நபி அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி
ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்
“அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்
‘அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
‘ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
0 comments:
Post a Comment