“இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் (1:5). தம் தொழுகையின்போது ஒவ்வொரு அடியானும், ஒவ்வொரு ரக்அத்திலும் அல்லாஹ்(ஜல்)விடம் இப்படித்தான் பிரார்த்திக்கிறான். தம்மை படைத்து பாதுகாத்து வளர்க்கும் ரப்புல் ஆலமீனிடம், “நேரிய பாதையை எங்களுக்கு அருள்வாயாக”, என்று மனமுருகி கேட்கும் அடியான் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே அல்லாஹ்வுடைய நேரிய பாதையின் வழிகாட்டலில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறான்.
இக்கால கட்டத்தில் உலகளாவிய அளவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாஹ் காட்டிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையை விட்டும் மாறி தடம் புரண்டு வெறும் மனித யூகங்களால் உண்டாக்கப்பட்ட அபிப்பிராயங்களையே தம்முடைய மார்க்கமாகவும், தமது வாழ்க்கைப் பாதையாகவும் கருதி தடுமாறி நிற்கின்றனர். இதன் காரணம் என்ன? என்று ஆராயும்போது பல திடுக்கிடும் உண்மைகள் நமக்கு தெரியவருகிறது. இஸ்லாத்தின் பரம விரோதிகளும், முனாபிக்கீன்களும் (நயவஞ்சகர்களும்) சேர்ந்து திட்டமிட்டு அல்லாஹ்வின் நேரிய பாதையை பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்கு தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்த சூழ்ச்சி, தந்திரங்கள் இப்போது நமக்கு தெரியவருகின்றன. உண்மை இஸ்லாத்தை மறைத்து போலிச்சடங்குகளையும், சம்பிரதாய வழக்கங்களையும் புகுத்தி முஸ்லிம்களை ஆண்டாண்டு காலமாக வழிகெடுத்தவர்களை அல்லாஹுத்தஆலா அடையாளம் காட்டி இவர்களது சுயரூபத்தை நமக்கு பகிரங்கப்படுத்திவிட்டான். (அல்ஹம்துலில்லாஹ்).
இஸ்லாம்… என்ற பெயரில் மார்க்கத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத எத்தனையோ வழிகேடுகளையும், முரணான கொள்கைகளையும் பின்பற்றி வரும் எத்தனையோ சகோதரர்கள் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே, ”நாங்கள் அல்லாஹ் அருளிய நேரான பாதையிலேயே இருப்பதாக”, கூறிக் கொள்கின்றனர். இது அவர்களது வீண் கற்பனையே! அல்லாஹ் அருளிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதைக்கும், மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட “பாதை”க்கும் உள்ள வேற்றுமைகளையும், வித்தியாசங்களையும் நாம் சற்று ஆராய்வோம்.