இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் நடைமுறை வாழ்க்கைத் திட்டமாகும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய மனிதப் பண்பை கற்றுத் தருகின்றது. அதில் ஒன்று தான், ஒருவர் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும் போது அவர் பேண வேண்டிய பண்பும், வீட்டில் உள்ளவர் தன் வீட்டிற்கு வருபவருக்கு அனுமதியளிக்கும் பண்புமாகும்.
இன்று யாரேனும் ஒரு வீட்டிற்குச் சென்றால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறாமலேயே உள்ளே நுழைகின்ற அநாகரிகமான நடைமுறையைப் பார்க்கின்றோம். திறந்து கிடக்கும் வீட்டில் மட்டுமல்ல! திரை தொங்கும் வீட்டிலும் திரையை நீக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றார்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், பெண்கள் தாங்கள் வழக்கமாக அணியும் ஆடைகளைக் களைந்து விட்டு, படுக்கை ஆடைகளுடன் படுக்கைக்கு ஒதுங்கும் வேளைகளில் கூட அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.
ஓர் இறை நம்பிக்கையாளர் அடுத்தவர் வீட்டுக்குச் செல்லும் போது அடுக்கடுக்கான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது. அதை ஒருவர் அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும்.
அவை வருமாறு:
அனுமதி கோரல்
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)
அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள். அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.
கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)
இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். நான் வாசல் தேடி வந்தேன். உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நின்றவாரே அனுப்பி விட்டார் என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றி குறை கூறிப் பொறுமுவார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கும், பொல்லாப்புக்கும் அவர் இடமளிக்க மாட்டார்.
தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்
வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டு தன் பெயரைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக நான் தான் என்று கூறக் கூடாது.
என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான் தான்'' என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6250)
மூன்று முக்கிய நேரங்கள்
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57,58)
இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்?!