"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களை பல கிளையினராகவும், பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியம் பெற்றவர் தக்வா (இறையச்சம்) உள்ளவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நன்கு உணர்பவன்." (49:13)
மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட பின் ஹலரத் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாங்கு சொல்லும்படி கூறினர். அதைக் கண்ட சிலர் "என்ன! கறுப்பு மனிதனா பாங்கு சொல்கிறான்" என ஏளனமாகப் பேசினர். அப்போது இவ்வசனம் இறங்கியது. (இப்னு அபூ முலைக்கத் ரளியல்லாஹு அன்ஹு)
எனவே அல்லாஹ்விடம் கண்ணியமுள்ளவர் தக்வா உடையவர் என்பது புலனாகிறது.
வகுப்பறையில் மாணவர்கள் சப்தமிடுகின்றனர். ஆசிரியர் வருகிறார் என ஒரு மாணவர் சொன்னதும் நிசப்தம் நிலவுகிறது. ஏன்? ஆசிரியர் அடிப்பார் என்ற பயம் மாணவனை தவறு செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது. வீட்டில் நிறைய பணம் வைத்திருப்பவர் திருடனுக்குப் பயந்து அப்பணத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கிறார். அதேபோல தவறு செய்தால் அல்லாஹ்விடமே பிடிபடுவோம் என அஞ்சுவது பாவத்தை விட்டு தப்புவதுதான் தக்வா ஆகும்.
தக்வா என்றால் என்ன?
ஒரு உஸ்தாது தனது மாணவர்களின் ஈமானை சோதிப்பதற்காக ஆளுக்கொரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து எவரும் பார்க்காத இடத்தில் அறுத்துக் கொண்டு வாருங்கள் என அனுப்பினார். அனைத்து மாணவர்களும் அறுத்துக்கொண்டு வந்தனர். ஒரேயொரு மாணவர் மட்டும் அறுக்காமல் அப்படியே பழத்தைக் கொண்டு வந்தார். ஆசிரியர் ஏன் என கேட்டபோது "உஸ்தாது அவர்களே! எவரும் பார்க்காத இடம் எங்கும் இல்லை. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என மாணவர் சொன்னார். இந்த மாணவரின் தக்வா அவரை வாழ்க்கையில் உயர்வு பெற வழிகோலியது.
ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சியில் அவர்கள் இரவில் நகர் வலம் வந்த போது, ஒரு வீட்டில் தாய் தனது மகளிடம் "பாலில் தண்ணீர் ஊற்று" என சொல்கிறார். ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூர்ந்து கேட்கிறார்கள். மகள் சொல்கிறாள் "பாலில் தண்ணீர் ஊற்றக் கூடாது என்பது ஜனாதிபதி உமரின் கட்டளை!" தாய் சொல்கிறார் "இந்த நடுநிசி இரவில் உமர் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? தண்ணீர் ஊற்று" மகள் உடனே சொல்கிறார் "ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு பார்க்காவிட்டாலும் என்னையும், உன்னையும் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்படி தண்ணீர் ஊற்றுவது? இப்பெண்ணின் தக்வா அப்பெண்ணை ஹலரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு
அவர்களின் மருமகளாக உயர்த்தியது.
வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் "ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன்" என்றார். அதற்கு ஆட்டிடையன் "ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது" இதைக் கேட்ட பெரியவர் "எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு" என்றார். உடனே அந்த ஆட்டிடையன், "பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான்" எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.
தக்வாவின் பலன் :
தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவது உண்மையான தக்வா ஆகும். தக்வா உடையவர்களுக்கு அல்லாஹ் 5 வாக்குறுதிகளை அருளுகிறான் என டெல்லி பயானில் உலமாக்கள் கூறினர் அவையாவன:
1. ஹராமை விட்டு அல்லாஹ் அவர்களை பாதுகாக்கிறான். (உதாரணம்:) ஹலரத் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்
சுலைகா பிடியிலிருந்து தப்பி ஓடியபோது அறைகளின் கதவுகள் தானாகத் திறந்து வழி விட்டன.
2. நினையா புறத்திலிருந்து அவர்களுக்கு உதவியளித்து ஹலாலான பாதையைக் காட்டுவான். (உதாரணம்:
) அல்லாஹ்வுடைய பாதையில் சஹாபாக்கள் பசி பட்டினியாக சிரமப்பட்ட போது கடலில் அம்பர் என்ற பெரிய மீனை அல்லாஹ் கொடுத்தான். அனைவருக்கும் அது பல நாள் உணவாகப் பயன்பட்டது.
3. அவர்களின் காரியங்களை இலேசாக்குவான். (உதாரணம்:) ஹலரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கு இரும்பை உருக்கி திரவமாக்கும் கலையை அல்லாஹ் இலேசாக்கினான்.
4. அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான்.
5. அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் மிகப் பெரிய கூலி தருவான். அல்லாஹ் நம் அனைவருக்கும் தக்வாவை பேணி வாழ தெளஃபீக் செய்வானாக!
- பேகம்பூரி,
நன்றி : நர்கிஸ் – டிசம்பர் 2011 source: http://www.mudukulathur.com/?p=8902
0 comments:
Post a Comment