சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் நுழைபவர் எந்த இடைத்தரகரோ, மதகுருவோ கிளிப்பிள்ளை பாடமாகச் சொல்லித் தருவதை உளப்பூர்வமாக அறியாமல் நாவால் மட்டும் மொழியாமல், சுயமாகத் திட்டமாக விளங்கி, உணர்ந்து மனதார ஏற்று உறுதியாகச் சொல்லும் உறுதிமொழி ‘நிச்சயமாக இறைவனே இல்லை அல்லாஹ்வைத் தவிர என நான் உறுதி கூறுகிறேன்” இன்னும் திடனாக முஹம்மது அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் என நான் உறுதி கூறுகிறேன்” என்பதுதான். இதுவே ஏற்கத்தக்கது.
இந்த உறுதிமொழியை முறையாகச் சரியாக விளங்கி அதன்படி நடப்பவர் ஒருபோதும் கோணல் வழிகளில் செல்ல மாட்டார். இந்த உறுதிமொழியின் முற்பகுதியை நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களும் தங்களின் சமூகத்தாருக்கு எடுத்துச் சொன்னதை அல்குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கிறது. இப்படி அனைத்து சமூகங்களுக்கும் அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் இல்லவே இல்லை என்று மீண்டும் மீண்டும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?
ஷைத்தான் அவனது சபதப்படி ஆதத்தின் சந்ததிகளை அல்லாஹ்வுக்கு இணை(ஷிர்க்) வைக்கும் இறைவனால் மன்னிக்கப்படாத குற்றத்திற்கு (4:48,116) ஆளாக்கி பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளுகிறான். அவனது இச்சபதத்தை நிறைவேற்ற ஷைத்தானுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவது இடைத்தரகர்களான மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மத குருமார்களே! இறைவனுக்கு இணைவைத்தல் பலவிதம். இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களை இறைவனது அவதாரங்களாகக் கற்பனை செய்து அவர்களை வழிபடுவது” இறைத் தூதர்களையும், நல்லடியார்களையும் சிலைகளாக வடித்து அச்சிலைகளை வணங்கி வழிபடுவது. மேலும் பல பொய்க் கடவுள்களை இவர்களாகக் கற்பனை செய்து பலவிதமாக சிலைகள் வடித்து அவற்றை வணங்கி வழிபடுவது. வழிகாட்டுவது மத குருமார்களே!
யூதர்கள் உஜைர்(அலை) அவர்களையும், கிறித்தவர்கள் ஈசா(அலை) அவர்களையும் அல்லாஹ்வுடைய மகன் என கற்பனை செய்து வணங்கி வழிபடுகிறார்கள்.(9:30) அதல்லாமல் அவர்களது மதகுருமார்களையும், துறவிகளையும் அல்லாஹ்வாக்கி அவர்களை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதை அல்குர்ஆன் 9:31 உறுதிப்படுத்துகிறது. அந்த மத குருமார்களும், துறவிகளும் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்” நேர் வழியைத் தடுத்து மக்களை கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை 9:34 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.
இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணை (ஷிர்க்) வைக்கும் பெரும் குற்றம் என முஸ்லிம்கள் ஓரளவு விளங்கி வைத்துள்ளனர். பிற மதங்களிலுள்ள மதகுருமார்கள் அவர்களை நம்பியுள்ள மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் ஷைத்தானின் ஏஜண்டுகளாகச் செயல்படுகின்றனர் என்பதையும் விளங்கி வைத்துள்ளனர். ஆயினும் ஷைத்தான் முஸ்லிம்களையும் அவர்கள் மொழிந்துள்ள உறுதி மொழிக்கு மாறாக பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து வழிபாடுகள் செய்து நரகில் நுழையச் செய்கிறான் என்பதை பெரும்பாலான முஸ்லிம்கள் உணராமல் செயல்பட்டு தங்களைத் தாங்களே அழிவில் ஆக்குகிறார்கள். இங்கும் அவர்கள் பெரிதும் கண்மூடி நம்பும் முஸ்லிம் மதகுருமார்களே ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்பட்டு தங்களை நம்பியுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள் என்பதை விளங்காமல் செயல்படுகிறார்கள்.
அவுலியாக்கள் என்ற பெயரால் தர்காக்களை கட்டிக் கொண்டு அங்கு போய் வழிபாடுகள் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களில் ஈடுபடுவதை 10:8, 18:102-106, 39:3 மேலும் பல இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
இப்போது தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள மதகுருமார்களில் சிலர் கலஃபுகளையும் பின்பற்றக் கூடாது” ஸலஃபுகளையும் பின்பற்றக் கூடாது” நபி தோழர்கள், கலீஃபாக்களையும் பின்பற்றக் கூடாது” ஆனால் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் இப்போது நாங்கள் கொடுக்கும் சுய விளக்கத்தையே பின்பற்ற வேண்டும். ஏன் என்றால் அவர்கள் அனைவரையும் விட நாங்கள்தான் மார்க்கத்தை அதிகமாக விளங்குகிறோம். இதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் விடைபெறும் ஹஜ்ஜில் ‘நான் கூறுபவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் என்னுடைய வார்த்தைகளை இங்கு வராதவர்களுக்குக் கொண்டு சேருங்கள். ஏனெனில் செய்தி கிடைப்பவர்கள் பலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்க முடையவர்களாக இருப்பார்கள்” என்று முன் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள் என்று கூறி அவர்களும் வழிகெட்டு, அவர்களை நம்பியுள்ளவர்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள்.
இவை அனைத்தும் முஸ்லிம்களாகிய நாம் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு மாற்றமாகும். நமக்கும் இறைவனுக்கும் இடையில் இடைத் தரகர்களான இந்த மதகுருமார்களை எடுக்காமல், நேரடியாக அல்குர்ஆனில் உள்ளது உள்ளபடியும் அந்த உறுதி மொழியின் இறுதிப் பகுதியின்படி ஆதாரபூர்வமான ஹதீஃத்களில் உள்ளது உள்ளபடியும்; மட்டுமே எடுத்து நடப்பதே ஒரே நேர் வழியாகும். உறுதி மொழியைக் காப்பாற்றுவதாகும். இவர்களே நேர்வழி பெற்றவர்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.
0 comments:
Post a Comment