அவர்களிடமிருந்து மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். இவர் ஒட்டகை மேய்ப்பு செய்தியை குறிப்பிடாததோடு 'அவர் அவ்வுலூவை அழகுறச் செய்து' என்று வரும் இடத்தில் 'பிறகு தனது பார்வை விண்ணோக்கி உயர்த்தி மேற்கண்டவாறு கூற வேண்டுமென' தொடர்ந்து அறிவிக்கின்றார். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 170)(நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 171)
ஒருவர் ஒரே உலூவில் பல தொழுகை தொழுதல் :
நான் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உலூவைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் 'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே உலூவில் பல தொழுகைகளை தொழுது கொள்வோம்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ அஸத் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 172)
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி நாளின் போது ஒரே உலூவில் ஐந்து நேரத் தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸ்ஹுசெய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நீங்கள் இதுவரை செய்திராத ஒன்றை இன்று நீங்கள் செய்யக் காண்கிறேனே? (ஏன்?) என்ற வினவியதும் 'நான் வேண்டுமென்றுதான் செய்தேன்' என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.
உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல் :
'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் உலூச் செய்து விட்டு தனது பாதங்களில் ஒரு நக அளவு நனையாமல் விட்டவராக வந்தார். அவரை நோக்கி அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க' என்று கூறினார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள ஜரீர் பின் ஹாசிம் என்பாரிடமிருந்து அறிய முடியவில்லை. இதை இதே வரிசையில் இடம் பெற்றுள்ள இப்னு வஹப் மட்டுமே அறிவிக்கின்றார்.
'நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க' என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக மஃமல் அவர்களிடமிருந்து இதைப் போன்று அறிவிக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 173)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அவருடைய மேற்பாகத்திற்கு மேல் திர்ஹம் (நாணயம்) அளவிற்கு நீர்படாமல் வெண்மை தெரிந்தது. அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலூவையும் தொழுகையையும் மீட்டுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: நபித்தோழர்களில் ஒருவர். நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 175)
ஹதஸ் ஆகிவிட்டோமோ என்று ஐயம் கொள்தல் :
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிவது போன்று உணர்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் காற்று பிரிந்த சப்தத்தை அல்லது அதன் நாற்றத்தை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 176)
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 177)
முத்தமிட்டால் உலூ முறியுமா? :
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அவர்கள் உலூச் செய்யவில்லை என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்:
இந்த ஹதீஸ் முர்ஸலாகும். காரணம் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்ற இப்றாகீம் என்பார் அன்னையாரிடமிருந்து எதையும் செவியுறவில்லை. அபூஅஸ்மா என்று இடுகுறிப் பெயரால் அழைக்கப்படும் இப்றாகீம் அத்தைமூ என்பார் நாற்பது வயதை அடையும் முன்பே இவர் மரணித்து விட்டார் என்று இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 178)
இவ்வாறே இந்த ஹதீஸை பர்யாபீ அவர்களும் மற்றவர்களும் அறிவிக்கின்றனர் என்று இமாம் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது மனைவியரில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு பிறகு உலூச் செய்யாமல் தொழச் சென்றார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 179)
இதை அன்னையாரிடமிருந்து அறிவிக்கின்ற உர்வா அவர்கள் தெரிவிக்கின்றார். 'உங்களைத் தவிர அது வேறு யாராகவும் இருக்க முடியாதே' என்று நான் வினவியதற்கு அன்னையார் அவர்கள் சிரித்தார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இவ்வாறே இதை சாயிதா என்பவரும் அப்துல் ஹமீது அல்ஹிம்மானி அவர்களும் சுலைமான் அல்அஃமஷ் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்.
இதே ஹதீஸை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து உர்வா அல்முஸ்னீ என்பார் வாயிலாக எமது அறிவிப்பாளர்கள் அறிவித்தனர் என்று அஃமஷ் அறிவிக்கின்றார்.
('எமது அறிவிப்பாளர்கள்' என்று குறிப்பிடப்படுபவர்களில் ஹபீப் பின் உபைப் சாபித் என்பாரை தவிர வேறு யாரும் அறியப்படாதவர்கள் ஆவர்.) (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 180)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஹபீப் என்பாரிடமிருந்து அஃமஷ் அறிவிக்கும் இந்த ஹதீஸையும் உதிரப்போக்குள்ளவள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று இதே இஸ்நாத் மூலம் அஃமஷ் அறிவிக்கும் ஹதீஸையும் இவ்விரண்டு ஹதீஸ்களும் பலவீனமானவையே என்று மக்களுக்கு அறிவித்திடுக என்று யஹ்யா பின் சயீத் அல்கதான் என்பார் ஒருவருக்கு தெரிவித்தார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'உர்வா அல் முஸ்னீ என்பாரிடமிருந்து மட்டும் தான் ஹபீப் அறிவிக்கின்றார். அதாவது இவர் உர்வா பின் ஜுபைர் அவர்களிடமிருந்து எதையும் அறிவிப்பார்களுக்கு அறிவிக்க வில்லை' என்று சவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து உர்வா பின் ஜுபைர், ஹபீப் ஆகியோர் வழியாக ஹம்ஸா அச்சய்யாத் அவர்கள் சரியான ஹதீஸை அறிவிக்கின்றனர்.
ஆண்குறியை தொடுவதால் உலூ நீங்குமா? :
நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மாவான் கூறினார். இதை 'நான் (இது வரை) அறியவில்லையே' என்றேன். அதற்கு மர்வான் யார் தனது ஆண்குறியை தொடுகிறாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற தான் செவியுற்றதாக புஸ்ரா பின்த் சப்வான் எனக்கு அறிவித்தார்கள் என்று சொன்னார். (அறிவிப்பவர்: உர்வா பின் ஜுபைர் அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 181)  
ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி:
நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! 'ஒருவர் உலூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது தொடர்பாய் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று வினவினார். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அதுவும் அவரது ஒரு உறுப்பு தானே?' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: தன் தந்தை வாயிலாக கைஸ் பின் தல்க் அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 182)
இந்த ஹதீஸை தல்க் பின் கைஸ் என்பாரிடமிருந்து முஹம்மது பின் ஜாபிர் வழியாக ஹிஷாம் பின் ஹஸ்ஸான், ஸுப்யான் சவ்ரீ, சுஃபா, இப்னு உஐனா, ஜரீர் அர்-ராசி ஆகியோர் அறிவிக்கின்றனர்.
முந்தைய ஹதீஸின் இஸ்நாத் கருத்தை கொண்ட ஹதீஸை கைஸ் பின் தல்க் அவர்களிடமிருந்து முஹம்மது பின் ஜாபிர் அறிவிக்கின்றார். ஒருவர் 'தொழுகையில்' தன் ஆண்குறியை தொடுவது தொடர்பாய் என்ன கருதுகின்றீர்கள் என்று வினவியதாக இதில் அறிவிக்கின்றார். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 183)
ஒட்டகை இறைச்சி உண்ணுவதால் உலூ நீங்குமா? :
ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உலூ செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. 'அதைச் சாப்பிட்டால் உலூச் செய்யுங்கள்' என்று பதிலளித்தனர். ஆட்டிறைச்சியைச் சாப்பிட்டால் உலூச் செய்ய வேண்டுமா? என்று வினவப்பட்ட போது 'அதற்காக நீங்கள் உலூச் செய்ய வேண்டாம்' என்று பதிலளித்தனர்.
ஒட்டகை தொழுவங்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது 'ஒட்டகைத் தொழுவங்களில் தொழாதீர்கள். காரணம் அவை (ஒட்டகங்கள்) ஷைத்தான்களின் வகையாகும் என்று பதிலளித்தனர். ஆட்டுக் கொட்டில்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது அவற்றில் 'நீங்கள் தொழுங்கள், அவை (ஆடுகள்) அபிவிருத்திக்குரியவை' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: பர்ரா பின் அஸிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 184)
பச்சைக்கறியை தொடுவதினாலோ அல்லது கழுவுவதினாலோ உலூ நீங்குமா? :
ஆட்டை உரித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு அருகில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து சென்ற போது அவரை நோக்கி அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ விலகுக! நான் உனக்கு (உரித்துக்) காட்டுகிறேன் என்று கூறி தனது கையை தோலுக்கும் இறைச்சிக்கும் இடையே உட்படுத்தி அதை பலமாக உள்ளே கொண்டு சென்றார்கள். அவர்களது கை அக்குள் வரை மறைந்து விட்டது. பிறகு சென்று உலூச் செய்யாமல் தொழுதார்கள்.
அய்யூப், அமர் ஆகிய இதன் அறிவிப்பாளர்கள் அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் என்று கருதுகின்றோம் என்று தெரிவிக்கின்றார்கள்.
அமர் என்பவர் தனது ஹதீஸ் அறிவிப்பில் அதாவது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீரை தொடாமல் என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: இதே ஹதீஸை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை குறிப்பிடாமல் 'அதா' விடமிருந்து ஹிலால் வாயிலாக அப்துல் வாஹித் பின் ஜியாத் அபூமுஆவியா ஆகியோர் முர்ஸலாக அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள ஹிலால் என்பார் அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு (நபித்தோழர்) அவர்களிடமிருந்து (அதாபின் யஸீத் அவர்கள் நேரடியாக அறிவிக்காமல்) என்று தான் அறிகின்றேன் எனக் கூறுகிறார்கள். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 185)
இறந்தவற்றை தொட்டால் உலூ நீங்குமா? :
தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத்தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும் இணைந்திருக்கும் ஒரு ஆட்டுக்குட்டிக்கருகில் சென்ற போது அதை அதன் காதை பிடித்து தூக்கி பிறகு 'இதை உங்களில் யார் விரும்புவார்? என்று வினவினார்கள்' என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 186)
சமைத்த உணவை சாப்பிடுவதால் உலூ நீங்குமா? :
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டின் தொடை பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஹதீஸ் எண்: 187)
ஓர் இரவு நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர்கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்ய சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்கு வெட்டத் துவங்கினார்கள். அப்போது பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள். உடனே அவர்கள் கத்தியை போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கையில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 188)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருக்கிறது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக) வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக) வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்பதாக கூடுதலாக அறிவிக்கின்றார்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆட்டின் தொடைப் பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்து விரிப்புத்துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 189)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்டின் தொடைப் பகுதியை கடுவாய் பற்களால் கடித்து சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 190)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு தனது மிச்ச உணவை கொண்டு வரும்படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழலானார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 191)
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது (நெருப்பில்) சமைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதினால் உலூ செய்யாமலிருப்பது தான். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 192)
இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகையளித்தனர். எகிப்திய பள்ளிவாயிலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது நான் செவியுற்றேன். அவர் கூறலானார்: ஒருவரது வீட்டில் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் ஆறேழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன்.
அப்போது பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவர்களை தொழுகைக்கு அழைத்தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில் (அடுப்பில்) வைத்திருந்த ஒருவருக்கருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனது சமையல் ஆகிவிட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம்! எனது தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! என்று பதிலளித்தார். அதிலிருந்து அவர்கள் ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மெண்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களையே உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன். (அறிவிப்பவர்: உபைத் பின் சுமாமா அல்முராதீ அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 193)
சமைத்ததை சாப்பிட்டால் உலூச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல்:
நெருப்பில் சமைத்த(தை சாப்பிடுவ)தினால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 194)
அபூசுஃப்யான் பின் சயீத் பின் அல்முகீரா அவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். அவரை உம்முஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் (பருகியதும்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க் கொப்பளித்தார்கள். அப்போது உம்முஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 'எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நெருப்பில் சமைத்த பொருள் உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று சொன்னார்கள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸலாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 195)
பால் பருகியதும் உலூச் செய்ய்ய வேண்டுமா? :
பால் பருகியதும் உலூச் செய்தல் :
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பால் பருகினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச்செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு இது கொழுப்பு அடங்கியது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 196)
பால் பருகியதும் உலூச் செய்யாமலிருக்க அனுமதி :
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பால் பருகினார்கள். ஆனால் வாய்க் கொப்பளிக்காமலும், உலூச் செய்யாமலும் தொழுதார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 197)
இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான ஜைத் அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீபின் ராஷித் என்பாரை பற்றி பின்வருமாறு கூறுகிறார்: 'எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர் ஷுஃபா ஆவார்.
இரத்தம் வெளிப்படுவதால் உலூ நீங்குமா? :
'தாத ரிகாஃ' என்ற போரின் போது அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டான். எனவே அவன் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவற்றை தொடரலானான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரிடத்தில் தங்கலானார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார்? என வினவினார்கள். முஹாஜிரீன்களில் ஒருவரும் அன்சாரிகளில் ஒருவரும் பதிலளித்ததும் நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து கொள்ளுங்கள் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்கு சென்றதும் முஹாஜிரித் தோழர் படுத்துக் கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார். (சபதம் செய்த அம்மனிதன் வந்து விட்டான் அவன் (தொழுகின்ற) அவரின் தோற்றத்தை கண்டதும் அவர் அக்கூட்டத்தின் காவலாளர் என்று விளங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பெய்தான். அதை அவர் மேல் (குறி தவறாது) விழச் செய்தான். அதை அவர் கழற்றி விட்டார்.
இவ்வாறு அவன் மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும் வரை (அவர் அவற்றை கழற்றி விட்டார்) பிறகு ருகூஃ செய்து சஜ்தா செய்தார். பிறகு அவரது தோழர் தூங்கி எழுந்தார். அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று (எதிரி) அவன் புரிந்து கொண்டதும் பயந்தோடி விட்டான். அன்சாரித் தொழரின் இரத்தக் காட்சியை முஹாஜிர் தோழர் கண்ட போது 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூய்மையானவன்) அவன் அம்பெய்த ஆரம்பத்திலேயே என்னை எழுப்பியிருக்கக் கூடாதா என்று வினவினார். அதற்கு அவர் நான் ஓதிக் கொண்டிருந்த சூராவில் (அத்தியாயத்தில்) ஆழ்ந்து விட்டேன். அதை நான் துண்டிக்க விரும்பவில்லை என்று அவர் பதில் சொன்னார். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 198)
உறங்குவதால் உலூ நீங்குமா? :
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓர் இரவில் (ஒரு முக்கிய பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர்கள் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கெனில் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வருகையுற்று, 'உங்களைத் தவிர யாரும் தொழுகைக்காக காத்திருப்பவர்கள் யாருமில்லை' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 199)
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவிற்கு எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 200)
இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம்' என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக கதாதா அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்.
இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது. அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு துயில் கொள்ளும் வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிப்பவர் சாபித் அல்புனானீ ஆவார். இவர் உலூவைப் பற்றி இதில் குறிப்பிடவில்லை. நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 201)
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் 'உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே! என்று வினவினேன். 'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய வேண்டும்' என்று பதிலளித்தனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூது, ஹதீஸ் எண்: 202)
உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் 'ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன (அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய வேண்டும்' என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்கவில்லை.
இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர். அவர்கள் யசீத் கூறியதிலிருந்து எதையுமே குறிப்பிடவில்லை.
'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (உள்ளமும் சேர்ந்து உறங்குவதை விட்டும்) பாதுகாக்கப்பட்டவர்களாவார்கள்' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'எனது கண்கள் உறங்கும், எனது உள்ளம் உறங்காது' என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷுஃபா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
கதாதா அவர்கள் அபுல் ஆலியாவிடமிருந்து செவியுற்றவை நான்கு ஹதீஸ்களை மட்டும் தான். அவை யூனுஸ் பின் மத்தா அவர்கள் தொடர்பான ஹதீஸ், தொழுகை தொடர்பான இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹதீஸ், நீதிபதிகள் மூவர் என்ற ஹதீஸ், எனக்கு விருப்பமானவர்கள் என்னருகில் உள்ளனர். அவர்களில் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆவார் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகியவையாகும்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
யசீத் அபூகாலித் தாலானியின் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் தெரிவித்தேன். இதை அவர்கள் மறுக்கும் விதமாக என்னை கடிந்து கொண்டார்கள். அதோடு கதாதா அவர்களின் அறிவிப்பாளர்கள் கூறாததை அவர்கள் கூறியதாக அவர்களின் மீது புகுத்திச் சொல்ல யசீத் அபூகாலித் தாலானிக்கு என்ன அவசியம் ஏற்பட்டு விட்டது? என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் இதை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. (காரணம் இது பலவீனமாகும்)
மேற்கண்ட ஹதீஸ்கள் யாவும் அபூதாவூதில் உள்ளதாகும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )