இறைவன் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்?
இக்கேள்விக்கான விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, இவ்வுலகம் என்பது ஓர் தற்காலிக பரீட்சைக் கூடம் போல படைக்கப் பட்டுள்ளது என்பதையும் இங்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் குறித்த தவணையில் வந்து போகிறார்கள் என்பதையும் நாம் தொடர்ந்து காண்டு வருகிறோம்.
இது எதற்காக?
இவ்வுலகைப் படைத்த இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் :
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அதாவது இந்த தற்காலிக பரீட்சை வாழ்வில் பலரும் வெவ்வேறு விதமான சோதனைகள் கொடுக்கப் பட்டு பரீட்சிக்கப் படுகிறார்கள். இப்பரீட்சை முடிந்தபின் அவரவர்களின் செயல்பாட்டுக்கேற்ப அதாவது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகத்தையோ சொர்க்கத்தையோ வழங்க உள்ளான். அதையும் இவ்வாறு இறைவன் திட்டவட்டமாகத் தன் திருமறையில் கூறுகிறான்.
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
இந்தப் பரீட்சையை எவ்வாறு நடத்துவது என்பதை நன்றாக அறிந்தவனும் அதன்பால் முழுமையான அதிகாரம் கொண்டவனும் அவன் மட்டுமே! உலகத்தின் படைப்பில் நாம் எவ்வாறு எந்தக் குறைகளையும் காண இயலாதோ அதுபோலவே அவனது எந்த ஏற்பாட்டிலும் எந்தவிதமான குறைபாடும் இல்லை.நமக்கு கொடுக்கப் பட்டுள்ள சிற்றறிவைக் கொண்டு நாம் புரிந்து கொண்ட விதத்தில்தான் ஏதோ குறைபாடு இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இறைவன் யாருக்கும் அநீதி இழைப்பவனும் அல்ல, மறதி உடையவனும் அல்ல தவறு இழைப்பவனும் அல்ல என்பதைத் திருமறை வசனங்கள் கூறுகின்றன.
இனி உங்கள் கேள்வி பற்றி ஆராய்வோம் வாருங்கள் ...
மனிதர்களுக்கு மேலே குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.
வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப்பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு,
இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன.
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள்
சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.
நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும்.
அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்.
நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்து விடுவோம்.
எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும்.
இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான்.
நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது.
இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்.எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும்
வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா?
இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக்கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள்.
நன்றி : பிஜே
0 comments:
Post a Comment