Feb 17, 2012

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்



அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.
அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.
அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸூல் என்ற ஒரே காரணத்திற்காக.
இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.
இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாஃபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்.
இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள் சிலரை பார்க்கும் பொழுது, இவர்கள் முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது.ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ]

  இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் 
அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விடயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த ஸுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸூலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.
முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே. முக்கிய நோக்கமாக உள்ளது.
  ஆண் அல்லது மணமகனின் நோக்கம் : 
இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக)
ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (அறிவிப்பவர்: அபூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5090)
ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும், ரஸூலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்.
ஆனால் இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள், மௌலவி அல்லது ஆலிம் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலர், ஆஷிகே ரஸூல் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சிலர், ஆபிதுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்காக உயிரை தியாகம் செய்வோம் என்று கூறிக்கொள்பவர்கள் கூட திருமண விஷயத்தில் இவர்களை பார்க்கும் பொழுது, இவர் ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.
மேலும் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :
''பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.'' (அல் குர்ஆன் 4:4) என்று கூறுகின்றான். ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமிய திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாற்றமாக நடைபெறுவதினால் இன்று குடும்பங்களில் பரக்கத் இல்லை, ஒற்றுமை இல்லை, புரிந்துணர்வு இல்லை அதுமட்டுமல்ல காதி நீதிமன்றங்களில் விவாகரத்து (Divorce) வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து மலைப்போல் உள்ளது. இவைகளுக்கு காரணம் அல்லாஹ்வும், ரஸூலும் ஏவியவைகள் புறக்கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வும், ரஸுலும் விலக்கியவைகள் எடுத்து நடத்தப்படுகின்றது. திருமணங்களை பள்ளிவாசல்களில் வைக்க வேண்டும் என்பது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கட்டளை. ஆனால் இன்று முஸ்லிம்கள் திருமணங்களை வைப்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும். திருமணங்களில் ஆடல், பாடல், ஆண், பெண் கலத்தல் போன்றவை மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய திருமணங்களில் இவை அனைத்துமே உள்ளது.
இன்று நாம் காதுகளினால் கேட்கிறோம், 7 வருடம் மத்ரஸாவில் ஓதி மௌலவி பட்டம் பெற்ற மவ்லவிமார்கள் ஒரு சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்துக்கொண்டு அவர்கள் மணமகள் தேடுகின்றார்கள், என்ன நிபந்தனையின் பிரகாரம் என்றால், மார்க்கப்பற்று அல்லது ஆஷிகே ரஸூல் இதுபோன்ற இஸ்லாமிய நிபந்தனையின் பிரகாரம் அல்ல மாறாக மணமகள் அபாயா அணிய கூடாது, தலையில் முக்காடு போட கூடாது இது போன்ற நிபந்தனையுடன் மணமகள் தேடுகிறார்கள். இவர்களை மௌலவி என்று சொல்வதா அல்லது வேறு பெயர்கொண்டு அழைப்பதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆலிமின் நிலைமை இப்படி இருக்கும் போது பாமரனின் நிலைமை எப்படி இருக்கும்? அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்! இப்படி ஏராளமாக கூறிக்கொண்டே போகலாம். இன்று அனேகமானவர்கள் திருமணம் என்ற ஸுன்னத்தை செய்ய போய் ஹராத்தை செய்வதையே காணக்கூடியதாக உள்ளது.
  பெண் அல்லது மணமகளின் நோக்கம் : 
இன்றைய சில பெண்களின் எண்ணத்தை, எதிர்ப்பார்ப்பை பார்க்கும் போது அவர்களுடைய எண்ணங்களும், எதிர்ப்பார்புகளும் மார்க்க அடிப்படைக்கு மாற்றமாகவே இருக்கிறது. மார்க்கப் பற்றுள்ள, நற்குணமுள்ள, நற்பண்புள்ள, அறிவுள்ள ஆண்களை விரும்புவதற்கு பதிலாக பணக்கார, அழகான, நாகரீக மோகமுள்ள ஆண்களையே விரும்புகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், உலக ஆசையில் மூழ்கி (ஹுப்புத் துன்யா) வில் வாழ்கிறார்கள்.
உள்ளத்தில் அல்லாஹ்வையும், ரஸூலையும் வைப்பதற்கு பதிலாக உலகத்தை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் எதிர்ப்பார்ப்பது திருமணம் முடிந்து மேற்கத்தேய நாடுகளில் போய் நாகரீக வாழ்க்கை வாழ வேண்டும், பணக்காரியாக வாழவேண்டும் இது போன்ற ஆடம்பர வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் வாழும் போது திடீரென ஒரு சிறு வறுமை ஏற்பட்டவுடனேயே இவர்களுடைய வாழ்க்கை தலாக்கில் (விவாகரத்தில்) போய் முடிகிறது.
  மணமக்களின் பெற்றோர்களின் நோக்கம் : 
அடுத்து நாம் பார்க்க வேண்டியது பெற்றோர்களின் நோக்கங்களை. இன்றைய காலக்கட்டத்தில் சில பெற்றோர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. சில பெற்றோர்களின் எண்ணத்தை பார்க்கும் பொழுது, பிள்ளைகளின் நல்லெண்ணத்தை விடவும், நற்குணத்தை விடவும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
வியாபாரம் செய்வதை போன்று இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்தால் முதலில் நாவு கூசாமல் கேட்பது கொடுக்கல் வாங்கல் என்னவென்று. மணமகனின் பெற்றோரை எடுத்துக்கொண்டால் இவர்களின் முதல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு சீதனம், காணி, வீடு இவை போன்றவைகள் எங்கு கூடுதலாக கிடைக்குமோ அங்கு தான் திருமணம் செய்து வைப்பார்கள் (இந்துக்களை போன்று). மணமகள் 100% மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக இருந்தாலும் கூட, அந்த பெண் ஏழையாக இருந்தால் அதை ஒதுக்கி தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு தேவை அழிய கூடிய சொத்து, செல்வங்கள்தான்.
இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்ப்பது அந்தஸ்து, குலம் போன்றவைகளை. தன் மகன் டாக்டராக இருந்தால் அதைப்போன்ற டாக்டர் அல்லது இன்ஜினியர் பெண் அல்லது அதையும் விட உயர்ந்த பணக்கார குடும்பத்து பெண். இதுபோன்ற வகையில் தான் மணமகள் தேடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், இன்ன ஹாஜியாருடைய மகன் இன்ன ஹாஜியாரின் மகளை முடித்துள்ளார் என்ற பெயருக்காக அல்லது அந்த ஆலிம், இந்த மவ்லவி எனது மருமகன் என்ற பெயருக்காகவும், புகழுக்காகவும் மணமுடித்து வைப்பார்கள். இவர்கள் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தன்னுடைய மகன் அல்லது மகளின் சம்மதத்தை கூட கேட்பதில்லை. இவர்கள் யாரை விரும்பி திருமணம் செய்ய சொல்கிறார்களோ, அவர்களையே இவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்யவேண்டும். அப்படிப்பட்ட பிர்அவ்னின் குணத்தை ஒத்தவர்களாக சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
  அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும்போது: 
"முஃமீன்களே! (உங்களுடைய உறவு வழிப்) பெண்களை (அவர்களின்) விருப்பமின்றி (நிர்பந்தமாக) நீங்கள் அனந்தரமாக்கி கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல" (அல் குர்ஆன் 4:19)
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதியைத் தெரிந்துக்கொள்வது) என்று கேட்டார்கள். (அதற்கு) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5136)
இன்னும்,
கன்னி கழிந்த பெண்னான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் போய் என் விருப்பத்தை சொன்னேன். அத் திருமணத்தை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா ரலியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 5138)
மணமக்களிடம் சம்மதம் கேட்ட பிறகே திருமணத்தை நடாத்தி வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வினதும் ரஸூலினதும் கட்டளை. மணமக்களின் அனுமதி இல்லாமல், பெற்றோர்கள் தங்களில் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து வைப்பது இஸ்லாமிய வழிமுறையல்ல. இப்படிப்பட்ட பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளின் எதிர்கால வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு வரப்போகும் மருமகன் அல்லது மருமகள் மார்க்கப்பற்று, நற்குணம், ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறாரா? இல்லையா? என்று பார்ப்பதில்லை மாறாக இவர்கள் பணத்தையும், பெயரையும், புகழையும் மாத்திரமே எதிர்பார்த்து பிள்ளைகளின் வாழ்கையை நாசமாக்குகிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்காகவும் வாழ்வதில்லை இவர்கள் வாழ்வது ஊருக்கும், உலகுக்காகவும், மருமகன் அல்லது மருமகள் ஏழையாக இருக்கிறாரே, பெயர், புகழ் அற்றவராக இருக்கிறாரே, சொந்தகடை இல்லாத சாதாரண தொழிலில் உள்ளவரே, உலக மக்கள் என்ன சொல்லுவார்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள். என்று ஊரு, உலகுக்காக வாழ்ந்து தன் வாழ்க்கையையும் நாசமாக்கி தன் மகனின் வாழ்க்கையையும் நாசமாக்கி அல்லது தன் மகளின் வாழ்க்கையை நாசமாக்குகின்றார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: மனிதனை இறைவனிடமிருந்து பிரிக்கக்கூடியது நான்கு, அவையாவன: உலகம், மக்கள், உள்ளம், ஷைத்தான். இந்த நான்கிற்கு இவர்கள் வழிபட்டு வாழ்வதினால் தான் இறைவனுடைய ரஹ்மத்தை விட்டும், பரக்கத்தை விட்டும் தூரமாகுகிறார்கள்.
மேலும் சில பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளை ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு விரும்புவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் எனது மகன் அல்லது மகள் நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, அவர்கள் செல்வ செழிப்போடு வாழவேண்டும் அதனால்தான் வசதி படைத்த மணமகன் அல்லது மணமகளை தேடுகிறோம் என்று, இப்படி இவர்கள் கூறுவதற்கு காரணம் இவர்களின் ஈமானின் பலஹீனம், ஏனெனில் அல்லாஹ்வின் மீதும், ரஸூலின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
  அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்: 
இன்னும் உங்களில் (ஆணோ, பெண்ணோ) திருமணமில்லாதவர்களுக்கும், உங்களுடைய அடிமை ஆண்கள், அடிமைப் பெண்களிலிருந்து நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால் அல்லாஹ் தன் கருணையினால் அவர்களை சீமான்களாக்கி வைப்பான். அல்லாஹ் விசாலமான (கொடையுடைய) வன் முற்றும் அறிந்தவன். (அல் குர்ஆன் 24 : 32)
அல்லாஹ்வின் வார்த்தை மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் இவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை சிந்திக்க தவறி விட்டார்கள். இரவில் பணக்காரனாக இருந்தவர்கள் எத்தனையோ பேர் காலையில் பிச்சைக்காரனாகவும், அனாதையாகவும், விதவையாகவும் மாறிய சுனாமி என்ற சம்பவத்தை நாம் அனைவரும் கண்களினால் பார்த்தோம், காதுகளினால் கேட்டோம் இதுதான் வாழ்க்கை.
அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பியவர்கள் உலகுக்காக வாழமாட்டார்கள், ஊருக்காக வாழமாட்டார்கள், உறவினருக்காக வாழமாட்டார்கள், குடும்பத்தினருக்காக வாழமாட்டார்கள், நண்பர்களுக்காக வாழமாட்டார்கள், பணத்துக்காக வாழமாட்டார்கள், புகழுக்காக வாழமாட்டார்கள், பட்டம், பதவிக்காக வாழமாட்டார்கள், ஏன் தனக்காக கூட வாழமாட்டார்கள். அவர்கள் வாழ்வதெல்லாம் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காக மட்டும் தான். அவர்கள் தான் உண்மையான முஃமின்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களை நாம் இதுவரை கண்டதில்லை. ஆனால் அப்படிப்பட்ட உண்மையான முஃமின்களாகிய இளைஞர், யுவதிகளை கண்டுள்ளோம், பழகியுள்ளோம், பேசியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்!
  முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் 
முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான்- அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றியாகும். (அல் குர்ஆன் தவ்பா : 72)
முஃமினான ஆண்களும், பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் வாழ்வது அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் தான். அவர்கள் தங்களின் வாழ்கையை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்காகவும் தியாகம் செய்வார்கள். திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் அவர்கள், மணமகன் அல்லது மணமகளின் வயதை பார்க்க மாட்டார்கள், பணத்தை பார்க்க மாட்டார்கள், அழகை பார்க்கமாட்டார்கள், தொழிலை பார்க்கமாட்டார்கள், அந்தஸ்த்தை பார்க்கமாட்டார்கள், அவர்கள் பார்ப்பதெல்லாம் மார்க்கப்பற்றையும், நற்குணத்தை மாத்திரம் தான். இப்படிப்பட்ட முஃமினான 18 வயதுடைய இளைஞன் அல்லது யுவதியிடம் இருக்கக்கூடிய அறிவு, பக்குவம், நற்குணம் 50, 60, 70 வயதை தாண்டிய பெற்றோர்களிடம் நீங்கள் காணமுடியாது.
அண்மையில் இலங்கையில், கொழும்பில் நடந்த சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.
அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.
அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸூல் என்ற ஒரே காரணத்திற்காக.
இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.
இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்,
தியாகம் எனும் பண்பு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பண்பு, ஸஹாபாக்களின் பண்பு, வலிமார்களின் பண்பு. தியாகத்தை கொண்டுதான் இஸ்லாமே பரவியது. இந்த தியாக உணர்வு, இந்த தியாக பண்பு முஃமின்களிடம் மாத்திரமே இருக்கும். இன்று ஏராளமான இளைஞர், யுவதிகள் மார்க்கத்தை படித்து தியாக சிந்தனையோடு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு (நிய்யத்தொடு) இருக்கிறார்கள். ஆனால் இன்று ஷைத்தான் பெற்றோர்கள் ரூபத்தில் வந்து இந்த இளைஞர், யுவதிகளின் நல்ல நிய்யத்தை அழித்து இல்லாமல் ஆக்குகின்றான்.
இன்று எத்தனையோ இளைஞர்கள் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்க முன் வருகிறார்கள் ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை தடுக்கிறார்கள். அதைப்போன்று இன்று எத்தனையோ யுவதிகள் மார்க்கப்பற்றுள்ள, நற்குணமுள்ள ஏழை இளைஞர்களை திருமணம் செய்ய முன் வருகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல எத்தனையோ இளைஞர், யுவதிகள் திருமணம் செய்தால் ஆஷிகே ரஸூல்களை தான் திருமணம் செய்ய வேண்டும், என்ற நல்ல நோக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களுக்கோ அதைப் பற்றி சிறிதும் அக்கறையோ, கவலையோ இல்லை. அந்த பிள்ளைகள் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லியும் கூட அக்கறை அற்றவர்களாக பணத்திற்காக, சொந்த கடைக்காக வஹாபிகளை கூட திருமணம் செய்து வைக்க முன் வருகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்று இஸ்லாத்தில் ஏழைகள் அதிகரிப்பதற்கும், விதவைகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் சமநிலை பேணப்படாதது தான். பணக்கார ஆண் ஏழை பெண்ணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர்களாக ஆகலாம் அதைப்போன்று, பணக்கார பெண் ஏழை ஆணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர் ஆகி சமநிலை பேணப்படும். ஆனால் இன்று பணக்காரன் பணக்காரனை தேடி போகிறான். பணம் பணத்துடன் செருக்கிறது. ஏழைகளிடம் போய் சமநிலை பேண வேண்டிய பணம் தேக்கமடைகிறது.
இன்னும் சொல்லப்போனால் எமது முஸ்லிம்களின் பிழைகளை சுட்டிக்காட்ட போனால் புத்தகமே எழுதலாம். எமது நோக்கம் பிறரின் குறைகளை அலசி ஆராய்வதல்ல, பிறரின் குறைகளை தேடுவதல்ல மாறாக பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும், அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான்.
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர். நன்மையை(ப் பிறருக்கு) அவர்கள் ஏவுகின்றனர். தீமையை விட்டும் (பிறரைத்) தடுக்கின்றனர். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் அருள் புரிவான் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் தவ்பா : 71)
முஃமினான ஆண்களே! பெண்களே! முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாற்றம் செய்ய வேண்டாம். நாளை மறுமையில் தாய் பிள்ளைக்கு உதவி செய்ய மாட்டாள், பிள்ளை தாய்க்கு உதவி செய்ய மாட்டாள். கணவன் மனைவிக்கு உதவி செய்ய மாட்டான். மனைவி கணவனுக்கு உதவி செய்ய மாட்டாள். இப்படிப்பட்ட நிலையில் எமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் மாத்திரமே எமக்கு உதவி செய்ய முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். ஆதலால் உங்கள் வாழ்க்கையை அல்லாஹ், ரஸூலுக்காக என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கத்துக்கு முரணான செயலை யார் செய்ய சொன்னாலும் செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் பயந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முரணான செயலை செய்ய சொன்னால், அவர்களுக்கு நீங்கள் பணிவான முறையில் அமைதியான முறையில் மார்க்கத்தை விளங்கப்படுத்துங்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கும், எங்களுக்கும் ஆழமான அறிவையும், தெளிவான சிந்தனையையும் தருவானாக!
குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டுவதோ, குத்திக் காட்டுவதோ, பழித்தீர்ப்பதோ அல்ல சமுதாயத்தில் உள்ள உண்மை நிலைமைகளை சுட்டிக் காட்டி சீர்த்திருத்தம் செய்வதே எமது நோக்கமாகும். அல்லாஹ்வும், ரஸுலும் நன்கு அறிந்தவர்கள்.
இது பெற்றோர்களின் அறிவீனமா? அல்லது மறுமை நாளின் நெருக்கமா?

பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!


 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும்இ நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய்இ தந்தைஇ உற்றார், உறவினர்,
ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.
இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.
ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.
வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!
நன்றி: மேலப்பாளையம் வாய்ஸ்

நல்ல கணவனின் நற்பண்புகள்


 கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.
இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் 'தலாக்' விடுவதாகும்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, 'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி அவர்கள் கூறினார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்' என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக "முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்'' என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், "அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.'' (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?'' என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
"முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது'' என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 19160)
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)
''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
- நூல்: முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்


[ சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.]
கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைக்கு ஒரு பெண்மணி வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சக்களத்தி இருக்கிறாள். அவளை எரிச்சல் ஊட்டி கோபப்படுத்த வேண்டும். அதற்காக என் கணவர் எனக்குக் கொடுக்காத ஒரு பொருளை என் கணவர் எனக்குக் கொடுத்தார் என பொய் சொல்லட்டுமா? இது பாவமா?’ என்று கேட்டார்.
இதைக்பேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஒருவர் ஒரு பொருளை கொடுக்காத நிலையில் அவர் அதைக் கொடுத்தார் என்று சொல்வது மோசடியான உடையை அணிந்து கொள்வதற்குச் சமமாகும் (அது ஒரு மோசடிச் செயலாகும்).’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், நஸஈ, அபூதாவூத்)
ஒருவரை ஒருவர் ஏமாற்றம் அடையச் செய்வதற்கோ கோபம் அடையச் செய்வதற்கோ பொய்யை ஆயுதமாகக் கொள்ளக் கூடாது. மேலும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட இரு மனைவிகளுக்கிடையே கோப உணர்வு நடமாடக்கூடாது. இருவர் மனதிலும் கோபக்கனலின் பொறி கூடச் சிதறக் கூடாது என்பதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
வெளிப்படையில் நல்லது போன்றும் நன்மை போன்றும், உள் நிலையில் கெட்டதாகவும் தீயதாகவும் இருக்கும் சொல், செயல், நினைப்பு அனைத்துமே மோசடியானது தான். இந்த மோசடி, குடும்பங்களுக்கு மத்தியில் குடிபுகுந்து விடக் கூடாது. பெண்களுக்கு நடுவே விளையாட்டுக்குக் கூட ஏமாற்றமான பேச்சுவார்த்தைகள் வெளியாகக் கூடாது. அது ஒருசமயம் சாதாரண விஷயமாகவும், சிலசமயம் பயங்கர விஷயமாகவும் ஆகிவிடும்.
நகைச்சுவைக்காக சின்ன விஷயங்களில் பொய் சொல்லிவிட்டு அது பொய் என்று தெரிந்த பிறகு அந்தப் பெண் மீது இருக்கும் அன்பும் நம்பிக்கையும் பாதிக்கப்படும். பிறகு ஏதாவது ஒரு விஷயத்தில் உண்மை சொல்லும் நேரத்திலும் ஒரு செய்தியை நிலைநாட்டத் துடிக்கும்போதும் தோற்றுப்போகும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நேரத்தில் எந்த முகாந்தரமும் எடுபடாது போய்விடும்.
‘நெருப்பு விரகைத் தின்று விடுவதுபோல பொய் பேசுவது இறைநம்பிக்கை எனும் ஈமானைத் தின்றுவிடும்.’ என அறிவுறுத்தப்படுகிறது.
‘பொய் சொன்னால் போஜனம் கிட்டாது’ என்று நாட்டுவழக்கில் சொல்வார்கள். இத்தனை மோசமான ஒரு செயலை இரு பெண்களுக்கு மத்தியில் செயல்படுத்த விடக்கூடாது. பெண்கள் வாழ்வில் எத்தனையே உண்மைகள் கூட செத்துப்போய் விடுகின்றன. சந்தேகப் புயல்களால் உண்மை சாய்ந்துவிடுகிறது. சத்தியங்கள் தோற்றுப்போய் விடுகின்றன.
அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தபோதும் கூட அவர்களை திருப்தி படுத்துவதற்காக பொய்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டதில்லை. உண்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்த காரணத்தால் தான் அத்தனை வாழ்க்கைத் துணைவிகளையும் எளிமை நிலையிலும் செழிப்பான நினைவுகளுடன் வாழச்செய்ய முடிந்தது.
அல்குர்ஆன் எச்சரிக்கிறது :
ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியைத் தனது தேவைக்காகக் கட்டிக்கொள்ள முனையும் ஆண்மகன் அவர்கள் நடுவே நீதத்துடன் நடக்க வேண்டும். அப்படி நீதத்துடன் நடக்க முடியாது என்ற பயம் இருந்தால் அவன் ஒரு பெண்ணை மட்டுமே மணந்துகொள்வது போதும் என்று இறைவேதம் எச்சரிக்கின்றது.
இரண்டு ‘பெண் உணர்வுகள்’ ஒன்றை ஒன்று மோதிக் குடும்பங்களில் குழப்பத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் விழிப்பாக உள்ளது. அதனால் தான் ஒன்றுக்கும் மேல் இன்னொரு பெண்ணை மணமுடிக்கும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்பட்டாலும் முன்பு மணமுடித்திருக்கும் மனைவியின் உடன்பிறந்த சகோதரியைத் திருமணம் முடிக்க தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதாவது அக்கா தங்கையான உடன்பிறப்பை ஒரே மனிதன் மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது.
தங்கத்தை கூடத் தியாகம் செய்து தாரை வார்த்துக் கொடுக்கும் தங்க குணம் கொண்ட நமது தாய்க்குலத்திற்கு தாம்பத்ய வாழ்வை மட்டும் பங்களிக்கும் நிலையைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் மன உணர்வு பாதிக்கப்பட்டு பழி பகை என்று பலவித பாதகங்கள் விளைந்து விடுகின்றன.
எந்த நிலையிலும் ஒரு கணவனின் கண்ணியம் சிதைந்து போய்விடக் கூடாது என்பதில் மனைவி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கணவனின் மானத்தை மறைக்கும் ஆடையல்லவா மனைவி! கணவனின் மானத்தை மறைக்கும் ஆடைபோல மனைவியும், மனைவியின் மானத்தை மறைக்கும் ஆடை போலக் கணவனும் இணைந்து செயல்பட்டால் குடும்ப கவுரவம் என்றுமே நிமிர்ந்து நிற்கும்.
பொடுபோக்கு மனைவி :
சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறிக் கணவன் மனதை கசக்கிப் பிழியும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
‘கணவன் சம்பாத்தியம் போதவில்லை’ என்று பொய் கூறினால் யார் கொடுத்து ஈடுகட்டத் துணிவார்கள்? கொடுக்க நினைக்கும் உறவு முறை கூட கேவலமாக நினைக்க மாட்டார்களா?
‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற நிலையில் கணவனின் சம்பளம் குறைவாக இருந்தாலும் நிறைவான மனதுடன் அதைக்கொண்டு குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு அதில் அதிகமான பரக்கத் - அபிவிருத்தியை அல்லாஹ் கொடுப்பான் அல்லவா? இது தன்னைக் கட்டிய கணவருக்குக் கண்ணியம் சேர்க்கும் அணிகலன் என்பதை பெண்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
ஊரில் பெருமையான குடும்பத்தில் உள்ள கணவன், கட்டி வந்த பெண்ணால் சிறுமைப்பட நேரிடுகிறது. கச்சிதமான குடும்பத்தில் ஆடம்பரமான மருமகள் வந்து அனைத்தையும் சீரழித்துவிடும்படி ஆகிவிடுகிறது. ஒற்றுமை மிகுந்த குடும்பத்தில் உதவாக்கரையான பெண் வந்து அனைவரையும் அக்கு வேறு ஆணி சேராகக் கழற்றி விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
நல்ல மருமகள் :
சில குடும்பங்களுக்கு மருமகளாகப் புகுந்து வரும் பெண்கள் மருமகள் எனும் நிலையைவிட அந்த வீட்டின் மகளாகவே வாழ்ந்து காட்டுகிறார்கள். மாமியாரையும், மாமனாரையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் பெற்றெடுத்த தாய் தந்தையாகவே போற்றி மகிழ்கிறார்கள். கணவனுடன் பிறந்த நாத்தனார், கொழுந்தனார்களைத் தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளாகவே மதித்துப் பணிவிடை செய்து நற்பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருமக்கமார்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்குகிறார்கள். இப்படிப்பட்ட மருமகள்கள் வாழ்கின்ற வீடு சொர்க்கமாக இருக்கும்.
சில எளிமை மிக்கக் குடும்பத்தில் வாழ வந்த மருமகள் கூட ஏதேனும் கைத்தொழில் செய்து தன் கணவனின் கண்ணியம் காத்து மகிழ்கிறார்கள். சிலர் பலகாரங்கள் செய்து குடும்பச் செலவுக்கு ஈடுகட்டுகிறார்கள். சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்து கணவன் சுமையைக் குறைக்கிறார்கள். கிராமப்புற மருமக்கள் கூட கோழி வளர்த்து குடும்பச் செலவை சரிசெய்து கொள்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சுமையாக நினைப்பதில்லை. சுவையான வாழ்வாகவே நினைக்கிறார்கள்.
குடும்பக் கண்ணியத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களுக்கு இறைவன் என்றுமே துணை இருப்பான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். கணவனும் மதிப்பார். கணவனைப் பெற்றெடுத்த மாமனாரும், மாமியாரும் மதிப்பார்கள். உற்றார் உறவினர்களும் மதிப்பார்கள்.
பெண்களாகிய நமது சகோதரிகள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.
குடும்பப் பெண்கள் இதை உணரந்து ஒவ்வொரு நாளும் கடமை உணர்வுடன் நடந்தால் கண்ணியம் அவர்கள் காலடியில் வந்து விழும். இது குடும்ப வாழ்வில் நாம் காணும் உண்மை.

 முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்

முன்னோர்கள் யார்?


o முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
o சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
o மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
o மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
o முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்...?
o முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
o முன்னோர்கள் யார்?
 முன்னோர்கள் யார்?
முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
"எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)
முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 43:23,24)
சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)
மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
"அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)
மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)
முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்...?
"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)
முன்னோர்கள் யார்?
"பெரியார்கள், முன்னோர்கள்" என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
"முன்னோர்கள், பெரியார்கள்" என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட "மிகச் சிறந்த சமுதாயம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப் பெற்ற "ஸஹாபாக்கள்" இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த "நாற்பெரும் கலீபாக்கள்" இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை "முன்னோர் பெரியோர்" என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற "பித்அத்"களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?
இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!
source: readislam.net

Feb 8, 2012

நபிமார்கள் கேட்ட துஆக்கள்


01. துஆக்கள் ஏற்கப்பட
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)

02. ஈருலக நன்மை பெற
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )
"ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
 (அல்குர்ஆன் 2: 201)

03. கல்வி ஞானம் பெற
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )
"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)

04. பாவமன்னிப்புப் பெற
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ )
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" (அல்குர்ஆன் 7: 23)

05. படைத்தவனிடம் சரணடைந்திட
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ )
"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (அல்குர்ஆன் 6: 79)

06. விசாலமான உணவைப் பெற
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ )
"அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" (அல்குர்ஆன் 5: 114)

07. குழந்தைப்பேறு பெற
நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء )
"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 3: 38)

08. இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( نتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ )
"நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்."
''இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் 7: 155, 156)

09. சோதனையின்போது பொறுமை ஏற்பட
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ )
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (அல்குர்ஆன் 7: 126)

10. கவலைகள் தீர
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ )
"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி." (அல்குர்ஆன் 9: 129)

11. மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட
நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ )
"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்." (அல்குர்ஆன் 7: 89)

12. சகோதரருக்கு துஆ 
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ اغْفِرْ لِي وَلأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ )
"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்." (அல்குர்ஆன் 7: 151)

13. துஆவில் தவறுகள் நடக்காமல் இருக்க
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ )
"என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்." (அல்குர்ஆன் 11: 47)

14. அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற
நபி ஹூ த் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُم مَّا مِن دَابَّةٍ إِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ )
"நிச்சயமாக நான்> எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்." (அல்குர்ஆன் 11: 56)

15. அல்லாஹ்வின் உதவி பெற
நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )
"மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்." (அல்குர்ஆன் 11: 88)

16. துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ )
"பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" (அல்குர்ஆன் 12: 64)

17. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ )
"அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" (அல்குர்ஆன் 12: 67)

18. சஞ்சலம் நீங்கிட
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ )
''என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்’. (அல்குர்ஆன் 12: 86)

19. மறுமையில் நல்லடியார்களுடன் எழுப்பப் பட
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ )
"வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!" (அல்குர்ஆன் 12: 101)

20. குழப்பங்களில் இருந்து நேர்வழி பெற
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
"நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.".
(''என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
''எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக." (அல்குர்ஆன் 14: 39, 40, 41)

21. நெஞ்சம் விரிவடைய
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي )
"இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!" (அல்குர்ஆன் 20: 25, 26)

22. கல்வி அறிவுப் பெருக
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَّبِّ زِدْنِي عِلْمًا )
"இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" (அல்குர்ஆன் 20: 114)

23. நோய் குணமடைய
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ )
"நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 21: 83)

24. துன்பத்திலிருந்து விடுபட
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ )
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்." (அல்குர்ஆன் 21: 87)

25. கோரிக்கை ஏற்கப்பட
நபி இப்ராஹீம்; அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء )
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் ப+மியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (அல்குர்ஆன் 14: 38)

26. குழந்தை பாக்கியம் பெற
நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ )
"என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன." (அல்குர்ஆன் 21: 89)

27. நிராகரிப்பவர்களுக்க எதிராக நாம் வெற்றி பெற
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ احْكُم بِالْحَقِّ وَرَبُّنَا الرَّحْمَنُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ )
"என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அறவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்." (அல்குர்ஆன் 21: 112)

28. தங்குகின்ற இடத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்பட
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَّبِّ أَنزِلْنِي مُنزَلا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ )
"இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்." (அல்குர்ஆன் 23: 29)

29. இம்மை மறுமை உயர்பதவி பெற
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الآخِرِينَ
وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
وَلا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
يَوْمَ لا يَنفَعُ مَالٌ وَلا بَنُونَ
إِلاَّ مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
''இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!""
''இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!"
''இன்னும், பாக்கியம் நிறைந்த சவனபதியின் வாரிஸ
{க்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"
''என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.""
''இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!"
''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.""
''எவரொருவர் பரிசத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)." (அல்குர்ஆன் 26: 83 -89)

30. தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ )
''என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!" (அல்குர்ஆன் 26: 169)

31. நற்செயல்கள் அதிகமாக
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ )
"என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 27: 19)

32. அநியாயக்காரர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெற
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي
قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ )
"என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!"
''என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்"
''என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!"" (அல்குர்ஆன் 28: 16, 17, 21)

33. வலிமை ஏற்பட
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ )
"என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" (அல்குர்ஆன் 28: 24)

34. அல்லாஹ்வின் உதவி பெற
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ )
"என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" (அல்குர்ஆன் 29: 30)

35. சாலிஹான குழந்தை பிறக்க
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ )
"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (அல்குர்ஆன் 37: 100)

36. மறுமையில் அதிகமான நற்கூலி பெற
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
وَسَلامٌ عَلَى الْمُرْسَلِينَ
وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )
"அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்)." (அல்குர்ஆன் 37: 180, 181, 182)

37. பிரயாண துஆ
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ
وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ )
"இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசத்தமானவன்.
'மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்." (அல்குர்ஆன் 43: 13, 14)

38. இறை நம்பிக்கை அதிகமாக
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )
"அவன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்." (அல்குர்ஆன் 42: 10)
 
 
39. நிராகரிப்பவர்களின் பிடியில் சிக்காமல் இருக்க
நபி இப்ராஹீம்; அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
رَبَّنَا لا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ )
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"
''எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்"" (அல்குர்ஆன் 60: 4, 5)

40. விசுவாசிகள் அனைவரும் மன்னிக்கப் பெற  
( رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ )
''என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும்> முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! (அல்குர்ஆன் 71: 28)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )