பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருவதை உணருவார்கள். அந்த சக்தியைத்தான் ஆத்திகர்கள் கடவுள் அல்லது இறைவன் என்று போற்றி வணங்குகிறார்கள். அந்த கடவுளை சரிவர ஆராய்ந்து ஏற்றுக் கொள்பவர்களும் உள்ளனர். ஆராயாமல் முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் நம்புவோரும் உள்ளனர். இரண்டாம் வகை நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. நாத்திகத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். இந்த இறையச்சம் மனிதர்களிடம் இல்லாமல் போவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.