இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது.
மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள்.
மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள்.
இது ஒரு பரீட்சைக்கூடம்!
இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா?
இறைவன் கேட்கிறான் பாருங்கள்:
23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''
இறைவனின் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம்.
இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
நரகமும் காத்திருக்கிறது
சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.
ஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர்நோக்கியுள்ள உண்மைகள். எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது.... மரணம் நம்மை வந்து அடையும் வரை!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!”
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157 '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'
மேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து!
நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணராதவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறைநம்பிக்கையாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்!
0 comments:
Post a Comment