Aug 17, 2012

பெருநாள் தொழுகை பற்றி....




அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்பு பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது
புகாரி : 953

அபு சயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜு பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையே துவக்குவார்கள். தொழுது முடிந்து எழுந்து மக்களை முன்னோக்குவர்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசையில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளை இட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதை பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். ..................
புகாரி : 956

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் தொழுகைகளை தொழுதுவிட்டு பிறகு உரை நிகழ்த்துவார்கள்.
புகாரி : 957

ஜாபிர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆகியோர் கூறினார்கள்.
நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜு பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
புகாரி : 960

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) அவர்கள் இருந்தார்கள். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.பெண்கள் (தங்கள் பொருட்களை ) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலைகளையும் வளையல்களையும் போடலானார்கள்.
புகாரி : 964

நபி(ஸல்) அவர்கள் கன்னி பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
புகாரி: 974

பெருநாள் தொழுகை இரண்டு ரகத்கள் தொழ வேண்டு. தக்பீர் தஹ்ரீமாவிற்கு பின்னர், முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ...அல்லது வஜ்ஜஹது வஜ்ஹிய லில்லதீ...என்ற துவாவை ஓதி விட்டு அல்லாஹ் அக்பர் என்று இமாம் ஏழு தடவை கூற வேண்டும்.

பின்பற்றி தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றி கூற வேண்டும்.

பின்னர் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி ருகூ சஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும்.

பின்னர் அல்லாஹ் அக்பர் என்று கூறி இரண்டாம் ரக் அத்திர்க்கு எழுந்தவுடன் சூரத்துல் பாதிஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹ் அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றி தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை கூற வேண்டும்.

பின்னர் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி ருகூ சஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும்போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துவவையும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துவவையும் ஓத கூடாது.

நபி(ஸல்) அவர்கள் முதல் ரக் அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக் அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராத்திர்க்கு முன்பு கூறுவார்கள்.

நூல்கள்: அபுடவூத் 971, தாரகுத்னி பாகம் 2 பக்: 48, பைகஹீ 5968



பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றி கொள்வார்கள்......
புகாரி : 986

Aug 14, 2012

ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம்



ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விதியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி 1503)
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரை கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரை கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல்: அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817)

Aug 9, 2012

லைலதுல் கத்ரின் சிறப்புகள்



ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்...


மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும்

அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம்


‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்). “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதியும், கண்குளிர்ச்சியும் இருக்க முடியும் என்பதை இக்கூற்றுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இன்றைய நமது தொழுகையின் நிலையை கொஞ்சம் மீழ் பரிசீலனை செய்து பார்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைபட்டிருக்கின்றோம். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியையும், கண்குளிர்ச்சியையும் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?
தொழுகையாளிகளே! உங்களுக்காக எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள் காத்திருக்கின்றன. தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ்படுத்தும் பாவிகளுக்கு அல்ல!
தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:
‘ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்”. (அல்முஃமினூன் 23: 1,2).

மன உறுதியுடன் இருப்பவர்கள் தொழுகையாளிகள் என்ற சுபச்செய்தி:
“நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான். ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானானல் (அது பிறருக்கும்கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான். தொழுகையாளிகளைத் தவிர (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்”. (அல்மஆரிஜ் 70: 19-23).

தொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:
‘அல்லாஹ்வின் தூதிரடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்’. (முஸ்லிம்).

Aug 3, 2012

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு கரண்டைக் கால் வரையும், சிலரக்கு முட்டுக்கால் வரையும், சிலருக்கு இடுப்பவரையும், சிலருக்கு வாய்வரையும் வந்துவிடும். அந்த நேரத்தில் நான்கு கேள்விகளுக்கு விடை சொல்லாதவரை தான் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது. ஒவ்வொருவரும் தன்னைப்பற்றியே சிந்திக்கும் நாளாகும் அது. அந்த நாளில்தான் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் மேல்கூறப்பட்ட ஏழு பண்புள்ள மக்களை அமரவைப்பான். அல்லாஹ் நம்மையும் அந்த கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

ரமழானும் தர்மமும்



நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.

பெண்களும் நோன்பும்



இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.
மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்
ஹைல், நிபாஸ் எனப்படும் நிலைகளில் பெண்கள் தவிர்க்க வேண்டியவைகளில் தொழுகை, நோன்பு, உடலுறவு கொள்ளல், கஃபாவைத் தவாப் செய்தல் என்பன அடங்கும். மற்றப்படி அவர்கள் திக்ரும் ஸலவாத்தும் ஓதலாம். மற்றவர்களுடன் ஒன்றாக உண்ணலாம், உறவாடலாம். இஸ்லாம் இவற்றை ஏனைய மதங்கள் கூறுவது போல் தீட்டாகக் கருதவில்லை. தமிழ் மொழியில் ஹைல், நிபாஸ் என்பன மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு என்று குறிப்பிடப்படுவதனாலேயே நாமும் குறிப்பிட்டு வருகின்றோம்.

இந்நிலையில் இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால், இதனால் விடுபட்ட நோன்புகளை பின்னர் கழாச் சொய்ய வேண்டும்.
‘நபி(ஸல்) அவர்களது காலத்தில் நாம் மாதவிடாய்க்கு உட்பட்;டால் நோன்பைக் கழாச் செய்யுமாறு எமகு;கு ஏவினார்கள். தொழுகையைக் கழாச் செய்யுமாறு ஏவமாட்டார்கள்;’ என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நோன்புடன் ஒரு பெண் இருக்கையில் இந்நிலையை அடைந்தால் நோன்பு முறிந்து விடும். மஃரிபுடைய வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் இந்நிலை ஏற்பட்டாலும் அவர் அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டும்.

தீமைகளும் தீர்வுகளும்

              கண்ணியம் நிறைந்த நமது இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு முன்னுதாரணமாக இரண்டு பெண்களையே ( மர்யம்(அலை),பிர்ஆனின் மனைவி ஆசியா அவர்களையும் (பார்க்க திருக் குர் ஆன் 66:11,12) அல்லாஹ் திருக்குர் ஆனில் குறிப்பிடுகின்றான். இந்த சிறப்புக்குரிய பெண்கள் வாழ்ந்து சென்ற இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று வாழக்குடிய நம்முடைய சில பெண்களின் நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது. காதல் மற்றும் நாகரிகம் என்ற பெயரில் காமக்களியாட்டங்களை டி.வி மற்றும் பத்திரிக்கைகளில் மட்டுமே பார்த்தும், கேட்டும் வந்த நாம் தற்போது நமது ஊரிலேயே காணக்குடிய பரிதாப நிலை.

                செல்போன், டி. வி , சீரியல்கள்  மற்றும் பத்திரிக்கைகள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் ஆபாசமான செய்திகளில் ஈர்க்கப்படும் நமது மக்கள் அதிகமான தீமைகளைப் புரிந்து அல்லாஹ்விடம் பாவிகளாக நிற்கின்றோம். நாகரிகம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றமாக ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டு ஒரு வாழ்வினை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மார்க்கத்தை முறையாக பின்பற்றி நடக்காமல் இருக்கும் ஆண்களைப் போலவே அவர்களை சார்ந்து இருக்கும் பெண்களும் இருப்பதால் தீமைகள் அரங்கேறுகிறது. இவ்வுலகில் பெண்களை காமப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையில், இஸ்லாமிய பெண்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாலகுடது? என்று இஸ்லாம் சில விதிமுறைகளை கூறுகின்றது.

Aug 1, 2012

ரமழான் & ஈத் சிந்தனை!


மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த ரமழான் மாதத்தின் சிறப்புப் பற்றி சர்வ வல்லமை மிக்க இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஏகன் அல்லாஹ் வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:185 வசனத்தில் இவ்வாறு கூறி தெளிவுபடுத்துகிறான்.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியை தெளிவாக்கக் கூடியதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்க வேண்டும்; எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான்; உங்களுக்கு சிரம மானதை அவன் நாடவில்லை; (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்கா கவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (2:185)
அல்லாஹ்வுக்கும் நமக்கு இடையில் இடைத்தரகர்களாக எந்த மவ்லவி, ஆலிம், அல்லாமாவையும் கொள்ளக் கூடாது என்று அடுத்த வசனமான 2:186 இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “”நிச்சயமாக நான் சமீப மாகவே இருக்கிறான்; அழைப்போரின் அழைப் பிற்கு அவர் அழைக்கும்போது விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என் னையே நம்பட்டும்; அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக! (2:186)
அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதரும் மார்க்கத்தைத் தெளிவாக விளக்கிய பின்னர் மனிதர்களில் கலீஃபாக்கள், நபிதோழர்கள், ஸலஃபுகள், இமாம்கள்,அவுலியாக்கள், முன் னோர்கள், (பார்க்க 2:134,141)
பின்னோர்கள், இன்றுள்ளோர்கள் என எவரது தத்துவ விளக் கத்தையும், சுய விளக்கத்தையும் மார்க்கமாக ஒருபோதும் ஏற்கக் கூடாது என்று 18:102-106, 33:36 இறைவாக்குகளில் திட்டமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். அது பெரும் வழிகேடு; நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் திட்டமாக அறிவித்துள்ளான்.
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102) (மேலும் பார்க்க : 18:103-106)
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட் டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு-நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36) (மேலும் பார்க்க: 33:66-68)
2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 இறைவாக்குகள் “தாஃகூத்’ எனக் குறிப்பிட்டுக் கூறும் மனித ஷைத்தான்களாகிய வரம்பு மீறும் மதகுருமார்களை வழிகாட்டிகளாக ஒரு போதும் கொள்ளக் கூடாது, அல்லாஹ்வையும், அவனது கண்காணிப்பில் இருந்த இறுதித் தூதரையும் மட்டுமே வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனங்களை மீண்டும் மீண்டும் கற்றுச் சிந்தித்து விளங்கி நடக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “”அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணியுங்கள்; தாஃகூத்களை (மனித ஷைத்தான்களாகிய மதகுருமார்களை) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்….” (16:36)
“”தாஃகூத்” எனும் மனித ஷைத்தான்களாகிய மதகுருமார்கள் அற்ப உலக ஆதாயங்களையும், பட்டம் பதவிகளையும் நோக்கமாகக் கொண்டு, தலைமைத்தனத்திற்கு ஆசைப்பட்டு, போட்டி பொறாமை காரணமாகவே 21:92, 23:52 இறை வாக்குகள் கூறும் ஒன்றுபட்ட சமுதாயத்தை சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் மத்ஹபுகள், தரீக்காக்கள் என முகல்லிதுகளாகவும், ஃகைர முகல்லிதுகள், குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுபவர்கள் எனக்கூறி அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ இத்தியாதி, இத்தியாதி புதுப்புதுப் பெயர்களை இவர்களாகச் சூட்டிக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து முஸ்லிம்களை நரகை நோக்கி நடை போட வைக்கிறார்கள். காதியானிகள் இறுதி நபிக்குப் பிறகு ஒரு பொய் நபியைக் கற்பனை செய்து கொண்டு தாஃகூத்களாகச் செயல்பட்டு புதியதொரு பிரிவைக் கற்பனை செய்து அவர்களை நம்பியுள்ள மக்களை நரகிற்கு இட்டுச் செல்கின்றனர். (பார்க்க : 7:71, 12:40, 53:23)
சமுதாயத்திலுள்ள எண்ணற்றப் பிரிவுகளுக்குக் காரணம் தாஃகூத் எனும் மனித ஷைத்தான்களாகிய இந்த மதகுருமார்களிடையே ஏற்படும் போட்டி, பொறாமை, பதவி, ஆசை அற்ப உல கியல் ஆதாயம் போன்றவையே. இந்த உண் மையை 2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17,18, 47:25 இறைவாக்குகளை நீங்களே சுய சிந்த னையுடன் படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
அவர்களுக்கு (மார்க்கத்தில்) தெளிவான கட் டளைகளைக் கொடுத்தோம். எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (நெறிநூல்) ஞானம் வந்த பின் னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண் டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார் களோ அதில் கியாம நாளில் அவர்களடையே தீர்ப்புச் செய்வான்.
இதன் பின்னர் உம்மை ­ரீஅத்தில் ஒரு நேரான வழயில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக. அன்றியும் அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். (45:17,18)
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவான பின், தம் முதுகு களைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்டான். (47:25)
45:18ல் காணப்படும் “”அன்றியும் அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங் களைப் பின்பற்றாதீர்” என்ற நபிக்கே அல்லாஹ் வால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை நாம் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான தாஃகூத் எனும் மனித ஷைத்தான்களாகிய மதகுருமார் கள் இறுதி நபியையே வழிகெடுக்க முற்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வழிகெட்ட போத னைகள் நபியின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தன.
இந்த உண்மையை குர்ஆன் 17:73,74,75, 69:44, 45,46,47 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. நபிமார்களையே தாஃகூத்களான மதகுருமார்கள் அலைக்கழித்திருக்கிறார்கள் என்றால் நம் போன்ற சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
எனவே அல்குர்ஆனின் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களில் அணு வல்ல, அணுவின் முனை அளவும் தத்துவ விளக் கம் என்ற பெயராலும் சுய விளக்கம் என்ற பெயராலும், 33:36 எச்சரிப்பது போல் வேறு கருத்துக் கொள்ள அனுமதியே இல்லை. அப் படி இந்த மதகுருமார்கள் வேறு கருத்துக்களை எடுத்து வைக்கும்போது ஷைத்தான் அதை நமக்கு அழகாகக் காட்டத்தான் செய்வான்.
அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை விட ஷைத்தானின் சுய விளக்கம் ஆதம்(அலை) அவர்களை மயக்கியது போல், ஹுதைபியா உடன்படிக்கையின் போதும், நபி(ஸல்) இறந்த சமயத்திலும், சிறப்புமிக்க உமர்(ரழி) அவர் களையே தடுமாறச் செய்தது போல், ஷைத்தா னுக்கு இம்மதகுருமார்களான தாஃகூத்கள் மூலம் சாதாரண மக்களை மதி மயங்கச் செய்து அவர்களை நரகிற்கு இட்டுச் சென்று நரகை நிரப்பித் தனது சபதத்தை நிறைவு செய்வது இயலாத காரியமா? சிந்தியுங்கள்! 4:119-121, 7:20-22, 15:31-44, 16:63, 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்களை இந்த ரமழான் மாதத்தில் நேரடியாக நீங்கள் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்துக் கற்றுத் தெளிந்து உணர்வு பெறுங்கள்,
4:49, 53:32 இறைவாக்குகளை நீங்கள் நேரடி யாகப் படித்து விளங்கினால், நான்தான் நேர்வழி நடக்கிறேன் என்பவன் உறுதியாக கோணல் வழியில் செல்கிறான், நான் ஆலிம் என்பவன் உறுதியாக ஜாஹில்-மூடன் என்பதை யும், நான் தவ்ஹீத்வாதி என்பவன் உறுதியாக ´ஷிர்க்வாதி என்பதையும் நீங்களே விளங்கிக் கொள்ளளாம்.
தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான, நாங்கள் தான் மார்க்க அறிஞர்கள் என்று பெருமை பேசும் இம் மதகுருமார்கள் பற்றி இவ்வளவுத் தெளிவாக அல்லாஹ் விளக்கி இருந்தும் இந்த வசனங்கள் அனைத்தையும் நிரா கரித்து விட்டு, இம்மதகுருமார்கள் பின்னால் செல்கிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு இந்த மதகுருமார்களைச் சபித்தும், அவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுக் கும்படி அல்லாஹ்விடம் வேண்டியும் பிரலா பிப்பதை குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:26-29, 43:36-45, இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
அன்று அரபு மொழி தெரிந்தவர்களை 41:26 வசனம் கூறுவது போல் குர்ஆனை செவியுறா மல் தடுத்த அன்றைய குறைஷ் மதகுருமார்களான, காஃபிர்களான நிராகரிப்பாளர்களுக்கும், மவ்லவி அல்லாத பொதுமக்கள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முடி யாது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படிக்காதீர்கள்; அரபியில் குர்ஆனை ஓதி வாருங்கள், குர்ஆனை தமிழில் படிப்பது பித்அத், குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடுவது ஹராம் என்று மூடத்தனமாகக் கூறி பொது மக்களை குர் ஆனின் கருத்துக்களை அறியவிடாமல் தடுக்கும் இன்றைய மதகுருமார்களுக்கும் அணுவளவும் வேறுபாடு இல்லை. அரபி மொழி தெரிந்தவர் களுக்கே குர்ஆன் விளங்கும் என்றால் அம் மொழியில் விற்பன்னர்களான தாருந்நத்வா மதகுருமார்களுக்கு குர்ஆன் ஏன் விளங்கவில்லை? ஜாஹில்கள்-மூடர்கள், அபூஜஹீல் – மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டார்கள் என்ற அற்ப அறிவும் இல்லாத மூடர்கள் தங்களை அறிஞர்கள் என மார் தட்டலாமா? அவர்கள் எப்படி நிராகரிப் பாளர்களோ, அதேபோல் இந்த மவ்லவிகளும் நிராகரிப்பாளர்களே. எனவே 41:26-29 இறை வாக்குகள் தாஃகூத்களான இன்றைய மதகுருமார்களுக்கு மிகமிகப் பொருந்தும்.
அரபி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டு மல்ல; ஆதத்தின் சந்ததிகளான அனைத்து மக்க ளுக்கும் குர்ஆனை தெள்ளத் தெளிவாக, நேரடியாக எவ்வித சந்தேகத்திற்கும் இட மில்லாமல் முரண்பாடற்ற நிலையில் விளக்கி இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் பல இடங் களில் நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் கூறிய இருக்க, இந்த இறைவாக்குகள் அனைத் தையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ் மனிதர்களுக்காக விளங்கியுள்ளது உங்களுக்கு விளங்காது; நாங்கள் விளக்கித்தான் பொதுமக்களாகிய நீங்கள் விளங்க முடியும் என்று ஆணவம், மமதை பேசும் இம்மவ்லவிகள் நாளை மறுமையில் முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள் என்ற ஹதீஃதை கண்டுகொள்ளாத பெரும் பாவிகள். இவ்வானத்தின் கீழ் இந்த மவ்லவிகளை-மத குருமார்களை விட கேடுகெட்டப் பிரிதொரு படைப்பு இருக்க முடியாது. காரணம்?
அல்லாஹ் விளக்கியது உங்களுக்கு விளங்காது, நாங்கள் விளங்கித்தான் விளங்க முடியும் என்று கூறும் இம்மவ்லவிகள் அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்க இன்னொரு அல்லாஹ்வாகத் தான் தங்களை நம்பமுடியும்! (நவூதுபில்லாஹ்) இப்படி ஆணவம் பேசும் இந்த மவ்லவிகளை எவ்வளவு கடுமையாகத் தண்டிப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள். 42:21, 49:16 இறை வாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும், அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகும் பெரும் பாவிகளாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? அதனால் தான் மறுமையில் விசாரணை ஆரம்பித்தவுடனேயே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறவர்களாக இந்த மவ்லவிகள் இருக்கிறார்கள். 2:159-162, 42:21, 49:16 போன்ற இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்துச் சிந்தியுங்கள். 33:36 இறைக் கட்டளைப்படி எமது சுய விளக்கத்தையோ ஆலிம்கள் என அகந்தை, பெருமை பேசும் மவ்லவிகளின் சுயவிளக்கத்தையோ ஏற்காமல் குர்ஆன் வசனங்கள் நேரடியாக என்ன கூறுகின்றனவோ அவற்றை அப்படியே ஏற்று செயல்பட முன்வாருங்கள். அதுவே நேர்வழி நடப்பதாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )