மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5273)
மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.