Feb 8, 2012

நன்மை பயக்கும் நபிமொழி (உண்ணுதல்)


o அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை. பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை. அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை. (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் பின் அபில்ஃபுராத் அல்குறஷீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த குத்தாதா பின் திஆமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்? என்று கேட்டேன். அவர்கள் (தோலானான) உணவு விரிப்புகளின் மீது என்று பதிலளித்தார்கள். (புகாரி: 5415)
o நாஃபிஉ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ண மாட்டார்கள். ஆகவே (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான் எனக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள். (புகாரி: 5393
o கத்தராதா பின் தி ஆமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :
நாங்கள் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒரு நாள்) அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சாப்பிடுங்கள்* (ஆனால்) நான் அறிந்த மட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒரு போதும் கண்டதில்லை என்று கூறினார்கள். (புகாரி: 5421)
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள். (புகாரி: 5409)
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"நான் சாய்ந்தபடி சாப்பிட மாட்டேன்" அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (புகாரி: 5398)
o இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (குழம்புப்) பாத்திரத்திலிருந்து எலும்பொன்றை எடுத்து (அதிலிருந்து இறைச்சியைக் கடித்து)ச் சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள். ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளூச்) செய்யவில்லை. (புகாரி: 5405)
o அம்ர் பின் உமய்யா அள்ளம்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டு அதிலிருந்து (இறைச்சியை) உண்டதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைப்பு விடக்கப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியை எறிந்து விட்டுத் தொழுதார்கள். ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளூச்) செய்யவில்லை. (புகாரி: 5422)
o ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்து வந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் வாற்கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க்கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்து வந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்பு தான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை. (புகாரி: 5403)
o உர்வா பின் ஸுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடை குடும்பத்தாரில் யாரேனும் இறந்து விட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் தல்பீனா (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு ஸரித் (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் தல்பீனா ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் தல்பீனா (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என்று சொல்வார்கள். (புகாரி: 5417)
o அபூமூசா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்ற பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு எல்லா வகை உணவுகளையும்விட ஸரிதுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி: 5418)
o காலித்பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (அன்னை) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திற்கு சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சிறிய தாயார் ஆவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொறிக்கப்பட்ட உடும்பு ஒன்றை கண்டேன். அதை அவர்களுடைய சகோதரி ஹுஃபைதா பினத் ஹாஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். நஜ்திலிருந்து கொண்டு வந்தார்கள். (அன்னை) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த உடும்பு இறைச்சியை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் வைத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே* எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்கு கூறப்பட்டு. அதைப்பற்றி விவரம் சொல்லப்படாதவரை அதன் பக்கம் தமது கையை நீட்டுவது அறிதாகும். (இந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் நீங்கள் பரிமாறி இருப்பது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவியுங்கள் அது உடும்பு, அல்லாவின் தூதரே* என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடும்பை விட்டு கையை எடுத்தக் கொண்டார்கள்.
அப்பொழுது நான் உடும்பு தடை செய்யப்பட்டதா? அல்லாஹ்வின் தூதரே* என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை; ஆயினும் அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆகவே, என் மனம் அதில் விரும்ப வில்லை என்று சொன்னார்கள். உடனே நான் அதை துண்டித்துச் சாப்பிட்டேன் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். (புகாரி: 5391)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )