Feb 19, 2013

நரகத்திற்கு முன்பதிவு!


''எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (ஸூரத்துல் முல்க் - 1,2)
ஆனால், இறைவன் மனிதனைக் கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை சோதித்தாலோ அவன்,"என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.(ஸூரத்துல் ஃபஜ்ரி15,16)
இவ்வுலகில் தோன்றிய அனைத்து மனிதனும் சோதனைக்குட் படுத்தப்பட்டே தீருவான் இதில் யாரும் விதிவிலக்கில்லை. வேதனைஎன்னவென்றால் அனைவருக்குமே சோதனை வரும் என்பதை நன்கு அறிந்துள்ள மனிதம்,தானும் அதில் அடங்கியவன் என்பதை உணர மறுப்பதுதான்.
பிறருக்கு ஒரு பிரச்சனையெனில் அல்லாஹ் கைவிடமாட்டன் என ஆறுதல்கூறும் மனிதன், அதேபோல சோதனை தனக்கு வரும்போது கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றான். இதில் நம் தாய்மார்களில் பலரின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. அதுபற்றிய ஒரு சிறு தொகுப்பை காண்போம்.

மார்க்கத்தில் குறையுடையவர்கள் என்று பெண்களைப் பார்த்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(நூல்: புகாரி)
அது பொதுவாக பெண்கள் அவர்களின் மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் அமல்களில் அவர்களுக்கு ஏற்படும் குறையைப் பற்றி சொல்லப்பட்ட விஷயமென்றிருந்தாலும், இறை நம்பிக்கை மற்றும் மறுமையின் மீதுள்ள நம்பிக்கையில் நம்மில் பல தாய்மார்கள் உறுதியிழந்ததின் காரணமாக குறைக்கு மேல் குறையை தாங்கி நிற்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
அன்றொரு காலம் தன் உடன் பிறந்த சகோதரன் யுத்தகலத்தில் எதிரிகளால் உடல் உறுப்புக்கள் அறுக்கப்பட்டு உடல் முழுவதும் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுக்கிடந்தார். அந்தக் காட்சியை கண்ட ஹழ்ரத் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன் சகோதரனுக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி, தங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை உணர்ந்து,
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (நாம் அல்லாஹ்விற்கே சொந்தமானவர்கள்.அவனிடமே திரும்பிச்செல்ல இருக்கின்றோம்) எனக்(கண்ணீர் மல்கக்) கூறினார்கள். (நூல்:அர்ரஹீகுல் மக்தூம்,343)
அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச்செல்வோம்" என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.(சூரத்துல்பகரா 156,157)
அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூச்சல் போடவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. காரணம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்தார்கள். ஒரு முஃமின் அநியாயமாக கொலையே செய்யப்பட்டாலும் அவர் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்றுவிட்டார். அங்கே உயர் பதவியைப் நிச்சயம் பெறுவார்.என்பதில் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
அந்த நம்பிக்கையில் அரைக் கால்வாசியாவது இன்று நம் பெண்களிடம் காணப்படுகிறதா? என சிந்தித்தால் கைசேதம் தான் கடைசியில் நமக்கு மிஞ்சுகின்றது. எங்கே சென்றது அந்த ஈமானின் அடிச்சுவடுகள்?
''நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப் பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்.'' (சூரத்துல்மஆரிஜ் 19-21)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ஏராளமான ஆண்களின் நடவடிக்கை அமைந்தாலும் பெண்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நரக வாசிகளில் (ஆண்களை விட) அதிகமாக இருப்பது நீங்கள் தான் என எனக்குக் காட்டப்பட்டது என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களைப் பார்த்துக் கூறினார்கள். (நூல்:புகாரி)
மனிதன் எதிபாராத சம்பவங்கள் நடைபெறுவது இவ்வுலகிற்கு இறைவன் நியமித்த நியதி. அதனால்தான் அன்றாடம் எத்தனையோ அசம்பாவிதங்களை நம் கண்களால் பார்க்கின்றோம். அல்லது காதுகளால் கேட்கின்றோம். அவைகளுக்கெல்லாம் ''இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'' எனச் சொல்லும் வழக்கத்தை நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கின்றோம்? நாமும் கடைபிடிப்பதில்லை. நம் பெண்களுக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. அதன் விளைவு ஏதேனும் சோதனைகள் அவர்களை அடைந்தால் அவர்கள் பொறுமை இழந்து ஓவென ஒப்பாரி வைக்கின்றார்கள். தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு இறந்தவருக்குத் தகுதி இல்லாததையெல்லாம் சொல்லி அழுது புழம்புகின்றார்கள்.
அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவர்களின் நாவுகளிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளால் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றார்கள்.
சத்தியத் தூதரின் எச்சரிக்கையை சிந்தனையில் நிறுத்தாத பல தாய்மார்கள் மரணத்திற்கு முன்பே நரகின் வாயில் கதவைத் தட்டுகின்றார்கள்.
ஆம், தான் பெற்றெடுத்த பச்சிழங்குழந்தையைப் பறிகொடுத்த அந்தத் தாய், பத்து வயது வரை பாராட்டி சீராட்டி வளர்த்த பாலகனைப் பறிகொடுத்த அந்தத் தாய், எதிர்பாராத விபத்தில் கணவனையோ அல்லது மகனையோ பறிகொடுத்த அந்தத்தாய், சோதனையைத் தருபவன் அல்லாஹ் தான் என்பதை நன்கு விளங்கி வைத்திருக்கும் அந்தத் தாய், அந்தச் சோதனையை தந்த ரப்புல் ஆலமீனையே வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டும் போது, அவளை என்னவென்று சொல்வது?
கருணைமிக்க இறைவனையே இரக்கமற்றவன் என்று சொல்லும் அளவிற்கு அப்பெண்ணுக்கு துணிவு எங்கிருந்து வருகிறது?அல்லாஹ்வையும் மறுமையையும் அப்பெண் ஈமான் கொள்ள வில்லையா? தானும் ஒருநாள் மரணித்துத் தான் ஆகவேணடும் என்பதை அவள் அறிந்து வைத்திருக்க வில்லையா? அவனிடம் தான் அனைவரின் மீளுமிடமும் இருக்கின்றது என்பது அவளுக்குத்தெரியாதா? தெரியுமென்றால் பிறகு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
எதற்குமே பயனில்லாத இதுபோன்ற அநாகரிக வார்த்தைகளால்நம்மில் எத்தனையோ பெண்கள் அவர்களாகவே நரகத்திற்கு முன்பதிவு செய்து கொள்கின்றார்கள்.
இதுபோன்ற பெண்களை அல்லாஹ்வின் அருளுக்குள் கொண்டுவர சுவனத்தின் பால் அவர்கள் அடியெடுத்து வைத்திட அவர்களின்
தந்தையர்கள்,கணவன்மார்கள்,சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? இவர்களுக்கு வந்த சோதனையைப் போல இவ்வுலகில் இதற்கு முன்னர் யாருக்குமே வந்ததில்லை என அப்பெண்கள் எண்ணிக் கொள்கின்றார்கள்.
அவர்களுக்கு அன்னை உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவகளின் வாழ்வை எடுத்துக் கூறுங்கள். பிறந்து சில வாரமே ஆன தன் பச்சிழங்குழந்தையைப் பறிகொடுத்த அந்த தாய் எப்படியெல்லாம் துடித்திருப்பார்? அத்தருணத்தில் அவருக்கு ஆறுதல் கூற அவரின் கணவன் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட அருகில் இல்லை. அக்குழந்தை இறந்ததற்காக அவர்கள் அல்லாஹ்வை கோபித்தாரா?அல்லது அழுது புரண்டாரா? இல்லையே!
அமைதியாக தனக்கு வந்த சோதனையை கையாண்டார்கள். அல்லாஹ்வை தொழுது கையேந்தி பிராத்தித்து விட்டு, வெளியூர் சென்றிருந்த கணவர் அன்றிரவு வீடு திரும்பியதும் தன் மகனை பற்றி விசாரிக்க, தங்கள் மகன் முன்பைவிட இப்போது நிம்மதியாக இருக்கின்றான் என்று சொல்லிவிட்டு, தன் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமையை எப்போதும் போல நிறைவேற்றிய பின்,
அமைதியான முறையில் தன் கணவனிடம் ''ஒரு கூட்டத்தினர் சில பொருட்களை அமானிதமாக ஒரு குடும்பத்தினரிடம் கொடுத்து வைத்திருந்தனர். அப்பொருளை அக்கூட்டத்தினர் திருப்பிக் கேட்கும் அக்குடும்பத்தார் கொடுக்க மறுக்கலாமா?'' எனக்அமைதியாகக் கேட்க, அதற்கு ''இல்லை, நிச்சயம் திருப்பிக் கொடுத்து விடவேண்டும்'' என, அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு பதில் கூற, நம் மகன் இறந்துவிட்டான் என்று மகனின் மரணச் செய்தியை தன் கணவனுக்கு தெரிவித்தார் அந்த தியாகப் பெண்மணி. (நூல்: முஸ்லிம்)
என்ன ஒரு இறையச்சம்! என்ன ஒரு பக்குவம்! என்ன ஒரு கடமை உணர்வு! தன் மகனை கொடுத்தவனே திருப்பி எடுத்துக்கொண்டான். என எவ்வளவு அழகாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள், அன்னை உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். இந்த மனபக்குவம் இன்று நம் தாய்மார்களில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?அதை அவர்களுக்கு கொண்டு வரும் பொறுப்பு யாரைச் சார்ந்தது?
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் தானே அந்த பொறுப்பாளிகள்!நம் பொறுப்பை பற்றி நாளை அல்லாஹ்விடம் நாம் என்ன பதில் சொல்வோம்? நம் தாயை நம் மனைவியை நம் மகளை நரகிலிருந்து காப்பாற்றுவது நம்மீது தானே கடமை! அல்லாஹ்வும் அவனின் தூதரும் இன்னும் என்னவெல்லாம் நமக்காக வாக்களித்துள்ளார்கள் என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து நம் பெண்களுக்கு எடுத்துக்கூறுவோம்.
நிச்சயமாக அதிகமான கூலி அதிகமான சோதனையுடன் தான் உள்ளது. என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
''அல்லாஹ் ஒரு அடியானுக்கு நன்மையை நாடிவிட்டால் இந்த பூமியிலேயே அவருக்குரிய தண்டனையை தீவிரப்படுத்தி விடுவான்.ஒரு அடியானுக்கு தீங்கை நாடிவிட்டால் அவனை பாவம் செய்பவனாகவே இந்த பூமியில் வாழச்செய்து மறுமையில் அதற்குண்டான தண்டனையை வழங்குவான்'' என சத்தியத் தூதர் சான்றுபகின்றார்கள். (நூல்: திர்மிதி)
என்னுடைய அடியானின் குடும்பத்திலிருந்து அவனுக்கு (மிகவும்) விருப்பமான ஒருவரை நான் கைப்பற்றி (மரணிக்கச்செய்து) அதற்கு பொறுமையாக என்னிடம் நன்மையை எதிர்பார்த்திருந்தால் அந்த பொறுமைக்கு) கூலி சுவனத்தைத் தவிர வேறொன்றுமில்லை.என்று அல்லாஹ் தஆலா வாக்களித்துள்ளான் என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (நூல்: புகாரி)
பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.நரக நெருப்பை விட்டும் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிராத்திப்போம். நீங்கள் அனைவருமே பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்புகளைப் பற்றி நாளை விசாரணை செய்யப்படுவீர்கள். (நூல்:முஸ்லிம்)
உங்கள் சகோதரன்,
சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பஈ
தேரிருவேலி (ஷார்ஜாஹ்)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )