Jan 28, 2013

"இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" கட்டுரைப் போட்டி நடத்த தக்வா டிரஸ்ட் முடிவு



அஸ்ஸலாமு அழைக்கும்,



                   "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்"
கட்டுரைப் போட்டி நடத்த தக்வா டிரஸ்ட் முடிவு

இளையான்குடி தக்வா டிரஸ்ட்-ன் ஆண்டு நிர்வாகக்குழு கூட்டம் 27-01-2013 அன்று டிரஸ்ட்-ன் தலைவர் எ.சையத் மாலிக் தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் டிரஸ்ட்-ன் 2012-2013 ஆண்டுக்கான இதுவரையிலான வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே - மாதம் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. இளையங்குடியில் ஏகத்துவ பிரச்சாரத்தை அதிகப்படுத்தும் விதமாக மாதந்தோறும் பிட் நோட்டீஸ் மற்றும் வால் போஸ்டர் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது.

மரணத்திற்கு பின் மனிதன்


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
மரணத்திற்குப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்டுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது.

அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன்வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை, அல்குர்ஆன் இறுதித்தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது, அந் நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல் குர்ஆனிய வசனங்கள் உறுதி செய்கின்றன.

மவ்லிது ஓதுவது இறைவணக்கம் இல்லை



தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது, புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3


நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான். 'மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்



இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.
கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:
1.கணவனுக்கு கட்டுப்படுதல்:
எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)
2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:
நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)

புறம் பேசுவதன் விபரீதங்கள்!


Post image for புறம் பேசுவதன் விபரீதங்கள்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

"இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" கட்டுரைப் போட்டி நடத்த தக்வா டிரஸ்ட் முடிவு


அஸ்ஸலாமு அழைக்கும்,



                   "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்"
கட்டுரைப் போட்டி நடத்த தக்வா டிரஸ்ட் முடிவு

இளையான்குடி தக்வா டிரஸ்ட்-ன் ஆண்டு நிர்வாகக்குழு கூட்டம் 27-01-2013 அன்று டிரஸ்ட்-ன் தலைவர் எ.சையத் மாலிக் தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் டிரஸ்ட்-ன் 2012-2013 ஆண்டுக்கான இதுவரையிலான வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே - மாதம் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. இளையங்குடியில் ஏகத்துவ பிரச்சாரத்தை அதிகப்படுத்தும் விதமாக மாதந்தோறும் பிட் நோட்டீஸ் மற்றும் வால் போஸ்டர் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது.

Jan 10, 2013

சபித்தல்


நபி  அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி



        ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்
    “அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
    ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்
    ‘அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
    அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
    ‘ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ

கைக்கூலியின் விபரீதங்கள்


இஸ்லாமிய சட்ட திட்டங்களின் மேன்மைகளையும், உண்மைகளையும் விஞ்ஞானம் நிரூபித்து வரும் இன்றைய உலகில் அவற்றில் சில சிலவற்றை பின்பற்றுவது கொண்டு முஸ்லிம் அல்லாதார் முன்னேற்றம் காணும் இன்றைய தினத்தில், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமது கொள்கைகளையும் லட்சியங்களையும் விட்டு, மாற்றாரின் கொள்கைகளை மேலாகக் கருதி பின்பற்றுவதின் காரணமாக எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியுற்றிருக்கின்றோம்.  அவைகளில் ஒன்றுதான் கைக்கூலிப் பழக்கம். நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்து நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடித்ததாக வரலாறு உண்டே. ஒழிய கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு இல்லலே இல்லை.
நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றி அல்லாஹ்(ஜல்)வின் அன்பையும் நேசத்தையும் பெற்ற இமாம்கள், வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர், கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை.
அப்படியானால் நம்முடைய முன்னோர்களில் யாருமே செய்திராத, நமக்குக் காட்டித்தராக ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால், அது அந்நியருடைய பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து சகோதரர்களிடம் இந்தப பழக்கம் உண்டு. முன்காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை. ஆகவே திருமண சமயத்தில் கைக்கூலியாகவும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் பழக்கமாகும்; இது நியாயமும் கூட ஆனால் தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம் தெளிவாகக் கூறியிருக்கும் போது, இக்கைக்கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி, இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால் ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல. பல; அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.
சமூக பொருளாதார வீழ்ச்சி!
ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின் ஆண்கள் கையில்தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இக்கைக் கூலிப் பழக்கமானது நமது ஆண்வர்க்கத்தை முழுச் சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. ஆண்களின் இளம் பிராயத்திலேயே உழைக்க வேண்டும். பொருள் தேடவேண்டும் என்ற ஆர்வம் உண்டானால் தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறுபிராயத்திலிருந்தே பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம். பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும் பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள்.

இன்று நடக்கும் பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால், ஒரு வெட்கக் கேடான நிகழ்ச்சியைக் கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண செலவுக்காக வேண்டிய பணத்தையும், பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில், உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆண்கள், வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தனது கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண்வீட்டார் கைக்கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன் பிறந்த மேனியைத் தவிர இதரவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால் ஆனவைகளே.
திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன். திருமணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல், திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவள் கொண்டு வந்த நகைகளையும் விற்றுச் சாப்பிட்டுவிட்டு, அவளை தாய்வீட்டுக்குத் துரத்தத் துணிந்துவிடுகிறான். அல்லது அவளது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை விற்றுக் காலந்தள்ளுகிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி, முஸ்லிம் அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இக்கைக்கூலி பழக்கம் நம் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமானால், நம் சமூகமே பிச்சைக்கார சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
விதிவிலக்காக ஒருசிலர் உழைக்க முன்வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில், விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடிவதில்லை; இதற்குக் காரணம் உண்டு. எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கைக்கூலி அதாவது பெண் வீட்டாரிடம் கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசைவிட, மலத்தைச் சுமந்து கூலியாகப் பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தியைக் காணமுடியும்?
அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை அவன் வீணாக்குவதுமில்லை; அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து படைப்புகளிடம் கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை. ஆகவே கைக்கூலிப் பிச்சை வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ் உருப்படச் செய்வதில்லை. எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில், கல்யாண செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார முதலீட்டில் போய்ச் சேரும். அவ்வளவுதான்! அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும் அழித்துவிடும். இப்படி ஒட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக்கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில் தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதாரம் நிலை ஒருபோதும் உயரப் போவதில்லை என்பது திண்ணம்.
சமூகப் பண்பாடுகளில் ஏற்பட்டுள்ள விபரீதங்கள்!
சமூகப் பொருளாதார நிலை எப்படி ஆண்கள் கைகளில் தங்கி இருக்கிறதோ, அதே போல் அச்சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள் பெண்களின் கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக, கற்புடையவர்களாகத் திகழ்கிறார்களோ, அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம், நம் சமூகப் பெண்களுக்கு மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையுஞ் சொல்லித்தான் ஆக வேண்டும்.

திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் நாம் முன் விளக்கியது போல், தங்கள் கணவன்மார்களால் தங்கள் பிறந்தகங்களுக்கு விரட்டப்பட்டு வாழ்விழந்து வழி தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும், குணமிருந்தும் எல்லாம் இருந்தும், பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொடுக்கப்படாது பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள் அடைபட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப் பெண்களின் தவறு அவர்களுடைய குற்றமல்ல. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும்.
ஒரு மனிதனை ஒரு அறையில் சில நாட்கள் அடைத்து வைத்துக் கொண்டு, உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை அல்லாஹ்(ஜல்)வுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திரமல்ல. அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் சாபத்திற்கும் ஆண்கள் இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அநியாயம் செய்யப்பட்டவர்களுடைய பதுஆவிற்கும் அல்லாஹ்வுக்கும்(ஜல்) இடையில் திரை இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும்.
இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக் கேடுகளை நோக்கும்போது,  அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன் வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்த கொடுஞ்செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும் இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து நீடிக்குமானால், கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம், நமக்குப் பிறக்கும் பொன் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.
 K.M.H.

முஸ்லிம் சகோதரன்


நபி  அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு   அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர்   இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை   முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
 

அபூஹுரைரா (ரழி) அவர்கள்   கூறினார்கள்: நபி  அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “முஃமினை மூன்று   நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி   விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய   ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில்   கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.”   (அல் அதபுல் முஃப்ரத்)
 

நபி  கூறினார்கள்: “”ஒருவர்   தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை   சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).” (அல் அதபுல்   முஃப்ரத்)
 

நபி  அவர்கள் கூறினார்கள்:   “நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள்.   கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக   இருங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
 

நபி  அவர்கள் கூறினார்கள்:   “சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன.   அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது.   ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது   சொல்லப்படும் “இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.   இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும்   சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
 

அபூ தர்தா (ரழி) அவர்கள்   கூறினார்கள்: “நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை   உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது.   அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.” (அல் அதபுல்   முஃப்ரத்)
 

நபி  அவர்கள் கூறினார்கள்:   “இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி   விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக   மாட்டார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)
 

நபி  அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கொளரவம் ஹராமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

கபுரு வணக்கம்


Post image for கபுரு வணக்கம்
முஸ்லிம்களில் இன்று பலர் தர்ஹாவிற்கு சென்று அங்கு இறந்து போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது ‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்” எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (புஹாரி)
யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு முக்கிய காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள். மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக்களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்,”யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்.” (புகாரி) நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் ‘ஷிர்க்’ என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.
யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு மஸ்ஜித் கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.  ஆயிஷாரலியல்லாஹு அன்ஹா (புகாரி)
மற்றும் ஒரு ஹதீஸ் “அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க வேண்டுமென்பதை மறந்து தம்மைப் போன்ற சிருஷ்டிகளின் கல்லறைகளில் மண்டியிட்டு முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது? அது அக்கிரமமில்லையா? அது இறைவனுக்கு இணை வைக்கும் ‘ஷிர்க்’ ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) என்று இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையே உள்ள பலர் அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற ஆட்டம் பாட்டம் பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா?
திருமறையில் “முஷ்ரிக்குகள்” எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அவனை விட்டுவிட்டு இறந்து போனவர்களிடம் உதவி தேடுவது நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான், (நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80)
பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் “பிரார்த்தனை வணக்கத்தின் மூளை” (அனஸ்(ரலி),திர்மிதீ. “பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்” (நூமானுபின் பஷீர்(ரலி), அஹ்மத், திர்மிதீ) மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன். (40:60)
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே. (7:194)
எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.(13:14)
அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான். மேலும் திருமறை கூறுகிறது.
இந்நிராகரிப்போர் நம்மை விட்டு விட்டு நம்முடைய அடியாளர்களை தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102)என்று இறைவன் கேட்கிறான். சிலர் இந்த வசனம் விக்ரகங்களை வணங்கும் காபிர்களுக்கு இறங்கியது ஆகையால் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இறைவன் இவ்வசனத்தில் நம்முடைய அடியார்கள் என்று குறிப்பிடுவதே மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றது என்பதை உணரலாம்.
இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக குர்ஆனில் அல்லாஹ் இட்ட கட்டளைக்கு நபி (ஸல்) அவர்கள் எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ “வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று உங்கள் தேவைகளை கேளுங்கள் அவர்கள் கொடுப்பார்கள்” என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.
மேற்கூறிய விளக்கங்களிலிருந்து அல்லாஹ் அல்லாத இறந்து போன அவ்லியாக்களிடம் தங்களுடைய தேவைகளுக்காக வேண்டுகோள் வைப்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட செயல். முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று மன்னிக்கப்படாத குற்றத்திற்கு ஆளாக நேரிட்டு நரகத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோமாக!

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!


 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ
 مُّبِينٍ   
    அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

உண்மையில் குர்ஆன் எழுதப்படிக்க தெரியாத அறியாமையிலும் வழிகேட்டிலும் மூழ்கி கிடந்த மக்களுக்காகத் தான் இறங்கியது.  இந்த  வசனப்படி  95% சஹாபாக்கள்  குர்ஆனை   நபி(ஸல் அவர்களின் விளக்கத்தின் துணையோடு  தெளிவாகப் புரிந்து  கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில்  நாங்கள் தான் கற்றவர்கள், அரபி  இலக்கண  இலக்கிய  விற்பன்னர்கள் என்று  மார்தட்டிய  “தாருன் நத்வா” (அறிஞர்கள் சபை)  தலை சிறந்த அறிஞர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலை சிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்தி காட்டியது. உண்மையில் இது மாபெரும் அதிசயம்தான்.

ஆம்! நாங்கள் தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டியவர்கள் அன்று குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதே வேளையில் அரபி இலக்கணம் இலக்கியம் அறியாத பாமர மக்களாகிய அன்றைய அரபிகள் பயபக்தியுடையவர்களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை  நம்பியவர்களாகவும் தொழுகையை அதனதன்  நேரத்தில்  தவறாமல் நிறை வேற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். உண்மையில் குர்ஆனை ஓதி விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் கொடுக்கும் உத்திரவாதமாகும்.

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
    இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون
    (பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.(2:3)

والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
    (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; ன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.(2:4)

أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
    இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். வசனம் (2:5)

குர்ஆனிலும், ஹதீஸிலும் பாடுபடும் முயற்சியும் அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கிய ஞானம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம். அதனை நாம் மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிடலாம். இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்த சிறப்பு ஆகும்.

يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيراً وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ 
    தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு)ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகின்றதோ,  அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக  நிச்சயமாக  ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைத் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (2:269)

இந்த வசனப்படி இந்த சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அந்த ஞானத்தைக்கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஸை விளங்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி நாங்கள்தான் மார்க்கத்தை போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதை  கண்ணை மூடிக்கொண்டு  ஆதாரங்களை கேட்காமல்  ஏற்று  நடக்க  வேண்டும் என்று சமுதாயத்தில் ஒருபோதும் முனையக்கூடாது. இதனால்தான்”தக்லீத்”எனும் கண்மூடிப்பின்பற்றலும் மதப்பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும் வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)
இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்கு குர்ஆன் தெரியாது ஹதீஸ் தெரியாது அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது அதற்கு நேரமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதும் மார்க்கத்திற்காக அர்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கரைத்துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். குர்ஆனைப் பற்றியும், ஹதீஸைப் பற்றியும் அவர்களுக்கு தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்கள் பாதுகாவலர்களாக்கி அவ்ர்களை எங்கள் இமாமாக ஆக்கி அவர்க்ளைப் பின்பற்றுகிறோம் என்று நாம் சொல்கிறோமே இதைத்தான் மிக வண்மையாக அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
   நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்றால் நாமாக பின்பற்றவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை பின்பற்றியே ஆக வேண்டுமென்று பல வசனங்களில் கட்டளையிட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ் உத்தரவிடவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும், பலராக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை பாதுகாவலர்களாக்கி பின்பற்றவே கூடாது. அப்படி இருந்தும் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையைக் உணரக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُوْلَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُوْلَئِكَ هُمْ أُوْلُوا الْأَلْبَاب
    அவர்கள் சொல்லை – நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.(39:18)

   விளங்கிச் செயல்படுவது கண்மூடிப்பின்பற்றல் அல்ல
   பிக்ஹூ நூல்களை தந்த இமாம்கள், ஹதீஸ் நூல்களை தந்த இமாம்கள் அதற்கு பின்னால் வந்த பலநூறு இமாம்கள் ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி  இருக்கிறதா? என்று  பார்த்து விளங்கி ஏற்று  நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.

اتَّخَذُواْ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُواْ إِلاَّ لِيَعْبُدُواْ إِلَـهًا وَاحِدًا لاَّ إِلَـهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ 
    அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)

என்ற திரு வசனம் இறங்கியபோது கிறிஸ்த்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரலி) என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்க வில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களூம் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாக கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதீ)
இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற எவருக்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குறிய ஆதாரங்கள் அறிய முயற்சிக்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகின்றது.
அல்லாஹ் நம்  அனைவருக்கும்  இருளிலிருந்து  வெளிச்சத்திற்கு  வந்து  அவனது  நேர்வழியில்  நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!

K.M.H

நல்ல(!) நேரம்


நல்ல/கெட்ட நேரம் இல்லை



மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.
உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.
ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )