எல்லாம் வல்ல இறைவன் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா (அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்ட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பற்பல மதங்களிலும் பற்பல பிரிவுகள் – பிளவுகள் – வேற்றுமைகள். மனிதர்களில் இந்த பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படக் அடிப்படைக் காரணம் என்ன?
ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்.
நாம் சொன்னோம்: :நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:38,39)
ஆதம் (அலை) அவர்களை வானவர்களைவிடவும் உயர்ந்தவர்களாக சிறப்பித்துக் காட்டினான். அப்படிப்பட்ட ஒரு நபியை தன் சொந்த அபிப்பிராயப்படி செயல்படக்கூடாது எனவும் எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைக்கு மாறு செய்தால் அடையப்போவது மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்கிறான். அல்லாஹ்வுடைய வஹி மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால் மற்ற மனிதர்களின் நிலைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும் சொந்த அபிப்பிராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்கு பிடித்தமான செயல் என்று நம்பியே செயல்படுகிறான். இதற்குக் காரணம் மனிதனை வழிகெடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தான் மனிதனது உள்ளத்தில் நல்லதைப் போன்று தீமையைப் புகுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்குக் கொண்டு சேர்த்து விடுகிறான். இதனை:
செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:103,104)
ஷைத்தான் எவ்வாறு இந்நிலையை உருவாக்குகிறான்?
மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்ப வைத்து அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்த சென்ற முன்னோர்களையும் மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான். இதனை சாதாரணமாகப் படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழியை நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும்.
நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் நேர்வழி அறிந்து நடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம்பெற்று விடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்துச் செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம் அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கிறான். அந்த முயற்சியில் ஈடுபட்டுச் சரியாக நடந்தால் இரண்டு நன்மைகள். முயற்சியில் ஈடுபட்டுப் பின் தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்க மாட்டான்.
இறைவன் கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். வசனம் 2:38ன் படி இறைவன் கொடுத்த நேர்வழியை அறிய முயற்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து “உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வெறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 7:3) என்ற இறை வசனத்தை பொய்யாக்கி முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களைப் பின்பற்றுவதைக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது மூன்றாவது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிகேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக:
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)
இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானுக்கு இரண்டு வித வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்கின்றன. மனிதர்கள் அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக்கட்டி அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழி தவறிச் செல்லச் செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் சென்று அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும் போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்;
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”(என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)
இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வரவேண்டும்.
0 comments:
Post a Comment