Jul 18, 2013

வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்கும் அநியாயக்காரர்கள்

9:9
அவர்கள்   அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)   வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை   மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)
9:34
நம்பிக்கைக் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரியிலும்,துறவிகளிலும்…   அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின்   பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும்,   வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்   செலவிடாதிருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!)   நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
3:187
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க   வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு   நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப்   பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக்   கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   (அல்குர்ஆன் 3:187)
5:63
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள்   உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க   வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.   (அல்குர்ஆன் 5:63)
  அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக   சொற்பமானவர்களே விளங்குவார்கள்;  மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள்   என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான்.
7:3
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;   அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்;   நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.    (அல்குர்ஆன் 7:3)
இந்த மிகமிக சொற்பமான சுவர்க்கம் செல்லும் மக்கள் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான   ஹதீஸ்களையும் நேரடியாக விளங்கி அதன்படி நடக்கிறார்கள். இவர்களே அல்லாஹ்வின்   நன்மாராயம் பெற்றவர்கள், பாக்கியசாலிகள், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று   சுவர்க்கம் செல்கிறவர்கள்.
இதற்கு மாறாக மக்களில் மிகமிகப் பெருங்கொண்ட கூட்டம் அல்குர்ஆனையும்,   ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் விளங்கக் கூடியவர்களாக இல்லை. நரகத்தை நிரப்புவதற்காகவே   செயல்படுகிறவர்கள். இதையும் அல்குர்ஆன் அதிகமான இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.   அவை வருமாறு:
17:89
“நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகத்   தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் (இதை)   நிராகரிக்காதிருக்கவில்லை. (17:89)
25:30
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து   ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)
குறிப்பாக இந்த இறைவாக்குகளை மீண்டும், மீண்டும் படித்து உள்வாங்கி ஆழ்ந்து   சிந்தியுங்கள். அல்குர்ஆன் மனிதர்களில் ஆண், பெண் அனைவரும் விளங்கும் நிலையில்   இறக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அரபி மொழி படித்த  மட்டுமே விளங்க   முடியும் என வாதிப்போர் ஷைத்தானின் தோழர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிய   முடியும்.
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்லும் மக்கள் மிகமிகக் குறைவு.   அவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கி அதன்படி நடப்பார்கள். மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்களின் வலையில் சிக்க மாட்டார்கள்!  மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்கள் அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளதை   உள்ளபடி எடுத்துச் சொல்ல முன் வரமாட்டார்கள்.
அதனால்தான் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, தொண்டை தொழிலாக்கி வயிற்றை நிரப்ப    குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி சொல்லாமல், கோணல் வழிகளான  கற்பனைகளை   மக்களுக்குப் போதிக்கின்றனர்.
11:18
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்?   அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம்   தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்;   இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18)
எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும்   நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. அனைத்து   நபிமார்களையும் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படாமல், சொந்த உழைப்பைக்   கொண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லாஹ்   கட்டளையிட்டிருப்பதின் இரகசியம் இதுதான்.
36:21
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே   நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).    அல்குர்ஆன் யாஸீன் (36:21)
  இறைவாக்கு இதையே மிகமிக உறுதியாக கூறுகிறது.   மக்களிடம் கூலியை – சம்பளத்தை எதிர்பார்க்காமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே மார்க்கப்   பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும். அதற்கு மாறாக   சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரிகிறவர்கள் ஒரு போதும் நேர்வழியைப் போதிக்க   மாட்டார்கள். காரணம் நேர்வழி செல்லும் சொற்பமான மக்களைக் கொண்டு அவர்களின்   நோக்கம் நிறைவேறாது. சம்பளத்திற்காக நரகம்செல்லும் அதிகமான மக்களைக் கவர்வதாக   இருந்தால், அவர்கள் விரும்பும் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயம்   ஏற்படுகிறது.
புரோகிதரர்கள் வழிகேடுகளையே நேர்வழியாக – மார்க்கமாகப் போதிக்கும் காரணம்   இப்போது சுய சிந்தனையாளர்களுக்கு,  நிச்சயமாக புரிந்திருக்கும்.   முஸ்லிம்கள்   அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் நேரடியாகப் படித்து விளங்கிச் செயல்பட்டால் மட்டுமே   ஈடேற்றம் பெற முடியும். அல்லாஹ் அருள் புரிவானாக!

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )