குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் "இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத்,
நூல் : புகாரி 5066
திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.
திருமணம் ஓர் மன அமைதி
பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான்.
"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189
ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம்.
திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது.
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?
இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்?
எவரைத் திருமணம் செய்தாலும் இறைவன் வாக்களித்தது கிடைத்து விடாது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என இறைவன் அறிவுறுத்தியுள்ளானோ அப்பெண்ணை மணந்தால் தான் இறைவன் வாக்களித்த மன அமைதியை, கட்டுப்பாட்டைப் பெற முடியும். அது சரி. யாரந்த மணப் பெண்?
மார்க்கப்பற்றும் மறுமை வெற்றியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி 5090
மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என நபிகளார் கூறுவதோடு அவள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் இந்த செய்தியில் தெரிவிக்கின்றார்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, கருத்து வேறுபாடுகளுக்கு மணப்பெண்ணை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியே அடிப்படை காரணமாக திகழ்கின்றது. மேற்கண்ட புலம்பலுக்கும் தவிப்புக்குமான காரணம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்யாததே என்பதை திட்டவட்டமாக கூறலாம்
நல்ல பெண்ணே சிறந்த செல்வம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
முஸ்லிம் (2911)
ஒரு மனிதன் உலகில் திரட்டும் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷம், பொற்புதையல் நல்ல பெண்ணே.
ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள். அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று நபியவர்கள் உமரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் (1417)
நல்லொழுக்கமுள்ள பெண்ணிற்கு இவ்வுளவு உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்குவதாலே மணப்பெண்ணை தேர்வு செய்வதில் ஒழுக்கத்திற்கும், மார்க்கத்திற்கும் முதலிடம் ஒதுக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுகிறது.
ஒருவர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதினால் அவரது வாழ்வில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கிறார். அவரது நிம்மதியான வாழ்விற்கு பல வகையில் ஒழுக்கமுள்ள பெண் அடித்தளமாக திகழ்கிறாள்
ஒழுக்க ரீதியாக...
நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்வதால் நமது குடும்பமும் ஒழுக்கமுள்ளவர்களாக, ஓரளவு மார்க்கப்பற்றுள்ளவர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.
ஜாபிர் (ரலி அவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது தங்கள் சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களை பராமரிக்கும் பண்புள்ள, ஒழுக்கமுள்ள பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸிலிருந்து அறிகிறோம்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) "நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?'' என்று கேட்டிருந்தார்கள்.அதற்கு நான்,"வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்'' என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், "கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே'' என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்...அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்'' என்று பதிலüத்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (2967)
மார்க்கப்பற்றுள்ளவளை மனைவியாக தேர்வு செய்வதாலே நமது குடும்பம் சொர்க்கப்பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என்பதை நினைவில் கொள்க.
குழந்தை வளர்ப்பில் அக்கறை
நல்லொழுக்கமுள்ள பெண் கணவனின் குடும்ப நலனில் பொறுப்போடு நடந்து கொள்வது போல் தங்களின் குழந்தை வளர்ப்பிலும் கடமையுணர்வோடு நடந்து கொள்வாள்.
. பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
புகாரி (2554)
இன்று பலரும் தீயவர்களாக, இறைவனின் வெறுப்பிற்குரியவர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே.
குழந்தைகளை எப்போது கண்டிக்க வேண்டும்? எந்த இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இடம் பொருள் தெரியாமல் தங்கள் குழந்தைகள் தறுதலைகளாக மாறுவதற்கு ஒரு விதத்தில் பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றார்கள்.
தீமையான காரியங்களில் ஈடுபட பணம் கேட்டாமல் மறுப்பேதுமின்றி வழங்குவது, தீய நண்பர்களோடு சகவாசம், தொழுகையை புறக்கணித்து உறக்கம், தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல் போன்ற காரியங்களில் குழந்தைகள் ஈடுபடும் போது தக்க அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் வழங்க பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள்.
இது போன்ற குறைகள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதால் வேறோடு பிடுங்கி, களையெடுக்கப்படும். அவளது அன்பு கலந்த கண்டிப்பினால் நமது குழந்தைகள் நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறுவார்கள்.
கணவனுக்கு நல்ல துணையாக
யாருக்கேனும் சிரம் பணிய வேண்டும் என ஒருவருக்கு நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு சிரம்பணிய வேண்டும் என பெண்ணுக்கு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி 1079
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : புகாரி (3237)
குறிப்பாக நல்லொழுக்கமுள்ள பெண் இது போன்ற கணவனுக்கு கட்டுப்படுவதின் அவசியத்தை உணர்ந்து, அவனுக்கு செய்ய வேண்டிய கடமையறிந்து செயல்படுபவளாக இருப்பாள்.
கணவன் கவலையில் வாடும்போது ஆறுதல் கூறுபவளாக, வறுமையில் உழலும் போது இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்ளும் தாராள மனப்பான்மையுடையவளாக, கணவனின் நெளிவு சுளிவுகளை அறிந்து நடப்பவளாக இருப்பாள். இப்படி நல்லொழுக்கமுள்ள பெண்ணிண் மூலம் ஒரு ஆண் அடையும் நன்மைகள் பற்பல.
ஒரு சில தம்பதிகள் சிறுசிறு விஷயங்களுக்காக எழுத சகிக்காத வார்த்தைகளால் சதா ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமகளாக தேர்வு செய்வது இது போன்ற பலபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்கும். ஒருவரையொருவர் புரிந்து நடக்கும் சூழல் கனியும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அனுபவித்தே உணரமுடியும். அவைகளை எழுத்தில் வடித்திட முடியாது.
ஆகவே திருமணத்திற்கு பிறகு நமது வாழ்க்கை இனிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது அழகு, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒழுக்கம் மார்க்கப்பற்று ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுவே நிம்மதியான, கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அச்சாரமாய் அமையும் என்பதை இறுதியாக நினைவூட்டிக் கொள்கிறேன்.
(குறிப்பு ; மேற்கூறப்பட்ட விஷயங்கள் யாவும் பெண்கள் மணமகனை தேர்வு செய்வதற்கும் பொருந்தக்கூடியதே
அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
0 comments:
Post a Comment