Nov 24, 2014

மகனின் சாதுரியம் (சிறுகதை)

மவ்லவி நூர் முஹம்மது, ஃபாஜில் பாகவி  
[ நம்மில் பலர் தந்தையோடு இணக்கமாக நடந்து கொளளும் அதே வேளையில் தாயை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். அதற்கு காரணம், 'தன் மனைவியோடு தகராறு செய்வது சண்டைக்கு நிற்பது தாய்தான்' என்ற தவறான எண்ணம்தான்.
 
இவ்வுலகில் ஆயிரம் மனைவிகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். ஒரு தாயை ஒருக்காலும் மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும், மனைவியின் சாபத்தை விட ஒரு தாயின் சாபம் பல மடங்கு வலிமை உள்ளது என்பதையும், மனைவியின் அன்பை விட தாயின் அன்பு பல வகையில் வீரியம் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
''பெற்றோரை திருப்தி படுத்துவதில்தான் இறைவனின் திருப்தி உள்ளது. பெற்றோர் இருவரை அல்லது இருவரில் ஒருவரை வயது முதிர்ந்த நிலையில் பெற்றுக்கொண்டவன், சுவனம் செல்ல வில்லையென்றால் அவன் நாசமாகட்டும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளதை இங்கே கவனத்தில் கொண்டு மனைவியின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்படாமல் தாயை அணுசரித்து நடப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.]
 
மகனின் சாதுரியம் (சிறுகதை)

விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!
 
தனது மனைவி ஆயிஷாவிற்கு வாங்கிய புடவைக்காக ஜவுளிக் கடையில் கொடுத்த சிறிய துணிப் பை அவர் கையில். அதில் வறுமையையும், சோகங்களைப் பறைசாற்றும் சில கந்தலான மாற்றுத் துணிமனிகள். வாடிய முகம். முகத்தை அலங்கரிக்கும் தாடி. தளர்ந்த வயது.
 
முகத்தில் மாட்டியிருந்த பழைய மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறே சோர்வாக பேருந்தின் படியில் தட்டுத் தடுமாறி ஏறி இருக்கையைத் தேடிப்பிடித்து சோகங்ளைச் சுமந்து கொண்டு கனத்த இதயத்துடன் அமர்ந்தார் அப்துல் காதர்.
 
அப்துல் காதரையும், அவர் போன்ற சோகத்தில் வாடும் வேறு பலரையும் சுமந்து கொண்டுள்ள பேரூந்து, அவர்களது சோகத்தில் பங்கு கொண்டது போல முணுமுணுப்போடு புறப்பட்டது. பேரூந்தின் வேகத்தில் அப்துல் காதர் சிந்தனையும் புறப்பட்டு விட்டது.
 
குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன தனது மனைவி, உடல் நிலை குன்றி அவதிப்படுவதை காண சகிக்க முடியாமலும், அவளுக்கு சிகிச்சை செய்வதற்கு பண வசதி இல்லாமல் இருக்கும் தனது நிலையை நினைத்து நினைத்து நொந்து நூலாகிப் போன கனத்த இதயத்துடனும் பயணம் செய்யும் அப்துல் காதர், பட்டணத்தில் மனைவி, மக்கள், மாடி வீடு என சகல வசதிகளுடனும் வாழும் தான் பெற்ற அன்பு மகன் ஹனீபாவைக் காண புறப்பட்டு விட்டார்.
 
தனது மனைவியின் வைத்தியச் செலவிற்கு மகனிடம் ஏதேனும் உதவி பெற்று வரலாம் என்ற கற்பனையில் பேரூந்திலிருந்து இறங்கி வீட்டின் விலாசம் அறிந்து தள்ளாடி நடந்து சென்ற முதியவர் அப்துல் காதர் வீட்டின் கதவைத் தட்டுகிறார். உள்ளே தனது மகனிடம் 'ம் ஹும் ஒரு சல்லிக்காசு கொடுக்கக் கூடாது' என தனது மருமகள் கறாராய் கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டு மனம் உடைந்து போன அப்துல் காதர் திரும்பிப் போய் விடலாம் எனக் கருதி கண்ணீருடன் அடியெடுத்து வைத்து திரும்பிய போது கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்.
 
'தாத்தா! வந்திருக்காங்க! தாத்தா! வந்திருக்காங்க!' எனக் கூவியபடி, 'உள்ள வாங்க! தாத்தா! உள்ள வாங்க!' என உரக்கக் கூறியவாறே தள்ளாடித் திரும்பிய அப்துல் காதரின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று கம்பீரமான சுழற் நாற்காலியில் அமர வைத்தான் பேரன் அஹ்மது குட்டி.
 
முறைத்துப் பார்க்கும் தனது தாயை திரும்பி பார்க்காமலேயே, 'ஏன் தாத்தா பாட்டியை அழைச்சிக்கிட்டு வரலையா? அவங்க சவுக்கியமா இருக்காங்களா? நீங்க சாப்பிட்டிங்களா?' என்று சோகம் புரியாமல் கேட்கும் தனது பேரனுக்கு என்ன பதில் கூறுவது என்ற யோசனையிலேயே அவனது தலையை பரிவோடு வருடிக் கொண்டிருந்த அப்துல் காதர், தனது மகன் வருவதைக் கண்டு எழுந்து விட்டார்.
 
தான் வந்திருக்கும் நோக்கத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் மகனிடம், என்ன கூறுவது என்று தயங்கி நின்று கொண்டிருந்த தந்தையை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு, எதிரில் இருந்த நாற்காலியில் ஹனீஃபா பலத்த யோசனையோடு அமர்ந்து கொண்டான்.
 
ஒழிந்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மனைவியை ஓரக்கண்ணால் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் மகனை நோக்கி 'சிரமத்தோடு பத்து மாதம் உன்னை வயிற்றில் சுமந்தவள், சிரமத்தோடு பெற்றெடுத்தவள், இரவு பகலாக உனக்காக கண் விழித்து, கண்ணை இமை காப்பது போல் உனக்கு காவலாக இருந்தவள் உன் தாய். அவள் நோய் வாய்ப்பட்டு அவதிப்படும் போது கூடவா உதவிட உனக்கு மனம் வரவில்லை' என கேட்டு விடலாமா? என உதடுகளை அசைத்த அப்துல் காதர் தனது இயலாமையை நினைத்து மௌனமாகி விட்டார்.
 
நெடுநேர அமைதியை அப்துல் காதரின் குரல் கலைத்தது. 'சரி மகனே! நான் புறப்படுகிறேன். உன் தாயின் வைத்தியச் செலவிற்கு எப்படியாவது நான் ஏற்பாடு செய்து கொள்கிறேன். உங்களுக்கு நல்லது தரட்டும் என வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று கூறி விட்டு புறப்பட்டு விட்டார் அப்துல் காதர்.
 
'சரிங்க வாப்பா' என்று கூறிக் கொண்டு வாசற்படி வரை வந்த ஹனீஃபா, எதையோ சொல்ல மறந்துவிட்டது போன்று பாவனை செய்து கொண்டு வெளியில் வந்து 'வாப்பா! நீங்கள் நீண்ட நாட்களாக பழைய கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே! இதோ ஒரு புதுக் கண்ணாடி வாங்கி வந்துள்ளேன். அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக அம்மாவிடம் சொல்லுங்க வாப்பா' என்றவாறே தன்னிடம் இருந்த கண்ணாடிக் கூட்டை அப்துல் காதரிடம் நீட்டினான்.
 
மனைவியின் மருத்துவச் செலவிற்கு பணம் தர மறுத்த மகனிடம் எப்படி இதனைப் பெற்றுக் கொள்வது என்று தயங்கிக் கொண்டிருந்த வாப்பாவின் கையில் திணித்து விட்டு உள்ளே சென்று விட்டான் ஹனீஃபா.
 
சுமந்து வந்த சோகத்துடன் திரும்பிச் செல்லும் அப்துல் காதர் பஸ் நிலையத்திற்கு வழிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது பழைய கண்ணாடி கீழே விழுந்து நொருங்கி விட்டது.
 
பார்வைக் குறைவால் தட்டுத் தடுமாறிய அப்துல் காதர் தனது மகன் கொடுத்த கண்ணாடியை வேறு வழியின்றி அணிந்து கொள்ள நினைத்து அதனை திறந்த போது, கண்ணாடியுடன் ஆயிரம் ரூபாயின் 5 நோட்டுகள் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்து 'அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்' என்று உரக்கவே கூறிவிட்டார்.
 
தனது மருமகளின் அடாவடித்தனத்தையும், மகனின் சாதுரியத்தையும் கண்டு மீண்டும் ஒரு முறை அல்லாஹ்விற்கு நன்றி கூறி விட்டு, மருமகளுக்கு நல்ல புத்தி ஏற்பட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து, புறப்பட்டார் பஸ் நிலையம் நோக்கி.
 
மனைவியைப் பகைத்துக் கொள்ளாமலும், தக்க தருணத்தில் தாயாருக்கும் உதவிய தனது மகனின் சாதுர்யச் செயலைச் சிந்தித்தவாறே பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அப்துல் காதர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
 
وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ
إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاً وَحَمْلُهُ
وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ
سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ
عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحاً تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي
ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ) (الاحقاف:15)
'
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனேயே ஈன்றெடுத்தாள். அவனை சுமந்ததும், பால் குடியை மறந்ததும் 30 மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து, நாற்பது வயதையும் அடையும்போது 'என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட் கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறேன்.' (அல் குர்ஆன்: 46:15)
 
இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
5971-
عَنْ أَبِى
هُرَيْرَةَ رضى الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِى قَالَ அ
أُمُّكَ ஞ . قَالَ ثُمَّ مَنْ قَالَ அ أُمُّكَ ஞ . قَالَ ثُمَّ مَنْ قَالَ அ
أُمُّكَ ஞ . قَالَ ثُمَّ مَنْ قَالَ அ ثُمَّ أَبُوكَ ஞرواه البخاري
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான்
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 'பிறகு யார்? ' என்றார் அவர். அப்போது 'உன் தந்தை' என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி 5971)
 
நாம் சிறுவராக இருந்த போது நம்மை பொறுப்போடு வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர் இருவருக்கும் பெரிய அளவில் பங்கு உள்ளது. எனவே, அவர்கள் வயது முதிர்ந்த நிலையில் இருந்து வரும் அவர்களை நாம் பராமரிப்பது மனிதாபிமான அடிப்படையில் தார்மீகக் கடமையாகும். பெற்றோர்களில் மிக மிக அதிகளவு பரிவு காட்டப்பட வேண்டியவர் தாய் என்பதை மேற் கூறிய இறைவசனமும், நபி மொழியும் உணர்த்திக் கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 
மேற்கூறிய இறைவசனத்தில் 'தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு வலியுறுத்தினோம்.' என்று கூறிய இறைவன், 'அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனேயே ஈன்றெடுத்தாள். அவனை சுமந்ததும், பால் குடியை மறந்ததும் 30 மாதங்கள்.' என்று கூறி 'தாய்மை' அடையும் பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்களை பட்டியலிட்டுக் காட்டுகிறான். இவ்வாறு பட்டியலிட்டுக் காட்டிடுவதின் மூலம் அதிகம் கருணையும், அன்பும் காட்டப்பட வேண்டியவள் தாய்தான் என்பதை நமக்கு உணர்த்துகிறான்.
 
'அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்ற வினாவிற்கு பதில் அளித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'தாய்தான்' மூன்று முறை வெளிப்படையாகவே கூறி விட்டார்கள். நான்காவது முறையாகதான் 'உனது தந்தை' என்று பதில் அளித்துள்ளார்கள்.
 
குழந்தை கருவுற்றது முதல், பெற்றெடுத்தப் பின்பும்தந்தையை விட தாய்தான் அதிக சிரமங்களை தாங்கிக் கொள்கிறாள். சிரமத்துடன் சுமந்தாள்; சிரமத்துடன் ஈன்றெடுத்தாள்; பிறகு பாலூட்டினாள். அத்தோடு அவளது சிரமம் முடிந்துவிடுவதில்லை. இரவு உறக்கதை தொலைத்து விட்டு, குழந்தைக்கு காவலாக இருந்தாள். 'பால்
 
குடிக்கும் எனது பிள்ளைக்கு இந்த உணவு ஒத்துக் கொள்ளாது' என்று கூறி அவளுக்கு மிகவிருப்பமான சுவைமிக்க உணவுகளையெல்லாம் ஒதுக்கி விடுகிறாள். இந்த சிரமங்களில்எதிலும் கடுகளவு கூட ஒரு தந்தை பங்கெடுத்துக் கொள்வதில்லை. இதனாலேயே அன்புகாட்டப்பட வேண்டியவர்களில் தந்தையை விட தாய்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுஎன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலர் தந்தையோடு இணக்கமாக நடந்து கொளளும் அதே வேளையில் தாயை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். அதற்கு காரணம், 'தன் மனைவியோடு தகராறு செய்வது சண்டைக்கு நிற்பது தாய்தான்' என்ற தவறான எண்ணம்தான். இவ்வுலகில் ஆயிரம் மனைவிகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். ஒரு தாயை ஒருக்காலும் மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும், மனைவியின் சாபத்தை விட ஒரு தாயின் சாபம் பல மடங்கு வலிமை உள்ளது என்பதையும், மனைவியின் அன்பை விட தாயின் அன்பு பல வகையில் வீரியம் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை திருப்தி படுத்துவதில்தான் இறைவனின் திருப்தி உள்ளது. பெற்றோர் இருவரை அல்லது இருவரில் ஒருவரை வயது முதிர்ந்த நிலையில் பெற்றுக்கொண்டவன், சுவனம் செல்ல வில்லையென்றால் அவன் நாசமாகட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளதை இங்கே கவனத்தில் கொண்டு மனைவியின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்படாமல் தாயை அணுசரித்து நடப்பதில் நாம்
 
அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அன்புச் சகோதரர்களே!
பெற்றோர் நலம் பேணுவோம்! இறைவனின் பேரருள் பெற்று நிலையான சுகம் நிறைந்த சுவனம் சென்றடைவோம்!
 

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )