Mar 6, 2015

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; இல்லையெனில், எப்போதும் போன்று அவர்கள் நம்மிடம் நன்றாக பழகமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்களின் பண்டிகைகளில் பல முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், அன்றைய தினங்களில் அவர்கள் செய்யும் காரியங்களை அப்படியே முஸ்லிம்களும் செய்கிறார்கள். இந்த நிகழ்வு, பிறமத மக்களின் உள்ளூர் திருவிழாக்கள் முதற்கொண்டு நாடுதழுவிய அளவில் நடைபெறும் பண்டிகைகள் வரையிலும் காணமுடிகிறது.
இவ்வாறு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள், இதுகுறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கடுகளவும் தெரியாமல் இருக்கிறார்கள். சிலரோ, இதுவென்ன பெரும்பாவமா? என்று எண்ணிக் கொண்டு தெரிந்து கொள்ள கொஞ்சமும் தயாரின்றி இருக்கிறார்கள்.  எனவே, இது தொடர்பாக இருக்கும் மார்க்கத்தின் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த ஆக்கம்.

இஸ்லாம் முழுமையான மார்க்கம்
இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கைத் திட்டம். ஆன்மீகம், அரசியல் என்று மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் தெளிவாகப் போதித்திருக்கும் சிறப்பான சித்தாந்தம். இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர்த்து இருக்கும் மற்ற மதங்கள், கொள்கைக் கோட்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மாற்றமாக இஸ்லாம் மட்டுமே, ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிலைக்கும் தேவையான தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. இத்தகைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு எந்த விஷயத்திலும் பிற கொள்கைகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அறவே இல்லை என்பதே உண்மை. எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் சடங்குகளை கடன் வாங்கிச் செய்ய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை என்பதைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
(ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(திருக்குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். நாங்கள் "அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!'' என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்!'' என்றோம். பிறகு "இது எந்த மாதம்?'' என அவர்கள் கேட்டதும் நாங்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!'' என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, "இது துல்ஹஜ் மாதம் அல்லவா?'' என அவர்கள் கேட்க, நாங்கள் "ஆம்!'' என்றோம். பிறகு "இது எந்த நகரம்?'' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!'' என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு "இது புனிதமிக்க நகரமல்லவா?'' எனக் கேட்க, நாங்கள் "ஆம்!'' என்றோம்.
பிறகு "உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!'' என்று கூறிவிட்டு, "நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?'' எனக் கேட்டார்கள். மக்கள் "ஆம்!'' என்றனர். பிறகு அவர்கள், "இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1741) (4403)
இஸ்லாம் தனித்து விளங்கும் மார்க்கம்
மூடநம்பிக்கைகள், சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் தலைச்சிறந்த கோட்பாடாக இஸ்லாம் திகழ்கிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் சிக்கலுக்கும் நிறைவான நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை; எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை.
ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
(திருக்குர்ஆன் 48:28)
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(திருக்குர் ஆன் 61:9)
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
(திருக்குர்ஆன் 9:33)
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
(திருக்குர்ஆன் 3: 83)
இத்தகைய இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விட்டுவிட்டு அடுத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை என்னவென்று சொல்வது? இவர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தின் போதனைகளை விடவும் மற்ற கொள்கைகள் சிறந்தவை என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறார்கள். இப்படி சத்திய மார்க்கத்தை விடவும் அசத்திய வழிமுறைகளை மேலானதாகக் காட்டும் மாபாதகக் காரியத்தை விட்டும் இவர்கள் இனியாவது விலகிக் கொள்வார்களா?
பிற மதத்தினருக்கு மாற்றமாக நடப்போம்
மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவன் கொடுத்திருக்கும் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்டத்தையே மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு மாற்றமாக, மனிதகளால் உருவாக்கப்பட்ட கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று எல்லா வகையான மக்களும் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட, திரிக்கப்பட்ட இடைச்செருகல் செய்யப்பட்ட சட்டங்களும் இருந்தன.
இவ்வாறான மக்களின் மூடநம்பிக்கைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் நிறைந்த காரியங்கள், முஸ்லிம் சமுதாயத்தில் கலந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். இஸ்லாத்தைப் போன்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் வகையில், பல்வேறு காரியங்களில் அவர்களுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவற்றை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
வணக்க வழிபாடுகளில் மாற்றம்
ஒரு மனிதனுடைய வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும், ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும் தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்நிலையில், அநேகமான மக்கள் அர்த்தமற்ற ஆன்மீகத்தை ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமது பெற்றோர்களிடம் இருக்கும் தவறான கடவுள் கொள்கையை நம்பிக்கையை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் காரியங்கள் என்று அவற்றைச் செய்கிறார்களே தவிர, சரியா? தவறா? என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. இதன் விளைவாக வாழையடி வாழையாக, குருட்டுத்தனமான வணக்கங்களிலே வீழ்ந்து கிடக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் மக்களிடம் இருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு விளங்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மார்க்கத்தின் ஆணையைப் பின்வரும் நபிமொழிகள் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.
(தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு "அதான்' எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (3457)
சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (583), (3273)
இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிமிலுள்ள 1373வது ஹதீஸில் இருக்கிறது.
(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: அபூதாவுத் (556)
புனிதமான செயல்களைச் செய்யும் போது செருப்பு அணிவது பாவம் என்ற தவறான நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது. இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் எப்போதாவது ஒருமுறையாவது செருப்பு அணிந்து தொழுது விட்டாலே யூதர்களுக்கு மாறு செய்ததாக ஆகிவிடும். எனவே தான், நபிகளார் அவர்கள் செருப்பணிந்தும் தொழுதுள்ளார்கள். அணியாமலும் தொழுதுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், அல்லாஹ் நாடினால் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1916), (1917), (2088)
உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுததை நான் கண்டேன். அங்கு தங்கிய உமர் (ரலி) அவர்கள், "இணை வைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை. மேலும் அந்த இணை வைப்பாளர்கள், "ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்' என்று கூறுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்'' என்று கூறி விட்டு, சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.
அறிவிப்பர்: அம்ரு பின் மைமூன் (ரஹ்)
நூல்: புகாரி (1684)
மேற்கண்ட செய்திகளின் மூலம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முதன்மையான கடமைகள் உட்பட எந்தவொரு வணக்க வழிபாடும் பிற மதத்தவரின் வணக்கத்திற்கு ஒப்பாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, முஸ்லிம்கள் தங்களது மார்க்க செயல்களின் மீது பிற மத்தினரைப் பின்பற்றுவது போன்ற சாயல்கூடப் படிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களோ, பிற மதத்தவர்களின் வணக்க வழிபாடுகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை அப்படியே செய்யும் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
தேர் இழுப்பதை சந்தனக்கூடு என்றும், பொங்கலை பாச்சோறு என்றும், மந்தரிக்கப்படும் கயிறை தாவிஸ் என்றும், பிரசாதத்தை தபர்ருக் என்றும் எண்ணற்ற பிற மதச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் செய்கிறார்கள். இனியாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )