Feb 17, 2012

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்



அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.
அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.
அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸூல் என்ற ஒரே காரணத்திற்காக.
இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.
இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாஃபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்.
இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள் சிலரை பார்க்கும் பொழுது, இவர்கள் முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது.ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ]

  இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் 
அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விடயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த ஸுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸூலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.
முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே. முக்கிய நோக்கமாக உள்ளது.
  ஆண் அல்லது மணமகனின் நோக்கம் : 
இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக)
ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (அறிவிப்பவர்: அபூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5090)
ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும், ரஸூலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்.
ஆனால் இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள், மௌலவி அல்லது ஆலிம் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலர், ஆஷிகே ரஸூல் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சிலர், ஆபிதுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்காக உயிரை தியாகம் செய்வோம் என்று கூறிக்கொள்பவர்கள் கூட திருமண விஷயத்தில் இவர்களை பார்க்கும் பொழுது, இவர் ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.
மேலும் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :
''பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.'' (அல் குர்ஆன் 4:4) என்று கூறுகின்றான். ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமிய திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாற்றமாக நடைபெறுவதினால் இன்று குடும்பங்களில் பரக்கத் இல்லை, ஒற்றுமை இல்லை, புரிந்துணர்வு இல்லை அதுமட்டுமல்ல காதி நீதிமன்றங்களில் விவாகரத்து (Divorce) வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து மலைப்போல் உள்ளது. இவைகளுக்கு காரணம் அல்லாஹ்வும், ரஸூலும் ஏவியவைகள் புறக்கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வும், ரஸுலும் விலக்கியவைகள் எடுத்து நடத்தப்படுகின்றது. திருமணங்களை பள்ளிவாசல்களில் வைக்க வேண்டும் என்பது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கட்டளை. ஆனால் இன்று முஸ்லிம்கள் திருமணங்களை வைப்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும். திருமணங்களில் ஆடல், பாடல், ஆண், பெண் கலத்தல் போன்றவை மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய திருமணங்களில் இவை அனைத்துமே உள்ளது.
இன்று நாம் காதுகளினால் கேட்கிறோம், 7 வருடம் மத்ரஸாவில் ஓதி மௌலவி பட்டம் பெற்ற மவ்லவிமார்கள் ஒரு சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்துக்கொண்டு அவர்கள் மணமகள் தேடுகின்றார்கள், என்ன நிபந்தனையின் பிரகாரம் என்றால், மார்க்கப்பற்று அல்லது ஆஷிகே ரஸூல் இதுபோன்ற இஸ்லாமிய நிபந்தனையின் பிரகாரம் அல்ல மாறாக மணமகள் அபாயா அணிய கூடாது, தலையில் முக்காடு போட கூடாது இது போன்ற நிபந்தனையுடன் மணமகள் தேடுகிறார்கள். இவர்களை மௌலவி என்று சொல்வதா அல்லது வேறு பெயர்கொண்டு அழைப்பதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆலிமின் நிலைமை இப்படி இருக்கும் போது பாமரனின் நிலைமை எப்படி இருக்கும்? அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்! இப்படி ஏராளமாக கூறிக்கொண்டே போகலாம். இன்று அனேகமானவர்கள் திருமணம் என்ற ஸுன்னத்தை செய்ய போய் ஹராத்தை செய்வதையே காணக்கூடியதாக உள்ளது.
  பெண் அல்லது மணமகளின் நோக்கம் : 
இன்றைய சில பெண்களின் எண்ணத்தை, எதிர்ப்பார்ப்பை பார்க்கும் போது அவர்களுடைய எண்ணங்களும், எதிர்ப்பார்புகளும் மார்க்க அடிப்படைக்கு மாற்றமாகவே இருக்கிறது. மார்க்கப் பற்றுள்ள, நற்குணமுள்ள, நற்பண்புள்ள, அறிவுள்ள ஆண்களை விரும்புவதற்கு பதிலாக பணக்கார, அழகான, நாகரீக மோகமுள்ள ஆண்களையே விரும்புகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், உலக ஆசையில் மூழ்கி (ஹுப்புத் துன்யா) வில் வாழ்கிறார்கள்.
உள்ளத்தில் அல்லாஹ்வையும், ரஸூலையும் வைப்பதற்கு பதிலாக உலகத்தை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் எதிர்ப்பார்ப்பது திருமணம் முடிந்து மேற்கத்தேய நாடுகளில் போய் நாகரீக வாழ்க்கை வாழ வேண்டும், பணக்காரியாக வாழவேண்டும் இது போன்ற ஆடம்பர வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் வாழும் போது திடீரென ஒரு சிறு வறுமை ஏற்பட்டவுடனேயே இவர்களுடைய வாழ்க்கை தலாக்கில் (விவாகரத்தில்) போய் முடிகிறது.
  மணமக்களின் பெற்றோர்களின் நோக்கம் : 
அடுத்து நாம் பார்க்க வேண்டியது பெற்றோர்களின் நோக்கங்களை. இன்றைய காலக்கட்டத்தில் சில பெற்றோர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. சில பெற்றோர்களின் எண்ணத்தை பார்க்கும் பொழுது, பிள்ளைகளின் நல்லெண்ணத்தை விடவும், நற்குணத்தை விடவும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
வியாபாரம் செய்வதை போன்று இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்தால் முதலில் நாவு கூசாமல் கேட்பது கொடுக்கல் வாங்கல் என்னவென்று. மணமகனின் பெற்றோரை எடுத்துக்கொண்டால் இவர்களின் முதல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு சீதனம், காணி, வீடு இவை போன்றவைகள் எங்கு கூடுதலாக கிடைக்குமோ அங்கு தான் திருமணம் செய்து வைப்பார்கள் (இந்துக்களை போன்று). மணமகள் 100% மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக இருந்தாலும் கூட, அந்த பெண் ஏழையாக இருந்தால் அதை ஒதுக்கி தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு தேவை அழிய கூடிய சொத்து, செல்வங்கள்தான்.
இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்ப்பது அந்தஸ்து, குலம் போன்றவைகளை. தன் மகன் டாக்டராக இருந்தால் அதைப்போன்ற டாக்டர் அல்லது இன்ஜினியர் பெண் அல்லது அதையும் விட உயர்ந்த பணக்கார குடும்பத்து பெண். இதுபோன்ற வகையில் தான் மணமகள் தேடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், இன்ன ஹாஜியாருடைய மகன் இன்ன ஹாஜியாரின் மகளை முடித்துள்ளார் என்ற பெயருக்காக அல்லது அந்த ஆலிம், இந்த மவ்லவி எனது மருமகன் என்ற பெயருக்காகவும், புகழுக்காகவும் மணமுடித்து வைப்பார்கள். இவர்கள் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தன்னுடைய மகன் அல்லது மகளின் சம்மதத்தை கூட கேட்பதில்லை. இவர்கள் யாரை விரும்பி திருமணம் செய்ய சொல்கிறார்களோ, அவர்களையே இவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்யவேண்டும். அப்படிப்பட்ட பிர்அவ்னின் குணத்தை ஒத்தவர்களாக சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
  அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும்போது: 
"முஃமீன்களே! (உங்களுடைய உறவு வழிப்) பெண்களை (அவர்களின்) விருப்பமின்றி (நிர்பந்தமாக) நீங்கள் அனந்தரமாக்கி கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல" (அல் குர்ஆன் 4:19)
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதியைத் தெரிந்துக்கொள்வது) என்று கேட்டார்கள். (அதற்கு) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5136)
இன்னும்,
கன்னி கழிந்த பெண்னான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் போய் என் விருப்பத்தை சொன்னேன். அத் திருமணத்தை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா ரலியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 5138)
மணமக்களிடம் சம்மதம் கேட்ட பிறகே திருமணத்தை நடாத்தி வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வினதும் ரஸூலினதும் கட்டளை. மணமக்களின் அனுமதி இல்லாமல், பெற்றோர்கள் தங்களில் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து வைப்பது இஸ்லாமிய வழிமுறையல்ல. இப்படிப்பட்ட பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளின் எதிர்கால வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு வரப்போகும் மருமகன் அல்லது மருமகள் மார்க்கப்பற்று, நற்குணம், ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறாரா? இல்லையா? என்று பார்ப்பதில்லை மாறாக இவர்கள் பணத்தையும், பெயரையும், புகழையும் மாத்திரமே எதிர்பார்த்து பிள்ளைகளின் வாழ்கையை நாசமாக்குகிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்காகவும் வாழ்வதில்லை இவர்கள் வாழ்வது ஊருக்கும், உலகுக்காகவும், மருமகன் அல்லது மருமகள் ஏழையாக இருக்கிறாரே, பெயர், புகழ் அற்றவராக இருக்கிறாரே, சொந்தகடை இல்லாத சாதாரண தொழிலில் உள்ளவரே, உலக மக்கள் என்ன சொல்லுவார்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள். என்று ஊரு, உலகுக்காக வாழ்ந்து தன் வாழ்க்கையையும் நாசமாக்கி தன் மகனின் வாழ்க்கையையும் நாசமாக்கி அல்லது தன் மகளின் வாழ்க்கையை நாசமாக்குகின்றார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: மனிதனை இறைவனிடமிருந்து பிரிக்கக்கூடியது நான்கு, அவையாவன: உலகம், மக்கள், உள்ளம், ஷைத்தான். இந்த நான்கிற்கு இவர்கள் வழிபட்டு வாழ்வதினால் தான் இறைவனுடைய ரஹ்மத்தை விட்டும், பரக்கத்தை விட்டும் தூரமாகுகிறார்கள்.
மேலும் சில பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளை ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு விரும்புவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் எனது மகன் அல்லது மகள் நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, அவர்கள் செல்வ செழிப்போடு வாழவேண்டும் அதனால்தான் வசதி படைத்த மணமகன் அல்லது மணமகளை தேடுகிறோம் என்று, இப்படி இவர்கள் கூறுவதற்கு காரணம் இவர்களின் ஈமானின் பலஹீனம், ஏனெனில் அல்லாஹ்வின் மீதும், ரஸூலின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
  அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்: 
இன்னும் உங்களில் (ஆணோ, பெண்ணோ) திருமணமில்லாதவர்களுக்கும், உங்களுடைய அடிமை ஆண்கள், அடிமைப் பெண்களிலிருந்து நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால் அல்லாஹ் தன் கருணையினால் அவர்களை சீமான்களாக்கி வைப்பான். அல்லாஹ் விசாலமான (கொடையுடைய) வன் முற்றும் அறிந்தவன். (அல் குர்ஆன் 24 : 32)
அல்லாஹ்வின் வார்த்தை மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் இவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை சிந்திக்க தவறி விட்டார்கள். இரவில் பணக்காரனாக இருந்தவர்கள் எத்தனையோ பேர் காலையில் பிச்சைக்காரனாகவும், அனாதையாகவும், விதவையாகவும் மாறிய சுனாமி என்ற சம்பவத்தை நாம் அனைவரும் கண்களினால் பார்த்தோம், காதுகளினால் கேட்டோம் இதுதான் வாழ்க்கை.
அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பியவர்கள் உலகுக்காக வாழமாட்டார்கள், ஊருக்காக வாழமாட்டார்கள், உறவினருக்காக வாழமாட்டார்கள், குடும்பத்தினருக்காக வாழமாட்டார்கள், நண்பர்களுக்காக வாழமாட்டார்கள், பணத்துக்காக வாழமாட்டார்கள், புகழுக்காக வாழமாட்டார்கள், பட்டம், பதவிக்காக வாழமாட்டார்கள், ஏன் தனக்காக கூட வாழமாட்டார்கள். அவர்கள் வாழ்வதெல்லாம் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காக மட்டும் தான். அவர்கள் தான் உண்மையான முஃமின்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களை நாம் இதுவரை கண்டதில்லை. ஆனால் அப்படிப்பட்ட உண்மையான முஃமின்களாகிய இளைஞர், யுவதிகளை கண்டுள்ளோம், பழகியுள்ளோம், பேசியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்!
  முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் 
முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான்- அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றியாகும். (அல் குர்ஆன் தவ்பா : 72)
முஃமினான ஆண்களும், பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் வாழ்வது அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் தான். அவர்கள் தங்களின் வாழ்கையை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்காகவும் தியாகம் செய்வார்கள். திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் அவர்கள், மணமகன் அல்லது மணமகளின் வயதை பார்க்க மாட்டார்கள், பணத்தை பார்க்க மாட்டார்கள், அழகை பார்க்கமாட்டார்கள், தொழிலை பார்க்கமாட்டார்கள், அந்தஸ்த்தை பார்க்கமாட்டார்கள், அவர்கள் பார்ப்பதெல்லாம் மார்க்கப்பற்றையும், நற்குணத்தை மாத்திரம் தான். இப்படிப்பட்ட முஃமினான 18 வயதுடைய இளைஞன் அல்லது யுவதியிடம் இருக்கக்கூடிய அறிவு, பக்குவம், நற்குணம் 50, 60, 70 வயதை தாண்டிய பெற்றோர்களிடம் நீங்கள் காணமுடியாது.
அண்மையில் இலங்கையில், கொழும்பில் நடந்த சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.
அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.
அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸூல் என்ற ஒரே காரணத்திற்காக.
இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.
இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்,
தியாகம் எனும் பண்பு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பண்பு, ஸஹாபாக்களின் பண்பு, வலிமார்களின் பண்பு. தியாகத்தை கொண்டுதான் இஸ்லாமே பரவியது. இந்த தியாக உணர்வு, இந்த தியாக பண்பு முஃமின்களிடம் மாத்திரமே இருக்கும். இன்று ஏராளமான இளைஞர், யுவதிகள் மார்க்கத்தை படித்து தியாக சிந்தனையோடு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு (நிய்யத்தொடு) இருக்கிறார்கள். ஆனால் இன்று ஷைத்தான் பெற்றோர்கள் ரூபத்தில் வந்து இந்த இளைஞர், யுவதிகளின் நல்ல நிய்யத்தை அழித்து இல்லாமல் ஆக்குகின்றான்.
இன்று எத்தனையோ இளைஞர்கள் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்க முன் வருகிறார்கள் ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை தடுக்கிறார்கள். அதைப்போன்று இன்று எத்தனையோ யுவதிகள் மார்க்கப்பற்றுள்ள, நற்குணமுள்ள ஏழை இளைஞர்களை திருமணம் செய்ய முன் வருகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல எத்தனையோ இளைஞர், யுவதிகள் திருமணம் செய்தால் ஆஷிகே ரஸூல்களை தான் திருமணம் செய்ய வேண்டும், என்ற நல்ல நோக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களுக்கோ அதைப் பற்றி சிறிதும் அக்கறையோ, கவலையோ இல்லை. அந்த பிள்ளைகள் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லியும் கூட அக்கறை அற்றவர்களாக பணத்திற்காக, சொந்த கடைக்காக வஹாபிகளை கூட திருமணம் செய்து வைக்க முன் வருகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்று இஸ்லாத்தில் ஏழைகள் அதிகரிப்பதற்கும், விதவைகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் சமநிலை பேணப்படாதது தான். பணக்கார ஆண் ஏழை பெண்ணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர்களாக ஆகலாம் அதைப்போன்று, பணக்கார பெண் ஏழை ஆணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர் ஆகி சமநிலை பேணப்படும். ஆனால் இன்று பணக்காரன் பணக்காரனை தேடி போகிறான். பணம் பணத்துடன் செருக்கிறது. ஏழைகளிடம் போய் சமநிலை பேண வேண்டிய பணம் தேக்கமடைகிறது.
இன்னும் சொல்லப்போனால் எமது முஸ்லிம்களின் பிழைகளை சுட்டிக்காட்ட போனால் புத்தகமே எழுதலாம். எமது நோக்கம் பிறரின் குறைகளை அலசி ஆராய்வதல்ல, பிறரின் குறைகளை தேடுவதல்ல மாறாக பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும், அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான்.
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர். நன்மையை(ப் பிறருக்கு) அவர்கள் ஏவுகின்றனர். தீமையை விட்டும் (பிறரைத்) தடுக்கின்றனர். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் அருள் புரிவான் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் தவ்பா : 71)
முஃமினான ஆண்களே! பெண்களே! முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாற்றம் செய்ய வேண்டாம். நாளை மறுமையில் தாய் பிள்ளைக்கு உதவி செய்ய மாட்டாள், பிள்ளை தாய்க்கு உதவி செய்ய மாட்டாள். கணவன் மனைவிக்கு உதவி செய்ய மாட்டான். மனைவி கணவனுக்கு உதவி செய்ய மாட்டாள். இப்படிப்பட்ட நிலையில் எமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் மாத்திரமே எமக்கு உதவி செய்ய முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். ஆதலால் உங்கள் வாழ்க்கையை அல்லாஹ், ரஸூலுக்காக என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கத்துக்கு முரணான செயலை யார் செய்ய சொன்னாலும் செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் பயந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முரணான செயலை செய்ய சொன்னால், அவர்களுக்கு நீங்கள் பணிவான முறையில் அமைதியான முறையில் மார்க்கத்தை விளங்கப்படுத்துங்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கும், எங்களுக்கும் ஆழமான அறிவையும், தெளிவான சிந்தனையையும் தருவானாக!
குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டுவதோ, குத்திக் காட்டுவதோ, பழித்தீர்ப்பதோ அல்ல சமுதாயத்தில் உள்ள உண்மை நிலைமைகளை சுட்டிக் காட்டி சீர்த்திருத்தம் செய்வதே எமது நோக்கமாகும். அல்லாஹ்வும், ரஸுலும் நன்கு அறிந்தவர்கள்.
இது பெற்றோர்களின் அறிவீனமா? அல்லது மறுமை நாளின் நெருக்கமா?

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )