Nov 30, 2012

இல்லத்தரசிகளே இது உங்களுக்காக!



இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பொதுவாக திருமணமானவுடன் பெண்கள் தன் கணவரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
பெரும்பாலான பெண்கள் கணவர் வேலைக்கு போனதும் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என தன் நேரத்தை செலவிடுகிறாள், கணவரோடு சேர்ந்து தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்க்கொண்டு போராடுகிறாள். ஒரு பெண்ணால் முள் பாதையைக் கூட மலர் பாதையாக மாற்ற நிச்சயமாக இயலும்.
நாம் பல புத்தகங்களிலும், நமது வாழ்க்கை அனுபவத்திலும் பெண்ணின் சிறப்பை தெரிந்திருப்போம், கேட்டிருப்போம், ஆனால் நம்மை படைத்து ஆள்பவன் நம்மை பற்றி கூறுகிறான்,
“நபியே விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக. தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்; அதனின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்” அல்குர்’ஆன் (24:31)
“நல்லொழுக்கமுள்ள பெண்கள் என்போர் அல்லாஹ்வுக்கு பயந்து, தங்கள் கணவனுக்கு பணிந்து நடப்பவர்கள் கற்பு, கணவனது உடைமைகள் போன்று மறைவானதை,அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிகாத்துக்கொள்பவர்கள்” அல் குர்ஆன் (4:34)
ஒரு சாதாரண பெண் தன்னை அனைவரும் போற்றும் சிறந்த பெண்ணாக மாற இயலும். இன்று எத்தனையோ பெண்கள் உலகையே தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் அந்தவகையில் பெண்கள் தனது வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய உறவுகளுடன் எவ்வாறு நடந்து கொண்டால் வாழ்வு இனிமையாக செல்லும் என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.
  கணவன்:  
நாம் திருமணம் என்ற பந்தத்தை அடைவதற்கு முக்கிய காரணம் இரு மணங்களும் ஒன்று சேர்வதற்கே, கணவன் எவ்வளவு தீயவனாக இருந்தாலும், நிச்சயமாக அவனை நல்வழியில் மாற்றும் சக்தி அன்பு நெஞ்சம் கொண்ட பெண்ணால் முடியும்.
“ஒரு பெண் தன் கணவனிடம் வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிருவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றுமில்லை சமாதானமே மிக மேலானது” (அல் குர்ஆன் 4:128)
இவ்வாறு அல்லாஹ் தன் திருமறையில் கணவனும் மனைவியும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு அறிவுறுத்துகிறான்.
இன்று பல குடும்பங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கும் பல குடும்பங்கள் சீர்கெட்டுப் போவதற்கும் பின்னனியில் முக்கிய பங்காற்றுவது பெண்ணே! ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பெண்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை, ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டால் குடும்பம் சின்னாபின்னாமாகிறது. கணவரை நாம் நேசிப்பதோடு மட்டுமில்லாமல், அவனை சரியான பாதையில் வழிநடத்துவதும் நமது பொறுப்பே, ஏனெனில் இன்று பல ஆண்கள் குடிகாரர்களாகவும், தீய நடத்தை உடையவர்களாகவும் இருப்பதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் அவனது தாய் அல்லது மனைவியாகத்தான் இருக்க இயலும்.
சில நேரங்களில் நம்முடைய அன்பானவருக்கு வியாபாரத்திலோ அல்லது குடும்பத்திலோ நெருக்கடி ஏற்படும்போது நாம் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூற வேண்டும். இருவரும் சேர்ந்தே பிரச்சனைகளுக்கான தீர்வை நல்ல முறையில் முடிவு செய்ய இயலும்.
மேலும் கணவரின் ஊதியத்திற்குத் தகுந்தாற் போல் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் கணவரிடம் ஏற்படும் சிறுசிறு குறைகளை அவர்களது மனம் நோகாத வகையில் எடுத்துக்கூறி, அவர்களைப் பெரும் சாதனையாளர்களாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடியவராகவும் மாற்ற நிச்சயமாக ஒரு மனைவியால் இயலும்.
சுருங்கக் கூறின்,நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணால் ஒரு வலிமையான குடும்பத்தை உருவாக்க முடியும், ஒரு நல்லொழுக்கமுள்ள குடும்பத்தால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும், ஒரு சிறந்த சமுதாயத்தால் பொலிவுமிக்க தேசத்தை உருவாக்க முடியும், ஒரு நல்ல குடும்பத்தின் அடிப்படையில் இத்துனையும் அடங்கி உள்ளது என்றால் அதற்க்காண முயற்சிக்கு எந்த பெண்ணும் தயங்கவா வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
  மாமியார்:  
மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று பழமொழி நாம் கேட்ட ஒன்று, நமது குடும்பத்தில் மாமியார் என்பவர் இன்றியமையாதவர், குடும்பத்தில் பெரியவர்கள் நமது இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் பெரும்பாலான மாமியார்களுக்கு மகன் திருமணமானனவுடன் மனைவி சொல்லே மந்திரம் என்றும் மாறி விடுவாதகவும், நம்மை கவனிப்பதில்லை என்பன போன்ற எண்ண அலைகள் அவர்கள் மனதில் தோன்றும். இது பெண்ணாகிய ஒவ்வொருவருக்கும் உள்ள இயல்பு.
இந்நிலையில் தான் மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் சிறிய விரிசல் உருவாகத் தோன்றும். ஆனால் எந்த பெண் தன் சுயவிருப்பங்களைத் தவிர்த்து குடும்பத்தின் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் நாடுகிறாளோ, நிச்சயமாக அவளால் இந்நிலையை மாற்ற இயலும், நம்முடைய மாமியார் முன்பு போல் நம்மிடம் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இல்லையே என ஏங்கலாம், ஏன்? நாம் அதற்குரிய காரணங்களை ஆராய்ந்து, அவர்களிடம் நாம் மனம் விட்டு பேசி அவர்களுடைய வீண் சந்தேகத்தை போக்க வேண்டும். அவர்களது மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பது அவசியம், நாம் சில விஷயங்களை மாமியாரிடம் கலந்தாலோசிப்பது நல்லது, இவ்வாறு செய்தால் நிச்சயமாக நம்மால் ஒரு புதுமாற்றத்தை நம் வாழ்விலும், நமது மாமியாரின் மனதிலும் கண்டிப்பாக உணர இயலும்.
அவர்களையும் நமது தாய்போல் பாவித்து கடிந்து கொள்ளும் நேரத்தில் அனுசரனையாகவும், உடல் சுகமற்ற நேரத்தில் அரவனைப்பாகவும் நடந்துக் கொள்வதால் உனது கணவர் வீட்டையும் உன் தாய் வீடாக மாற்ற இயலும்.
  உறவினர்கள்:  
நாம் நம்மைச் சுற்றி உள்ள உறவினர்களிடம் அன்பு காட்டி பழக கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு சுக, துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். உறவினர்களின் முக்கியத்துவத்தை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வலியுறுத்துகிறான். “மனிதர்களே! நீங்கள் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டு தமக்குரிய உரிமைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்களே அத்தகயவனையும், மேலும் இரத்த கலப்பு சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்” – (அல்குர்ஆன் 4:1)
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உறவினர்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு கொடுத்து உதவ வேண்டும். அவர்களுடன் கனிவான வார்த்தைகளுடன் நடந்து கொள்வது அவசியம். இன்று வசதியும், பெருமையும் உள்ள நமக்கு நாளை அல்லாஹ்வால் எந்த நிலைமைக்கு வேண்டுமானாலும் தள்ளப்படலாம்.
“பாகப்பிரிவினை செய்யும் போது உறவினர்களோ ஏழைகளோ, அநாதைகளோ வந்துவிடுவார்களானால், அவர்களுக்கு அச்சொத்திலிருந்து வழங்குங்கள் மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்” (அல்குர்ஆன் 4:8)
நாம் தொலைத்தூரத்தில் இருந்தாலும் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும், தொடர்பு வைத்துக்கொள்வது அவசியம். நம்மால் இயன்ற அளவு உறவினர்களோடு பாசம் காட்டி அனுசரித்து வாழ முயற்சிப்போம்.
  அண்டை வீட்டார்:  
நம்முடைய குடும்பத்திற்கு அடுத்தார் போல், நம்முடன் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் நம்முடைய அண்டைவீட்டார்கள். குர்ஆனிலும் நபியின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது.
அண்டை வீட்டாருக்கு இடையூறு கொடுப்பது அவனது நிம்மதியை குலைக்கும் செயலாகும்
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்” என அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)
அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது நாம் உதவி செய்தல் அவசியம், நமக்கு ஏதேனும் உடல் ரீதியிலோ அல்லது பண ரீதியிலோ இணக்கம் ஏற்படும்போது நமக்கு முதலில் உதவுவது நம்முடைய அண்டை வீட்டார் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் விருந்து அனுசரிக்கும்போதும், விழாக்காலங்களிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பழக்கமாக வைத்துக் கொள்வதால் நமக்கு அனைத்து விதங்களிலும் அவர்கள் பக்கபலமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஏழ்மையில் வீற்றிருக்கும் அண்டை வீட்டாருக்கு நம்முடையும் அன்பும், அரவணைப்பும், விருந்தும் அவர்களின் ஏழ்மையை மறக்கச் செய்யும்.
  முடிவுரை:  
குடும்பத்தில் ஏற்படும் அற்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் சமோயோஜிதமாக சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய குடும்பம் என்றில்லாமல் தொலை நோக்கு பார்வையோடு நம்முடைய சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒவ்வொரு பெண்ணும் அக்கறைகொள்ள வேண்டும்.
பெண்களால் முடியாதது எதுவுமேயில்லை எனற ரீதியில் நம்முடைய குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஒற்றுமையோடு கொண்டு செல்ல நம்மால் இயன்றவகையில் திறம்பட செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் திறமையுடன் இருப்பாள், அதை அவளுக்காகவும், அவள் குடும்பத்திற்காகவும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக ஒரு புது உலகை நம்மால் கொண்டுவர இயலும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய திருமறைக் குர்ஆனின் ஒளியோடும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழக்கை முறையோடும் வாழ முயன்றால் ஒரு வலிமைமிக்க சமூகத்தை நாம் உருவாக்க இயலும் இன்ஷா அல்லாஹ்.
-அபு சுமையா

Nov 21, 2012

ஆசூரா நோன்பு



நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள்.  "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர்.  அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

யூதர்களுக்கு மாறு செய்வோம்

ஆஷூரா நோன்பு என்பது  பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

வட்டி உண்ணுதல்



அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)
தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர் தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.
வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)
வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.
 ஜமாஅத்துல் முஸ்லிமீன் அடியக்கமங்கலம்

புத்தாண்டு


இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.
அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?
இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.
ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.
எனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.
ரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோன்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
ஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.
உண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.

முன்னோர்கள் மீதான பக்தி!




முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
"எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)
முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 43:23-24)
சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது 'எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்: 21:52-54)
மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
"அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)
மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)
முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்...?
"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)
முன்னோர்கள் யார்?
"பெரியார்கள், முன்னோர்கள்" என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
"முன்னோர்கள், பெரியார்கள்" என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட "மிகச் சிறந்த சமுதாயம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப் பெற்ற "ஸஹாபாக்கள்" இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர்.
மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த "நாற்பெரும் கலீபாக்கள்" இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர்.
'ஹஜ்ரத்' என்று பெயர் பெற்ற சிலரும், 'அப்பா'க்களும், 'லெப்பை'மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்!
200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை "முன்னோர் பெரியோர்" என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லறத் தோழர்களை 'முன்னோர். பெரியோர்' என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற "பித்அத்"களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?
இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!

குடும்ப அமைப்பை சீரழிக்கும் துறவரத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது!



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.
குடும்பம் என்றொன்ரு தேவையில்லை, கணவன், மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும்.
ஒரு பெண் எதை விரும்புகின்றாளோ, அதை அவள் செய்து கொள்ளட்டும். இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காக, அறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.
குடும்ப அமைப்பை சிதைக்கும் தீய சிந்தனைகள்.
குடும்பம் என்ற அழகான வாழ்க்கை முறையை இல்லாமலாக்குவதற்கு ஷைத்தான் மூன்று விதமான செயல் திட்டங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறான்.
1. துறவரம், 2. கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை, 3. ஓரினச்சேர்க்கை
   துறவரம்   
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவையில்லை, எல்லாவற்றையும் துறந்து கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து தியானத்தில் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தம் பல மதங்களில் இருப்பதைக் காணலாம்.
இது ஒரு உயர்ந்த நிலையாக எல்லா மதங்களிலும் கருதப்படுகிறது. எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இவர்கள் ஞானிகளாக, மகான்களாக, அறிவாளிகளாக, நம்மை விட சிறந்த மக்களாக கருதப்படுகிறார்கள்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த சிந்தனை அனைவருக்கும் வந்தால் மனித குலம் அழிந்து போகும். ஆனால் இந்த சிந்தனையில் அதிகமானோர் விழவில்லை. லட்சத்தில் ஒருவர் என்ற வீதத்தில் இந்த சிந்தனைக்கு ஆள்பட்டிருப்பார்கள்.
இந்த சிந்தனைக்கு விருப்பப்பட்டு அனைவரும் சாமியாராக போனால் என்னவாகும்? அத்தோடு மனித குலம் முடிந்து போய்விடும். மனிதன் பிறக்க மாட்டான், உற்பத்தி ஆக மாட்டான், அவன் தான் கடைசியாக இருப்பான். இந்த சிந்தனை அனைவருக்கும் வந்துவிட்டால் மனிதகுலத்தை அழித்து நாசமாக்கி விடும். இறுதி நாள் வராமலேயே அழிந்து போவார்கள். கடவுளுக்காக தம்மை தியாகம் செய்து துறவரம் மேற்கொள்வது ஷைத்தானின் மாயவலை.
எல்லா மதங்களிலும் துறவரம் பற்றி கூறப்பட்டாலும் இஸ்லாம் இந்த துறவரத்தை கடுமையாக எதிர்க்கின்றது. ஆனாலும் நாம் ஒரு 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களை எடுத்துக்கொண்டோமேயானால் அவர்களும் இந்த தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றார்கள். எந்த தாக்கத்திற்கு என்றால் இந்த மாதிரி கடவுளுக்காக வேண்டி துறவரம் செய்வது, இறைவனுக்காக குடும்ப வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வது நல்லது, அப்படி செய்பவர்கள் சிறந்தவர்கள், மகான்கள், பாராட்டுக்குரியவர்கள் என்ற சிந்தனை நம்முடைய மக்களிடமும் இருந்தது. தற்போது ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டதும் துறவரம் தவறானது என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் அவ்லியாக்களாக கருதப்பட்டார்கள். திருமணம் முடிக்காமல் ஒருவர் இருந்தார் என்றால், அவர் எப்படி பட்ட மகான் தெரியுமா? என்று தவறான ஒரு எண்ணம் மகான் என்பதற்கான ஒரு அடையாளமாக இருந்தது.
எந்தளவுக்கென்றால் இஸ்லாத்தின் பெயரால் இந்தத் திருமண வாழ்க்கையை கேவலமாகவும், கொச்சையாகவும் விமர்சித்த ஞானிகள் கூட இங்கே தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணமாக குன்னங்குடி மஸ்தான் என்ற ஒருவர் ஞானி என்று சொல்லிக் கொண்டார். அவரை மனிதர்கள் மகான் என்று மதித்தார்கள். அவருக்குக் கூட தந்தையார் பேட்டையில் ஒரு தர்கா கட்டி வைத்திருக்கிறார்கள். அவருடைய கவிதையில் திருமணத்தைப் பற்றி மிகக் கேவலமாகவும், இழிவாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் ஏசுகிறார்.
அவருடைய கவிதையை கவணியுங்கள்.
சங்கையும் போக்கி சதிமானமாக சகசன்டியாக்கிவித்திடுவாள் வெகு பங்கப்படுத்தி விட்டிடுவாள்.அந்த மங்கையர் ஆசை வைத்தையையோ வையத்தில் பெண் கொண்ட பேர் பெற்ற பாட்டையும் கேட்டையும் பேசுவோமே நெஞ்சமே!
பெண் என்றால் நமது கண்ணியத்தை இல்லாமலாக்குபவள், மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயரை உண்டாக்குபவள் அந்த பெண் மீது ஆசை கொண்டவர்கள் படும் பாட்டைப் பற்றி பேசுவோமா நெஞ்சமே என்று பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திப் பாடுகிறார் இந்த குணங்குடி மஸ்தான்.
இந்தப் பாடல்கள் ஒரு காலத்தில் பள்ளிகளில் வைத்துப் பாடப்பட்டது. அதே போல்,
தங்க நகையும், முகப்பணிச் சேலையும், தாவெனவே குரங்காட்டுவாள். ஆதியைத் தேடி அருள்பட நாடி அழுதழுது மடிபிடிப்பாள் நீதான் ஏதென்னை விட்டுப்பிரிவதும் என்றவள் ஏங்கி ஏங்கி துடிதுடிப்பாள். நாடிக்குரு வடி தேடி நடக்கிற நற்செயலை கசப்பாக்குவாள்.. (இன்னும் பல பாடல்கள் உண்டு)
"பெண்கள் மீது ஆசை வைத்து இந்த மாதிரி கேடு கெட்டு போய்விட்டியடா, உன்னுடைய பாட்டைப் பற்றி பேசுவோமா? உன்னுடைய கேட்டைப் பற்றி பேசுவோமா?" என்று கேட்கிறார். பெண் என்பவள் நம் மானத்தை வாங்கிவிடுவாள், நம்மை கேவலப்படுத்தி விடுவாள், நம்முடைய மரியாதையை இல்லாமல் ஆக்கி விடுவாள் என்று இஸ்லாத்தின் பெயரால் இவர் கவிதை எழுதுகிறார். இந்தக் கவிதைகள் ஒரு காலத்தில் பள்ளிவாசல்களில் படிக்கப்பட்டது. இப்படி இஸ்லாத்தின் பெயரால் துறவரத்தை, குடும்ப வாழ்க்கை வேண்டாம் அவரவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு போகவும் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களுக்குள்ளேயே நல்ல சித்தாந்தமாக இருந்ததற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கின்றது.
  திருமணத்தை மறுப்பவர் இஸ்லாத்தில் இருக்க முடியாது  
திருமணம் ஆகாமல் ஒருவர் நபிவழியைப் புறக்கணித்தால் அவர் எப்படி இறைநேசர் ஆவார்? என்ற ஒரு ஞானம் கூட இல்லாமல் இருந்தவர்களை இறைநேசர்கள், அந்தஸ்துக்குரியவர்கள் என்ற சித்தாந்தம் பிற மதங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு நம்முடைய மக்களிடத்தில் ஒரு காலத்தில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இஸ்லாம் இந்த மாதிரி செயலை ஆதரிக்கின்றதா? என்று பார்த்தால் அறவே ஆதரிப்பது கிடையாது. இஸ்லாம் வன்மையாக இதைக் கண்டிக்கிறது. திருமண வாழ்க்கையை எவராவது புறக்கணிப்பாராயின் அவர் இஸ்லாத்தில் இருக்கவே முடியாது.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்ன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கற்ல் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர் நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன்; மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி 5063)
நபியவர்களின் வீட்டுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள்.ஒருவர் தூங்காமல் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கப் போவதாகவும், இரண்டாமவர் காலம் பூராகவும் நோன்பு நோற்கப் போவதாகவும்,மூன்றாமவர் திருமணமே முடிப்பதில்லை என்றும் முடிவெடுக்கிறார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அதை கண்டித்தது மட்டுமல்லாமல்திருமணம் செய்யாதவர் இஸ்லாத்திலேயே இருக்க முடியாது என்ற தகவலையும் அதில் தெரிவிக்கிறார்கள்.
திருமணம் என்பது இஸ்லாத்தில் முஸ்லிமாக இருப்பதற்குறிய ஒரு அடையாளமாக நபியவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
எனவே திருமணம் செய்யாமல் இறைவனுக்காக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக ஒரு ஆண் சொன்னாலும், பெண் சொன்னாலும் அவர் நம்மைச் சேரந்தவர் கிடையாது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தைச் சேரந்தவர் கிடையாது. எந்தளவுக்கு இஸ்லாம் திருமண வாழ்க்கையை வலியுறுத்துகிறது என்றால் அதை இஸ்லாத்துடைய அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறது. திருமணத்தை துறப்பது நல்லது என நினைத்தால் முஸ்லிமாக இருக்க முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யாருக்கு கண்டிப்பாக வசதி உள்ளதோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். இல்லையெனில் அவர் நோன்பு நோற்கட்டும். பெண் கிடைக்கவில்லை அல்லது மஹர் கொடுக்க வசதியில்லை போன்ற காரணங்களால் மட்டுமே நோன்பு வைத்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர துறவரம் செய்யக் கூடாது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். எனவே நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது இந்த மாதிரியான உணர்வுகளுக்கு நாட்டம் இருக்காது, தவறு செய்வதற்கு மனதில் தூண்டுதல் குறைவாக இருக்கும். அதனால் நோன்பு வைத்துக்கொண்டு கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி திருமணம் செய்வதை வலியுறுத்துகிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இல்லற வாழ்க்கையை இஸ்லாம் ரொம்பவும் வலியுறுத்திச் சொல்வதை காணலாம்.
மக்காவில் இருந்து மதினாவுக்கு நபித்தோழர்கள் ஆண்கள் அதிகளவிலும் பெண்கள் மிக குறைவாகவும் ஹிஜ்ரத் மேட்கொண்ட வேளையில் மதினாவில் பெண்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்கள் பெண்கள் பற்றாக்குறையை முறையிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துறவரத்தையோ ஆண்மை நீக்கத்தையோ வழிகாட்ட வில்லை.
அல்கமா இப்னு கைஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்:
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு (அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி 5065)
எனவே திருமண ஆசை வருவதற்காக வேண்டி ஆண்மையை நீக்கிக்கொள்ள வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். எனவே திருமணம் என்பது அமையும் வரைக்கும் நோன்பு வைத்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாரக்கம் சொல்கின்றதே தவிர அல்லாஹ்வுக்காக வேண்டி எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவேயில்லை.
மார்க்க அடிப்படை இப்படியிருக்க நாம் சிந்தித்துப் பார்த்தால் கூட குடும்ப வாழ்க்கை இல்லாமல் துறவரம் இருப்பவர்கள் ஒரு போலித்தனத்திலேயே இருக்கின்றார்கள் என்பது விளங்கும். துறவரம் என்றால் என்ன? "எதையும் ஆசைப்படக்கூடாது, எதிலும் விருப்பம் இருக்கக்கூடாது, இறைவனுக்காக அனைத்தையும் துறந்து விட வேண்டும்" என்பது தான் துறவரம். இப்படி துறவரம் செய்பவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பெண்கள் வேண்டாம், ஆடையும் வேண்டாம் என்று சொல்கின்றவர்கள் சாப்பாடு வேண்டாம் என்று சொல்கின்றார்களா? சாப்பாடு கூட ஒரு ஆசை தான். ஆனால் கடவுளுக்காக சாப்பிடாமல் இருப்பேன் என்று எவராவது சொல்கின்றார்களா? இதிலிருந்து இது முடியாது என்பதை விளங்கிக்கொள்ளலாம். உணவு என்பது கட்டாயம் தேவை. அது இல்லாமல் வாழ முடியாது என்பதை விளங்குகிறான். எதற்குமே ஆசைப்படக் கூடாது என்று சொல்கின்றவன் ஆடையைக் கூட துறக்கத் தயாராக இருக்கின்றான், பெண்களைக் கூட துறக்கத் தயாராக இருக்கின்றான் ஆனால் அதே மாதிரியான ஒரு ஆசை தான் சாப்பிடுதல் என்பது. இதை மட்டும் ஏன் விட மாட்டான்? திருவோட்டை தூக்கிக்கொண்டு சாப்பாடு கேட்டு போகிறான். ஆசையை துறக்காத நாம் பாத்திரம் ஏந்திக்கொண்டு செல்கின்றோமா? அதனால் நம்மை விட ஆசை அதிகமாக உள்ளவனாகத் தான் துறவி இருக்கின்றான். ஆகவே ஆசையைத் துறப்பது என்பது போலித்தனமானது, யாராலும் ஆசையை துறக்க முடியாது என்பதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருப்பதைக் காணலாம்.
நாம் உலகத்தில் பார்க்கிறோம் யாரெல்லாம் ஆசையைத் துறந்ததாக சொல்கின்றார்களோ அவர்கள் பெண்களுடன் தனிமையாக இருக்கும் வாய்ப்பை காட்டில் இருக்கும் காரணத்தால் பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் கெட்ட வழியிலும் போய் விடுவார்கள். யாரெல்லாம் துறவரம் என்று போனார்களோ அவர்களில் பலர் நாறிப்போன காட்சியைப் பார்க்கிறோம். உச்ச நிலையில் இருந்தவர்கள், மதிக்கப்பட்டவர்கள் கூட பெண்களுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது துறவரம் பொய் என்பதைக் காட்டிவிட்டார்கள். எனவே துறவரம் என்பது சாத்தியமற்றது. எப்படி பசித்தால் சாப்பிடாமல் இருக்க முடியாதோ அதே மாதிரி இதுவும் ஒரு வகை பசி தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்தப் பசிக்கு முறையான தீனியைக் கொடுக்க வேண்டுமே தவிர தீனியே கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் என்னவாகும்? திருடிச் சாப்பிட வேண்டி வந்துவிடும், தப்பான முறையில் அனுபவிக்க வேண்டி வந்திவிடும். ஹலாலான சாப்பாடு இருந்தால் திருட மாட்டான். சாப்பாடே இல்லை என்றால் திருடித்தான் சாப்பிடுவான். அதை விளங்காமல் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒரு சித்தாந்தத்தை உலகுக்கு சொல்லிக் கொடுக்கப் பார்க்கிறார்கள். எங்களால் செய்ய முடியவில்லை ஆனால் மகான்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அளவில் பிறமத மக்களிடத்தில் துறவரத்தைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதுபோக எல்லாவற்றையும் துறந்தோம் என்று வைத்தால் துறவி செய்யும் நன்மையை விட குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் அதிக நன்மை செய்வார்கள். காரணம் எல்லாவற்றையும் துறந்தவனுக்கு பெற்ற தாயைக் கவனிக்க கிடைக்குமா? தாய், தந்தை, குடும்பம் எல்லாவற்றையும் அவன் துறந்துவிட்டானே. இந்த மகத்தான நன்மையைக் கூட அடைய முடியாத கேடு கெட்ட பிறவிகளாக இந்த துறவிகள் இருப்பதை பார்க்கிறோம். பெற்ற பிள்ளைகள், குடும்பத்தை கவனிப்பதால் ஏற்படும் நன்மையை இழக்க நேரிடும். அதே மாதிரி ஒருவரை சந்தித்து ஸலாம் கூறுதல், உதவி செய்தல், போராட்டங்களில் ஈடுபடுதல், சமுதாயத்துக்கு நன்மை செய்தல் ஆகிய நன்மையான காரியங்கள் துறவரம் மூலம் இல்லாமல் போகும். சாதாரண மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கூட துறவிகளுக்கு கிடைக்காது. குடும்பத்தில், நாட்டில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை கவனிக்க மாட்டேன் என்று போனார்களேயானால் இது உயர்ந்த நிலையா? மட்டமான நிலையா? இது ஒரு கீழ்த்தரமான நிலையாகும்.
உயர்ந்த நிலையாக எண்ணும் இந்த துறவரம் என்ற சித்தாந்தம் குடும்பங்களை சீரழிக்கும். கணவன் மனைவி என்ற அமைப்பில் இருந்தால் தான் குடும்பம் என்ற சீரான நிலை ஏற்படும். அப்படியான இணைப்பு இல்லாமல் உறவுகள் இன்றி போனால் அவன் மட்டும் தனித்தவனாக வருவான். குடும்பம் என்ற அமைப்பை சீரழிக்கும் சித்தாந்தத்தில் முதலிடம் வகிப்பதாக இந்த துறவரம் உள்ளது. இஸ்லாம் துறவரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஒரு காலத்திலும் இதனை ஏற்றுக்கொள்ளாது.
யாரெல்லாம் துறவரம் என்று பேசினார்களோ அப்படிப்பட்ட பலர் பெண்கள் விஷயத்தில் நாறிப்போனதை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்க வில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். (புகாரி 5071)

உரை: பீ. ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு: முஹம்மது கைஸான் (தத்பீகி)

Nov 14, 2012

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா



நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம்  விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், "தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இறைவா!) "அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387
4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், "சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், "இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையி-ருந்தும் விழுந்ததில்லை. "துல் கலஸா' என்பது யமன் நாட்டி-ருந்த "கஸ்அம்' மற்றும் "பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது "அல் கஅபா' என்று அழைக்கப் பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்கüடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன்.
" "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன்'' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு "அஹ்மஸ்' குலத்தவரில் "அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று தான் (ஆக்கி) விட்டு வந்துள்ளேன்'' என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) "அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை üக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
முஹம்மது ஷேக், அபுதாபி
அந்த நாத்திக நண்பர் மேலோட்டமாகப் பார்த்து விட்டு இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்ய அவருக்கு வழி இல்லாததால் அவருக்கும் இது போல் நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் நாம் விளக்கம் அளித்தால் தெளிவு பெற்று தம்முடைய தவறான கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்கள் குறித்து விளக்குவதற்கு முன்னர் பொதுவாக கட்டாய மதமாற்றம் குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை முதலில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:256

இவ்வசனத்தில் இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும் தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்துக்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்று இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மத மாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
திருக்குர்ஆன் 10:99

ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவ்தோ நிர்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்கிறது.

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். 
திருக்குர்ஆன் 9:6

ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 109 வது அத்தியாயம்)

உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலமும் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது.
வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மத்த்தை தினிப்பதற்கு சரியான தருனமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்து கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது.

மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.
இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
திருக்குர்ஆன் 5:27

"முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விட பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும். வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலை நகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்? 

எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். "அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்'' என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1311

வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேத்த்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்த பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்?

இது போல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் அந்த நாத்திக நண்பர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியில் இருந்து இதற்கு மாற்றமான கருத்து தெரிகிறதே என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.
துல்கலஸா என்ற ஊரில் உள்ள் ஆலயத்தை தகர்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை அனுப்பியது வாள் முனையில் பிற மதத்தினரை அடக்குவதற்கா என்றால் நிச்சயமாக இல்லை.
எந்த மத்த்தினரும் மற்ற மதத்தினரின் ஆலயங்களை தகர்க்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
திருக்குர்ஆன் 22:40

அப்படியானால் அரபு தீபகற்பத்தில் எத்தனையோ வழிபாட்டுத் தலங்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றையும் தகர்ப்பதற்காக ஆட்களை அனுப்பாமல் இந்த ஒரு ஆலயத்தை மட்டும் தகர்க்க ஆள் அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு சிறப்பான காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் அந்தச் சம்பவத்திற்கு உள்ளேயே ஒளிந்து இருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் புனிதச் சின்னங்கள் உள்ளன. அவரவர் புனிதச் சின்ன்ங்களை அவரவர் பேணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு மதத்தின் புனிதச் சின்னத்தைக் கேவலப்படுத்தும் வகையில் மற்றொரு மத்த்தினர் நடப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

முஸ்லிம்கள் காபா எனும் ஆலயத்தைப் புனிதச் சின்னமாக மதிப்பது அன்றும் இன்றும் உலகுக்கே தெரிந்த ஒன்று தான். முஸ்லிம் அல்லாதவர்கள் அது போல் ஒன்றை எழுப்பி அது தான் கஅபா என அறிவித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இஸ்லாம் தடைசெய்துள்ள வழிபாட்டு முறைகளைச் செயல்படுத்தினால் அதில் விஷமத்தனமும் குழப்பம் விளைவித்தலும் தான் அடங்கி இருக்கும். சமீபத்தில் கூட மேற்கத்திய நாடு ஒன்றில் (நாட்டின் பெயர் நினைவில் இல்லை) காபா ஆலயம் போல் அமைக்க முயற்சித்து உலக முஸ்லிம்களின் எதிர்ப்பால அது கைவிடப்பட்ட்து.

இது போன்ற வேலையைத் தான் துல்கலசா பகுதியினர் செய்தனர். அவர்கள் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டு அதை காபா என்று பெயரிட்டுக் கொண்டு காபாவில் செய்யக் கூடாத காரியங்களை அதில் அரங்கேற்றம் செய்தனர். இதனால் தான் அது நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியது. அதை அவ்ர்கள் காபா என்று அழைத்தனர் என்ற விபரம் அந்த செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது கூட பள்ளிவாசல் வடிவத்தில் கட்டடம் கட்டி அதற்கு பள்ளிவாசல் எனவும் பெயர் சூட்டிக் கொண்டு அதற்குள் சிலை வணக்கம் செய்தால் இந்து ஆட்சியாளர்களே அதை அப்புறப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தனர்.
பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தி இணைப்பது இஸ்லாத்தில் இல்லை என்பதை முன்னர் கண்டோம்.
ஆனாலும் பல போர்க்களங்களில் மட்டும் இப்படி சொன்னதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த சகோதரர் சுட்டிக்காட்டியது அல்லாமல் இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

இஸ்லாத்தை ஒழிப்பதற்காக போருக்கு வரும் போதும் போரைத் தினிக்கும் போதும் எதிரிகள் தோற்று விட்டால் அவர்கள் தோற்று விட்ட்தை உறுதி செய்வதற்காக இஸ்லாத்தில் சேர்வதாக கூறினால் அவர்களை எதிரிகளாக பாவிக்காமல் விட்டு விடலாம் என்பதற்காகத் தான் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்ட்து.

கம்யூனிசத்தை எதிர்த்து யுத்தம் நடந்தால் எதிரிகள் தோவியுறும் போது கயூனிசத்தை ஏற்கிறோம் என்று சொல்வது தான் தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஆகும். தோற்ற எதிரிகளை கொன்று போடாமல் உயிருடன் விட்டு வைப்பதற்காக எதை எதிர்த்து படை திரட்டி வந்து பல உயிர்கள் பலியாகவும் பொருளாதாரம் அழியவும் காரணமாக இருந்தாயோ அதையே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொள் என்று சொல்ல கட்டளையிடுவதை யாரும் குறை கூற முடியாது. மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போல் கொன்று போடுவதை விட இது எத்தனையோ மடங்கு சிறந்தது. இது அல்லாத சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தியது இல்லை.
அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தின் புனிதச் சின்னம் போல் உருவாக்கி இஸ்லாத்துக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அந்த ஊரார் மீது நபிகள் நாயகம் போர் செய்ய படை அனுப்பினார்கள். எதிரிகள் தோற்ற போது கொன்று குவிக்காலம் போர் தர்மப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி விட்டு பிழைத்துப் போ என்று சொல்லப்பட்டது.

போர் அல்லாத எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போல் நபிகள் நாயக நாயகம் நடந்து கொண்டதில்லை.
இந்தியாவுடன் போர் செய்து ஒரு நாட்டுப்படை தோற்று விட்டால் அந்தப் படையினர் இதுவும் இந்திய நாடு தான் என்று ஒப்புக் கொள்ள வலியுறுத்தினால் அதை எப்படி குறை கூற முடியாதோ அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


இதன் பின்னரும் அந்த நாத்திக நண்பர் புரிந்து கொள்ள மறுத்தால் நாத்திகர்களும் நாத்திகர்களால் மதிக்கப்படும் மன்னர்களும் போர்க்களங்களில் எப்படி நடந்து கொண்டனர் என்ற கொடூர வரலாற்றுப் பக்கங்களை எடுத்துக் காட்டுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )