இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பொதுவாக திருமணமானவுடன் பெண்கள் தன் கணவரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
பெரும்பாலான பெண்கள் கணவர் வேலைக்கு போனதும் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என தன் நேரத்தை செலவிடுகிறாள், கணவரோடு சேர்ந்து தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்க்கொண்டு போராடுகிறாள். ஒரு பெண்ணால் முள் பாதையைக் கூட மலர் பாதையாக மாற்ற நிச்சயமாக இயலும்.
நாம் பல புத்தகங்களிலும், நமது வாழ்க்கை அனுபவத்திலும் பெண்ணின் சிறப்பை தெரிந்திருப்போம், கேட்டிருப்போம், ஆனால் நம்மை படைத்து ஆள்பவன் நம்மை பற்றி கூறுகிறான்,
“நபியே விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக. தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்; அதனின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்” அல்குர்’ஆன் (24:31)
“நல்லொழுக்கமுள்ள பெண்கள் என்போர் அல்லாஹ்வுக்கு பயந்து, தங்கள் கணவனுக்கு பணிந்து நடப்பவர்கள் கற்பு, கணவனது உடைமைகள் போன்று மறைவானதை,அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிகாத்துக்கொள்பவர்கள்” அல் குர்ஆன் (4:34)
ஒரு சாதாரண பெண் தன்னை அனைவரும் போற்றும் சிறந்த பெண்ணாக மாற இயலும். இன்று எத்தனையோ பெண்கள் உலகையே தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் அந்தவகையில் பெண்கள் தனது வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய உறவுகளுடன் எவ்வாறு நடந்து கொண்டால் வாழ்வு இனிமையாக செல்லும் என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.
கணவன்:
நாம் திருமணம் என்ற பந்தத்தை அடைவதற்கு முக்கிய காரணம் இரு மணங்களும் ஒன்று சேர்வதற்கே, கணவன் எவ்வளவு தீயவனாக இருந்தாலும், நிச்சயமாக அவனை நல்வழியில் மாற்றும் சக்தி அன்பு நெஞ்சம் கொண்ட பெண்ணால் முடியும்.
“ஒரு பெண் தன் கணவனிடம் வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிருவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றுமில்லை சமாதானமே மிக மேலானது” (அல் குர்ஆன் 4:128)
இவ்வாறு அல்லாஹ் தன் திருமறையில் கணவனும் மனைவியும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு அறிவுறுத்துகிறான்.
இன்று பல குடும்பங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கும் பல குடும்பங்கள் சீர்கெட்டுப் போவதற்கும் பின்னனியில் முக்கிய பங்காற்றுவது பெண்ணே! ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பெண்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை, ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டால் குடும்பம் சின்னாபின்னாமாகிறது. கணவரை நாம் நேசிப்பதோடு மட்டுமில்லாமல், அவனை சரியான பாதையில் வழிநடத்துவதும் நமது பொறுப்பே, ஏனெனில் இன்று பல ஆண்கள் குடிகாரர்களாகவும், தீய நடத்தை உடையவர்களாகவும் இருப்பதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் அவனது தாய் அல்லது மனைவியாகத்தான் இருக்க இயலும்.
சில நேரங்களில் நம்முடைய அன்பானவருக்கு வியாபாரத்திலோ அல்லது குடும்பத்திலோ நெருக்கடி ஏற்படும்போது நாம் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூற வேண்டும். இருவரும் சேர்ந்தே பிரச்சனைகளுக்கான தீர்வை நல்ல முறையில் முடிவு செய்ய இயலும்.
மேலும் கணவரின் ஊதியத்திற்குத் தகுந்தாற் போல் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் கணவரிடம் ஏற்படும் சிறுசிறு குறைகளை அவர்களது மனம் நோகாத வகையில் எடுத்துக்கூறி, அவர்களைப் பெரும் சாதனையாளர்களாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடியவராகவும் மாற்ற நிச்சயமாக ஒரு மனைவியால் இயலும்.
சுருங்கக் கூறின்,நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணால் ஒரு வலிமையான குடும்பத்தை உருவாக்க முடியும், ஒரு நல்லொழுக்கமுள்ள குடும்பத்தால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும், ஒரு சிறந்த சமுதாயத்தால் பொலிவுமிக்க தேசத்தை உருவாக்க முடியும், ஒரு நல்ல குடும்பத்தின் அடிப்படையில் இத்துனையும் அடங்கி உள்ளது என்றால் அதற்க்காண முயற்சிக்கு எந்த பெண்ணும் தயங்கவா வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
மாமியார்:
மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று பழமொழி நாம் கேட்ட ஒன்று, நமது குடும்பத்தில் மாமியார் என்பவர் இன்றியமையாதவர், குடும்பத்தில் பெரியவர்கள் நமது இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் பெரும்பாலான மாமியார்களுக்கு மகன் திருமணமானனவுடன் மனைவி சொல்லே மந்திரம் என்றும் மாறி விடுவாதகவும், நம்மை கவனிப்பதில்லை என்பன போன்ற எண்ண அலைகள் அவர்கள் மனதில் தோன்றும். இது பெண்ணாகிய ஒவ்வொருவருக்கும் உள்ள இயல்பு.
இந்நிலையில் தான் மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் சிறிய விரிசல் உருவாகத் தோன்றும். ஆனால் எந்த பெண் தன் சுயவிருப்பங்களைத் தவிர்த்து குடும்பத்தின் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் நாடுகிறாளோ, நிச்சயமாக அவளால் இந்நிலையை மாற்ற இயலும், நம்முடைய மாமியார் முன்பு போல் நம்மிடம் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இல்லையே என ஏங்கலாம், ஏன்? நாம் அதற்குரிய காரணங்களை ஆராய்ந்து, அவர்களிடம் நாம் மனம் விட்டு பேசி அவர்களுடைய வீண் சந்தேகத்தை போக்க வேண்டும். அவர்களது மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பது அவசியம், நாம் சில விஷயங்களை மாமியாரிடம் கலந்தாலோசிப்பது நல்லது, இவ்வாறு செய்தால் நிச்சயமாக நம்மால் ஒரு புதுமாற்றத்தை நம் வாழ்விலும், நமது மாமியாரின் மனதிலும் கண்டிப்பாக உணர இயலும்.
அவர்களையும் நமது தாய்போல் பாவித்து கடிந்து கொள்ளும் நேரத்தில் அனுசரனையாகவும், உடல் சுகமற்ற நேரத்தில் அரவனைப்பாகவும் நடந்துக் கொள்வதால் உனது கணவர் வீட்டையும் உன் தாய் வீடாக மாற்ற இயலும்.
உறவினர்கள்:
நாம் நம்மைச் சுற்றி உள்ள உறவினர்களிடம் அன்பு காட்டி பழக கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு சுக, துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். உறவினர்களின் முக்கியத்துவத்தை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வலியுறுத்துகிறான். “மனிதர்களே! நீங்கள் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டு தமக்குரிய உரிமைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்களே அத்தகயவனையும், மேலும் இரத்த கலப்பு சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்” – (அல்குர்ஆன் 4:1)
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உறவினர்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு கொடுத்து உதவ வேண்டும். அவர்களுடன் கனிவான வார்த்தைகளுடன் நடந்து கொள்வது அவசியம். இன்று வசதியும், பெருமையும் உள்ள நமக்கு நாளை அல்லாஹ்வால் எந்த நிலைமைக்கு வேண்டுமானாலும் தள்ளப்படலாம்.
“பாகப்பிரிவினை செய்யும் போது உறவினர்களோ ஏழைகளோ, அநாதைகளோ வந்துவிடுவார்களானால், அவர்களுக்கு அச்சொத்திலிருந்து வழங்குங்கள் மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்” (அல்குர்ஆன் 4:8)
நாம் தொலைத்தூரத்தில் இருந்தாலும் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும், தொடர்பு வைத்துக்கொள்வது அவசியம். நம்மால் இயன்ற அளவு உறவினர்களோடு பாசம் காட்டி அனுசரித்து வாழ முயற்சிப்போம்.
அண்டை வீட்டார்:
நம்முடைய குடும்பத்திற்கு அடுத்தார் போல், நம்முடன் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் நம்முடைய அண்டைவீட்டார்கள். குர்ஆனிலும் நபியின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது.
அண்டை வீட்டாருக்கு இடையூறு கொடுப்பது அவனது நிம்மதியை குலைக்கும் செயலாகும்
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்” என அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)
அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது நாம் உதவி செய்தல் அவசியம், நமக்கு ஏதேனும் உடல் ரீதியிலோ அல்லது பண ரீதியிலோ இணக்கம் ஏற்படும்போது நமக்கு முதலில் உதவுவது நம்முடைய அண்டை வீட்டார் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் விருந்து அனுசரிக்கும்போதும், விழாக்காலங்களிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பழக்கமாக வைத்துக் கொள்வதால் நமக்கு அனைத்து விதங்களிலும் அவர்கள் பக்கபலமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஏழ்மையில் வீற்றிருக்கும் அண்டை வீட்டாருக்கு நம்முடையும் அன்பும், அரவணைப்பும், விருந்தும் அவர்களின் ஏழ்மையை மறக்கச் செய்யும்.
முடிவுரை:
குடும்பத்தில் ஏற்படும் அற்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் சமோயோஜிதமாக சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய குடும்பம் என்றில்லாமல் தொலை நோக்கு பார்வையோடு நம்முடைய சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒவ்வொரு பெண்ணும் அக்கறைகொள்ள வேண்டும்.
பெண்களால் முடியாதது எதுவுமேயில்லை எனற ரீதியில் நம்முடைய குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஒற்றுமையோடு கொண்டு செல்ல நம்மால் இயன்றவகையில் திறம்பட செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் திறமையுடன் இருப்பாள், அதை அவளுக்காகவும், அவள் குடும்பத்திற்காகவும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக ஒரு புது உலகை நம்மால் கொண்டுவர இயலும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய திருமறைக் குர்ஆனின் ஒளியோடும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழக்கை முறையோடும் வாழ முயன்றால் ஒரு வலிமைமிக்க சமூகத்தை நாம் உருவாக்க இயலும் இன்ஷா அல்லாஹ்.
-அபு சுமையா
0 comments:
Post a Comment