Sep 20, 2013

இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!



அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48,116)
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள் செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை உனக்கு வழங்குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி
சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம் பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும் பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி விடுவதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.
அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம்பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது. (7:56)
அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”

இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான். (17:23, 98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும். (27:62, 39:44, 2:255)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (7:194, 13:14)
அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும் பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக் கோருகிறார்கள்.
சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர் “”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். (46:5)
சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது.
சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (10:107)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்வது “ஷிர்க்”
நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். அதை அவனுக்கே செய்ய வேண்டும்.
சிலர் “கப்ருக்களுக்கு விளக்கேற்றுகிறோம்; பத்தி கொளுத்துகிறோம்; காணிக்கை செலுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது “ஷிர்க்
நேர்ச்சையும் வணக்கமே என்பதற்குப் பின் வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் : (76:7, 2:270)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்
அல்லாஹ் கூறுகின்றான் (108:2)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “”அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிக்கின்றான்” (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது குற்றம்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது குற்றம்.
சிலர் வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந் தால் அங்குள்ள ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதற் காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடுகிறார் கள். இதுவும் “ஷிர்க்” ஆகும்.
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க் ; அல்லாஹ் கூறுகின்றான் : 9:31
அதி இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதிக் காட்டியபோது “கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், சன்னியாசிகளையும் வணங்கவில்லையே’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள், விலக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, இதுதான் கிறித்தவர்கள் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
இந்த 9:31 இறைக் கட்டளை மற்றும் ஹதீஸ் படி அல்லாமா, ஷேக், ஹஜ்ரத் என்று நம்பி அவர் கள் கூறும் சுய விளக்கங்களை அப்படியே எடுத்து நடப்பதும் “”ஷிர்க்’ ஆகும்.
மேலும் இம்மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில் ஹராம், ஹலால் என ஃபத்வா கொடுப்பது 42:21 இறைவாக்குப்படி தங்களையே அல்லாஹ்வாக்கிக் கொள்ளும் மிகப் பெரும் ஷிர்க் ஆகும்.
“தற்கொலை’ செய்து கொள்வது “ஷிர்க்’ அல்லாஹ் கூறுகிறான். (4:29, 4:30)
நமக்கு உயிர் கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே. எனவே ஒருவன் தற்கொலை செய்து கொள்வது, அல்லாஹ்விற்குரிய அதிகாரத்தை எடுத்துக் கொள்வது போல் ஆகும். எனவே “தற்கொலை செய்து கொள்வதும் “இணைவைத்தலை’ சேர்ந்ததேயாகும்.
அல்லாஹ் அனுமதிக்காதவற்றில் பலன்களைத் தேடுவது “ஷிர்க்”
சிலர் தாயத்து, கயிறு, வளையம் போன்றவற்றை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல் தடுத்துக் கொள்வதற்கும் அணிவது “ஷிர்க்கில்’ உட்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான். (12:106, 10:107)
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு இது என்ன? என்று வினவினார்கள். அதற்கு அம் மனிதர் வாஹினாவின் (கழுத்தில் கையில் உண்டாகும் நோயின்) காரணமாக அணிந்துள்ளேன்” என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி “நீர் அதை கழற்றி விடும், இது உமக்கு பலகீனத்தைத் தான் அதிகப்படுத்தும். இந் நிலையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று கூறினார்கள்.
இம்ரான் இப்னு ஹுசைன்(ரழி) நூல் : முஸ்னத், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாவீஸை தொங்கவிட்டா(அணிந்தா)ரோ அவர் “ஷிர்க்’ செய்தவராவார்.” (நூல்: அஹமது)
பகட்டுக்காக வணங்குவது “ஷிர்க்”
நற்செயல்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மனத்தூய்மையடன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் பகட்டுக்காக (பிறர் பார்த்து புகழ வேண்டுமென்பதற் காக) செய்வது “ஷிர்க்”ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் : (4:142)
நபி(ஸல்) கூறினார்கள்:
பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக எவன் வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான். (புகாரி, முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழ் மொழிகளையும் நாடிச் செய்வாரேயானால் அவரின் அந்த நற்செயல் வீணானதே!
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இணை வைப்பவர்களின் இணையை விட்டு நான் முற்றிலும் தேவையற் றவன். எவன் தனது நற்செயலில் என்னுடன் பிறரை இணைத்துக் கொண்டானோ அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன். (முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வுக்காகத் தொடங்குகிறார். பிறகு அவரது உள்ளத்தில் பகட்டு எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவர்அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி செய்வாரெனில் அவரது நற்செயல் வீணாகிவிடாது.
ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும் போது அதைத் தடுப்பதற்கு முயற்சி செய்யாமலிருந்தால் அந்த நற்செயல் வீணாகிவிடும்.
சகுனம் பார்ப்பது “ஷிர்க்”
அறியாமைக்கால அரபியர்கள் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நாடினால் ஒரு பறவையை பிடித்து அதைப் பறக்க விடுவார்கள். அது வலப் பக்கமாகப் பறந்தால் அதை நல்ல சகுனமாக நம்பி அந்தக் காரியத்தைச் செய்வார்கள். இடப் பக்கம் பறந்தால் அதைத் துர்ச்சகுணம் என நம்பி அக்காரியத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: (7:131)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகுனம் பார்ப்பது “ஷிர்க்’ ஆகும். (அஹ்மது, திர்மிதி)
சகுனம் பார்ப்பவனும் யாருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதோ அவனும், சோதிடம் பார்ப்பவனும் யாருக்காகச் சோதிடம் பார்க்கப்படுகிறதோ அவனும் சூனியம் செய்பவனும் எவன் சார்பாக சூனியம் செய்யப்படுகிறதோ அவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்” (திர்மிதி)
“”துர்ச்சகுனம் ஒருவனை அவனது காரியத்தை விட்டு தடுத்து விட்டால் அவன் இணை வைத்து விட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அதனைக் கேட்ட) தோழர்கள், “”அல்லாஹ்வின் தூதரே! அதற்கான பரிகாரம் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக; வலா தய்ர இல்லா தய்ருக, வலா இலாஹ ஙைருக்க”
(அல்லாஹ்வே! உனது நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை, உனது சகுன மின்றி வேறந்தச் சகுனமும் இல்லை; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை) என்று சொல்லி விடும்” எனக் கூறி னார்கள் (முஸ்னது அஹ்மது)
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது “ஷிர்க்”
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் எதன் மீதும் சத்தியம் செய்வான். ஆனால், நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதன்மீதும் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்கள் மூதாதையர் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறான். எவராவது சத்தியம் செய்வ தாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.(புகாரி)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவன் நிச்ச யமாக ஷிர்க்” இணை வைத்து விட்டான். (முஸ்னது அஹ்மது)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாத், உஸ்ஸாவின் மீது சத்தியம் செய்தவர் லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறிவிடட்டும். (புகாரி)
ஷிர்க்கை ஏற்படுத்தும் சில வாக்கியங்கள்.
அல்லாஹ்வாலும் உங்களாலும் இது எனக்குக் கிடைத்தது,
காலத்தைக் குறை கூறிப் பேசுவதும் குற்றம்.
அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள், “”ஆதமின் மகன் எனக்கு நோவினை தருகிறான். அவன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலத்தைப் படைத்தவன்; எனது கையில்தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறி வரச் செய்கிறேன்”.
உதாரணமாக: இது என் கெட்ட காலம்
வரம்பு மீறிப் புகழாதீர்.
சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லா ஹ்வின் தூதரே! எங்களில் மிகச் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனாரே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “”மக்களே உங்களின் சொற்களைக் கூறுங்கள். ஆனால் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள். நான் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை. அவனின் தூதர்; எனக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பை விட என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: நஸாயீ
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகப்படுத்திப் புகழ்வதைப் போல் என்னை நீங்களும் மிகப்படுத்திப் புகழாதீர்கள்.
ஆதாரம்:புகாரீ, திர்மிதி.
நானொரு அடியானே! (என்னை) அல்லாஹ் வின் அடிமை என்றும், அவனின் தூதர் என்றும் கூறுங்கள். நீங்கள் மிகைப்படுத்துவதை அஞ்சி (எச்சரிக்கையாக இருந்து) கொள்ளுங்கள். இப்படி மிகைப்படுத்தியது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்:ரஜீன்
ஆளுமையில் இணைவைத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாக நம்புவது, அல்லாஹ்வுக்குப் பெற்றோர், கணவன், மனைவி, மக்கள் இருப்பதாக நம்புவது “ஷிர்க்’ ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்: (12:39,40, 112:3)
மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவத் திலோ அல்லது ஏனையபடைப்புகளின் வடிவத் திலோ இறைவன் இவ்வுலகில் தோன்றுவதாக (அவதாரம் எடுப்பதாக) நம்புவது “ஷிர்க்”
அல்லாஹ் கூறுகின்றான்: (20:5, 32:4)
அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான். ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் நன்கறிந்த வனாகயிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்: 32:5, 6:56, 6:103)
போன்ற குர்ஆன் வசனமும் சான்று. பூமியில் நடப்பவற்றை அறிவதற்கு அவன் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை, தேவை யுமில்லை. அதையே குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. (6:80)
இறைவன் தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்ற கொள்கை இங்கு செல்லாது; ஏனென்றால் இறைவன், யாவற்றையும் படைத்து பின் “அர்ஷின்’ மீது அமைந்து விட்டதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் அவனின் சக்தி அனைத்திலும் பரவி, ஊடுருவிச் செல்லுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: 32:6
எனவே இறைவன் (எதன் வடிவிலும்) அவதாரம் எடுத்து பூமியில் தோன்ற வேண்டுமென்பதற்கு அவசியமில்லை. அவ்வாறு நடப்பதும் கிடையாது.
தன்மைகளில் இணை வைத்தல்
இறைவனுக்கு எவ்விதம் யாருடைய துணையுமின்றி அனைத்தையும், அறிகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற ஆற்றல் உண்டோ, அத்தகைய ஆற்றல்(தன்மை) மற்றவர்களுக்கும் உண்டு என நம்புவது “இணை வைத்தல்’ ஆகும்.
அல்லாஹ் கூறுகின்றான். 27:65, 32:6, 6:59, 6:73, 11:123, 20:7, 6:50, 3:44, 39:46 போன்ற பல குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அறிகின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உரியது என்பதற்கு சான்று பகர்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான். 20:46, 42:11
எனவே இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அனைத்தையும் அறிகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற ஆற்றல் கிடையாது. உண்டு என நினைப் பதும், நம்புவதும் “ஷிர்க்’ ஆகும்.
M.S அஹமது அலி ஆவடி, சென்னை

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )