Jan 28, 2013

மவ்லிது ஓதுவது இறைவணக்கம் இல்லை



தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது, புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3


நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான். 'மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

'நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243


'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.
'செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்' என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435


உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த சவூதி அரபியாவிலும் மவ்லிதைப் பாடும் போதே அதன் பொருளை விளங்கிடக் கூடிய மக்கள் வாழும் மற்ற அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்குள் நுழைந்தால் மவ்லிது நூலைப் பிடுங்கி அங்குள்ள அரசாங்கம் குப்பையில் வீசி விடுகிறது. அதில் அமைந்துள்ள மோசமான கொள்கைகளும், உளறல்களுமே இதற்குக் காரணம்.

அரபு நாடுகளை விட்டு விடுவோம். உலகில் உள்ள வேறு எந்த நாட்டு முஸ்லிம்களாவது இந்த மவ்லிதை ஓதுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிதைப் பற்றி நாம் அவர்களிடம் கேட்டால் 'மவ்லிது என்றால் என்ன?' என்று நம்மிடமே அவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள்.

நமது நாட்டில் கூட கேரளாவிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் கள் தான் இந்த மவ்லிதுகளை அறிந்துள்ளனர். வேறு மாநில மக்களுக்கு ஸுப்ஹான மவ்லிது என்றால் என்ன என்பதே தெரியாது.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 14 நூற்றாண்டுகள் சென்று விட்டன. இந்த மவ்லிதுகள் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலம் முதல் ஆயிரம் வருடங்கள் வரை வாழ்ந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், நாற்பெரும் இமாம்கள் உள்ளிட்ட எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் எவருமே இந்த மவ்லிதுகளைப் பாடியதில்லை. கேள்விப்பட்டதுமில்லை.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எந்த நூலிலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் கற்பனை செய்து புணையப்பட்டவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஸுப்ஹான மவ்லிது என்பது நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதற்காகத் தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் புகழ்ந்து கவி பாடியதை நபிகள் நாயகம் ஸல் அவர்களே அங்கீகரித்துள்ளனர். உண்மையான எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்குத் தடை சொல்ல மாட்டான்.

மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திடக் கூறும் ஆதாரங்கள் இவை.

ஆனால் மவ்லிது இந்தப் பணியைத் தான் செய்கிறதா?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் 'என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபிகள் நாயகத்தின் எந்தப் பண்பைப் புகழ்ந்தீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள்! கூலிக்குப் பாடியவர்களில் பலருக்கும் தெரியாது. அவர்களை அழைத்துப் பாடச் செய்தவர்களுக்கும் தெரியாது.

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்கள் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?
நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?
விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சணைகளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும் ஏன்?

பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழும் இலட்சணமா?

மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள்.

இதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழலாம் என்றாலும் அதற்கு ஒரு வரம்பு உள்ளது.

'கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்' என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி
நூல்: புகாரி 3445, 6830


பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்தக் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாயிலில் நபியே! ரஸுலே! முஹ்யித்தீனே! நாகூராரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களிடம் பிரார்த்திக்கின்றனர். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுவதற்காகக் கட்டப்பட்ட அவனுக்குச் சொந்தமான ஆலயத்தில் அவனது கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இதனால் பள்ளிவாயிலின் புனிதம் கெடுகின்றது.

பிறமதக் கலாச்சார ஊடுருவல்

பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரணப் பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும் என்பது பிற சமயத்து நம்பிக்கை!

பூஜை நடத்தப்படுவதற்கு முன் சாதாரண சர்க்கரையாக இருந்தது பூஜைக்குப் பின் பிரசாதமாக மாறி விடுகிறது. துளியளவாவது கிடைக்காதா என்று பெரும் செல்வந்தர்களும் போட்டியிடும் அளவுக்கு அதில் 'என்னவோ' இறங்கி விட்டதாக நம்புவது பிற சமயத்து நம்பிக்கை.
மவ்லிது ஓதப்படுவதற்கு முன் சாதாரண பேரீச்சம் பழம் மவ்லிது முடிந்தவுடன் தபர்ருக்'(பிரசாதம் என்னும் நிலைக்கு உயர்கிறது. ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைப் பெறுவதற்காக கோடீஸ்வரர்களும் கியூவில் நிற்கும் நிலை! சாதாரண ஒரு மனிதனின் கவிதையைப் படித்தவுடன் சாதாரணப் பொருளும் பிரசாதமாக மாறிவிடும் என்று நம்புவது ஏகத்துவத்துக்கு எதிரானது அல்லவா? பிறமதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது அல்லவா?

உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
யாஸையிதீ' என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3:135)


இதனால் தான் எத்தனையோ நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த போது, சிறிய தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்து விட்ட போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால் தாங்கள் பெரு நஷ்டம் அடைய நேரும் எனவும் கூறியுள்ளனர்.

'நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்'


'நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது'


'(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!' என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26 :80)


நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)


உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?


எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்

இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். (அல்குர்ஆன் 6:151)


மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(அல்குர்ஆன் 8:26)

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
(அல்குர்ஆன் 11:6)


தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.
(அல்குர்ஆன் 13:26)


உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக ஸுப்ஹான மவ்லிதின் இந்த வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது

வானவர்கள் மீது அவதூறு

இந்த மவ்லூதின் கடைசிப் பாடலாக 'யாஸையதீ...' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் தலைப்பில் 'இது ஜிப்ரீல் (அலை அவர்களால் பாடப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவர்களால் தான் மவ்லூது இயற்றப்பட்டது என்பதற்கு இந்தத் தலைப்பு ஒன்றே போதிய சான்றாக அமைந்திருக்கிறது. ஜிப்ரீல் (அலை பாடிய(? பாடலைக் கேளுங்கள்!

தலைவர்களுக்கெல்லாம் தலைவா! என் ஊன்றுகோலே! என்று உங்களை நான் அழைப்பேன்.

என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள்!

என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள்!
என்றென்றும் நிரந்தரமாக திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் அருளால் எனது குறைகளைக் காலாகாலம் மறைத்து விடுங்கள்!
ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு பிரார்த்தனை செய்தததாகக் கூறப்படுவது சரிதானா?


ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இவ்வாறு பாடியிருந்தால் இது திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டிலுமே இவ்வாறு கூறப்படவில்லை.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணப்படாத இந்த விபரத்தை இன்றைக்கு முன்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? இந்தப் பாடல் வரிகளின் பொருளைக் கவனித்தால் கூட இது எவ்வளவு அபத்தம் என்பதை உணர முடியும்.

ஜிப்ரீல் (அலை அவர்களுக்கு அச்சுறுத்தும் அளவு அநீதி இழைக்கப்படும் என்றும் அவர்கள் தவறுகள் செய்ய முடியும் என்றும், அவர்களிடம் மறைக்கத் தக்க குறைபாடுகள் பல உள்ளன என்றும் இப்பாடல் வரிகள் கூறுகின்றன. ஆனால் மலக்குகளைப் பற்றி பொதுவாகவும் ஜிப்ரீல் (அலை அவர்களைப் பற்றிக் குறிப்பாகவும் அல்லாஹ் கூறுவது இந்தப் பாடல் வரிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6 அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன் 21:27, 28 என்று மலக்குகளின் இயல்புகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய முடியாத இயல்பில் படைக்கப்பட்ட மலக்குகள், இந்தப் பாடலில் கூறப்படும் தவறுகளை எப்படிச் செய்திருக்க முடியும்?


அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையைப் படிப்பது பாவமா? புண்ணியமா? என்பதை மவ்லூது பக்தர்கள் சிந்திக்கட்டும்!

நன்மை என்று எண்ணிக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லூதுப் பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?


ஸுப்ஹான மவ்லூதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட போதனைகளும், பொய்களும் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த மவ்லூதை நாம் மறுக்கிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை சமுதாயத்திற்கு நினைவூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காகத் தான் ஸுப்ஹான மவ்லூது இயற்றப்பட்டது என்று மவ்லூது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

நபியவர்களின் நேர்மை, நாணயத்தைப் புகழலாம்! அவர்களின் கூரிய அறிவைப் புகழலாம்.

அவர்களின் வீரத்தைப் புகழலாம், தன்னலமற்ற அவர்களின் தியாகத்தையும் சேவையையும் புகழலாம்.

அவர்களின் எளிமையான வாழ்வையும் அடக்கத்தையும் பணிவையும் புகழலாம். பொறுமையைப் புகழலாம்.

மவ்லூதுப் பாடல்களில் இத்தகைய புகழ்ச்சி எதனையும் காண முடியாது. பிறர் பின்பற்றத்தக்க இந்த நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் மக்கள் புகழ்பவரிடம் அந்தப் பண்புகள் சிறிதளவாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நபியவர்களின் வாழ்வை ஓரளவாவது பின்பற்றக் கூடியவர்கள் மட்டுமே இது போன்ற பண்புகளைக் கூறிப் புகழத் தகுதி படைத்தவர்கள்.

இந்தத் தகுதிகள் சிறிதளவும் இல்லாத வீணர்கள், பின்பற்ற முடியாத விஷயங்களைப் புகழ் என்று அறிமுகம் செய்தனர். இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போது கத்னா செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள், வயிற்றைக் கிழித்துப் பிறந்தார்கள்; அவர்களின் பாதம் தரையில் படாது; அவர்கள் மீது வெயில் படாது; அவர்களின் மலஜலம் பரிசுத்தமானது என்றெல்லாம் பொய்களைக் கூறிப் புகழலானார்கள். இதைக் கூறுவதால் கூறக்கூடியவரிடமே இவை இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா?


அது போல் அல்லாஹ்வுக்குரிய தகுதிகள் நபியவர்களுக்கு இருப்பதாக இட்டுக்கட்டியதும் இதே காரணத்துக்காகத் தான். மலைப்பை ஏற்படுத்துவதும் அதன் மூலம் ஆதாயம் பெறுவதுமே இவர்களின் நோக்கமாக இருந்ததால் தான் இந்த இரண்டு வகைகளில் புகழ்ந்தார்கள். எந்த மவ்லூதுப் பாடலிலும் இந்த இரண்டு வகையான புகழ்ச்சி மட்டுமே இருப்பதை நாம் காணலாம். பிறர் பின்பற்றத்தக்க அவர்களின் தூய வாழ்க்கையைப் பற்றி எந்தப் புகழ்ச்சியையும் மவ்லூதில் காண முடியாது. இதிலிருந்து மவ்லூது பாடியவர்களின் உள்நோக்கத்தை நாம் அறியலாம்.
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபடுவோம். உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.


Source: www.onlinepj.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )