Mar 17, 2014

விருந்தினரை கண்ணியப்படுத்தல்

விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.
“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
விருந்தினரை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்பதிலிருந்து விருந்தோம்பலின் அவசியத்தை உணரலாம்.
யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
விருந்தழைப்பை மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்பதிலிருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை உணரலாம்.
 
உள்ளூர்வாசியும் விருந்தாளியே!


வெளியூரிலிருந்து நம்மை நாடி வருபவர் மட்டுமே விருந்தாளிகள் என்று பலரும் எண்ணியுள்ளனர். இது தவறாகும். உள்@ர்வாசிகளும் கூட விருந்தை நாடிச் செல்லலாம். அவர்களையும் கூட உபசரிக்க வேண்டும்.
 
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் வெளியே வந்த நேரத்தில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். “இந்த நேரத்தில் ஏன் வெளியே புறப்படுகிறீர்கள்?” என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் “பசி” என்றனர். “என் உயிரை கைவசப்படுத்தியுள்ளவன் மீது ஆணையாக! நீங்கள் எதற்காகப் புறப்பட்டுள்ளீர்களோ அதற்காகவே நானும் புறப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்விருவரையும் நோக்கி “நடங்கள்” என்றார்கள். அவர்களிருவரும் நபியவர்களுடன் நடந்தனர். மூவரும் அன்சார்களைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தை அடைந்தனர். அப்போது அவர், வீட்டில் இல்லை. அவரது மனைவி அவர்களைக் கண்டதும் “நல்வரவு” என்று கூறினார். “அவர் எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எங்களுக்காக சுவையான நீர் எடுத்து வரச் சென்றுள்ளார்” என்று அப்பெண்மணி கூறிக் கொண்டிருக்கும் போதே கணவர் வந்து சேர்ந்தார். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் இரு தோழர்களையும் கண்டு, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் சிறந்த விருந்தினர்களைப் பெற்றவர், என்னைவிட யாரும் இல்லை” என்று அவர் கூறினார். வெளியே சென்று செங்காய், கனிந்த பேரீச்சம் பழம் கொண்ட ஒரு குலையைக் கொண்டு வந்தார். இதைச் சாப்பிடுங்கள்! என்று கூறிவிட்டு (ஆட்டை அறுக்க) கத்தியை எடுத்தார். “பால் கறக்கும் ஆட்டைத் தவிர்த்துக் கொள்!” என நபி (ஸல்) அவரிடம் கூறினார்கள். அவர் ஆட்டை அறுத்தார்: அதையும் பழக்குலையையும் அவர்கள் உண்டார்கள்: பருகினார்கள். வயிறு நிரம்பி தாகம் தனிந்ததும், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த பாக்கியம் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். பசியோடு வந்தீர்கள்: வயிறு நிரம்பி திரும்பிச் செல்கிறீர்கள்” என்று அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

 
 விருந்தினரை கண்ணியப்படுத்தல்

 கணவர், வீட்டிற்கு விருந்தாளியை அழைத்து வரும்போது வந்த விருந்தாளியை தங்களின் செயல்களின் மூலம் வெறுப்பூட்டி மனதை புண்படுத்தும் பெண்களைப் பார்க்கிறோம். இறைவனையும், மறுமையையும் அஞ்சி விருந்தளிப்பதனால் கிடைக்கும் நன்மையை மனதில் கொண்டு இதுபோன்ற அநாகரீகமாக நடப்பதை விட்டும் பெண்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும். நம்மை நாடி வரக் கூடியவர்களுக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்த வேண்டும். நம்மிடம் குறைந்த உணவு இருந்தாலும் அதைக் கொடுத்து விருந்தினரை மகிழ்விக்க வேண்டும்.
 
நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அப்படியே பின்பற்றிய நபித்தோழர்களும், தோழியர்களும் விருந்தோம்பல் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
ஒரு முறை மனிதர் கடும்பசியுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவளிக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஆளனுப்பி, “வீட்டில் உண்பதற்கு ஏதேனும் உண்டா?” எனக் கேட்டார்கள். “இன்று எதுவும் இல்லை!” என்று பதில் வந்தது. நபியவர்கள் தோழர்களை நோக்கி, “அல்லாஹ்வின் இந்த அடிமையை அழைத்துச் சென்று விருந்தளிப்பவர், உங்களில் யாரேனும் உண்டா?” எனக் கேட்டார்கள். இதனைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) எழுந்து, “இறைத்தூதரே! இவரை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள். வீட்டிற்குச் சென்று தமது மனைவி உம்முசுலைம் (ரலி) அவர்களிடம், “ஏதாவது உணவு உள்ளதா?” எனக் கேட்டார். “பிள்ளைகளுக்கான உணவைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லை! என்று உம்முசுலைம் (ரலி) கூறினார். பிறகு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு இருந்த உணவை வந்த விருந்தாளிக்கு வைத்து விட்டனர். விருந்தாளி தன்னையும் உண்ணச் சொல்வார் என்பதை அறிந்து விளக்கை அணைத்துவிட்டு, அபூதல்ஹா (ரலி) உண்பது போன்று தனது வாயை அசைத்துக் கொண்டிருந்தார். விருந்தாளியை மகிழ்வித்தோம் என்ற திருப்தியுடன் கணவனும், மனைவியும் இரவைக் கழித்தார்கள். காலையில் அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் நேற்று இரவு விருந்தாளியுடன் நடந்து கொண்ட விதத்தை குறித்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
 
அவர்கள் தங்களை விட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். தமக்கு தேவை இருப்பினும் சரியே! (அல்குர்ஆன் 59:9) என்ற வசனம் அவர்களுக்காகவே இறங்கியது.
 
அனஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களை நோய் விசாரிக்க, சிலர் வந்தனர். “பணிப் பெண்ணே! நமது தோழர்களுக்காக ரொட்டித்துண்டையாவது கொண்டுவா!” என்று கூறிவிட்டு “நல்ல பண்புகள் சுவனத்திற்கான அமல்களில் உள்ளவையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: ஹுமைத் நூல்: தப்ரானி
 
நோய் வாய்ப்பட்டிருக்கும் போது கூட, நபித்தோழர்கள் விருந்தினரைக் கவனிக்கத் தவறியதில்லை என்பதிலிருந்து விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
 
பொது விருந்தினரை உபசரித்தல்

“ஒருவர் தனி நபரின் விருந்தினராகச் செல்லாமல் ஒரு கூட்டத்தாரிடம் விருந்தாளியாகச் சென்றால், அவருக்கு ஏதும் கிடைக்கவில்லையானால், அவருக்கு உதவுவது, எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அஹ்மத்
 
விருந்தளித்தல் பிரதி உபகாரம் அன்று

 விருந்தளித்தல் என்பது பிரதி உபகாரமாகச் செய்யப்படும் ஒன்றல்ல. நமது நற்பண்பை எடுத்துக்காட்டுவதற்காக செய்யப்படுவதாகும். எனவே விருந்தாளியாக வந்தவர் நம்மிடம் எப்படி நடந்து கொண்டார் என்று பார்க்கக்கூடாது.
“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக, நூல்: திர்மிதீ
விருந்தோம்பலின் முறை

 விருந்து பரிமாறும்போது வலது புறமாக அமர்ந்திருப்பவர்களிலிருந்து பரிமாறுதலை துவக்க வேண்டும். இடதுபுறம் பரிமாறுவதாக இருந்தால் வலது புறத்திலுள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
 
ஒருமுறை குட்டிபோட்ட ஆடு நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பாலில் அனஸ் (ரலி) வீட்டிலுள்ள கிணற்றுத் தண்ணீர் கலக்கப்பட்டு குவளை நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பாலைக் குடித்தார்கள். அவர்களின் வலதுபுறத்தில் கிராமவாசிகளும், இடது புறம் அபூபக்கர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (முதலில்) அபூபக்கருக்கு வழங்குங்கள்! என்றார்கள். ஆனால் தன் வலது புறமிருந்த கிராமவாசிகளுக்கு (அந்தக் குவளையை) கொடுத்து விட்டு “வலதுபுறம், வலதுபுறமாகவே (வழங்கவேண்டும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
 
ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் வலதுபுறம் மக்களில் சிறியவரும், இடது புறத்தில் பெரியவர்களுமாக அமர்ந்திருந்தபோது ஒரு குவளை தரப்பட்டது. அதிலிருந்து நபி (ஸல்) சாப்பிட்டார்கள். பின்பு சிறுவரே (இடது புறத்தில் அமர்ந்துள்ள) பெரியவர்களுக்கு (முதலில்) கொடுக்க அனுமதிக்கிறாயா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எஞ்சியுள்ள உணவை பிறருக்கு கொடுக்க நான் விரும்பவில்லை என்று அச்சிறுவர் கூறியதும் அவரிடமே அதைக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
 
வலது புறம் சிறுவர்கள் அமர்ந்திருந்தாலும், வலது புறத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். இடதுபுறம் பரிமாறுவதாக இருந்தால் அவர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. எனவே வலது புறமாகவே பரிமாற வேண்டும்.
 
விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணுதல்

 விருந்தளிக்கும்போது வீட்டுக்காரரோ, விருந்துக்கு வந்தவர்களில் ஒருவரோ சாப்பிட்டதும், எழுந்துவிடக்கூடாது. அனைவரும் சாப்பிட்டு முடியும் வரையில் சாப்பிடுவது போல் அமர்ந்திருக்க வேண்டும்.
“உணவுத் தட்டு வைக்கப்பட்டால் அது தூக்கப்படும் வரை எவரும் எழக்கூடாது. தனக்கு வயிறு நிரம்பிவிட்டாலும் கூட்டத்தினரின் வயிறு நிரம்பும் வரை தனது கையை தட்டிலிருந்து எடுக்கக் கூடாது. ஏனெனில் அவருடன் சாப்பிடுபவருக்கு உணவு தேவையிருக்கும் நிலையிலே வெட்கப்பட்டு தனது கையை அவர் எடுத்துவிடக்கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னுமாஜா
வாசல் வரை வந்து வழியனுப்புதல்

 விருந்தளித்து முடித்ததும், வீட்டுக்காரர் விருந்தாளியை வாசல் வரை வந்து வழியனுப்ப வேண்டும். இது நபிவழி என்பதுடன் தேவையற்ற சந்தேகங்களையும் இதனால் களைய முடியும்.
விருந்தளிப்பவர், விருந்தாளியை தனது வாசல் வரை வந்து அனுப்பி வைப்பது நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா
 
மூன்று தடவை அழைத்து பதில் இல்லையானால்…
விருந்துக்கு செல்பவரோ, வேறு அலுவலை முன்னிட்டு இன்னொரு வீட்டுக்கு செல்பவரோ ஸலாம் கூறவேண்டும். மூன்று தடவை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் திரும்பி விட வேண்டும்.
 
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்கு கூறப்படுகிறது)
 
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். திரும்பிப் போய்விடுங்கள் என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 24:27, 28)
 
நபி (ஸல்) அவர்கள் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறி உள்ளே வர அனுமதி கேட்;டார்கள். ஸஃத் அவர்கள் “வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்களுக்கு கேட்காதவாறு (சப்தமின்றி) பதில் கூறினார். இவ்வாறு மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினார்கள். அவர் மூன்று தடவையும் நபி (ஸல்) அவர்களுக்கு கேட்காத வகையில் பதில் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள். ஸஃத் அவர்கள் அவர்களைத் தொடர்ந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஸலாம் கூறியது, எனக்கு கேட்டது. உங்கள் ஸலாமையும் பரக்கத்தையும் அதிகம் பெறுவதற்காக உங்களுக்கு கேட்காத வகையில் பதில் கூறினேன் என்றார். பின்னார் அவர்கள் நுழைந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத்
 
நான் (எதிலும்) சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: வஹப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, அபூதாவூத்
 
பிஸ்மில்லாஹ் கூறி….

சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறி வலது கையால் உண்ண வேண்டும். தட்டின் முன்பகுதியிலிருந்து உண்ணவேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் உணவு இருந்தது. அன்பு மகனே! நெருங்கி வா! அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் இப்னு அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ
உணவில் ஏதேனும் கீழே விழுந்துவிட்டால்..
(சாப்பிடும்போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு கவளம் கீழே விழுந்துவிட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம். தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்
 
நபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக் கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ
சாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
சாப்பிட பின்…

நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்….
“அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி
 
(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல. உன்னை யாரும் விட்டுவிட முடியாது)
 
ஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
 
உணவை குறை கூறக்கூடாது

 விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக் கொள்ளவேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை காணமாட்டார்கள். அது (உணவு) விருப்பமானதாக இருந்தால் சாப்பிடுவார்கள். விருப்பமில்லையானால் (சாப்பிடாமல்) விட்டு விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
பிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல.


நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவிலலை. இதைக் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி) இது ஹராமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “இல்லை” (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க தன்னருகே அதை இழுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள்.
அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா
 
நின்று கொண்டு நீர் அருந்தக்கூடாது

 நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதை தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி)
நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்
 
தண்ணீரில் மூச்சு விடவோ, ஊதவோ கூடாது

 குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா
 
இடது கையால் குடிக்கக்கூடாது

 உங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் சைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான். சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ
 
முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள்

 முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்
முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
 
என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம். பன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால் அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம்: பருகலாம். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
அபூஸலபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள். அவர்களின் பாத்திரங்களில் மது அருந்துகிறார்கள். (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள். குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக் கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
 
அழையாத விருந்து

 நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
 
அகீகா விருந்து

 குழந்தை பிறந்த மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா எனும் விருந்தளிக்க மார்க்கத்தில் ஆதாரமுள்ளது. ஆண் குழந்தைக்காக இரண்டு ஆடுகள், பெண் குழந்தைக்காக ஒரு ஆடு அறுத்து விருந்தளிக்கலாம்.
ஒவ்வொரு ஆண் குழந்தையும், அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாளில் அறுத்துப் பலியிடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: அஹ்மத்
 
ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகள், பெண் குழந்தைக்கு ஒரு ஆடு (அகீகா கொடுக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுஹிப்பான்
இந்த ஹதீஸ் மூலம் ஆண் குழந்தைக்கு இரண்டும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்க வேண்டும் என்பதை அறியலாம். ஆனால், ஆண் குழந்தைக்கு ஒன்று மட்டும் கொடுக்கலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.
 
எங்களுக்கு அறியாமைக் காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால், ஆட்டை அறுத்து குழந்தையின் தலைமுடியை நீக்கி ஆட்டின் இரத்தத்தை தலையில் தடவுவோம். இஸ்லாத்தை ஏற்றபிறகு ஒரு ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலைமயிரை நீக்கி தலையில் குங்குமப்பூவை பூசுவோம்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: அஹ்மத், நஸயீ
 
எனவே ஆண் குழந்தைக்கு ஒன்றும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கலாம் என்பதை அறியலாம். ஆனால் ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகள் கொடுப்பதே சிறந்ததாகும்.
 
அகீகா சம்பந்தமாக இந்த ஹதீஸ்களே போதுமானதாகவுள்ளன. அகீகா சம்பந்தமாக நாம் அறிந்து வைத்துள்ளதையும் நபி (ஸல்) காலத்து நடைமுறையையும் ஒப்பு நோக்க நம்மவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
சிலர் தாங்கள் வறுமையில் இருந்தாலும், அகீகா கொடுக்க வேண்டும் என நினைத்து கடனையாவது வாங்கி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கூறிய ஹதீஸ்களும், இது அவசியம் கொடுக்க வேண்டும் என்பது போன்றே அறிவிக்கிறது. ஆனால் பின்வரும் ஹதீஸ் அகீகா கட்டாயமானதல்ல, விரும்பினால் செய்யலாம் என்பதை அறிவிக்கிறது.
தன் குழந்தை சார்பில் ஒருவர் (அகீகா கொடுக்க) அறுத்துப் பலியிட விரும்பினால் ஆண் குழந்தைக்கு இரண்டும் பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு (ரலி)
நூல்கள்: அஹ்மத், நஸயீ
 
இந்த ஹதீஸில் விரும்பினால் என்ற வார்த்தையே அகீகா கட்டாயமானதல்ல என்பதை உணர்த்துகிறது. இறைவனும் திருமறையில் அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதற்கு வழங்காதவற்றில் சிரமத்தை ஏற்படுத்தவில்லை (65:7) என்று கூறுகிறான்.

எனவே நாம் நம்மையே துயரத்தில் ஆக்கிக் கொள்ளாமல் வசதியிருந்தால் அகீகா கொடுக்கலாம்.
 
அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
 

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )