Nov 21, 2012

குடும்ப அமைப்பை சீரழிக்கும் துறவரத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது!



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.
குடும்பம் என்றொன்ரு தேவையில்லை, கணவன், மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும்.
ஒரு பெண் எதை விரும்புகின்றாளோ, அதை அவள் செய்து கொள்ளட்டும். இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காக, அறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.
குடும்ப அமைப்பை சிதைக்கும் தீய சிந்தனைகள்.
குடும்பம் என்ற அழகான வாழ்க்கை முறையை இல்லாமலாக்குவதற்கு ஷைத்தான் மூன்று விதமான செயல் திட்டங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறான்.
1. துறவரம், 2. கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை, 3. ஓரினச்சேர்க்கை
   துறவரம்   
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவையில்லை, எல்லாவற்றையும் துறந்து கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து தியானத்தில் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தம் பல மதங்களில் இருப்பதைக் காணலாம்.
இது ஒரு உயர்ந்த நிலையாக எல்லா மதங்களிலும் கருதப்படுகிறது. எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இவர்கள் ஞானிகளாக, மகான்களாக, அறிவாளிகளாக, நம்மை விட சிறந்த மக்களாக கருதப்படுகிறார்கள்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த சிந்தனை அனைவருக்கும் வந்தால் மனித குலம் அழிந்து போகும். ஆனால் இந்த சிந்தனையில் அதிகமானோர் விழவில்லை. லட்சத்தில் ஒருவர் என்ற வீதத்தில் இந்த சிந்தனைக்கு ஆள்பட்டிருப்பார்கள்.
இந்த சிந்தனைக்கு விருப்பப்பட்டு அனைவரும் சாமியாராக போனால் என்னவாகும்? அத்தோடு மனித குலம் முடிந்து போய்விடும். மனிதன் பிறக்க மாட்டான், உற்பத்தி ஆக மாட்டான், அவன் தான் கடைசியாக இருப்பான். இந்த சிந்தனை அனைவருக்கும் வந்துவிட்டால் மனிதகுலத்தை அழித்து நாசமாக்கி விடும். இறுதி நாள் வராமலேயே அழிந்து போவார்கள். கடவுளுக்காக தம்மை தியாகம் செய்து துறவரம் மேற்கொள்வது ஷைத்தானின் மாயவலை.
எல்லா மதங்களிலும் துறவரம் பற்றி கூறப்பட்டாலும் இஸ்லாம் இந்த துறவரத்தை கடுமையாக எதிர்க்கின்றது. ஆனாலும் நாம் ஒரு 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களை எடுத்துக்கொண்டோமேயானால் அவர்களும் இந்த தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றார்கள். எந்த தாக்கத்திற்கு என்றால் இந்த மாதிரி கடவுளுக்காக வேண்டி துறவரம் செய்வது, இறைவனுக்காக குடும்ப வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வது நல்லது, அப்படி செய்பவர்கள் சிறந்தவர்கள், மகான்கள், பாராட்டுக்குரியவர்கள் என்ற சிந்தனை நம்முடைய மக்களிடமும் இருந்தது. தற்போது ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டதும் துறவரம் தவறானது என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் அவ்லியாக்களாக கருதப்பட்டார்கள். திருமணம் முடிக்காமல் ஒருவர் இருந்தார் என்றால், அவர் எப்படி பட்ட மகான் தெரியுமா? என்று தவறான ஒரு எண்ணம் மகான் என்பதற்கான ஒரு அடையாளமாக இருந்தது.
எந்தளவுக்கென்றால் இஸ்லாத்தின் பெயரால் இந்தத் திருமண வாழ்க்கையை கேவலமாகவும், கொச்சையாகவும் விமர்சித்த ஞானிகள் கூட இங்கே தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணமாக குன்னங்குடி மஸ்தான் என்ற ஒருவர் ஞானி என்று சொல்லிக் கொண்டார். அவரை மனிதர்கள் மகான் என்று மதித்தார்கள். அவருக்குக் கூட தந்தையார் பேட்டையில் ஒரு தர்கா கட்டி வைத்திருக்கிறார்கள். அவருடைய கவிதையில் திருமணத்தைப் பற்றி மிகக் கேவலமாகவும், இழிவாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் ஏசுகிறார்.
அவருடைய கவிதையை கவணியுங்கள்.
சங்கையும் போக்கி சதிமானமாக சகசன்டியாக்கிவித்திடுவாள் வெகு பங்கப்படுத்தி விட்டிடுவாள்.அந்த மங்கையர் ஆசை வைத்தையையோ வையத்தில் பெண் கொண்ட பேர் பெற்ற பாட்டையும் கேட்டையும் பேசுவோமே நெஞ்சமே!
பெண் என்றால் நமது கண்ணியத்தை இல்லாமலாக்குபவள், மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயரை உண்டாக்குபவள் அந்த பெண் மீது ஆசை கொண்டவர்கள் படும் பாட்டைப் பற்றி பேசுவோமா நெஞ்சமே என்று பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திப் பாடுகிறார் இந்த குணங்குடி மஸ்தான்.
இந்தப் பாடல்கள் ஒரு காலத்தில் பள்ளிகளில் வைத்துப் பாடப்பட்டது. அதே போல்,
தங்க நகையும், முகப்பணிச் சேலையும், தாவெனவே குரங்காட்டுவாள். ஆதியைத் தேடி அருள்பட நாடி அழுதழுது மடிபிடிப்பாள் நீதான் ஏதென்னை விட்டுப்பிரிவதும் என்றவள் ஏங்கி ஏங்கி துடிதுடிப்பாள். நாடிக்குரு வடி தேடி நடக்கிற நற்செயலை கசப்பாக்குவாள்.. (இன்னும் பல பாடல்கள் உண்டு)
"பெண்கள் மீது ஆசை வைத்து இந்த மாதிரி கேடு கெட்டு போய்விட்டியடா, உன்னுடைய பாட்டைப் பற்றி பேசுவோமா? உன்னுடைய கேட்டைப் பற்றி பேசுவோமா?" என்று கேட்கிறார். பெண் என்பவள் நம் மானத்தை வாங்கிவிடுவாள், நம்மை கேவலப்படுத்தி விடுவாள், நம்முடைய மரியாதையை இல்லாமல் ஆக்கி விடுவாள் என்று இஸ்லாத்தின் பெயரால் இவர் கவிதை எழுதுகிறார். இந்தக் கவிதைகள் ஒரு காலத்தில் பள்ளிவாசல்களில் படிக்கப்பட்டது. இப்படி இஸ்லாத்தின் பெயரால் துறவரத்தை, குடும்ப வாழ்க்கை வேண்டாம் அவரவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு போகவும் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களுக்குள்ளேயே நல்ல சித்தாந்தமாக இருந்ததற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கின்றது.
  திருமணத்தை மறுப்பவர் இஸ்லாத்தில் இருக்க முடியாது  
திருமணம் ஆகாமல் ஒருவர் நபிவழியைப் புறக்கணித்தால் அவர் எப்படி இறைநேசர் ஆவார்? என்ற ஒரு ஞானம் கூட இல்லாமல் இருந்தவர்களை இறைநேசர்கள், அந்தஸ்துக்குரியவர்கள் என்ற சித்தாந்தம் பிற மதங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு நம்முடைய மக்களிடத்தில் ஒரு காலத்தில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இஸ்லாம் இந்த மாதிரி செயலை ஆதரிக்கின்றதா? என்று பார்த்தால் அறவே ஆதரிப்பது கிடையாது. இஸ்லாம் வன்மையாக இதைக் கண்டிக்கிறது. திருமண வாழ்க்கையை எவராவது புறக்கணிப்பாராயின் அவர் இஸ்லாத்தில் இருக்கவே முடியாது.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்ன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கற்ல் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர் நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன்; மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி 5063)
நபியவர்களின் வீட்டுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள்.ஒருவர் தூங்காமல் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கப் போவதாகவும், இரண்டாமவர் காலம் பூராகவும் நோன்பு நோற்கப் போவதாகவும்,மூன்றாமவர் திருமணமே முடிப்பதில்லை என்றும் முடிவெடுக்கிறார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அதை கண்டித்தது மட்டுமல்லாமல்திருமணம் செய்யாதவர் இஸ்லாத்திலேயே இருக்க முடியாது என்ற தகவலையும் அதில் தெரிவிக்கிறார்கள்.
திருமணம் என்பது இஸ்லாத்தில் முஸ்லிமாக இருப்பதற்குறிய ஒரு அடையாளமாக நபியவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
எனவே திருமணம் செய்யாமல் இறைவனுக்காக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக ஒரு ஆண் சொன்னாலும், பெண் சொன்னாலும் அவர் நம்மைச் சேரந்தவர் கிடையாது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தைச் சேரந்தவர் கிடையாது. எந்தளவுக்கு இஸ்லாம் திருமண வாழ்க்கையை வலியுறுத்துகிறது என்றால் அதை இஸ்லாத்துடைய அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறது. திருமணத்தை துறப்பது நல்லது என நினைத்தால் முஸ்லிமாக இருக்க முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யாருக்கு கண்டிப்பாக வசதி உள்ளதோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். இல்லையெனில் அவர் நோன்பு நோற்கட்டும். பெண் கிடைக்கவில்லை அல்லது மஹர் கொடுக்க வசதியில்லை போன்ற காரணங்களால் மட்டுமே நோன்பு வைத்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர துறவரம் செய்யக் கூடாது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். எனவே நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது இந்த மாதிரியான உணர்வுகளுக்கு நாட்டம் இருக்காது, தவறு செய்வதற்கு மனதில் தூண்டுதல் குறைவாக இருக்கும். அதனால் நோன்பு வைத்துக்கொண்டு கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி திருமணம் செய்வதை வலியுறுத்துகிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இல்லற வாழ்க்கையை இஸ்லாம் ரொம்பவும் வலியுறுத்திச் சொல்வதை காணலாம்.
மக்காவில் இருந்து மதினாவுக்கு நபித்தோழர்கள் ஆண்கள் அதிகளவிலும் பெண்கள் மிக குறைவாகவும் ஹிஜ்ரத் மேட்கொண்ட வேளையில் மதினாவில் பெண்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்கள் பெண்கள் பற்றாக்குறையை முறையிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துறவரத்தையோ ஆண்மை நீக்கத்தையோ வழிகாட்ட வில்லை.
அல்கமா இப்னு கைஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்:
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு (அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி 5065)
எனவே திருமண ஆசை வருவதற்காக வேண்டி ஆண்மையை நீக்கிக்கொள்ள வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். எனவே திருமணம் என்பது அமையும் வரைக்கும் நோன்பு வைத்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாரக்கம் சொல்கின்றதே தவிர அல்லாஹ்வுக்காக வேண்டி எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவேயில்லை.
மார்க்க அடிப்படை இப்படியிருக்க நாம் சிந்தித்துப் பார்த்தால் கூட குடும்ப வாழ்க்கை இல்லாமல் துறவரம் இருப்பவர்கள் ஒரு போலித்தனத்திலேயே இருக்கின்றார்கள் என்பது விளங்கும். துறவரம் என்றால் என்ன? "எதையும் ஆசைப்படக்கூடாது, எதிலும் விருப்பம் இருக்கக்கூடாது, இறைவனுக்காக அனைத்தையும் துறந்து விட வேண்டும்" என்பது தான் துறவரம். இப்படி துறவரம் செய்பவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பெண்கள் வேண்டாம், ஆடையும் வேண்டாம் என்று சொல்கின்றவர்கள் சாப்பாடு வேண்டாம் என்று சொல்கின்றார்களா? சாப்பாடு கூட ஒரு ஆசை தான். ஆனால் கடவுளுக்காக சாப்பிடாமல் இருப்பேன் என்று எவராவது சொல்கின்றார்களா? இதிலிருந்து இது முடியாது என்பதை விளங்கிக்கொள்ளலாம். உணவு என்பது கட்டாயம் தேவை. அது இல்லாமல் வாழ முடியாது என்பதை விளங்குகிறான். எதற்குமே ஆசைப்படக் கூடாது என்று சொல்கின்றவன் ஆடையைக் கூட துறக்கத் தயாராக இருக்கின்றான், பெண்களைக் கூட துறக்கத் தயாராக இருக்கின்றான் ஆனால் அதே மாதிரியான ஒரு ஆசை தான் சாப்பிடுதல் என்பது. இதை மட்டும் ஏன் விட மாட்டான்? திருவோட்டை தூக்கிக்கொண்டு சாப்பாடு கேட்டு போகிறான். ஆசையை துறக்காத நாம் பாத்திரம் ஏந்திக்கொண்டு செல்கின்றோமா? அதனால் நம்மை விட ஆசை அதிகமாக உள்ளவனாகத் தான் துறவி இருக்கின்றான். ஆகவே ஆசையைத் துறப்பது என்பது போலித்தனமானது, யாராலும் ஆசையை துறக்க முடியாது என்பதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருப்பதைக் காணலாம்.
நாம் உலகத்தில் பார்க்கிறோம் யாரெல்லாம் ஆசையைத் துறந்ததாக சொல்கின்றார்களோ அவர்கள் பெண்களுடன் தனிமையாக இருக்கும் வாய்ப்பை காட்டில் இருக்கும் காரணத்தால் பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் கெட்ட வழியிலும் போய் விடுவார்கள். யாரெல்லாம் துறவரம் என்று போனார்களோ அவர்களில் பலர் நாறிப்போன காட்சியைப் பார்க்கிறோம். உச்ச நிலையில் இருந்தவர்கள், மதிக்கப்பட்டவர்கள் கூட பெண்களுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது துறவரம் பொய் என்பதைக் காட்டிவிட்டார்கள். எனவே துறவரம் என்பது சாத்தியமற்றது. எப்படி பசித்தால் சாப்பிடாமல் இருக்க முடியாதோ அதே மாதிரி இதுவும் ஒரு வகை பசி தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்தப் பசிக்கு முறையான தீனியைக் கொடுக்க வேண்டுமே தவிர தீனியே கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் என்னவாகும்? திருடிச் சாப்பிட வேண்டி வந்துவிடும், தப்பான முறையில் அனுபவிக்க வேண்டி வந்திவிடும். ஹலாலான சாப்பாடு இருந்தால் திருட மாட்டான். சாப்பாடே இல்லை என்றால் திருடித்தான் சாப்பிடுவான். அதை விளங்காமல் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒரு சித்தாந்தத்தை உலகுக்கு சொல்லிக் கொடுக்கப் பார்க்கிறார்கள். எங்களால் செய்ய முடியவில்லை ஆனால் மகான்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அளவில் பிறமத மக்களிடத்தில் துறவரத்தைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதுபோக எல்லாவற்றையும் துறந்தோம் என்று வைத்தால் துறவி செய்யும் நன்மையை விட குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் அதிக நன்மை செய்வார்கள். காரணம் எல்லாவற்றையும் துறந்தவனுக்கு பெற்ற தாயைக் கவனிக்க கிடைக்குமா? தாய், தந்தை, குடும்பம் எல்லாவற்றையும் அவன் துறந்துவிட்டானே. இந்த மகத்தான நன்மையைக் கூட அடைய முடியாத கேடு கெட்ட பிறவிகளாக இந்த துறவிகள் இருப்பதை பார்க்கிறோம். பெற்ற பிள்ளைகள், குடும்பத்தை கவனிப்பதால் ஏற்படும் நன்மையை இழக்க நேரிடும். அதே மாதிரி ஒருவரை சந்தித்து ஸலாம் கூறுதல், உதவி செய்தல், போராட்டங்களில் ஈடுபடுதல், சமுதாயத்துக்கு நன்மை செய்தல் ஆகிய நன்மையான காரியங்கள் துறவரம் மூலம் இல்லாமல் போகும். சாதாரண மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கூட துறவிகளுக்கு கிடைக்காது. குடும்பத்தில், நாட்டில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை கவனிக்க மாட்டேன் என்று போனார்களேயானால் இது உயர்ந்த நிலையா? மட்டமான நிலையா? இது ஒரு கீழ்த்தரமான நிலையாகும்.
உயர்ந்த நிலையாக எண்ணும் இந்த துறவரம் என்ற சித்தாந்தம் குடும்பங்களை சீரழிக்கும். கணவன் மனைவி என்ற அமைப்பில் இருந்தால் தான் குடும்பம் என்ற சீரான நிலை ஏற்படும். அப்படியான இணைப்பு இல்லாமல் உறவுகள் இன்றி போனால் அவன் மட்டும் தனித்தவனாக வருவான். குடும்பம் என்ற அமைப்பை சீரழிக்கும் சித்தாந்தத்தில் முதலிடம் வகிப்பதாக இந்த துறவரம் உள்ளது. இஸ்லாம் துறவரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஒரு காலத்திலும் இதனை ஏற்றுக்கொள்ளாது.
யாரெல்லாம் துறவரம் என்று பேசினார்களோ அப்படிப்பட்ட பலர் பெண்கள் விஷயத்தில் நாறிப்போனதை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்க வில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். (புகாரி 5071)

உரை: பீ. ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு: முஹம்மது கைஸான் (தத்பீகி)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )