Sep 9, 2014

பகட்டுத் திருமணம் பரக்கத்தை மறுக்கும் பணக்கார வர்க்கம்

கடந்த ஜூன் 17, 2014 அன்று என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியானது. ஆனந்த்ஜி என்பவர் ஒரு பெரிய வியாபாரி! அவர் தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

திருமண அரங்கம் பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி! பத்து நாடுகளிலிருந்து விருந்தினர்கள், சமையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். பட்டத்து அரசி திருமணத்தின் பிரம்மாண்டம் அழைப்பிதழில் பளபளத்தது; பணத்தின் வலிமையைப் பறைசாற்றியது.
 
இதைத் தொடர்ந்து இத்தகைய டாம்பீக, ஆடம்பரத் திருமணங்கள் மீது கர்நாடக அரசின் கழுகுப் பார்வை திரும்பியுள்ளது. பணக்கார, பகட்டுத் திருமணங்களின் படோடபச் செலவுகளைக் கட்டுப்படுவதற்கு ஆடம்பர வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 
"கொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்'' என்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.
 
"கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்' என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
 
"நாங்கள் தான் ஏற்கனவே 23 சதவிகிதம் வரி செலுத்துகின்றோமே! ஹோட்டலில் செலுத்தும் பில்லுக்கும் வரி செலுத்துகின்றோம்; இதற்கு வேறு தனியாக வரி செலுத்த வேண்டுமா?' என்று இந்த ஆடம்பரக்காரர்கள் வாதிக்கின்றனர்.
 
இது தான் என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சியில் வந்த செய்தியின் சாரம்சம்.
 
கர்நாடக அரசின் சமூகப் பார்வை
 
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், கர்நாடக அரசு ஒரு சமூகப் பார்வையைப் பார்க்கின்றது. இந்தப் பார்வை இஸ்லாமியப் பார்வையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணத்தில் ஓர் ஆட்டை அறுத்தேனும் விருந்து வை (நூல்: புகாரி 2048) என்று கூறியிருந்தாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கின்றார்கள்.
 
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
 
இந்தக் கட்டுப்பாட்டை கர்நாடக அரசு கவனத்தில் கொள்கின்றது. அதற்கு அரசு கூறுகின்ற காரணம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் மிகச் சரியான, பொருத்தமான காரணமாகும். இதற்கு எதிராகப் பணக்காரர்கள் கூறும் வாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர்கள் தங்கள் பணக்காரத்தனத்தையும், பகட்டையும் தான் பார்ப்பார்கள். பாட்டாளிகள் படுபாதாளத்தில் வீழ்கின்ற பாதிப்பை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்.
 
இதை இஸ்லாமிய சமுதாயத்திலேயே பார்க்கின்றோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் இந்த சமூக அநீதியை நிதர்சனமாகப் பார்க்கின்றோம். பணக்காரர்களைப் போன்று தாங்களும் தங்கள் பங்குக்கு செலவு செய்ய வேண்டும் என்று கடனை வாங்கி அல்லது இருக்கின்ற சொத்துக்களை விற்று அல்லது வட்டிக்கு வாங்கி திருமணச் செலவு செய்கின்றனர்.
 
முஸ்லிம் தெருக்களில் உள்ள தங்களுடைய வீடுகளை விற்று விட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வீடு வாங்கிச் செல்கின்றனர். அல்லது சொந்த வீட்டை விற்று திருமணச் செலவு செய்து விட்டு, வாடகை வீட்டில் போய் குடியிருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.
 
இந்த அவலத்தை, சமூக அநியாயத்தை எந்த ஜமாஅத்தும் கண்டு கொள்ளவில்லை.
 
ஊனமான உலமாக்கள்
 
திமுகவினரின் திருமண விளம்பரம் முரசொலியில் முழுப்பக்கம் வருகின்றது என்றால், "உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா?' என்று கூறி, மணிச்சுடரில் பக்கத்துக்குப் பக்கம் திருமணம் விளம்பரம் கொடுக்கின்றனர். இதனால் மணிச்சுடர் பணச்சுடராகின்றது. ஆலிம்களும் இதைக் கண்டுகொள்வதாக இல்லை. அவர்களுடைய ஒரே வேலை மணவீட்டிலும் பிணவீட்டிலும் அல்பாத்திஹா சொல்வதும், அதற்குரிய கைமடக்கைப் பெறுவதும் தான். எல்லா விஷயத்திலும் ஊமையானது போன்று உலமாக்கள் இதிலும் ஊமையாகி விட்டனர்.
 
உண்மையான ஒரு முஸ்லிம் திருமணம் தொடர்பான இரண்டு ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும். இரண்டையும் செயல்படுத்த வேண்டும். ஒரு சிறிய சமோசா, டீயோ அல்லது பேரீச்சம்பழமோ வினியோகித்துவிட்டால் விருந்து முடிந்து விடுகின்றது. அதே சமயம் சிக்கனமாகவும் அமைந்து விடுகின்றது. இதன் மூலம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி, நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியவராகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மறைமுகமான அருளான பரக்கத்தையும் பெற்று விடுகின்றார்.
 
விருந்து போடவில்லை என்றால் என் கவுரவம் என்னாவது? என்று கேட்டு, ஊர் மெச்ச ஊர் முழுக்க ஆட்களை அழைத்து விருந்து வைக்கின்றனர். விருந்து இல்லாவிட்டால் அது என்ன கல்யாணம்? ஒரு சாப்பாடு இல்லை என்றால் அது என்ன திருமணம்? என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் கூறும் பரக்கத் தொடர்பான ஹதீஸைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றார். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறி அந்த ஹதீஸை மறுக்கின்றார். இதை ஆலிம் வர்க்கமும் அல்பாத்திஹா போட்டு ஆதரிக்கின்றது.
 
கர்நாடக அரசு பார்க்கின்ற சமூகப் பார்வையை, இஸ்லாமியப் பார்வையை இந்தப் பணக்கார வர்க்கம் பார்ப்பதில்லை; பார்க்க மறுக்கின்றது. ஆடம்பரக் கல்யாணம், அட்டகாசக் கல்யாணம் எந்த வரம்பும் இன்றி எகிறிக் கொண்டே செல்கின்றது. இதன் எதிர் விளைவு ஏழைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஏழைகளைப் பாதிக்கின்ற இவர்களின் பணத்தை இறைவன் பறித்து விடுவதற்கு ஒரு நிமிடம் ஆகாது. அரசனும் ஆண்டியாகி விடுவான். அப்படியே இந்த உலகில் விட்டு விட்டாலும் மறுமையில் கண்டிப்பாகப் பிடித்தே தீருவான்.
 
உமது இறைவனின் பிடி கடுமையானது.  (அல்குர்ஆன் 85:12)
 
அதிலும் குறிப்பாக இவர்கள் வைக்கின்ற விருந்தின் நோக்கம் கவுரவம் தான். வலீமா என்பது நபிவழி என்ற நோக்கம் இல்லை.
 
பிறர் மெச்ச வேண்டும் என்று செயல்படக்கூடியவர்களுக்கான தண்டனை இதோ:
 
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.
 
இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறை வனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந் தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.
 
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) "அறிஞர்' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
 
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.
 
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு வள்ளல்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
நூல்: முஸ்லிம் 1905
 
தடம்புரளும் தவ்ஹீதுவாதிகள்
 
பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் விருந்து வைப்பவர்களுக்கு உரிய தண்டனை என்ன என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. நபிவழித் திருமணம் என்ற பெயரில் தவ்ஹீதுவாதிகளின் திருமணம், மண்டபத்தில் பல லட்சக்கணக்கான செலவில் நடக்கின்றது. இதைக் கட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஆடம்பர மண்டபத் திருமணத்திற்குப் பதிவேடு மட்டுமே உண்டு, தாயீக்களை அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத் தலைமை கொண்டு வந்தது.
 
தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு கொடுத்துனர். ஆனால் சிலர் எங்களுக்கு தாயீ வேண்டாம்; திருமணப் பதிவேடு மட்டும் போதும் என்று கூறி மண்டபத்தில் ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். வேறு சிலர் தாயீயும் வேண்டாம்; தப்தரும் வேண்டாம் என்று கூறி ஆடம்பரத் திருணமத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
 
இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான செலவினங்கள், ஆடம்பரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் மண்டபத் திருமணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தலைமை கட்டுப்பாடு விதித்தது. ஆனால் அதே சமயம், மண்டபத் திருமணத்திற்கு ஈடாக, அல்லது அதைவிட மேலாக ஆடம்பரத் திருமணங்களை மண்டபம் இல்லாமல் நடத்துகின்றனர். இவர்கள் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்வது பெயரளவுக்குத் தான். கொள்கையளவில் இவர்கள் முழுமையாக ஏகத்துவக் கொள்கையில் வாழவில்லை என்று தான் அர்த்தம்.
 
திருமண விஷயத்தில் மார்க்கம் கூறுகின்ற வழிமுறைகளைப் பேணி எளிமையாக நடத்துவதற்குத் தவ்ஹீதுவாதிகள் முன்வர வேண்டும். இந்தத் திருமண விஷயத்தில் தடம் புரண்டவர்கள் தவ்ஹீதை விட்டே தடம்புரண்டு போயிருக்கின்றார்கள். இவர்களின் பட்டியலில் நாம் ஆகிவிடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
 
Source : ஏகத்துவம்

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )